Tuesday, December 30, 2014

இன்னும் மிச்சமிருக்கிறது வாழ்க்கை உயிர்ப்புடன்

இன்னும் மிச்சமிருக்கிறது  வாழ்க்கை உயிர்ப்புடன் .[ புது  வருட  வாழ்த்தும் , கருத்தும் ]

செல்லும்  பயணம்தான்  இலக்கை  விட முக்கியம்  என்று  உணர்ந்து  இருக்கிறேன்  பலமுறை . எங்கேயோ  படித்த  வரிதான்  அது  என்றாலும்
வாழ்க்கை  அதனை  அசைபோட வாய்த்த  தருணங்கள்  பல.
என் நண்பனும்  நானும்  10 வருடங்களுக்கு முன்பு  பாண்டிச்சேரி  சென்ற  பொழுது  , ஆரோவில்  சென்றோம் , வரும்  பொழுது  பஸ்  கிடைக்காமல்  ,மாட்டு  வண்டியில்  லிப்ட்  கேட்டு  வந்து  , மெயின்  ரோடு  வந்து  சேர்ந்தோம் .இப்பொழுது  எனக்கு  ஆரோவில்  பார்த்ததைக்  காட்டிலும்  அந்த
மாட்டு  வண்டியில்  நாங்கள்  சிரித்த சிரிப்பும்  குதூகலமும்  தான்  நினைவில்  உள்ளது . ஆரோவில்  எங்கள்  அப்போதைய அன்றைய  பயணத்தின்   இலக்கு  ,மாட்டு  வண்டிப்  பயணம் தான் அதனை அடையும்  அனுபவிக்க  வேண்டிய  வாழ்க்கைப் பயணம்  என  எனக்கே நான்  சொல்லிக்கொள்வதுண்டு .
உண்மைதானே .

எங்கே  செல்லும்  இந்தப்  பாதை  என்று இளையராஜாவின்   குரலில்  வரும்  வரிகள்  எழுப்பும்  கேள்விகள்  பெரியது .
எல்லோருக்கும்  அவர் அவர் தளத்தில்  இந்தக்  கேள்வி  வாழ்வில்  வந்துச்  சென்றுதான்  இருக்கும் .வாழ்க்கையைச்  சார்ந்த  இப்படிப்பட்ட  கேள்விகளுக்கு  இடையே  தான்  வாழ்க்கைப் படகு  மிதந்து போய்க்கொண்டு  இருக்கிறது . இது  ஏன்  இப்படி  எனக்கு  மட்டும்  நடக்கிறது என்றக்  கேள்வி  யாருக்கும்   வராமல்  இல்லை. உண்மை  அதுவல்லவே  ,

ஒரு  சிறிய   சம்பவம்  அல்லது  சம்பவக்  கோர்வைதனை பார்ப்போம் .
2009  இல்  ஒரு  கம்பெனியில்  நேர்முகத் தேர்வு  நடந்த  பொழுது  , கடினமான  எதிர்பாரா கேள்வி கேட்டு  பிரித்து  எடுத்தார்கள் . இன்னும்  சிலரை  பார்த்துவிட்டு  பதில்  சொல்கிறோம்  என்று  சொல்லி  இருந்ததால் , நம்பிக்கை  விட்டுப்  போகவில்லை.நல்ல கம்பெனி , வீட்டின் அருகில்  என்பதால்  எதிர்பார்ப்பு  அதிகமாகவே  இருந்தது .  மூன்று  வாரம் கழித்து எனக்கு  தகவல்  சொன்னார்கள். தற்பொழுது  " hiring  freeze " அதாவது  ஆட்களை எடுக்கும்  சூழல்  நிறுத்தப்  பட்டுள்ளது  என்றும்  , பின்பு  மறுபரிசீலனை செய்வோம்  என்று  சொல்லிவிட்டார்கள் . வருத்தம்  தான் .  சப்புக்  கொட்டுகிறார்கள்  என்றுதான்  நினைத்தேன்.
பின்பு  பல  மாதங்கள்  கழித்து  நாங்கள்  உங்கள்  அனுபவத்திற்கு  ஏற்ற  வேலை  வைத்து  உள்ளோம்  , வருகிறீர்களா  என்று திரும்ப  வந்தார்கள்  . அதற்குள்  நான்  வேலை  பார்த்த  கம்பெனியில்  , வெளிநாட்டில்  ப்ராஜெக்ட்  வந்துள்ளது  என்றார்கள்   ,நான்கு  வருடங்களாக   குறைந்த  சம்பளத்திற்கு  வேலை  பார்த்ததின் பலன்  கடைசியாக  வரவும்  , அதனை  எடுத்துக்  கொண்டேன் .பின்பு  பல  முறை  எதற்கு அந்தக்  கம்பெனியில்  அப்படி  ஒரு  நேர்முகத்  தேர்வு  , எதிர்பார்ப்புகள்  , பின்பு  நானே  அதனை  வேண்டாம்  என்கின்ற  முடிவை  எடுக்கும்  சூழல் வாழ்கை  எனக்கு  அமைத்து   என  யோசித்தேன் .

பின்பு வெளிநாடு  வந்த  ஒரு வருடத்திற்குள் எங்கள்  கம்பெனி  சூழ்நிலை  சரி இல்லாமல்  சென்று  , நாங்கள்  வேலை  பார்த்த கம்பெனியின்  வாடிக்கையாளர் [ client  ] ப்ராஜெக்ட்  இல்லையென்று  சொல்லவும்  , அந்தப் ப்ராஜெக்ட்டில்  இருந்த  ஏழு  பேரையும்  ஈவு  இறக்கம்  இன்றி  உடனே  தூக்கி  எரிய  முடிவு  செய்தனர் .
இந்தியாவில்  என்றால்  பரவாயில்லை .விசாவில்  இருப்பதால்  வேலை  இல்லாமல்  போனால்  இரண்டு  வாரத்திற்குள்  நாடு  திரும்ப  வேண்டும் ,
மார்க்கெட்  நிலைமையில்  வேலை  வேறு  கிடைக்க  வேண்டுமே.
கடைசி  நிமிடத்தில்  இன்னும்  மூன்று  மாதத்திற்கு  இன்னொரு ப்ராஜெக்ட்  இருக்கிறது  என்று  வேறு  ஒரு  ஊரிற்கு  சென்று  சில  மாதங்கள் குடும்பத்தை விட்டு  இருந்து  பொழப்பை  ஓட்டினேன் . அப்பொழுதே  முடிவு செய்தேன்  இனி  இந்தக்  கம்பெனி யில்  இருந்தால்  வேலைக்கு  ஆகாதென்று .

மார்க்கெட்  சுமாராக  இருந்ததால்  அழைப்பு  வருவதும்  கடினமாகவே  இருந்தது . வந்த  வாய்ப்பும் 8-10  ரௌண்டுகள்   வைத்து  , பல  வாரங்கள்  காத்து  கிடக்க  வேண்டி  இருந்தது, மற்றவர்களுடனும் பேசிக்கொண்டு இருந்தமையால்  . 3 மாதத்திற்குள்  வாங்கி  ஆகவேண்டும்  என்ற  அழுத்தம்  வேறு  இருந்தது . அப்பொழுது  ஒரு  நல்ல கம்பெனி யில்  நேர்முகத்  தேர்வு
 சென்று  இருந்தேன் . அப்பொழுதே  இரண்டு  முறை  என்னிடம் தொலைபேசியில் பேசிய  பிறகு  ,  கடைசி  கட்டமான  நேர்முகத் தேர்வில்  இருந்தேன் . 3-4  பேருடன் பேசியாகிற்று  காலைச்  சுற்றுகள்  முடித்தன  , மதிய  இடைவேளை வந்தது . சாப்பிடும்  பொழுதும்  தேர்வு   எடுத்தனர் . சாப்பாடு  எங்கே  இறங்கும்  , மனதில்  இவ்வளவு  தூரம் வந்தாயிற்று , இதனைக்  கடந்தால்  நல்ல இடத்தில்  சேருவோம்  என்றுதான்  மனதில்  ஓடிக்கொண்டு  இருந்தது .இன்னும்  நான்கு  பேர்  பேச  இருக்கிறார்கள்  என்று  சொன்னார்  அந்த மேலாளர் .

மதிய  நேரத்தில் நடந்த  நேர்முகத்  தேர்வுதான்  வாழ்கை  எனக்கு  சொல்லிகொடுத்த  மறக்க  முடியா  பாடம்.
2 வருடங்கள்  முன்பு  நான்  அட்டெண்ட்  செய்த  பெங்களூருவில்  சேராமல்  சென்ற  கம்பெனியில்  கேட்கப்பட்ட  மிகக் கடினமான  கேள்விகள்  எனக்கு  இரண்டு  வருடம்  கழித்து  வெவ்வேறு  ஆட்கள்  இங்கே  கேட்டார்கள் .
அந்த  நேரத்தில்  அதனை  நான்  யோசித்து  அந்த  அளவிற்கு சிறப்பாக  சொல்லி  இருப்பேனா  என்று  தெரியவில்லை .
முன்பு  கேட்கப்பட்டு  , முழுத்  திருப்தி  இல்லாததால்  பின்பு  தீவிரமாக  படித்ததன்  வெளிப்பாடே  அப்பொழுது  நான்  கொடுத்த  நெற்றிப் பொட்டில்  அடித்தார் போன்ற  பதில்கள் . வேலை  கிடைத்து  விடும்  என்று  அவர்கள்  சொல்லும் முன்பே  எனக்கேத்  தெரிந்து  விட்டது .

அதன்  பின்பு  வாழ்க்கை   போடும்  சிலப்  புதிர்களுக்கு  நான்  ரொம்ப  யோசிப்பது  இல்லை . ஏன்  சொல்கிறேனென்று    உங்களுக்கப் புரிந்திருக்குமே .வாழ்க்கை  இப்படி  நமக்கு  அந்த  சமயத்தில்  புரியாத  புதிர்களை  போட்டும்  பின்பு அவிழ்த்தும்  இருக்கத்தான்  செய்யும் .

இதைத்  தவிர, விடை  கொடுக்க  முடியாத  பெரியக்  கேள்விகள்  நிறைய  இருக்கவே  செய்கின்றன . அப்படியே  உடைந்து  போய்  உட்கார்ந்து  முடிவதில்லை தானே . ஓடிக்கொண்டே  தான்  இருக்கிறோம்  , இருக்க  வேண்டியும்  உள்ளது .சரி  ஓடித்தான்  ஆக வேண்டியுள்ளது  என்று  ஆகிவிட்ட  பொழுது  , சலிப்பு  இன்றி  அதனை  ஒரு  நல்ல பயணமாக  ஆக்கி கொள்ள  வழி  தேடுவோம் என்றுத்  தோன்றியது.

சென்று  அடையும்  இலக்கு  ஒரு  பக்கம்  இருக்கத்தான்  செய்யும்.
அதை  அடைய  அன்றாட  சின்னஞ்சிறிய  சந்தோஷங்களைத்  தொலைக்க  வேண்டாமே   வேலைப்பழுவினால் திருமணமான  முதல்  மூன்று  வருடத்தில்  பெங்களூரில் [வீட்டை விட்டு  வெளியூரில் ]  இருந்துக் கொண்டு , கூர்க் [ coorg ] போக  வேண்டும்  என்ற  திட்டம்  நிறைவேறவே  இல்லை. மனைவிக்கு லீவ்  கிடைக்கும்  பொழுது  எனக்கு  வேலை  இருக்கும்  , அல்லது  மேனேஜர்  அவர்  எப்பொழுது  வேலைப்பழு  குறைவாக  இருக்கிறதோ  அப்பொழுது  லீவ்  கொடுப்பார் .அது  எனக்கு  ஒத்து வராது. கொஞ்சம்  கட்டாயம்  லீவ்  வேண்டும் என்று திட்டவட்டமாக  கேட்க  மனமில்லை . தவறு  என்று  பிறகு  உணர்ந்தேன் . இது  கூட  சின்ன இழப்புதான் . அதைத்தான்  நான் சொல்ல  வருகிறேன் , சின்ன  சின்ன  அழகான  நிகழ்வுகளின்  கோர்வைதானே நிறைவான  வாழ்க்கை .

கழிந்த  பொழுது கழிந்ததுதான் . அம்மா  அப்பாவிடம்  அதிக  நேரம்  செலவிடமால்  சனி  ஞாயிறு  தான்  அவசர  அவசரமாக  வந்து  போவோம் .
என்னத்தை  கிழித்து  விட்டேன்  அப்படி  இருந்து  என்றுதான்  இப்பொழுது  தோன்றுகிறது.

அலுவலகத்தில்  வேலை  இருந்துக்  கொண்டேதான்  இருக்கிறது  , சனி  ஞாயிறு  பாராமல்  கூட . எப்படி  இன்னும்  வேகமாக  ஆக  வேலை  பார்த்து  , நேரத்தை  நிர்வகித்து  , பிடித்த விஷயங்களுக்காகவும்
உடல்  நலம்  பேணவும் , குடம்பத்துடன்  அளவளாவவும்  , வாழ்க்கையினை  சற்று கூர்ந்து  அனுபவிக்கவும்  வேண்டும்  என்று  2014 இல்  முடிவு செய்தேன் .
அதன்  ஒரு  வெளிப்பாடு  தான் இந்த  ப்ளாக்  எழுத்தும்  கூட .

உடம்பு  என்னும்  இயந்திரத்திற்கு  பைக் மற்றும்  கார்களுக்கு  கொடுக்கும்  நேரம்  கூட  நாம் கொடுப்பதில்லை . தொப்பையில்  ஆரம்பித்து  முதுகு  வலி  , நீரழிவு  , மூட்டு   வலி  இப்படி   எதாவது வரும்  பொழுதுதான்   இளைய  வயதில்  கல்லைத் தின்றாலும்  செமிக்கும்  உடம்பின்  அருமை  தெரிகிறது  பெரும்பாலோருக்கு .
இன்னும்  ஒன்றும்  கெட்டுப்  போகவில்லை . 45 நிமிடங்கள்  உடம்பிற்கும்  , மனதிற்கும்  குறைந்தது  ஒதுக்க  வேண்டும்  என்பது  என்`புது  வருடத்  திட்டம் .செய்து  விடவேண்டும்  என்கின்ற  திட்டத்துடன்  தான்  இருக்கின்றேன் .
ஒரு  மாதம்  பல்லைக்  கடித்து செய்தால்  , அதன்  பிறகு  அதற்கு  மனம்  ஏங்கத்  தொடங்கிவிடும் . சிலர்  அலுவலகத்திற்கு  சைக்கிளில்  வருகின்றனர் .வேலைக்கு  மத்தியில்  ஒரு  நடையினைப்  போடுகின்றனர்  சிலர்  , கண்களுக்கும்  மூளைக்கும்  ஒய்வு  கொடுத்து ரீசார்ஜ்  ஆக சிறந்த  வழி .
இதனையும்  செய்யலாம் முடிந்தால் .

எல்லாம்  சரி  , நேரம்  எங்கே  எல்லாவற்றிற்கும் .24 மணி  நேரம்தானே  உள்ளது  எல்லோருக்கும் . வேலைப்பழு  அதிகம்  இருக்கத்தான்  செய்கிறது .
2014 முதல்  ஆறு மாதங்கள் அப்படிதான்  சென்றது  , 12-14 மணி  நேரங்கள்
. ஏழு  நாட்களும்  , ஆறு  மாதத்திற்கு  , தூங்கி  சாப்பிட்டு மற்ற  சொந்த  வேலைகளைப் பார்க்க  நேரம்  இருந்தால்  போதும்  என்றிருந்தது .
ஒரு  கட்டத்தில்  இது  சரிப்படாது  , வேறு  இடம்  போக  வேண்டிதான்  என்று  நினைத்து  இருக்கையில் , இன்னும்  ஒரு  6 மாதம்  கழித்து  முடிவு  எடுப்போம்  என்று  தள்ளிபோட்டேன்  , அடுத்த  ஆறு  மாதங்கள்  ஒரு  அளவிற்கு  பரவாயில்லை  . சில மாதங்கள்  நன்றாகவே  இருந்தது .
ஆனால்   ஜனவரி  வரை  இப்படியே  போய்   இருந்தால்  , வேறு இடம்  மாற  வேண்டும்  என்றுதான்  முடிவில்  இருந்தேன் . இது  போன்று  சூழ்நிலைக்கு  ஏற்றவாறு  , வேலை  சார்ந்து  மறுபரிசீலனை செய்யவும்  வேண்டி  உள்ளது .
வேலை கிடைக்கவும்   வேண்டும்  என்பது  வேறு உள்ளது .  சூழ்நிலைக்கு  ஏற்ற  வாறு  வேறு  எப்படி  சமாளிக்க  என்று  யோசிப்பதற்கு  சொன்னேன் .

என் நண்பன்  ஒருவன்  இதேப் போல்  ஒரு ஒருவருடம்  சரியான விடுமுறை இன்றி  இரவு  பகலாக  வேலைப்  பார்த்து  , தன  மகனுடன்  சரியாக  நேரம்  செலவிட  முடியாமல்  போனதும்  , அவன்  தன்னிடம்  நெருக்கமின்றி இருப்பதை  உணர்ந்த  தருணத்தில்  தான்  ஆகட்டும்  பார்த்து  விடலாம்  என்று ஒரு  வெறியில்  வேலை  மாறியதைச்  சொன்னான் .
அதை  நான்  அடிக்கடி  அசைபோட்டுக்  கொண்டுதான்  இருக்கிறேன் .
வொர்க்  லைப்  பாலன்ஸ்[ work  life  balance ]  இல்லாமல்  போனால்  மிகவும்  சிக்கல்  தான் .

அதற்காக கம்பெனி  மாற்றிக்  கொண்டே  இருக்கவும்  முடியாது .
இதனை  சரி செய்ய  நேரத்தை  சற்று  இதை  விட  எப்படி  சரியாக  உபயோகப்  படுத்த  முடியுமா  என்று  சுயவிமர்சனம்  செய்து  , அதனைச்   சரி செய்தப் பின்னும்  இதுவே  தொடர்ந்தால்  வேலை மாற்றம்  பற்றி  யோசிக்கத்தான்  வேண்டியுள்ளது .

நேரத்தை  எப்படி  சேமிக்க!??
வேலைக்கு செல்வதில்    போக்குவரத்தில்  அதிக நேரம்  எடுத்துக்கொண்டால் ??[ அது  தானே  பெரிய  நேர  விழுங்கி! ] , வாடகை வீடாக இருந்தால்  அலுவலகம்  அருகில் வீட்டைப்  பார்த்து  நேரத்தை  சேமிக்கலாம் . இதைத்தான்  செய்தேன்  நான்  பெங்களூருவில் இருந்த  பொழுது.
இப்பொழுதும்  இங்கே.சொந்த வீடு  ரொம்ப தூரத்தில்  இருந்தால்  , முடிந்தால்  கம்பெனிதனை  மாற்றலாம் . வேலையினை  இன்னும்  வேகமாக  செய்ய  முனைவதும் ஒரு  வழி .

இன்னொரு வழியும்  உள்ளது .என்னுடைய நண்பர் ஒருவர்  காலை  6:30 , 7 க்கு  வீட்டில் இருந்து  கிளம்பி  விடுவார் .  காலையில்  30-45 நிமிடங்கள்  மிச்சம்   ஆகிறது  என்றுச்  சொல்வார் . பிள்ளைகளுடன்  நேரம்  செலவழிக்க  வசதியாக  இருக்கிறது  மாலையில்  என்பார் . சோம்பல்தான்  காரணம்  , இரவில் நீண்ட நேரம்  வேலை பார்த்து  பழகிய எனக்கு  , இது  கஷ்டமாக  இருக்கிறது .
[ மிகவும்  கெட்ட  பழக்கம்  என்று  தெரிந்தும்  செய்து  வருகிறேன் .மாற்றும்  முயற்சியில்  உள்ளேன் ]ஆனால்  முயன்றால் முடியாமல்  இருக்காது . வழிகள்  இருக்கத்தான் செய்கிறது  , கொஞ்சம்  நம்மை  வளைக்க  வேண்டும் .
முக்கியமாக  விடிகாலையில்  மூளை  சுறுசுறுப்பாக  இருப்பதால்  வேலை  தடையின்றி  வேகமாக  நடப்பதை  நானே  கவனித்துள்ளேன் .

குடும்பம்  , நண்பர்களுடன்  அதிக  நேரம்  செலவழிப்பதும்  , புத்தகம்  படிப்பதும் ,பயணம்  செய்வதும்  இப்படி  அவர் அவருக்கு பிடித்த  வேலைக்கு  நேரம்  ஒதுக்கியே  ஆக  வேண்டும் .இல்லையென்றால்  வேலை  பார்த்து  பார்த்து  வாழ்க்கை முடிந்து  விடும்  போல . இந்த  வருடம்  தொடங்கப்  போகிறது .
இது  நம்மைப்  சுயவிமர்சனம்  செய்துக்  கொள்ளும்  தருணம் . நம்மை  இன்னும்  மெருகேற்றி  நம்மையும்  , நம்மைச்  சுற்றியுள்ள  குடும்பமும்  சமுதாயமும்  இன்னும்  சிறப்பாக  இயங்க  நாம்  என்ன  செய்ய  முடியும்  என்பதனை பற்றி  யோசிப்போம் , செயல்முறைப்படுத்தவும்  செய்வோம் .
குறைந்த  பட்சம்  ஒரு  மரத்தை  நட்டு  அதனைப்  பேணுவோம் , இது  சுலபமாக  செய்யக்  கூடியது தான் .

சரி  ,இந்த  வருடத்திற்கான  சுய மற்றும்  வேலை  சார்ந்த  குறிக்கோள்கள்  [ personal  and  career  goals ] எனத்  தனித்தனியே  ஒரு  திட்டம்  வகுத்தாகி விட்டாயிற்று . ஜனவரி  10 வரைகூட  தாண்டுமா  இது  என்று  நீங்கள்  நினைப்பது  புரிகிறது .  இதற்கு  ஒரு  தீர்வு பார்ப்போம் .

பிரயன்  டிரேசியின்  [ BRYAN  TRACY ] , கோல்ஸ்  [ GOALS ] புத்தகத்தில்  இது  ஆகிவிடாமல்  இருக்க  ஒரு  வழி  சொல்கிறார் .
நம்முடைய  குறிக்கோள்கள்  [ கோல்ஸ்] எல்லாவற்றையும்  ஒரு  நோட்டு  போட்டு  எழுதி  வைத்திட  வேண்டும்  என்று  சொல்கிறார் . அதனை  தினமும்  இரவிலும்  , காலையில்  வேலை  தொடங்கும்  முன்பும்  பார்க்கச்  சொல்கிறார் . வாரத்திற்கு  ஒரு முறையும்  ,மாதத்திற்கு  ஒரு  முறையும்  நாம்  எங்கு  உள்ளோம்  என்று  மறுபரிசீலனை செய்து  அதற்கேற்றவாறு  நம்மைத்  திருத்திக்கொள்ள  வேண்டும்  என்கிறார் .
இதைக்காட்டிலும்  முக்கியமான  ஒன்று  இப்படிச்  செய்வதால்  , நம்  ஆழ்மனத்தில்  படிந்து  இது  நம்முடைய  கனவை  நோக்கி  இழுத்துச்  செல்லும்  என்கிறார் . செய்துப்  பார்க்கலாமே !


நம்  பிள்ளைகளுக்கு  ஏதேனும்  கற்பித்தால்  , அவை  வேறு  ஒரு  சமயத்தில்  அவர்கள்  நமக்கே  ஆசானாக  ஆனத்தருணங்களை  எல்லோரும் எப்போதாவது  ஒரு  முறை  உணர்ந்து  இருப்போம். இதுதானே  வாழ்க்கை !

அனைவருக்கும்  இனிய  புத்தாண்டு  வாழ்த்துக்கள் .



No comments:

Post a Comment