Saturday, August 29, 2015

டப்பா சோளமும் , பாட்டில் குளிர் பானங்களும் .

தலைப்பு  உணவைச் சார்ந்து  இருந்தாலும்  , நான்  பேச  வந்தது  அதையும்  தாண்டிய  ஒரு  கண்ணோட்டம் .

சிறுதொழில்கள்  பெருக  வேண்டியது குறித்து .

அமெரிக்காவில் வேலை  பார்க்க வந்து சில  வருடங்கள்  ஆகிறது ..
இங்கே  ஷாப்பிங்  செய்வது எனக்கு  முன்பெல்லாம் அலுப்பாய்  இருக்கும் .
எல்லா இடங்களிலும்  பெரும்பாலும்  ஒரே  போன்ற  கட்டமைப்புதான் .
கடைக்குள்  எந்த  ஊரில்  நுழைந்தாலும் அதே  போன்ற வடிவமைப்பும்   ,
சாமான் வரிசைகளும் சலிப்பைத் தவிர எதைக் கொடுக்கும் .
மளிகைக் கடை முதல் [ வால்மார்ட்  போன்ற  கடைகளையும்  சேர்த்து தான்  சொல்கிறேன் ]

இந்தியா  வரும்  பொழுது  , நம்ம  பாண்டி  பஜாரில் தெருவோரக் கடைகளில்
வணிகம்  செய்வது போன்று வருமா  என்று  நினைப்பதுண்டு . இப்பொழுது   நெரிசல்  காரணமாக , தெருவோரக் கடைகள்  அனைத்தையும்  அப்புறப் படுத்தி விட்டு  , பெரிய  கடைகள்  மட்டுமே  மிஞ்சி  இருக்கிறது அங்கே .

இந்த  செயின் ஆப்   ஸ்டோர்ஸ் வந்தாலே சிறு  வணிகர்கள்  பாதிப்படுகின்றனர்  ஒரு  பக்கம்  என்பதை  நாம் அறிந்ததே . இன்னொரு  பக்கம்  நான் சொல்லும்  , பல்வகை [variety ]  குறைவது . இது  ஷாப்பிங்  அனுபவத்தை ருசி குறைக்கச்  செய்யும் .

யோசித்துப்  பாருங்கள்  , வேலைப்   பழுவில் , வெளியே  செல்வது  குறைந்து  இருக்கையில்  , அதே  சலிக்க  வைக்கும்  கடைகளில்  நேரே  உள்ளே  சென்று
வாங்கி  வருவது நன்றாக   இருக்குமா  அல்லது  , மெதுவாக  அந்த  பாண்டி  பஜார் மர   நிழல்களுக்கிடையில்  , நறுக்கி  வைத்த   மாங்காயும்  , வெள்ளரிப்பிஞ்சும்  மிளகாய்ப் பொடி தடவி சாப்பிட்விட்டு எதுவும்  வாங்காமல் வந்தாலும்  சரிதான்! அந்த  அனுபவமே  தனிதான் .

வாழ்க்கையில்  நிறங்கள்  வேண்டும்  எல்லாவற்றிலும்  .கருப்பு  வெள்ளையாகத்தான்  தோன்றுகிறது  எனக்கு  இந்த  மால்களும்  , பெரியக்  கடைகளும்  சில  தடவைகளுக்குப்பின் .

இது ஒரு  பக்கம்   இருக்கட்டும் .

சில  வருடங்களாக  டெக்சாஸ்   ஆஸ்டின் என்கின்ற  ஊரில்  இருந்து  வருகிறேன் .இது அமெரிக்க  நகரகங்களில் சற்று  வித்தியாசமான  ஊர்   என்று  சொல்லலாம் .

வெயில்  106-108 அளவிற்கு  ஜூலை  ஆகஸ்டில்  மண்டையப்  பிழந்தாலும்  ,
அதையும்  தாண்டி  இந்த ஊரில்  மக்கள்  விரும்ப` சிலவைகள்  இருக்கின்றது .
குறிப்பாக  நான்  பேச  வந்த  தலைப்பின் கீழ்  வரும்  , சிறு வணிகங்கள் . உதாரணமாக  உணவகங்கள்  , பெரும்பாலும்   புட்  செயின்ஸ் [ food  chains ]   இருக்கும்  அமெரிக்க  நகரங்களில் , இங்கே  நிறைய  சிறு  வணிகர்கள்  கடை  அமைத்துள்ளனர் .

 குடும்பங்கள் நடுத்தும்  பிட்சா   உணவங்ககள்,   [ இத்தாலி  நாட்டிலிருந்து  குடிபெயர்ந்து  வந்த சில  குடும்பங்கள்  நடத்தும்  கடைகளும்  அடங்கும் ], ஆப்பிரிக்கா  எதியோப்பிய  நாட்டு  உணவகங்கள் [ நம்ம  ஊரு  தோசை  போன்ற  ஒன்றை  அடிப்பகுதியாகக்  கொண்டு அதன்  மீது  பல  வகைக்  கரி வகைகளைப் பரப்பி இவர்கள் கொடுக்கும்  விருந்து  அலாதி .
அதுவும்  கையில்தான்  சாப்பிட  வேண்டும் வகையில்  இருக்கும்  என்பதில்  எனக்கு  இரட்டிப்பு  மகிழ்ச்சி . அந்தக்  கடையில்  உட்கார்ந்து  சாப்பிட  வைக்கப்  பட்டு  இருக்கும்  மோடா  போன்ற  நாற்காலிகளும்  அந்த அனுபவத்தைக்  கூட்டும் .]

இதில்  பிட்சா  போன்ற உணவிற்கு  நான்  வக்காலத்து வாங்கவில்லை .
இத்தாலியக்  குடும்பங்கள்  தங்கள்   பாரம்பரியத்தை வெளிக்காட்டும்  வகையில்  நடத்தும்  சிறு கடைகளைக்  குறியிட்டேன்  , அவ்வளவே !


 ஐஸ்கிரீம் கடை  ஒன்று  இருக்கிறது .
ஐஸ்கிரீம்  அவ்வளவு  சாப்பிடாத  நான்  , இந்தக்  கடையினில்  சாப்பிட  ஆரம்பித்த  பின்  ,கொஞ்சம்  அடிக்கடி  சாப்பிடத் தொடங்கி விட்டேன் .
வெறுமனே  ஐஸ்கிரீம் கப்பில்  போட்டு  மட்டும்  தராமல் , நன்றாக  அடித்து  , கொஞ்சம்  பிஸ்கட்டும்  , பழங்களும்  கலந்தடித்து ஒரு  கலவையாகத்   தருவர் ..
இது  ஒரு  உதாரணம்   மட்டுமே .
இப்படி  பல   இருக்கிறது .வித்தியாசமாக  யோசிப்பார்கள்

இதை  பாஸ்கின்  ராபின்ஸ்  போன்ற  கடைகளில்  பார்க்க  முடியுமா!

இது  உணவு  சார்ந்த  வணிகம் .

இதைப்  போன்று  கோல்ட் ஜிம்  போன்ற  செயின்  ஆப்  பிட்நெஸ்
 சென்டர்ஸ்களுக்கிடையில் சிறு  பிட்நெஸ்  கிளப்ஸ்  நிறைய  பார்க்கிறேன் .
ஒன்றில்  சேர்ந்து  சில  மாதங்கள்  பயிலவும்  செய்தேன் .
நிறைவான  அனுபவமாக  இருந்தது .

ப்ரேசிலியன்   ஜோஜிட்சு  , யோகா  , கிக் பாக்சிங்  போன்று  பல  வகையான தற்காப்பு   வல்லுனர்கள்  சிறிய  அளவில்  நடத்தும்  பயிற்சிக்கூடங்களும்  அடங்கும்  இதில் .நல்லக் கூட்டமும்  பார்க்கிறேன் .

இதைக்  கலையாக  மற்றும்  சொல்லித்தராமல்   ,உடலைப்  பேணும்  ஒரு
யுகித்யாக  முன்னிறுத்துகின்றனர் . எந்த  வயதினரும்  படிக்கும்  வகையிலும்
சொல்லித்தருகின்றனர் .

ஏன்  நம்ம  ஊரில்  அழிந்து  வரும்   சிலம்பாட்டமும்  , கேரளாவின்  களரிப்பட்டுவும்  பெரு  நகரங்களில்  சொல்லிக் கொடுக்கபடுவதில்லை என்றுத்  தோன்றியது . ஜிம் மில்  மட்டும்  இன்றி  , இது  போன்ற  கலைகளை
 உடல்  நலம்  பேணும்  ஒரு கட்டமைப்பில் கொண்டு  வந்துப் பார்க்கலாமே .
அழிந்து  வரும்  கலைகளும்  மேன்படும் , முக்கியமாக  சலிப்புத்  தட்டாது  , உடம்பும்  மனமும்  சீர்படும் .

இப்படி  எல்லா  தளத்திலும்  சிறு  வணிகம்  பெருகி  நிற்கின்றது இங்கே .

"keep  austin  weird  "என்பது இந்த  நகரத்தின்  தாரக  மந்திரம் .
அதாவது  வித்தியாசமா  கோக்குமாக்கா   இருக்க  வேண்டி சொல்லப்படும்  தாரக   மந்திரம் . அரசே  சிறு  தொழில்  நடத்துவோருக்கு  நிறைய
உதவி  செய்கிறது . கடன்  கொடுக்கும்  வழிகளை எளிமைப் படுத்தியது  இதில்  முதன்மையாகும் .


இங்கே  இப்படி  இருக்க  , நாம்தான்  நம்முடைய  பாரம்பரிய  அண்ணாச்சி  மளிகைக்  கடைகளையும்  , தெருவோர  சிறு  வணிகர்களையும்  விட்டு ,சூப்பர் மார்கெட் போன்ற  கடைகளுக்கு  போய்க்கொண்டு  இருக்கிறோம் .

பொள்ளாச்சி  இளநீர்  விடுத்து  கோக்கிற்கும் , ,   தெருவோரத்தில்  அல்லது  மெரினாவிலோ  சுடச் சுட தீயினில்  வறுத்துத்  தரப்படும் காம்புடன்  கூடிய சோளம்  விற்கும்  கடைகளையும்  விட்டு விட்டு , கூடாரத்தில்  டப்பாவில்  போட்டு தரப்படும் மசாலா  சோளத்தை  நாடுகிறோம் .

இருட்டுக்கடை  அல்வா  என்பது நெல்லை  டவுனின்  ஒரு  அங்கம் .
இப்படி  சில  அங்கங்களின்  குறியீடுதான்  ஒரு  ஊர் . இவைகள்  காலப் போக்கில்  அழிந்துவிடக் கூடாது .

சோளம்  என்பதை  ஒரு  குறியீடாக  மட்டுமே  சொல்கிறேன்!
சிறுதொழில்கள்  பெருகட்டும் ,வாழ்க்கை  இன்னும்  வண்ணமயமாகட்டும் .




Wednesday, February 18, 2015

மனம் ஏன் பழசை நினைத்து ஏங்குகிறது .????

இளையராஜா  பாடல்கள்  பற்றி  சமீபத்திய  ஒரு  பேட்டியில்  இயக்குனர்  விக்ரமன் சொன்னார் , பழைய  பாடல்களை   கேட்கும்  பொழுது  அழத்  தொடங்கி  விடுவேன்   என்று .

கவலையற்ற  தினங்களை  நியாபகப்படுத்தும்  ஒரு  அனுபவத்தை  அதைக்  கொடுப்பதனால்  என்றும்  சொன்னார் . எவ்வளவு  ஆழமான  நிதர்சனமான
கருத்து .

என் மனதில்  இந்த  சின்னப்  பொறி  நிறைய  எண்ணத்  துகள்களை
கலைத்து  ஒரு  புரட்டு புரட்டிப்போட்டது .

மனம் ஏன்  பழசை  நினைத்து  ஏங்குகிறது ???

காலமும்  , காலம்  கொடுத்த  சில பல கசப்பான  இனிப்பான நினைப்புகள்
ஆழ்  மனதில்  படிய  வைத்து  போன  பிம்பங்களை  தூசி  தட்டி  எடுக்கும்  ஒரு  ஊடகம் தான்  பாடல்கள்  போல . இது  போன்று  வேறு  ஊடகங்களும்  இருக்கலாம் , ஒவ்வொருவர்  ரசனை மற்றும்  அனுபவம்   சார்ந்து .

இந்த நொடியில்   இல்லாமல்  , கண்களை  மூடியோ  அல்லது  நினைப்பிலோ
"time  travel"  செய்யும்  ஒரு  வழிதானே  அந்த  பழைய  நினைவுகள்  கொடுப்பது .

நம்மிடம்  இப்பொழுது  இல்லாமல்  போன  மனிதர்களையோ  , அல்லது  தொலைத்த  மீட்டுக்கொள்ள  முடியாத  சந்தோஷங்களை  தேடி  அலையும்  ஒரு  தேடல்  என்றும்  சொல்லலாம் .

இன்னும்  சொன்னப்போனால்  கால  வெள்ளத்தில்  தொலைந்த  நம்மை  மறுபடியும் , அதாவது  பழைய  நம்மை  ஒரு  முறை  நினைவால்  ஸ்பரிசித்து  வரும்  ஒரு  அனுபவமாகவும்  அது  இருக்கும்  பல  சமயங்களில் .

என்னுடைய  சில  முந்தய  வலைப்பூக்களில் என்னுடைய  பால்ய  தினங்களைப்  பற்றி  அடிக்கடி  குறிப்பிட்டு  இருப்பேன் .
அதை  நான்  அடிக்கடி  குறிப்பிட  வேண்டும்  என்று  மெனக்கிட்டு  சொல்லவில்லை . ஆனால்  அசை  போட  ஆனந்தமாய்  இருந்ததால்  சொல்லி  இருப்பேன்  என   பிற்பாடு  ஒரு  சந்தர்ப்பத்தில்  உணர்ந்தேன் .


அக்காவிடம்  பேசிய  பொழுது   ". நீ  சமீப  காலங்களாக அடிக்கடி உன்
சின்னப்   பையன்  நினைவுகளை  பதிவிடுகிறாய் , நல்லது "  என்ற  அவள்  சொன்ன பொழுதுதான் .

நினைவுகள்  வரமாகவும்  சாபமாகவும்  அமைகின்றன என்பதை  நாம்  அறிவோம் இழந்த  சந்தோஷங்களை  நினைவுப்  படுத்துவதால்  கசப்பாகவும்  , இல்லாத  சில  சந்தோஷங்களை  நினைத்து  அமிழ்ந்து  போக  உதவுவதாலும் தானே !

அம்மாச்சியின்  மடியில் படுத்து  சொடக்கு  எடுத்துக்  கொண்டு  , " சுகவாசி " என்று  அவர்கள்  செல்லமாக  கடிந்து  கொண்ட  தருணத்தையும்  ,
அக்காவும்  நானும்  சிறு வயதில்  கவலையற்று  ஆனால்  ஒரு  5 ஸ்டார்   மிட்டாயின்  காரணத்தால்  சண்டையிட்டுக்  கொண்ட  நாட்களையோ நினைத்து  மறுபடி  மறுபடி   பூரித்துப்  போகக்கூடிய  சக்தி  நினைவுகளுக்கு  மட்டுமே  உண்டு .குறிப்பாக  அந்த  மிட்டாய்  கிடைப்பதே  அந்த  வயதின்  பெரிய  தேவையாகவும்  , கவலையாகவும்  இருந்து உள்ளது  ஒரு  காலம்  என்று  எண்ணி  மறுபடி  மறுபடி  பூரிக்கத்தான் .

அப்பாவுடன்  புதிதாக  வாங்கப்பட்ட  சாம்பல்  நிற  லாம்பி  ஸ்கூட்டரில்  முதல்  முறை  உட்கார்ந்து  போன  பொழுது  துரத்திய  எருமை  மாட்டின்  குரலும்
காதில்  இப்பொழுதும்  கேட்பது  அதே  சக்தியால்தான் .

எல்லா  பற்களும்  தெரியும்  சிரிப்புடன்  , தளர்ச்சி  இன்றி  வந்த அம்மாவின் அந்த  பழைய  நடையும்   குதூகலமும்  நான்  மறுபடி  தொட்டு  வருவதும்  நினைப்பில்தானே.

இப்படி  பல  நம்  ஒவ்வொருவருக்கும் .

இதே  போல பழைய   சோகங்களை  அசை  போடவும்,  சில  சமயங்களில்
சுழற்சியாக  அசை  போடவும்  தான்  செய்கின்றது  மனம் . திரும்பத்  திரும்ப  போட்டு  உளப்பி  எடுக்கும் . இதைத் தாண்டி  வந்துவிட்டால்  நல்லது  என்று  சொல்லித்தெரிய  வேண்டியது  இல்லை.

சில  வாரங்களுக்கு  முன்பு  என்  கல்லூரி  நண்பனை  வருடங்கள்  கழிந்து  சந்தித்தேன் . அன்று  இரவு  முழுவதும்  பேசிக்கொண்டே  இருந்தோம் .
GCT  கல்லூரியில்  பச்சை  நிற  இரும்புக்  கட்டிலில்  படித்துக்கொண்டு  இருக்கிறோம்  என்று  எங்களையே  ஏமாற்றிக்  கொண்டு  , போட்ட
அரட்டைகளை  நியாபகப் படுத்திச்  சென்றது  அந்த  சந்திப்பு .

அசை போட்டு  கொண்டே  இருந்தேன்  , ஏன்  இப்படி  நினைக்க  நினைக்க  நினைவில்  இனிப்பைச்  சுரக்கிறது  கல்லூரி  நாட்கள்  என்று.
யோசித்து  யோசித்து  கொஞ்சம்  பிடி  கொடுத்தது .
அது  பொறுப்புகள்  அற்ற  நாட்கள்  , " wild  carefree  days ".
எல்லாவற்றையும்  பார்த்துக்  கொள்ள  பெற்றோர்கள்  இருந்ததால்   ,
பொறுப்புகள்  இன்றி  கழிந்த  நாட்கள் .

இப்படிப்  பட்ட  தினங்களை  நினைத்து  மனம்  ஏங்கத்  தானே  செய்யும்!

இளையராஜா  பெரியவரா  ,  ரெஹ்மான்  பெரியவரா  என்ற  சண்டைதான்
அப்போதைய  கவலை  , ஹாஸ்டல்   மெஸ்ஸில்  இன்று  கல்  இட்லிதனை  எதனைக்கொண்டு  உடைத்து  உள்ளே  அனுப்புவதுதான்  என்பதுதான்  அன்றைய  ஒரு  இரவின்  கவலையாகவும்  இருந்து  இருக்கக்  கூடும் .
இப்போ  இருக்கும்  பொறுப்புகள்  நான்  சொல்லியா   தெரிய  வேண்டும்!
கடைசி  வருடம்  நெருங்கவும்  , வேலை  அமைய  வேண்டும்  என்ற  பதட்டம்  தொற்றிக்கொள்ள  ஆரம்பித்ததில்  தொடங்கி  அது  அப்படியே  வெவ்வேறு  விதத்தில்  காலத்தை  வியாபித்துக்  கொண்டது  வேறு  கதை .

பிள்ளைகளின்  சிரிப்பும்  , இசையும்  , நண்பர்களுடன்  பேசும்  ஒரு  தொலை பேசி  உரையாடலோ  , சந்திப்போ   , அல்லது  ஒரு  நல்ல  வாசிப்போ ஏதோ  ஒன்றின்  மூலம்  அதனை  மீட்டு  எடுக்க  முயற்சிக்கிறோம் .
இந்த  வருடத்தில் அதனை  இன்னும்  அதிமாக  செய்வோமாக !

குறிப்பாக  நம்  பிள்ளைகளுக்கு  முடிந்த  வரை  இப்படி  கவலையற்ற
நாட்களை  வாழ்  நாள்  முழுவதும்  கொடுக்க  முயற்சிப்போம் , கடவுள்  அருளால் .

வேலை  பிடிங்கித்  தின்ற  பகல்  இரவுகளுக்கு  மத்தியில் பழயதை  நினைவூட்டிச்  சென்றது  இந்தப்  பதிவும் .இதைத்தான்   சொன்னேன்  மேலே  " with  no  strings  attached "  தருணங்களை  தொட்டு  வரும்  ஒரு  பயணம்  என்று!


Tuesday, January 13, 2015

ஒட்டகச்சிவிங்கியும் கிட்டப்பார்வையும் .....

 ஒட்டகச்சிவிங்கியும் கிட்டப்பார்வையும் .....

வேலை இல்லாத வாரக்கடைசிகள் அபூர்வமாகிப்போன துறையில் நானும் இருப்பதால் , சமீபத்திய இரண்டு மாதங்கள்  மிகவும் இனிமையாகக் கழிந்தது , வேலை இல்லாததால். பிடித்த விஷயங்களை செய்வதும் , தூங்குவதும் குழந்தையுடன் இன்னும் அதிக நேரம் செலவிடுவதற்கும் நல்ல வாய்ப்பாக இருந்தது.

நாளையில் இருந்து திரும்பவும் ஓட்டம் தொடங்கப்  போகிறது என நினைத்துக்கொண்டே படுத்து இருக்கையில், மகள் எப்பொழுதும்  போல ,
"bookchi bookchi " என்று ஒரு கதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து படம் பார்த்து கதை சொல்லச் சொன்னாள் .

மேல சொன்ன தலைப்புடன்[ ஆங்கிலத்தில்;தான் , " THE  near  sighted  giraffe "] இருந்த அழகான படங்களுடன் கூடிய அந்த புத்தகத்தை நான் பல நாட்கள் பார்த்து உள்ளேன் , ஆனால் இந்த கதையினை படித்துச்  சொன்னது கிடையாது.

ஒரு காட்டில் ஒரு ஒட்டகச்சிவிங்கிக்கு கிட்டப்பார்வை  .

 காட்சிகள் சரிவர தெரியாமல் நிறைய  சங்கடங்கள். கண் தெரியாமல் ஒரு மரத்தின் கிளையில் தலை முட்டுகிறது , ஒரு குரங்கு அதனை கண்ணாடி  அணியச்  சொல்லுகிறது . மற்ற விலங்குகள் கண்ணாடி அணிந்த தன்னை பார்த்து என்ன நினைக்குமோ என்று யோசித்து  , அது கண்ணாடி அணிய மறுக்கிறது .  பிரச்சனைய சமாளிக்க , "helmet"  ஒன்றை போட்டுக்கொள்கிறது .
பிறகு ஒரு சிறுத்தையின்  மீது கால் இடறி விழுகிறது. இதன் பிறகும்  கண்ணாடி போடாமல் , வாலுக்கு மணி கட்டிக்கொள்கிறது , மற்ற மிருகங்கள் இதன் வருகை தெரிந்துகொள்ள . இப்படி போகிறது அதன் நாட்கள் .
சில வாரங்கள் கழித்துப்பார்த்தால் அதன் பின் புறத்தில் ஒரு தலைகாணி [முள்ளில் விழுந்ததில் இருந்து ], முதுகில் ஒரு ஏணி [ பள்ளத்தில் விழுந்ததில் இருந்து]  என பல சுமைகளை கூடவே தூக்கிக் கொண்டு சென்றது.

[ முழுக்கதையினை   சொல்லவில்லை இங்கே   , கொஞ்சம்  சுருக்கியுள்ளேன் , புத்தகத்தில்  ஒட்டகச்சிவிங்கி  இன்னும்  நிறைய  இடங்களில்  தடுமாறுகிறது !, சுமையும்  கூடுகிறது  ஒவ்வொரு  முறையும் ]

ஆனால்  கண்ணாடி மட்டும் அணிய மறுத்தது . இந்த வினோத தோற்றத்தினால் மற்ற மிருகங்கள்  அதனை அதிமாகவே  கேலி செய்தன, சில பாவமாக பார்த்தன .

இந்த கதை இப்படி போய்க்கொண்டு இருக்க, என் மகள் என் மடி விட்டு இறங்கி ஓடி விட்டாள் . குழந்தைகளின்  கவனம்  சிறிது நேரத்திற்கு மேல் ஒரு இடத்தில இருக்க மாட்டேன் என்கிறது."Attention  span " எனச்சொல்வர்  இதனை.

தொலைக்காட்சி  மற்றும் இன்டர்நெட் மூலமாக இவர்கள் கார்டூன்ஸ்  பார்த்து ,நொடிக்கு பல முறை காட்சிகள் மாரிப்பழகி , கதை கேட்கவோ , சற்று ஆழமாக ஒரே இடத்தில உட்கார்ந்து மனதை செலுத்தும் காரியத்தில் மனம் சேர மாட்டேன் என்கிறது. இதற்க்கு நாமும் காரணம். வேலை அல்லது சோம்பேறித்தனத்தால்  , தொலைக்காட்சி போட்டால் அழாமல்  இருக்கிறார்கள் என்று பழக்கி விட்டு , இப்படி ஆகிறது. இனி இதை மாற்ற முடிவு செய்து உள்ளேன். இதற்கு என்னுடைய அலுவலக நண்பர் முன்னோடி . வாரத்திற்கு சில மணி நேரங்கள் தான் தொலைக்காட்சி பார்க்க   விடுகிறார். முடிந்த வரை இயற்கையுடன் கூடிய சம்பாஷணைகளை பழக்கி விட்டு இருக்கிறார். சைக்கிள் எடுத்துக்கொண்டு அவர்களுடன் ஏரியினை   சுற்றி வருவதும் , படம் வரைதலும் , நிறைய புத்தகங்கள் வாசிப்பதும் , ஓடி ஆடி விளையாடவும்  பழக்கி இருக்கிறார். அடிப்படையில் அவர்களின்  படைப்பாற்றலை ["creative  intelligence  "]  பெருக்குதல் ஆகும்  .

அனைவரும் இதனைச்  செய்ய வேண்டும்.

கதையைத்தொடுருவோம் . கடைசியில் ஒரு சிறுத்தை ஒரு மரம் ஏறி அந்த ஒட்டகச்சிவிங்கியின் மீது ஒரு கண்ணாடி மாட்டி  விடுகிறது.
இப்பொழுது தன்னுடைய கோலத்தை  ஒரு நீர் நிலையில்  அது பார்க்கிறது .
இவ்வளவு  கோமாளியாகவா காட்சியளித்தோம் என்று மற்ற அனைத்தையும் கழற்றி எறிந்து , கண்ணாடி மட்டும் அணிந்த பின , தான் அழகாகவே  இருக்கிறோம் என உணர்கிறது. இப்படி அந்த கதை முடிந்தி விட்டது.

கண்ணாடி அணிந்து இருந்தால் தாழ்வு  மனப்பான்மை வரக்கூடாது  என குழந்தைகளுக்குச்  சொல்லவும் , மற்றவர்கள் அப்படி அணிந்து இருந்தால் அதை பற்றி குழந்தைகள்  என்ன நினைக்கிறார்கள்  என தெரிந்து கொள்ளவும்  பெற்றோர்களுக்கு சொல்லி முடிக்கிறார்கள் கதையின் ஆசிரியர்கள்
பெஞ்சமின்  மற்றும்  பில்  மக்லீன் .

[ NEW  BURLINGTON  , LONDON  வெளியீடு ].

எனக்கு இந்தக்கதை இன்னும் நிறைய ஆழமானவற்றைச் சொல்லியது.  இந்தக்கதையின் மூலமே அந்த ஒட்டகச்சிவிங்கி , கண்ணாடி அணிந்தால்  தன்னைப்பற்றி " மற்றவர் என்ன நினைப்பர்" அல்லது " WHAT  OTHERS    THINK " என்பதே .

நாமும் பல  சூழ்நிலைகளில்  ஒரு விஷயத்தை அணுகும் பொழுது , சரியான  கோணத்தை விட்டு ,  " மற்றவர் என்ன நினைப்பர்" என்கிற நினைப்பில் வேறு முடிவு எடுக்கிறோம் , அல்லது நமது சந்தோஷங்களை  குறைத்துக்கொள்கிறோம் . இதனால்  பாரம் தான் கூடுகிறது .
உண்மையில்  ,பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம்மை பற்றி சிந்திக்க எவர்க்கும் நேரம் இருப்பதில்லை அல்லது சரியானதைச் செய்தால் [ கண்ணாடி அணிந்துகொண்டால் !] பலர் நமக்காக
மகிழ்ச்சியே அடைவர் . மற்றவரை பாதிக்காத வகையில் எடுக்கும் எந்த முடிவும் சரியானதே என்பது என் கண்ணோட்டம் .

இன்னொரு  வகையில் பார்த்தால் , கண்  தெரியாதது என்பது  அந்த ஒட்டகச்சிவிங்கியின் குறைபாடு. அதற்க்குண்டான தீர்வை அது புறத்தில்  தேடுகிறது.நமது கண்ணோட்டம் சரியாக இருந்தால் மற்றது தானாகவே விளங்கும்.

பிள்ளைக்கு கதை சொல்லப்போய்  எனக்கும் சிலவற்றை  வலியுரித்திச்சென்றது இந்தக்கதை .

 சரியான கண்ணாடி அணிந்து வாழ்கையினை  தொடருவோம்



Saturday, January 10, 2015

கடன்சுமையும் தொழில்முனைவும்

 கடன்சுமையும்  தொழில்முனைவும் :

சென்னையில்  ஏற்பட்ட சில நிகழ்வுகளை பதிவு செய்யத்தோன்றியது .

தோள்பட்டையில் சின்ன அடி ஏற்பட்டதாலும்  ரொம்ப நாட்களுக்கு பிறகு சென்னை வந்ததாலும் , சிறிது  நாட்கள் " call  driver "  சேவையினை  உபயோகப்படுத்திக்கொண்டேன்   .  இது நல்லதொரு சேவை.

அம்மாவிற்கு அடிக்கடி  வெளியே செல்லும் வேலை இல்லை.வாரத்திற்கு அல்லது  இரண்டு  வாரத்திற்கு ஒரு முறை தான் கோவிலுக்கு போக காரை எடுககும்  சூழ்நிலை  வரும். மாசத்திற்கு டிரைவர் வைத்துக்கொள்ளும்  தேவையும் இல்லை , செலவும் அதிகம். நான்கு மணி நேரத்திற்கு 250-300 ரூபாய் பெற்றுக்கொண்டு "call  driver " வசதி மிகவும்  சவுகரியம். தற்போது உள்ள ஆட்டோ செலவிற்கு ரொம்பவே  தேவலாம்.

இப்படி சில டிரைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அனுப்பின  ஒருவரையே திருப்பி  பெரும்பாலும்  அனுப்ப மாட்டார்கள் [ நாம் அவரை நிரந்தரமாக  நம்ம வீட்டிற்க்கு சேர்த்துக்கொள்வோம் என்று!]. 
தினேஷ்   மட்டும்  இரண்டு முறை வந்தார்.சிரித்த  முகத்துடன்  எப்பொழும் கனிவான   தோரணையும்  உள்ள அவருடன் பழகுவதற்கு  ரொம்ப நேரம்  ஆகவில்லை .

"என்னிடமும்  வண்டி இருக்கிறது சார் ."tavera " வச்சு இருக்கேன். ஆனா சவாரி இல்லாத போது  இப்படியும்  ஓட்டறேன்  " என்றார்.

எப்பொழுதும் அலை பேசியினை  நோண்டிக்கொண்டே  இருந்தார் , வண்டி ஒட்டாத சமயத்தில்  தான். வெளியே சிரித்த முகத்துடன்  இருந்தாலும்  , ஏதோ உள்ளே ஓடிக்கொண்டு  இருப்பதை  உணர முடிந்தது , சிறிய படபடப்பை  அவரை  அறியாமல் வெளிக்காட்டிக்கொண்டு  இருந்தது அவரது உடல் மொழி. 

"வண்டி வச்சுட்டு  இந்த மாதிரி , இன்னொருத்தருக்கு வண்டி ஓட்ட கஷ்டமா  இருக்கா? ஏன்  டென்சனா  இருக்கீங்க ?" 

" இல்லை சார் , இதுதான் சார் வசதி  , நினைச்சா  ஓட்டுவேன்  , இல்லேன்னா  வீட்டுக்கு பொய் ரெஸ்ட்  எடுத்துப்பேன். புல் டைம் ஓட்டினா  , நேரம் காலம்  இல்லாம வேலை செய்ய வேண்டி இருக்கும். ராத்திரி பத்து  ஆய்டும் பெரும்பாலும் . நான்  இப்போ அதுவும் செய்யறது  இல்லை , வண்டி இருக்கிறதால  லாங் ட்ரிப் மட்டும் தான் போறது , இல்லை ஏர்போர்ட்  pickup  அண்ட் drop  மட்டும்  சிட்டிக்குள்"

அது இல்லை  சார் பிரெச்சனை ." tavera " வண்டி ஒன்னு லோன்  போட்டு  வாங்கினேன் . மாசா  மாசம் 15000 " due " கட்ட வேண்டி இருக்கு. அவ்ளோவா ஓட்டம்  இல்லை. எங்க " travels"  நம்பித்தான்  வாங்கினேன்.ஆனா அவர் செகண்ட் ஹண்ட்  வண்டிய  டிராவல்சில் ஓட்ட விட  முடியாதுன்னு  சொல்லிடாரு . 
அவர் மேலயும  தப்பு சொல்ல முடியாது. "செகண்ட் ஹாண்ட் "  வண்டி  எப்போ மக்கர்  பண்ணும்னு தெரியாது. வெளியூருக்குத்தான்  இந்த வண்டிய  புக்  செய்வாங்க . அவசர பட்டு வாங்கிட்டேன். எனக்கு அவர் அளவுக்கு  காண்டாக்ட்ஸ்  இல்லை. அதான்  வண்டிய  விக்கப்பார்த்துட்டு  இருக்கேன்.சரியாய் பார்ட்டி  எதுவும் அமையலை. ஆறுக்கு  வாங்கினேன்.
1.5 லட்சம்  நஷ்டத்துல்ல  தான் கேக்கறாங்க . விக்கவும்  மனசு இல்லை , ஆசையா  வாங்கினது, ஆனா "due " கட்டவும்   கஷ்டமாவும்  இருக்கு"

" டீ  சாப்பிடலாம்  வாங்க"..தயங்கிய  வாறே  வந்தார்.


"நீங்க சொல்றதை  நானும்  யோசிச்சு  பார்த்தேன்.  இன்னும்  நஷ்டம் அடைய  வேண்டாம்னா நீங்க சரியான ஆளைப் பார்த்து  வித்துடறதுதான் சரி. கஷ்டமாத்தான்  இருக்கும் . ஆனா நாள் ஆகா ஆக  ரீசேல் விலை  கம்மி ஆகத்தான்  செய்யும் . காருக்கு  எதன்னா  ரிப்பைர் வந்துச்சுன்னா  ரொம்ப  கஷ்டம்  ஆகிடும்."

" நீங்க சொல்றது சரி தான.நானும் அதை நினைச்சுதான்  குழப்பத்துல  இருந்தேன்."

" ப்ரோகர்ஸ் இல்லாம  விக்கறதுக்கு வழி இருக்கு. "சுலேகா " , " கார்வாலே " போன்ற "websites"  இருக்கு. வீட்டுக்கு  வாங்க , நாம விளம்பரம்  கொடுப்போம்.
வண்டிய கழுவி எடுத்துட்டு வாங்க.போட்டோவும்  போடுவோம். அப்புறமா  பார்ப்போம் ரெஸ்பான்ஸ்  எப்படி வருதுன்னு "

"சரிங்க சார் ".

பிறகு ஒரு வாரமா  எந்த தகவலும் இல்லை.
அடுத்த முறை பார்த்த பொழுது  ,

" காரை வித்துட்டேன்  சார். நஷ்டம்  தான் . கும்பகோணத்துல  இருந்து ஒரு பார்ட்டி  புரோக்கர்  மூலமா  வந்து  வாங்கிட்டு போனான் ".

ஒரு முறை  நாமே பார்த்து  இருக்கலாமேன்னு   கேக்கத்தோன்றியதை   அடக்கிகொண்டேன் .

" சரி , இனி மேல  புதுசா  தொடங்குங்க . புடிச்சுடலாம் .நானும்  காலேஜ்  முடிச்சு ரெண்டு வருஷம் வேலை பார்த்துட்டு திரும்ப படிக்கப்போனேன். அப்பாவும் "retire " ஆகி இருந்தார். பெரிய முடிவுதான் . நான்கு வருடம்  கழிச்சு அதே பழைய BE  சம்பளதுக்குதான் வேலை சேர்ந்தேன் . அப்பாவுக்கு தான் வருத்தம் , இவ்ளோ கஷ்ட  பட்டு படிச்சு  சரியான சம்பளம்  இல்லைன்னு.
சில வருஷம் ஆச்சு பிடிக்க . கடன்  வேறு  படிப்பிற்கு  வாங்கியது
அப்பா ஏற்கனவே நிறைய செலவு செய்து  விட்டார் ,கடன் தவிர  , அதனால
அவர் சொன்னதையும்  கேட்காமல் நான் தான்  படிப்புக்கடனை அடைப்பேன்னு  சொல்லிட்டேன். கடன் அடையும் வரை  அந்த 5 வருடங்கள் ,பெரிதாக  அதை விட்டு  நம்மால் வெளியே எதுவும் யோசிக்க  முடியாது.
உங்க நிலைமை புரிஞ்சுதான் பேசறேன் .ஆனா இப்போ  ஒரு அளவுக்கு நல்ல இருக்கேன் . உங்க வீட்டுல என்ன சொன்னாங்க ?"

" அவ ஒன்னும்  சொல்ல மாட்டா  சார் . எனக்குதான்  கார் மேல  ஒரு அட்டாச்மெண்ட்  வந்துடுச்சு ".

"கஷ்டம்தான். சரி ஆகிடும். பெரிய சுமை ஒன்னை இறக்கி வச்சு இருக்கீங்க .
கடன் இல்லாமல் குடும்பத்தை  நடத்துங்க" .

" சரி சார்" என்று பொய் விட்டார்.

என்னை இந்த நிகழ்ச்சி  சிந்திக்க வைத்தது.
"contacts " என்பது  எவ்வளவு  முக்கியம். திறமையும்  , உழைப்பும்  இருப்பினும்
சரியான ஆட்கள்  தெரிய வில்லை என்றால்  கடினம் தான்.இது பெரிய கண்டுபிடிப்பு இல்லை என்றாலும்  , கண் முன்னே  பார்த்ததும் , தாக்கம் அதிகமாக  இருந்தது.

குமார் மேலயும் தவறு  இருந்ததை அவரே ஒப்புக்கொண்டார் .சரியாக  தகவல் பரிமாற்றம்  [ " communicate "  ]செய்ய  வில்லை  அவருடைய "travel  agency " யுடன். புதிய கார்  ஒன்றை [ swift  அல்லது 6 லட்சம்  விலைக்கு  கம்மியான கார் ] வாங்கி இருந்தால், "travel  agency " மூலமாகவே ஓட்டம்  இருந்து இருக்கும் .

entrepreneur " ஆவதற்கு  முன்பு  துறை  சார்ந்த வணிகம்  பற்றி  ஆய்வும் [ "market  analysis " ],தொலை  நோக்கு  பார்வையும்   எவ்வளவு  அவசியம்  என்பதை நினைவுப்படுத்தியது  .இது எல்லா  துறைக்கும்  பொருந்தும் .
லாப நஷ்டங்களையும், போட்டியாளர்களையும் , தற்போதைய தேவைகள் ,
வங்கியில் சேமிப்பு  இப்படி  பல  காரணிகளை பார்க்க வேண்டி உள்ளது .
தீவிரமாக  ஆராய்ந்த பின்னே தான் இறங்க வேண்டும்.. திட்டமிடும்  கட்டம்தான்  ரொம்ப முக்கியமாகிறது .

 " இன்டர்நெட் " மார்க்கெட்டிங்கின்  உதவி இருந்தால்  அவர் தன்னுடைய  காரை  இடைத்தரகர்  இன்றி  நல்ல விலைக்கும்  வித்தும்  இருக்க முடியும் .படிப்பறிவு சரியாக  இல்லை என்பதையும்  , சூழ்நிலை  மற்றும் பயத்தையும்  பயன்படுத்தி  இது போன்ற இடைத்தரகர்கள்  லாபம்  பார்க்கின்றனர் .

கடின  உழைப்பும்  அனுபவ  அறிவும் காலம்  கடந்தாலும் வெற்றி தந்தே  ஆக வேண்டும்.அவர் கற்ற பாடம் , இனி கவனமாக  இருக்கச்செய்யும் .
  ஒரு நாள்  " innova " காரில்  அவரைப்பார்க்க மனம் ஏங்கியது .

பின் சீட்டில்!


IT துறையில் 40 வயதிற்கு மேல வேலை இல்லையா ....பகுதி 3 ,[ நேர்முகத் தேர்விற்கு தயாராகுவது எப்படி ?]

இந்தத் தலைப்பினை  கொஞ்சம்  மீண்டும்  ஞாபகப்படுத்திக் கொள்வோம் [recap ]  செய்வோம் .

பகுதி  ஒன்றில்  பணிமுடக்கத்திர்க்கான காரணங்களைப் பார்த்தோம் .
[
 http://moongilkoodu.blogspot.com/2015/01/it-40-1.html
  ]

பகுதி  இரண்டில்  நீண்ட  காலத்  திட்டமாக  பணியில்  இருக்கும்  பொழுது
நம்மை  எப்படித்  தயார்  செய்துக்  கொள்ளலாம்  என்று  எழுதி  இருந்தேன் .
இன்னும் சிலவற்றை  அதே  தலைப்பில்  பேசுவோம்  என்று  சொல்லி  இருந்தேன் .
[
http://moongilkoodu.blogspot.com/2015/01/it-40-2.html
]

நேற்று  யோசித்தப்  பொழுது  , அதை  விட  அவசரமாக  , உடனுக்குடன்  வேலை தேடும்  சூழல்  வந்தால்  எப்படி  அதனை  அணுகலாம்  என்று  முதலில்  எழுதிட  நினைத்தேன் .

அதனால்   பகுதி  இரண்டில்  பேசுவோம்  என்றுக் கூறிய  சில தலைப்புகள்  அடுத்தப்  பகுதிகளில்  பார்ப்போம் .

சரி    அவசர  காலச்சூழலுக்கு   வருவோம் .
பணிமுடக்கும் ஏதோ  காரணத்தில்  ஒருவருக்கு  வந்து  விட்டது  என்று  வைத்துக்  கொள்வோம் [ touchwood  , வரக்கூடாது ].

அப்பொழுது  நம்மை  எப்படி  தயார்  செய்துக்கொள்வது .
எனக்கு 2002 இல்  ஒரு முறை வந்தது.அப்பொழுது  நான் மேற்படிப்பிற்கு  தயாராகிக்கொண்டு இருந்தேன் .அதனால்  வெளியில்  வேலை  தேடும்  பணியில்  ஈடுபடவில்லை . ஒருவேளை  மேற்படிப்பு  சரியாக  அமையாமல்  போய்விட்டு  இருந்தால்  கொஞ்சம்  சிக்கலில்  மாட்டி  இருந்து  இருந்ப்பேன் .
ஏனென்றால்  6 மாதங்கள்  நான்  வேலை  தேடாமல்  இருந்துவிட்டேன் .
வெளியே  வராமல்  முடியாமல்  போய்  இருக்காது .ஒரு  வழி  பிறந்தே  தீரும் ,உழைத்தால் .இருப்பினும் ,இப்பொழுது  யோசித்துப்பார்த்தால் , ஒரு  காப்புத்திட்டம் [ backup plan ]   வைத்து  இருந்து  இருக்கவேண்டும்  என்றுதான்  நினைக்கிறேன் .


சரி  சமீபத்தில்  2012 ஒரு  பணிமுடக்கும்  வந்த  பொழுது  எப்படி  சமாளித்தேன்  என்பதனைப் பார்ப்போம் .இதனைப்  பற்றி  நான்  வேறு  ஒரு  ப்ளாகில்  கூட  எழுதி  இருந்தேன் .
[[[
http://moongilkoodu.blogspot.com/2014/12/blog-post_30.html
அந்த  சூழலைத்  தெரிந்தக் கொள்ள  வேண்டும்  என்றால்  படிக்கலாம்!
அவசியம்  இல்லை . எப்படி  அணுகலாம்  என்று  மட்டும் பார்பதற்கு கீழே படிக்கலாம் .
]]]

சரி  நிலைமை  இப்படி  இருக்கு .சில மாதங்கள் அல்லது  ஒரு  மாதம்தான்  கொடுத்து  இருக்கிறார்கள் . என்ன  செய்ய  வேண்டும் ?

பதட்டமும்  மன  அழுத்தமும் :

பதட்டம்  வரத்தான்  செய்யும் . அதனைக்  கடந்து  போவோம் .
காரியத்தில்  தீவிரமாக  இறங்க வேண்டும் .  ஒரு அதிர்ச்சி மனநிலை   [shock  state]  முதலில்  வரும்/வரலாம்   , அதுவும்   கடந்து  போகும் . முதலில்  செய்யவேண்டியது  நம்  வட்டத்தில்  இருப்பர்வகளுக்கு [network ] தகவல்  கொடுப்பது .இதுதான்  நிலைமை  என்று  ஒரு  ஈமெயில்   தட்டி  விடவேண்டும்.முடிந்தவரை  கால்  செய்து பேசவேண்டும் .

[இதனைப்  பார்த்துச்   செய்ய  வேண்டும் . யாரிடம்  உண்மையான  காரணம்  சொல்ல  வேண்டும்  என்று  உங்களுக்கேத்   தெரியும் .]

மன  அழுத்தம்  இருக்கத்தான்  செய்யும் . ஆனால்  இதுதான்  ரொம்ப  நிதானமாக   இருக்க  வேண்டிய  நேரம். பதட்டம்  சொதப்பும் . சொல்லுவது  எளிது  என்று  நீங்கள்  சொல்வது  புரிகிறது . அதனைக்  கடந்து வந்தவன்  என்கின்றதால்  அனுபவத்தில்தான் சொல்கிறேன் .

நாம்  பதட்டப்பட்டால்  வீட்டில்  உள்ளவர்கள்  ரொம்ப  பயந்து  விடுவார்கள் .
ஒன்றும்  ஆகிவிடவில்லை  , இதை விட  நல்ல  இடத்துக்கு  போகவேண்டும்  என்று மனதினுள்  ஒரு  சூளுரை  எடுத்துக்கொள்ள  வேண்டும் .
நெருங்கிய  நண்பரிடம் மனதில்  இருப்பதை  கொட்டிவிட்டு , காரியத்தில்  இறங்க  வேண்டும்.இனி  சுய  அனுதாபம்  கைகொடுக்காது .போரில்  உள்ளோம்  நாம் .

"linkedin " போன்ற ஒரு  சோசியல்  நெட்வொர்கிங்  சைட்  [ social  networking  site ] எல்லோரையும்  தொடர்பு  கொள்ள  சிறந்த  வழி  .[ இது  என்னுடைய  கருத்து  மட்டுமே  , நான்  விளம்பரப்  படுத்தவில்லை  , தெரிந்ததைச்   சொல்கிறேன் , வேறு  இணையதளங்களும் இருக்கலாம்  ] நண்பர்[ கல்லூரியோ   அலுவலகமோ , பள்ளியோ உங்களால்  முடிந்தவரை ] ,எல்லோருடனும்  தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள  வேண்டும்,பழைய  அலுவலகங்களையும் சேர்த்து  தான் .
நண்பர்  அவர்நண்பர்  அவரின்  நண்பர்  இப்படி  பல  தளத்தில்  "linkedin" மூலமாக  தொடர்பு  கொள்ள  முடியும்  என்பதை  நாம்  அறிந்ததே .
பெரும்பாலும்  அவ்வப்பொழுது "linedkin  profile" தனை  மேம்படுத்தி  செய்து  வருதல்  முக்கியம் . குறிப்பாக  ஒரு  அலுவலகம்  விட்டு வேறு  இடத்திற்கு  மாறும்  பொழுது பழைய அலுவலக  நண்பர்களை  தொடர்பில்  கொண்டுவந்து  வைத்திருக்க  வேண்டும் .

ரெசுமே  [Resume] மற்றும் "Linkedin  Profile "  இரண்டும்  சரிப்பட அப்டேட்  செய்து  இருக்க வேண்டும்.இதைத்  தவிர  நிறைய  "job  portals " இருக்கிறது .  பார்த்துச்  செய்து  கொள்ளுங்கள் .நாம்  முக்கியமான  விஷயத்திற்கு  வருவோம்.

"Resume  updation " அவசர  காலத்தில்  செய்வதை  விட , மாதா  மாதம்  செய்வது  நல்லது.அதாவது  அவ்வப்பொழுது  ஏதேனும் புதிதாக  செய்தாலோ  , அல்லது  தகுதியுடைய  வேலை  செய்து  இருந்தாலோ , புது  ப்ராஜெக்ட் செய்து  இருந்தாலோ அதனை  ரெசுமேவில்  போட்டுக்  கொள்ள வேண்டும்.நினைவில்  மங்காமல்  இருக்கும்  பொழுதே  அதனை ரெசுமேவில் ஏற்றிவிட்டால்  நன்றாகவும்  வரும்.

அப்படி  இல்லையென்றால்  கூட  , ரெசுமே   தயார்  செய்வதற்கு  நேரம்  எடுத்துக்  கொள்ளுங்கள் . இது  ரொம்ப  ரொம்ப  முக்கியம் .
உங்களை நேர்முகத்  தேர்விற்கு  அழைக்கப்  போகும்  முதல்  அஸ்திரம்  இதுத்தான் . அப்பொழுது  அதனை எவ்வளவு  வீரியமாக  அதனை  எய்திட  வேண்டும்  என்று  சொல்லித்  தெரியவேண்டியதில்லை .

ஒரு  பட்டியல்  போட வேண்டும்  ,முன்பு  செய்த  ப்ராஜக்ட்ஸ் என்னவெல்லாம்  இருக்கிறது  , அதில்  எந்தக்  குறிப்பிட்ட  பகுதி  சிறப்பானதாகப் பார்க்கப்படும்   என்று . அதாவது  தற்போதைய  மார்கெட்டிற்கு  என்ன  தேவை  என்று  ஒரு  அலசு  அலசிவிட்டு  , அந்த  தேவைக்கு  ஏற்ப  நீங்கள்  செய்துள்ள  வேலைகளை  சிறப்பம்சப்படுத்தி  [highlight ]   எழுதுங்கள் .

ரொம்ப  நீளமான  ரெசுமே   வேண்டாம் என்றுதான்  சொல்லுவேன் .
கச்சிதமாக  இருக்க வேண்டும்  , ஆனால்  உங்கள்   திறன்கள்         [ skill  sets]  அனைத்தும் நன்றாக   பார்வைக்கு  வைக்கப்பட்டு [  showcase ]  இருக்க  வேண்டும்.நண்பர்கள்  உதவி கேட்டு  ஒரு  முறைக்கு  பல  முறை  சரிபார்த்து விட்டு பின்பு  ரெசுமே  அனுப்பி   வையுங்கள் .

சுருங்கச்  சொல்வதென்றால் , உங்கள்  ரெசுமே  பார்க்க நிறுவன  மேலாளருக்கு  ரொம்ப  நேரம்  இருக்காது .
அந்தக்  குறுகிய   காலத்தினுள் அவர் கவனம்  உங்கள்  பக்கம்  திரும்ப  வேண்டும் . அதற்கு  ஏற்றவாறு  நச்சுன்னு  எழுதுங்கள் !

நெட்வொர்க் :

மேற்கூறிய   தொடர்பு  வட்டம்   [நெட்வொர்க் ] மூலமாக  ரெசுமே அனுப்பி  வைப்போம்  முதலில் .இதில்  நிறைய  லாபங்கள்  இருக்கிறது .
வேலைக்கு  கூப்பிடும்  நிறுவனத்திற்கு  இது  போல  , நூற்றுக்கணக்கான  , அல்லது  ஆயிரக்கணக்கான  ரெசுமேக்கள்    கூட  வரலாம் .

அவர்களிடம்  அவர்கள்  வேலைக்கு  மத்தியில்  யாரைக்  கூப்பிட  என்ற  குழப்பம்   வரும் . அவர்கள்  குழுவினில்   இருப்பவர்  ஒருவர்  மூலமாக  அனுப்பப் பட்டால் , அவர்கள்  அனுப்பியரை  நாடி  , நம்மைப்  பற்றி  தெரிந்துக்  கொண்டு  [ reference ] சீக்கிரம்  கூப்பிட  பன்மடங்கு  வாய்ப்பு   உண்டு .
நிறுவங்களின்   ஆட்கள்  எடுக்கப்பட்ட  சதவிகிதம் [ hiring  ratio] பார்த்தீர்களானால்  , 30% மேல்  இப்படி " reference " மூலமாக  வந்த   நபர்களாகத்தான் இருப்பர் பெரும்பாலும் .
தயக்கம்  விட்டு  , நம்  வட்டத்தில்  இருக்கும்  நபர்கள்  மூலமாக  ரெசுமே  அனுப்பி  வையுங்கள் [ இது  முதல்  கட்டம் மட்டுமே  , அதன்  பிறகு
மற்ற  வழிகளில்  தொடருங்கள் ]

நேர்முகத்  தேர்வு  மட்டும்  அன்றி  , ஒரு  நிறுவனத்தைப்  பற்றி  குறிப்பாக
அந்த  குழுவின்   செயல்பாடு  பற்றி  அங்கே  வேலை பார்ப்பவர்தான்  நன்றாக  அறிந்து  இருப்பார்கள் . என்ன  மாதிரி  வேலை  , என்னக்   கற்றுக்கொள்ளலாம்  , எப்படிப்  பட்ட  வேலை  அழுத்தம்  இருக்கும்  , பதவி உயர்வு  எப்படி  இருக்கும்  ,   ஆட்குறைப்பு  அடிக்கடி  நடக்குமா  போன்ற  முக்கியமான காரணிகள்  தெரிந்துக்  கொள்ள  உதவும் .

"REFERENCE IS THE BEST MEANS TO APPROACH A COMPANY"

" recruiters " இன்  துணையும்  ரொம்ப  முக்கியம் .
நல்ல " recruiters"  உடன்  தொடர்பு  வைத்துக் கொள்ளுங்கள் , தேவையென்றால்  மட்டும்  தொடர்பு  கொள்ளமால்  ,  அவர்களுடன்  அவ்வப்பொழுது  தொடர்பில்  இருங்கள் . மார்க்கெட்  நிலைமைதனை  அவர்கள்  நன்று  அறிவர் .
நம்முடைய  திறமைக்கு   வெளியே  நல்ல  ஒரு  பொருத்தம்   இருந்தால்  அவர்கள்  தகவல்  சொல்லுவார்கள் .

ரெசுமே  அனுப்பும்  வேலை  ஒரு  பக்கம்  நடந்துக்  கொண்டு  இருக்கட்டும் .
தொலை பேசி  அழைப்புகள்  மெதுவாக  வரத்தொடங்கும் .
இந்த  இடைப்பட்ட  காலம்   ரொம்ப  முக்கியம் .அறிவைக்  கூர்மையாகவும்  மனதை திடமாகவும் வைத்து  இருக்க  வேண்டிய  நேரம்  இதுதான் .

நேர்முகத்  தேர்வு :

நிறையப்  படிக்க  வேண்டும் .
குறிப்பாக  கீழ்வருவனவற்றை சொல்வேன்  ,

1)   முதல்  கட்டத்  தேர்வில்   , என்ன  வகையான  திறமை  உள்ளது [profile ] , அவர்களுக்கு  அது  பொருந்துமா  என்று  பார்ப்பார்கள்  பெரும்பாலும் .தொலைபேசி  அல்லது  நேர்காணல்  நடக்கும்  முன்  அவர்கள்  தேவையினை  நன்றாக  ஆராய்ந்துக்  கொள்ளுங்கள் . அவர்களுடன்  பேசும்பொழுது
அவர்கள்  தேவை  அறிந்து  பதில்  அளிக்கவும் . அவர்கள்  தேவை  சார்ந்த  வேலை  என்ன  செய்துள்ளீர்களோ அதனைக்   கோர்வையாகச்   சொல்லவும்.

இதற்குத்  முன்  கூட்டியே  தயாராகுவது  முக்கியம்  . அவர்கள்  கேட்ட  பிறகு இதனை  யோசிக்கக்  கூடாது. ஒரு  நோட்டுப்  புத்தகம்  எடுத்துக்கொண்டு  , அந்த  ப்ராஜக்ட்டின்  சிறப்பம்சங்கள்  , உங்கள்  பங்கு   என்ன  , என்ன  மாதிரியான பிரெச்சனைகள்  வந்தன  , அதனை  எப்படி  அணுகினீர்கள் என்று  குறித்து  வைத்துக்  கொள்ளுங்கள்   ,இது  மிகவும்   முக்கியம் .
நேர்முகத்  தேர்வு  செய்பவர்களின் மனதில்  இவன்  நமக்கு  சரிப்பட்டு  வருவான்  என்ற  ஆழ்ந்த  தீர்மானத்தை  ஏற்படுத்த  வேண்டும் .
குறிப்பாக  அவர்கள் ஆர்வம்  குறையாமல் ,   இன்னும் சொல்லப்  போனால்  , அவர்கள்  நம்மிடமிருந்து  அந்த  நேர்முகத்  தேர்வில்  ஏதேனும்  கற்றுக்கொண்டு  போகும்  அளவில்  ஆழமான  பதிலாக  இருக்க  வேண்டும் .
எப்படிப் பட்ட  கேள்விகள்  வரும்  என்ற  ஒரு  பட்டியல்  தயார்  செய்ய  வேண்டும்  , எப்படி  அணுகலாம்  என்று  முன்கூட்டி  மனதில்  பல  முறை   ஓட்டிப்  பார்க்க  வேண்டும் . இந்த  பயிற்சிதான்   உங்கள்  நேர்முகத்  தேர்வில்  பதட்டத்தைக் குறைக்கும் . இவ்வளவுதானே  நாம்  இதனை  ஏற்கனவே  பார்த்தாகி விட்டோமே   என்று  தானாகவே பதட்டம்  அடங்கும்  , தைரியம்  கூடும் , கம்பீரமாக  பதில்  அளிப்போம் .

2) அனுபவம்  சார்ந்தக்  கேள்விகள்  ஒரு  பக்கம்  கேட்கப்  பட்டாலும்  ,
உங்கள்  கல்லூரியில்  படித்த  கேள்விகளோ  , அல்லது  வெகு  அடிப்படைக்  கேள்விகளும்  கேட்கப்படும்  ஏன்  அப்படி  கேட்கிறார்கள்  என்று  எல்லாம்  சொல்லிக்கொண்டு  இருக்க  முடியாது . அடிப்படையில்   ரொம்ப  திடமாக  இருக்க  வேண்டும்  என்று  நம்புவார்கள்  , உண்மைதான் .
சில கேள்விகள்  அங்கே  தொடங்கி  ஆழமாகப்   போகும் .
முக்கியமான  கோணம்  ஒன்று  உள்ளது . நாம்  செய்யும்  வேலைதனை  சும்மா  மெனக்கெட்டு  செய்கிறோமா  அல்லது  , அதன்  பின்னணி  அறிந்து
ஆழமாக  யோசித்துச்  செய்கிறோமா என்று  தெரிந்துக்  கொள்ளும்  ஒரு  கேள்வியாகத்தான் அதனை  நான்  பார்ப்பேன் . வேறு  வகையான  பிரச்சனை  வரும்  பொழுது  இந்த  அடிப்படை அறிவிலிருந்து   வேறு கோணத்தில்  சிந்திக்கும்  அறிவு  [ lateral  thinking ]   தொடங்கிறது  என்று  நான்  நம்புகிறேன் .ஆதலால்  அடிப்படைக்  கோட்பாடுகளில் பலமாக  இருங்கள் .
இதனை  புதுப்பித்துப் [refresh]   போவதற்கு  ரொம்ப  நாட்கள்  ஆகாது , ஆனால்  ரொம்ப  முக்கியம் .

3)  ஒரு  பாய்வுப்படம் [flowchart ] வரைந்துக்  கொள்ளுங்கள் .
உங்கள்  துறை  சார்ந்து  உங்களுக்கு  என்ன  என்ன கிளைத்துறைகள்  இருக்கிறதென்று , அதில்  என்னவெல்லாம்   கேள்வி வரும்  என்றும்.
அதற்கு நீங்கள் பதில்  சொன்னால்  , எப்படி எல்லாம்   அதிலிருந்து   இன்னும் ஆழமாக  கேட்கப்படலாம்  என்று  யோசியுங்கள்  , உங்களுக்குத்  நன்றாகத்  தெரிந்த  தொழில் நுட்ப  வார்த்தைகளை    பிரயோகப்படுத்துங்கள் .
மேம்போக்காக ஒன்றைச்  சொல்லி அதிலிருந்து  கிளைக்  கேள்விகள்  கேட்கப்பட்டு  மாட்டிக் கொள்ள  வேண்டாம் .
இதனை  தவிர்க்க  நிறைய  படிக்க  வேண்டும் .
முன்பே  சொன்ன  புத்தியளவில்   தயாராக  இருக்கவேண்டும் .[  mental  preparation]

4) ஒரு  கருத்துப்படிவம்  கேட்கப்பட்டால்  முடிந்த  வரை  ஒரு  படம்  வரைந்து  அதனை    விளக்க  வேண்டும்  , அல்லது  நாம்  செய்த  திட்டத்தில்  [ப்ராஜக்ட்டில்] உள்ள  ஒரு  உதாரணத்தை  சொல்லி  விளக்க  வேண்டும் . இன்னும்  சொல்லப்போனால்  , ஒருவருக்கு  அதனைச்  சொல்லிக்கொடுப்பதென்றால்   எப்படி  சொல்வோமோ  அந்த  மனநிலை  வைத்துக்  கொண்டால்  , பதட்டம்  குறையும் .
நேர்முகத்தேர்வாளரின்  மனதைப்  படிக்க  வேண்டும்  , விடை  சொல்லும்  பொழுது  அவர்கது   எதிர்வினை மற்றும்  உடல்  மொழி [ reaction  and  body language ] பார்த்து அதற்கேற்றார்  போல  பதில்  சொல்ல  வேண்டும்  . அழகாக  கோர்வையாக  ரொம்ப  நீட்டிக்கவும்  அல்லாமல்  சொன்னால்  நல்லது . அதற்கு  மேல்  தேவைப்  பட்டால்  அவரே  கேட்ப்பார் . ரொம்ப  சுருங்கவும்  கூற  வேண்டாம் .

ADAPT  yourselves  to  the  situation and  improvise .

நேர்முகத்  தேர்விற்குபின்

பதில்  வர  நேரம்  எடுக்கலாம் , நல்ல  செய்தியும்  வரும்  , வரமாலும்  போகலாம் . எனக்கும்  நடந்து  இருக்கிறது .
மனம்  தளராமல்  செய்த  தவறுகளை  அலசி , அதற்கு  விடை  தெரிந்துக்  கொண்டு  இன்னும்  தீவிரமாக  படிக்க  வேண்டும்  .
என்னுடைய   அனுபவத்தில்  , அடுத்த  அடுத்த  நேர்முகத்  தேர்வில்  நான்  இன்னும்  சிறப்பாக  செய்தேன்  என்றுதான்  சொல்லுவேன் .
ஒவ்வொரு   நேர்முகத்  தேர்வும்  நமக்கு கொடுக்கப்படும்   ஒரு  வாய்ப்பு மட்டும்  இல்லை  , நம்மை  மெருகேற்ற  கற்றுக்கொள்ளும்  ஒரு  சந்தர்பம்தான் , முழு  மனதுடன்  அணுகுவோம் , ஆனால்  பதட்டம்  குறைக்க  வேண்டும் .கேள்விகள்  கேட்கப் படும்  பொழுது  , மனதை  லயித்து உண்மையான  ஆர்வத்துடன்  அந்தக்  கேள்வியினை  அணுக  வேண்டும் .
ஒரு  குறிப்பிட்ட  நிறுவனத்தின்  பதிலுக்கு  மட்டும்  காத்துக் கொண்டு  இருக்காமல்  , தொடர்ந்து  தேர்வுகளில்  கலந்துக் கொண்டே  இருத்தல்  வேண்டும் . எந்த  வேலை  சரியாக  வருகிறதோ  அதனைப்  பின்னர்  முடிவு  செய்யலாம் .

பகுதி  நான்கில் நீண்ட  காலத்  திட்டத்தில்  நான்  பகுதி   இரண்டில்  விட்டதைத் தொடருவேன் .

பார்ப்போம் .
.









Friday, January 9, 2015

கணேசனும் தொள தொள டிராயரும் :

கணேசனும் தொள  தொள  டிராயரும் :

சில  மனிதர்களைச் சுற்றி ஏற்படும்  நிகழ்வுகள்  வாழக்கையில் நமக்கே நாம் கேட்கும் விடை தெரியா பெரியக்கேள்விகளுக்கும் , புதிர்களுக்கும் விடை கொடுத்துச்செல்கின்றன.  விடை கொடுக்க முடியாவிட்டாலும் , ஆசுவாசப்படுத்திக்கொள்ள துணை புரிகின்றன. கணேசனும் அப்படித்தான்  எனக்கு .

என் வயதோ அல்லது ஒத்த வயதில் விளையாட  ஆள்  இல்லாத வயது அது.
சுவற்றில் பந்தை வீசி விளையாடிக்கொண்டிருந்த ஒரு நாள். தெருவில் விழுந்த பந்தை பொறுக்க சென்ற பொழுது , நீளமான இப்பொழுதுள்ள 3/4த்ஸ் போல தொள  தொள டிராயருடன் பெரிய வரிசையான பற்களுடன் சிரித்தான் கணேசன் .
பந்தை நீட்டியவாறே ,

" நானும் வரட்டா ?"

அப்பொழுது என்னை  விட ரொம்பப்பெரியவனாக இருந்த அவனிடம் யோசித்தவாறே , " வா" வென்றேன் .

" நீ அஜய்  குட்டிப்பயனோட relative ஆ ?"

" இல்லை.என்னை வேலைக்கு ஊர்ல இருந்து கூட்டிட்டு வந்துருக்காங்கலெ "

அந்த "காங்கலெ " என்னை  அவனிடம் சற்று துரிதமாகவே பழகியவனாக நினைக்கத்தூண்டியிருக்க வேண்டும்,என் சொந்த ஊரும் நெல்லையானதால் .

" எங்க இருந்து வந்து  இருக்க ?"

" தூத்துக்குடி ".

" எனக்கு பௌலிங்  தான்  பிடிக்கும் .நீ பேட் செய்வியா ?"

" சின்னப்பய நீ என்ன  வா போன்னு கூப்புடுத ...இந்த ஊர்ல இப்படித்தான் போல . சரி நான் மட்டை  பிடிக்கேன் .அந்தாக்ல போய்  விளையாடுவோம் நான். விளையாடுரதைப்பார்த்தாகன்னா என்னை ஏசுவாக "

" மொட்டை மாடி போய்  விளையாடலாம் வா".

குஷியாக மாடி வந்தோம் .

" உனக்கு ,மாங்கா பிடிக்குமா?அங்க பாரு எவ்ளோ புளிப்பு மாங்கா  எங்க வீட்ல
"

" ரொம்பப்பிடிக்கும் ! ஊருல   கவுட்டிவில்லில் அடிச்சு சாப்பிடுவோம் .".


அவன் மட்டை பிடித்த விதம் அலாதி. பீமன் கதையை பிடித்த போலோ  அல்லது " base  ball bat " பிடித்தது போலோ இருந்தது. ஆனால் பட்டயக்கிளப்பினான் . இரண்டு  மூன்று முறை மாடிக்கண்ணாடி அதிர்ந்தது .

" என்னடா சத்தம் மேல "   அம்மா கத்தினதை நாங்கள்  கண்டுக்கொள்ளவில்லை .

விளையாடி முடித்ததும் மாங்காய் சாப்பிட்டோம் .

" உப்பு  மிளகாய் போட்டு சாப்பிட்டா நல்ல  இருக்கும்லே .எடுத்தாரியா ?"

" நாளைக்கு ".

அன்றைய தினம்  எனக்கு மிக மகிழ்ச்சியான நாள் .விளையாடுவதற்கும் பேசுவதற்கும் ஒரு புதிய தோழன் குதித்து வந்தான் என நினைத்தவாறே தூங்கிப்போனேன் . அந்த  நேரம் தான் " மை  டியர்  குட்டிச்சாத்தான் " படம் வந்து  இருந்தது. அதில்  வரும்  ஒரு  பாட்டின்  வரும்  வரிகள்  என்னை  ஈர்த்து  இருக்கவேண்டும் மேற்சொன்னபடி  நினைக்க .

மறுநாள் அஜய் வீட்டிற்குள் சென்று கணேசனைத்தேடினேன் .கிச்சனுள் எதையோ சுமந்துக்கொண்டு இருந்தான் . என்னைத்தெரியதவனாக எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தான் .அஜய் அப்பா அவனை அதட்டிக்கொண்டு இருந்தது எனக்கு பிடிக்கவில்லை .

அவர்  அந்தப்பக்கமாகச்சென்றார் .
" என்ன பண்ணிட்டு இருக்க , எப்ப வருவ?"

சரியாக பதில் வராமல் பழயபடி சுவற்றுடன் விளையாட எத்தனித்தேன் .

" திரும்ப வந்தவன் , " நீ  அங்க  வந்து  என்னைத்தேடாதே , நான் முடியும்போது வாரேன்   சரி , இப்போ விளையாடுவோம் .

கோச்சுக்காத ...இன்னைக்கு நான் பந்து வீசறேன் ".

குழப்பத்துடன் ஆடியதில் முதல் பந்திலேயே விக்கேட்டைச்சரித்தான்.

"     சின்னப்பசங்க கூட  விளையாண்டா இப்படித்தான் . போட்டியே இல்லைலா ...ஹ ஹா "

என் கவுரவம் பாதிக்கப்பட்டதாக கோபத்துடன் விளையாடினேன் .

அவனும் இன்னும் வேகமாக வீச , நான் சுழற்றிய பெரும்பாலான வீச்சுகள் காற்றை சலசலதுச்சென்றது . பெரிய பற்கள் தெரிய இன்னும் எக்காளமாகச்சிரித்தான் .

இன்னும் கோபத்துடன் கடைசியில்  ஒரு பந்தை பொளந்தேன் .நிஜமாகவே பந்தைப்பிழந்து விட்டேன்.

" கோவதைப்பாருலே , சரி ஒப்புகுதேன் , நீ  பெரியவன்தான்,நம்ம ஊருப்பயன்னு காமிச்சுட்டே ".

சிரித்துக்கொண்டோம் .

" என்ன செய்ய இனிமேல , மாங்காய் அடிப்போமா ".

" அடிப்போம்  ஆனா  ,கைல   வேணாம் . கவுட்டிவில் செய்வோம்.
இங்க பழைய டயர் இருக்கா?"

கொண்டு வந்துக்கொடுத்தேன் .

வீட்டில் நிறைய  மரங்கள் . ஒரு கெட்டியான நொச்சி மரக்கிளையிலிருந்து " Y " வடிவில் கவுட்டிவில் செய்ய  ஒரு பகுதியை ஓடித்தான் . டயரைக்கிழித்து
அந்த  ரப்பரை  வைத்து கவுட்டிவில் செய்து முடித்தான் .

எனக்கு அன்றைக்கு முழுவதும் , கவுட்டிவில் ட்ரைனிங் .

" அந்த தெரியுது பாரு அந்த கொத்தை அடி.பக்கத்துல குருவிக்கூடு இருக்கு.
பாத்து அடி ".

பொத்துன்னு சத்தத்தோட பெரிய குலை வந்து விழுந்தது .
அம்மா வந்தார்கள் .

" என்ன நடக்குது இங்க"

" அம்மா அந்த மாங்காய அடிச்சு விழவச்சுட்டேன் .எனக்கு மாங்கா பச்சடி வேணும் ".

"சரி பார்த்து .கல் தலை பட்டுட போகுது .உமா ஆன்டி வீட்டில அடிக்காம பாத்துக்கோ "

"கணேசா , பார்த்து  " ன்னு  சொல்லிட்டு அம்மா உள்ளே சென்றார்கள் .

 சரியாய் அடித்து அன்றைய தினம் திருப்தியாக முடிந்தது .

அன்று இரவு.

" கணேசன் உன்னை  விட ரொம்பப்பெரியவன் . அவனை  நீ வானு கூப்பிடாதே "

 "சரிம்மா "

அடுத்த நாள் கணேசன் வந்ததும் .

" நீங்க முதல்ல பேட் செய்யுங்க "

" என்னாலே புதுசா மருவாத .நீ வானே கூப்டுலே .எனக்கு அதுதான் பிடிச்சு  இருக்கு"......

" சரி லே ! இந்தா மாங்கா பச்சடி சாப்டு.சூப்பரா இருக்கும் .".

என்னோட ஸ்கூல் நண்பர்களுடன் சேர்ந்து கொஞ்சம் தள்ளி வேளச்சேரி சென்று ஒரு கிரிக்கெட் டீம் தயார் செய்தோம்.ஒரு ப்லெட்  லைட் டோர்னமென்டில் பெயர் கொடுத்தோம் .ஏற்கனவே கலந்து ஜெயிக்கவில்லையென்ராலும் , இந்த முறை கணேசன் துணை .

அடுத்த வாரம் நினைத்து எங்கள் கிரிக்கெட் ட்ரைனிங் பலமா  இருந்துச்சு.

கணேசனுக்கு ஏகப்பட்ட மரியாதை அங்கே, அவனுடைய சிக்ஸர்களே காரணம் .முதல் கட்ட ஆட்டங்கள் முடிந்து
செமி பைனல் வரை வந்தாச்சு. இனி ஆட்டம் சூடாத்தான்  இருக்கும்.
கணேசனை நாங்க மிடில் ஆர்டரில் தான் இருக்குவோம்.
அவன் வந்தாலே எல்லோரும் பௌண்டரி  லைன்ல தான்  .
இப்ப சொல்வதென்றால் நம்ம தோணி   போல.   அந்த மாட்சில் அம்பயர் கொஞ்சம் போங்கு பண்ணிட்டுத்தான் இருந்தான்.கணேசனுக்கு கடுப்பு.

"மக்காஅவனுள  பொளக்கனும்லே சேட்டை செய்யட்டும் , பொளந்துடரேன் அவனுள  ".

அவனிடம் யாரும் வால்  ஆட்டவில்லை.தொள  தொள  டிராயருடன் எப்படித்தான் ஒடுவானோன்னு நினைத்தேன் .ஆனா அவன் நின்ன இடத்துலேயே விளாசினான் .சில பௌண்டரிகளும் பல  சிக்சர்களும் பறந்தன.எதிர்பார்த்தது போல  , பௌண்டரி லைன்ல கேட்ச் கொடுத்து அவுட் ஆனான் .

மேட்ச் அதற்குள் எங்கள் கையில் வந்து விட்டது.
மேட்ச் முடிந்து வெற்றியுடன் வெளியே வந்தோம் ,ஒரே கூச்சல் கும்மாளம் . எதிர் கட்சி கேப்டன் கடுப்பில் பிதற்றினான் என்னைப்பார்த்து.அவனுக்கும் எனக்கும் குறைந்த பட்சம் ஐந்து வயது வித்தியாசம் இருக்கும்.

" என்னடா ரொம்ப துள்ற .ஆள்  இருக்காங்கன்னு திமிரா . அடியப்போட்டுடுவேன் . அடங்கு டா " என்றான் .

பொள்  என்று ஒரு சத்தம் கேட்டு எல்லாரும் அதிர்ந்து  நின்றோம் .
வாங்கியவன் சுருண்டு விழுந்தான் . அடித்தது யார்ன்னு சொல்லவேண்டாம் .
மத்தவங்க கிட்ட வந்ததும்,பேட்  கைல பிடிச்சவாறே , பீமன் போல நின்றான் கணேசன். சரமாரியாக கெட்ட  வார்த்தைகள் வேற விழுந்தது.

சென்னைப் பசங்களுக்கு அதில் முக்கால்வாசி அர்த்தம் தெரிந்து இருக்காது , என்னையும் சேர்த்து .கூட்டம் விலகியது.

அந்த  நாள் எங்கள்  நட்பு இன்னும் அடர்த்தியானது .

" என்னாலே  , அவன்  பேசிகிட்டு கிடக்கான் , நீயும் கேட்டுட்டு  இருக்க, பெரிய கொம்பனா அவன்..."

நான் சிரித்துக்கொண்டே வந்தேன்.

" எனக்கு அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லேன்.நிறைய தெரியலை"

"கொஞ்சமா சொல்றேன், சின்னப்பய நீ  ".

இன்னும் ஒரு  மாதம் சென்றது. இந்த சமயத்தில் எனக்கு அரைப்பரிட்சை .கணேசனை அடிக்கடி பார்க்க முடியவில்லை.பார்த்த பொழுதும் சோகமாவே இருந்தான் .

" நாளை பரிட்சை முடியுது . நாம ஆட்டம் போடுவோம் ".

" அஜய் அப்பா என்னை விளையாடப்போக கூடாதுன்னு சொல்லிட்டார் .
எனக்கு அம்மைய தேடுது .பாப்போம் , அவங்க ஆபீஸ் போனப்பறமா வரேன் மதியம் ."

கணேசன் துள்ளல் இல்லாமல் அமைதியாக இருந்தான் .விளையாட மனம் இல்லாததால் , பேசிக்கொண்டு இருந்தோம்.

" நீ ஏன் ஸ்கூல் க்கு போகல ?"

" போனேன் . ஆனா படிப்பு ஏறலை .அப்றமா அய்யாதான் இங்க அனுப்பிடாக "

" ஏன் அனுப்பினாங்க ?, உன் கூட  இருக்க வேண்டாமா ?".

" அனுப்பிட்டாங்க  எல்லாருமா சேர்ந்து அவ்ளோதான்.
சரி நாம மீன் பிடிப்போம் வரியா? மதகு உடஞ்சு தெருவெல்லாம் தண்ணீ.
வெளில சிலது துள்ளிக்கிட்டு கிடந்தது .ஊர்ல நான்ஆத்து மீன்  பார்த்தது இல்ல.".

தண்ணீரில் ஒரே ஆட்டம் போட்டோம் .அவனுடைய கவலை முகம் கலைந்தது .

மரத்தடியில் வந்து உட்கார்ந்தோம் .

" மாமா வந்தாரு போனவாரம் என்னைப்பாக்க .இன்னும் நாலு அஞ்சு மாசம் கழிச்சு கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்கார் .அம்மை கடிதாசி வேற போட்டு இருந்தாக நேத்து

அடடே மறந்துட்டேன் .இந்த கோவில்பட்டி கடலை மிட்டாய் .நமதுப்போச்சு தண்ணீல ".

சொல்லிக்கொண்டே அந்த நனைத்த தொள  தொள  டிராயரில்  இருந்து கடலை மிட்டாய் எடுத்துக்கொடுத்தான் . நமுத்தாலும் சுவை தூக்கலாகவே இருந்தது .அந்த தொள  தொள  டிராயர் அவன் மாத்தி  நான் அவ்வளவா பார்த்தது  இல்லை.
காக்கி நிறத்தில் . அப்பாவிடம்  சொல்லி அவனுக்கு வேற கலர்ல வாங்கிதரச்சொல்லனும் என  நினைத்தேன் .

" இவ்ளோ நாளா  எனக்கு உன் டிராயர் ஏன் இவ்ளோ பெருசா இருக்குன்னு தெரியாது.இப்பதான தெரியுது உள்ள திண்ன கடலை மிட்டாய்  அடைச்சு  வச்சு  இருக்கன்னு ".

நமட்டுச்சிரிப்பு சிரிப்பு சிரித்தான்.
"அம்மைய பாக்கணும் .மூணு மாசம் கொள்ளாது .

வரேன்லே ".

                                       ----------------------------------

இரண்டு நாட்கள் கழித்து அஜய் வீட்டில் சில புதிய முகங்கள் தெரிந்தன .
மாமாவாக இருக்கும்னு நினைச்சேன் . கணேசன் க்ரோட்டன்ஸ் செடி பக்கத்துல நின்றுக்கொண்டு  இருந்தான் .


அம்மா கூப்பிட்டார்கள் .

" டேய் , கணேசன் ஏதோ காச எடுத்துட்டான்னு அஜய் அம்மா சொன்னாங்க .
ஊருக்கு அனுப்பராங்களாம் ".

ஓடினேன் .கணேசன் வெளியே வந்தான்,.உள்ளே சோகமா  இருந்த  முகம் , என்னைப்பார்த்ததும்  கண் சிமிட்டினான் .

" ஊருக்கு போறேன்னு அம்மா சொன்னங்க .எப்போ வருவ"

" அங்க  தான்  இனிமே .அம்மையோட அங்கேயே இருந்துட வேண்டிதான் .
அண்ணாச்சி கடைல வேலை வாங்கித்தாறேன்னு மாமா சொன்னாக .அவருக்கு  என்மேல பாசம் .உன்னைத்தான்டெ தேடும் .
சரி  இங்க  வா .

அன்னைக்கு மேட்ச் முடிஞ்ச  போது  , சில அர்த்தம் கேட்டீல ....இந்தா நேரம் வந்துருச்சு ".


அப்புறமா கணேசன் கிளம்பிப்போனது , நான் அழுதது எதிர்பார்த்ததுதான் .
அவன் விட்டுச்சென்றது நிறைய கேள்விகளும் தான் அந்த வயதில் .
ஏன் வந்தான் , அவன்  ஏன்  வேலை பாக்கணும் , ஏன் திருடினான் இன்னும் பல .

எட்டு ஒன்பது வருடங்கள் கழிந்து நான் கோவையில் அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்த புதுசு.


ஒரு வாரம் கழிந்து இருக்கும் .முதல் முறையாக வீட்டை விட்டு வந்ததும் , தனிமையும் சேர்ந்து என்னமோப்படுத்தியது .

அன்றைய  காலையில் ஹாஸ்டலில் பாக்கு மரம் பார்த்தவாறே  ஒரு சொல்லத்தெரியாத வெறுமைதனை உணர்ந்தேன் .

" அம்மையதேடுதுலே " வின் அர்த்தம் அப்பொழுது எனக்கு புரிந்தது,
ரொம்ப வருடம் கழிந்து  அவன்  நினைப்பும் கூடவே வந்தது.
அவன் திருடியது ஒரு சாக்கு என்றும் எனக்கு அது தலையில் அடித்தது .

 ராகிங் அதிகம் அப்பொழுது .

சென்னை பசங்களை சென்னை சீனியர்சும் , தெற்கு மாவட்டங்கள் பசங்களை அந்தப்பக்கம் உள்ள சீனியர்சும் ராக்கிங் செய்கின்ற வழக்கம் ....அங்கேயும் பிரிவினை தான்.

"டேய் , இவனை என்னனு பாரு.பாக்க மெட்ராஸ் பய  போல  கிடக்கான் .கேட்டா நெல்லைங்கறான் ".

" இல்ல சார்  , நேடிவ் ப்லேசு நெல்லை ".

" சரி  நம்ம  ஊர்ல என்னடே ஸ்பெஷல் "

" அல்வா  சார்".

" குசும்பு டே உனக்கு .ஏன் தாமரவரணி இல்லையா .நீ  மெட்ராஸ் பயதான்."

" இல்லை சார் , எனக்கு நெல்லைதான் சார் "

நெல்லைபயல்னு சொல்றதுதான் பிடிக்கும் எனக்கு .

" சரி  இந்தா இருக்கான்  பாரு கெளதம் .இவனை பார்த்து ரெண்டு கெட்ட வார்த்தை பேசு ..."

"என்னலே தயங்கிட்டே நிக்கான் .இவன் நம்ம ஊர்ப்பய  இல்லைலே .
அங்க அப்படி  சொல்றது  , இங்க  இப்படி  சொல்றது "

சரமாரியாக பல வார்த்தைகள் வந்து விழுந்ததை எதிர்பார்க்க வில்லை அவர்கள்.

பேசியது உள்ளே  இருந்த கணேசன்.

----------------------------------------------------------------------------------------------------------







Thursday, January 8, 2015

IT துறையில் 40 வயதிற்கு மேல வேலை இல்லையா ....பகுதி 2

பகுதி ஒன்றில்   தகவல்  தொழில்நுட்பத்  துறையின் பணிமுடக்க  [layoff ]  காரணம்   பற்றி பார்த்தோம் [பகுதி  ஒன்றின்  லிங்க்  இங்கே

http://moongilkoodu.blogspot.com/2015/01/it-40-1.html
]

சரி  நிறுவனங்கள் லாபத்தைப் பெருக்க  ஆட்குறைப்பு  நடவடிக்கை
எடுக்கத்தான்  செய்கின்றன .
[
தற்போதைய  சூழலில்  தொழிற்சங்கங்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள்
பற்றி இணையத்தில் பேச்சு  அடிபடுகிறது  , என்ன  நடக்கப்போகிறது  என்று
நானும்  ஆவலாகத்தான் இருக்கிறேன் ]

 அது நடந்தால்  நன்மையே .

தற்போதைக்கு  இது  தான்  நிதர்சனம் என்று  வைத்துக்கொள்வோம் .இந்தக்  கசப்பை  ஏற்றுக்கொண்டு என்ன  செய்து  நம்மை  முடிந்த  வரை  காத்துக் கொள்ள  முயற்சி  செய்யலாம் என்று  பார்ப்போம் .
அல்லது  வந்து விட்டால்  எப்படி  வெளி  வருவது  பற்றியும் அடுத்து வரும்
பகுதிகளில்  பார்ப்போம்
ஆனால்  எக்காரணம்   கொண்டு  ஒடிந்து  போய் உட்காருவது உகந்தது  அல்ல. எல்லாவற்றிற்கும்  ஒரு  வழி  இருக்கும் .
சும்மா  சொல்லவில்லை, ;அனுபவத்தில்தான் சொல்கிறேன்.
 [ இது  பகுதி  மூன்றில்  வரும் ].

முதலில் எப்படி  நம்மை  எப்படி  இன்னும்  கூர்மையாக்கிக் கொள்வோம் என்பதைப் பார்ப்போம்.
முன்பே  பகுதி  ஒன்றில்  இதைப்  பற்றி  சில  வரிகள்  மெலிதாகப்  பார்த்தோம் .
இன்னும்  ஆழமாகப் பார்ப்போம் .
எந்தத்  துறையில்  வேலை பார்த்தாலும்  அதில் பல  துணைத்துறைகள்  அல்லது  கூறுகள்  இருக்கத்தான்  செய்யும் .

சாப்ட்வேர் என்று  பொதுவாக  பார்த்தால் , தேவைகளைத்   திரட்டுதல் [requirement  gathering .]   ,நிர்மாணித்தல் [architecting ],  வடிவமைப்பு   மற்றும் செயற்படுத்தல் [design  and  implementation  ] ,சோதித்தல் [ testing ] [சிலவற்றைச்   சொல்லியுள்ளேன் ] என்று  சில  கூறுகள்  இருக்கும்  .ஒவ்வொன்றும்  கடல்தான் . ஒவ்வொரு  தனித்துறைக்கும்  வல்லுனர்கள்  தேவைப்படுவர் .

நாம்  எல்லோரும்  கேள்விப்பட்ட ஒரு  கதைதான்  , ஆனால் இந்த  அமைப்பில்   சாலப்பொருந்தும் .

ஒரு  கப்பல்  ஓடவில்லை .எவ்வளவோ  முயன்றும்  பெரியக்கப்பலில் என்னக்  கோளாறு  என்று  யாராலும்  கண்டு  பிடிக்க  முடியவில்லை .
ஒருவன்  வந்தான் .   இந்த  போல்டை  சரி  செய்  என்று  சொன்னான் .
கப்பல் ஓடியது  மறுபடியும் . அவன்  சார்ஜ்  செய்த  தொகை  பல லட்சங்கள் .
என்ன  இது  ஒரு  போல்டை  சரி  செய்ய  இவ்வளவு  கேட்கிறாய்  என்று  அவனிடம்  கேட்டதற்கு , "போல்டை  சரி  செய்வதற்கு அதிமாக  கேட்கவில்லை , எந்த  போல்ட்  என்று  தெரிய  வேண்டும் அல்லவா  , அதற்குத்தான் "என்றான் .அவனுக்கு  பணம் கொடுக்கப்  பட்டது.

இதேப்போல்தான்  , நிபுணர்  ஒருவர்   இருந்தால்  , அவனும்  எந்த  போல்டை  எந்த  நேரத்தில் எந்த  பிரச்சனைக்கு சரி  செய்ய  வேண்டும்  என்று  தெரிந்து  இருக்க  வேண்டும் . அந்த  வேகமும் , துல்லியமும்தான்  அவனுடைய  சிறப்பு . இதை  தகவல்  தொழில்  நுட்பம் அல்லது  எந்தத் துறைக்கும்  பொருத்தி கொள்ளலாம் .

கம்பெனி கள் இப்படிப்பட்ட  ஆட்களையே  வைத்துக்  கொள்ள  விரும்புவர் .

மேற்கூறிய  ஒவ்வொரு  துறையிலும்  நுணுக்கமான  அறிவினைப்  பெற  முயல வேண்டும் .  குறிப்பாக  ஏதாவது  ஒன்றில் ஆழ்ந்த குறிப்பிட்ட  துணைத்துறை சார்ந்த அறிவினைப்  [ specific  vertical  knowledge ] பெற  வேண்டும் .அந்தக் குறிப்பிட்ட துணைத் துறையில் ஏதாவது சிக்கல்  வந்தால் உங்கள்  பெயர் தான்  நினைவில்  வர  வேண்டும் .அந்த  அளவிற்கு  அதைப்பற்றி
அக்கு  வேறு  ஆணி  வேறாக  தெரிந்து  இருக்க  வேண்டும் .

வேலை  சேர்ந்த முதல்  சில  வருடங்களுக்குள்  இது  போன்ற  ஒரு  குறிப்பிட்ட துறை  சார்ந்த  நுண்ணறிவினைப்  பெற்றுக்கொள்ள  வேண்டும் .

வேலை  நீக்கம் நடக்கும்முன்  கம்பெனியின்  உயர்  மேலதிகாரிகள்   ,உங்கள்
மேலாளரிடம் இடம்  ஒரு  பட்டியல் தயார்  செய்யச் சொல்லுவர் .எந்த  எந்த  வேலைக்கு  யார்  தேவைப்  படுவர்  என்ற  பட்டியல்  தான்  அது.

உதாரணம் பார்ப்போம் .

ஒரு  வீடு  கட்டும்  பணியினை  எடுத்துக்கொண்டால் , கீழ்வரும்  ஆட்கள்  வேண்டும்  என்று  ஒரு  கணக்கு  இருக்கட்டும் .

1) 10 சித்தாள்
2) 1 கொத்தனார்
3) 2 எலக்ட்ரீசியன்
4) 3 ப்ளும்பெர்
5) 2  பெயிண்ட்டர்கள்

இதில்   ஆட்கள் குறைக்க  வேண்டும் என்று  முடிவு  செய்யப்பட்டு ஒரு  பட்டியல் தயார்  சொல்லச்சொல்கின்றனர் ,அப்பொழுது  இதில்  யார்  கிடைக்க  கஷ்டம்  என்று  பார்ப்பார்கள் . சித்தாள்  வேலையினை  செய்ய  மலிவாக  ஆட்கள்  கிடைப்பார்கள்  என்று  முடிவு  செய்கின்றனர் . சிலரைக்  குறைக்கவும்   முடிவு  செய்கின்றனர் .

மிச்சம்  இருக்கும்  சித்தாட்களை  வைத்து  அதிமாக  வேலை  வாங்கி  சமாளிக்க  முடியும்  என  அவர்கள் நம்புவதால் அப்படி  ஒரு  முடிவு . கொத்தனார் சம்பளம்  அதிகம்  அதைக்  கைவைத்தால்  நிறைய  சேமிக்க முடியும் என்று  நினைக்கிறார்கள் .
அப்பொழுது  அந்த  சித்தாட்களில்  யாரவது  கொத்தனார்  செய்யும்  வேலையினை  செய்ய  முடியுமா  என்று  பார்க்கப்படுகிறது .
அப்படி  இருந்தால் , அந்த  சித்தாளை   கொத்தனார்  வேலையினை  பார்க்கச்  சொல்லிவிட்டு  , அந்த  கொத்தனாரை  தூக்க  முடிவு  செய்வர் .

அவர்கள்  குறிக்கோள்  , வேலையும் பாதிக்கப்படக்கூடாது  ,ஆனால்  குறைந்த  ஆட்களை  வைத்து  வேலையினை  முடிக்க  வேண்டும் .

இப்படிப் பல வரிசைமாற்றம்  மற்றும்  சேர்க்கை அடிப்படையிலும்  [permutation  and combination ] எது  குறைந்த  செலவில்  சமாளிக்க  உதவுமோ  அதனைச்  செய்வர்.


இதில்  அந்த  கொத்தனார்  கொஞ்சம்  சாமர்த்தியசாலி  என்று  வைத்துக்கொள்வோம் . அவனுக்கு  தெரிகிறது  ஒரு  நாள்  தனக்கு   இப்படி  நிலை வரக்கூடும் என்று .அவன்  என்ன  செய்து  இருப்பான் , வீட்டைக்  கட்டும்பொழுது ,பொறியாளரிடம் இடம்  வேலை  பார்த்தப்  பொழுது தன்னை விட்டால்  சில  குறிப்பிட்ட  வேலைகளைச்  செய்ய  ஆள்  இல்லை  என்ற  நிலையினை  ஏற்படுத்திவிட்டு  இருப்பான்.
அவன்  இல்லை  என்றால் , வேலை முடியாது  என்ற  ஒரு பிம்பத்தை  நிதர்சனப்படுத்தி இருப்பான் . அப்பொழுது  மேற்கூறிய சித்தாளை வைத்து  கொத்தனார்  வேலையினை  செய்யும்  நிலை  ஏற்படாமல்  தன்னைக்  காத்துக்  கொள்கிறான் .அதை  எப்படி  செய்கிறான்  என்பதற்குள்  போவது அவர்  அவர்  சாமர்த்தியம் .

இன்னொரு  உதாரணம்  சொல்ல  வேண்டும்  என்றால் , மேலே  கூறிய
திறன்களில் , electrician மற்றும்  plumbing  வேலைக்கு  தேவை  அதிகம்  இருக்கின்றது  என்று  வைத்துக்கொள்வோம் . தன்  வேலை  தவிர்த்து  , electrician  அல்லது  plumbing  வேலைகளையும்  தெரிந்துக் கொண்டால் நல்லது . இதைத்தான் கிடைமட்ட துறைசார்ந்த  அறிவு  [ "horizontal domain  knowledge"] என்று  சொல்வார்கள் .வேலை  நீக்கம்  செய்யும்  பட்டியல்  போடும்பொழுது
உங்கள்  திறமைகளை  [ skill sets ] பட்டியல்  போட்டு  முடிவு  எடுக்கப்படும்  பொழுது , இது  போன்ற  பல்துறை  அறிவு  உதவும் .

அப்படியே  இல்லையென்றாலும்  வெளியே  சென்று  வேலைதேடும்  பொழுது
  போட்டிக்கிடையில்  நமக்கு  வேலை கிடைப்பது  இலகுவாக  இருக்கும் .

ஒன்று  மட்டும்  சொல்ல முடியும்  , மிகவும்  கடுமையாக உழைப்பது  மட்டும்  அல்ல அது  , அதுவும்  வேண்டும் ,  ஆனால் அதையும்  மீறி   ஒரு விஷயத்தை  ஆழமாக  அறிந்துக்  கொண்டு  , அதில்  இருக்கும்  நுணுக்கங்களில்
அவன்தான் கில்லாடியாக இருக்க வேண்டும். ஆவணங்கள் [documentation ] செய்து கொடுத்தாலும் அதனை  ஒருவன்  படித்து  ,வேலையில் செயல்முறையில் சிறப்பாக  தன்  அளவிற்கு  செய்ய   ,நீண்ட காலம்  கொள்ளும்  அளவிற்கு  அவனிடம்  ஆழாமான  அறிவும்  திறனும் இருக்க வேண்டும் . சைக்கிள்  ஒருவன் பயின்றவுடன் ஓட்டுவதற்கும்  , இரண்டு  கைகள்  விட்டு  ஓட்டுவதற்கும்  உள்ள வித்தியாசம் அது .

இதனைப் பெறுவதற்கு  ஒரு  திட்டம்  வேண்டும் .
அந்தக்குழுவில்  எதில்  தேவை  இருக்கிறது  என்கின்ற  அரசியலும்   அறிவும் வேண்டும் .அந்த  குறிப்பிட்ட  துறையில் தீவிரமாக  ஆழ்ந்து  இறங்கி  அறிவையும்  செயல்  திறனையும்  வளர்த்துக்கொண்டால்,  நம்மைத்  தேவை மிகுந்தவானாக  [demanding ] ஆக்கிக்கொள்ள  முடியும்   என்ற புரிதல் வேண்டும் இவரைத்தான்   நிபுணர் [specialist  ]என்று  சொல்வோம் .

இந்த  குறிப்பிட்ட  துணைத்துறை  நமக்கு  பிடித்த  ஒன்றாக  அமைந்து  விட்டால்  ரொம்ப  நன்று . அது  நம்மை  அடுத்தக்  கட்டத்திற்கு  எடுத்துச்  செல்லும் .அப்படி இல்லையென்றாலும்  , அதற்குத்  தேவை  இருந்தால்
" survival  of  the  fittest "  அல்லது  " adapt  for  survival " போன்ற  கோட்பாடுகளின்படி தேவைக்கு  ஏற்ப
நம்மைத்  தகுதிப்  படுத்திக்கொள்ள  வேண்டும் .

ஒரு  ப்ராஜெக்ட் செய்வதை  ஒரு போரின் பத்ம வியுகமாக  வைத்துக்  கொள்வோம் . உள்ளே  செல்ல மட்டும்  தெரிந்தால்  போதாது  , வெளியே  வரவும்  தெரிய  வேண்டும்  அல்லவா .

வெளியே  கொண்டு  வரும்  போர்த்திறன்  அறிந்தவன்  ஒருவன்தான்  இருக்கிறான்  என்றால் , அவனைத் தள்ளி  வைக்க  முடியாது  அல்லவா ?
இன்னும்  சொல்லப்போனால் பத்ம வியுகத்தில் உள்ளே  சென்று  மாட்டிக்கொண்டால்  என்ன  ஆவது  என்ற  பயம் வந்தால்  அந்தத்  தளபதியினை  கைவைக்க  முடியாதுதானே .அந்தத்  தளபதியாக  இருக்க  நம்மைப் தயார்  செய்ய வேண்டும்.நீண்ட  காலத்திட்டம்  இது .
வருடங்கள்  கழியக்  கழியக்  அரைத்த  மாவையே  அரைக்காமல் , அடுத்த  வருடம்  என்ன  கற்றுக்கொள்ளலாம் என்று திட்டமிட்டு  அதன்  படி
திறமைகளை வளர்த்துக் கொள்ள  வேண்டும் .

மேலே  முதலில் சொல்லப்பட்ட  சித்தாள் 10 பேரில்  சிலரைத்   தானே  எடுக்க  முடிவு  செய்தனர் . அவர்கள்  தரப்பில்  இருந்து  பார்ப்போம்  இப்பொழுது .
அதில்  இரண்டு  பேர்  அந்தக்   கொத்தனாருடன்  கூடயே  இருந்து  எப்படியோ
ஒரு அளவிற்கு தொழிலைக்  கத்துக்கொண்டு விடுகின்றனர் . அப்பொழுது  அவர்களின்  மதிப்பு  அதிகம்  தான் . இரண்டு  மூன்று பேர்  குறைத்த  பின்னும்
வேலை  வாங்கும் சூழலில்  இவர்களின்  தேவை  அதிகமாக  இருக்கும் .
இதுவும்  ஒரு  வகையில்  வேலையினைத்தக்க வைத்துக்கொள்ளும் ஒரு  முறைதான் . நான்  இதை வேறு  கண்ணோட்டத்தில்  பார்ப்பேன் .
வேலையினைக்  காத்துக்கொள்ளும் முயற்சி என்று பார்த்தால் அதில்
உன்னதம் இருக்காது .தொழிலைத்  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும்  ஈடுபாடும் தான் முதன்மையாக இருக்க  வேண்டும் . அப்பொழுது
அறிவும்  திறனும்  இன்னும்  சிறப்பாக  வளரும் , நமது  தேவையும் கூடும் .
இதைதான்  "vertical and  horizontal knowledge " என்பதற்கு  ஒரு  உதாரணமாகக் கூறுவேன்.தன் வேலை  மட்டும்  இல்லாமல் , இன்னும்  என்னத் தெரிந்துக்கொள்ள  முடியும் என்று  அலசி , எது  நிறுவனத்திற்கு  தேவை  என்பதையும்  அறிந்து
அதை  கற்றுக்கொள்ளும்  முயற்சியில்  ஈடுபட்டு  , சமயம்  வரும்  பொழுது  அல்லது அமைத்துக்கொண்டு  அதனைக்  கற்றுக்கொள்ள வேண்டும் .

எப்படிப்பட்ட நிறுவனத்தில்  வேலை  செய்ய  வேண்டும் ?

தொழில் சார்ந்த  இலக்குகளை  ["career goals"] என்று  தனக்கென்று  ஒரு  திட்டம்  வகுத்து  , இந்தக்   நிறுவனத்தில் தன்னுடைய  தேவைக்கேற்ற  வேலை  கிடைக்குமா  என்று  ஆராய  வேண்டும் . பணம்  மட்டுமே குறிக்கோளாக  இல்லாமல் , நிறையத் தெரிந்துக்கொள்ளும்
சூழலை [ learning curve ]  கொடுக்கும்  நிறுவனத்தை தேர்ந்து  எடுத்து சேர  வேண்டும் . இதுதான்  துறையில்  நீண்ட  நாள்  தாக்கு  பிடிக்க உதவும் .
அல்லது  வருடாந்திர  செயல்  திறன் விவாதம்  போதோ , மற்றொரு  தகுந்த  சூழலில் மேலதிகாரியிடம் , "எனக்கு  இவற்றை எல்லாம்  தெரிந்துக்  கொள்ளும் ஆவல்  இருக்கிறது . எனக்கு  அப்படி  பட்ட  ஒரு  ப்ராஜெக்ட் வந்தால்  , சந்தர்ப்பம்  கொடுங்கள் " என்று  சொல்லி  வைக்க வேண்டும் .
இது  நன்மதிப்பையே  கொடுக்கும்  , சரியாய்ப்   பேசினால் .
பணம்  மட்டும்  குறிக்கோள்  இல்லை  , மேலே  போக  தன்னைத்
தயார்  செய்து  கொள்கிறான்  என்ற  பிம்பத்தைக்  கொடுக்கும் .
குறிப்பாக , அடுத்த  பதவி  உயர்வு வேண்டும்  என்றால் என்ன  என்ன  தகுதி
தேவைப்படுகிறது  என்ற  ஒரு  எதிர்பார்ப்பை  மேலதிகாரியிடம்  முன்பே
கேட்டு வைத்துக்கொண்டு , அதனை  அப்ரைசல்  சந்திப்பின்  பொழுது  எழுத்தில் குறிக்கோள்களாக  வைத்துக்  கொள்ள வேண்டும் .
அடுத்த  ஆண்டு  அதை  அடைந்து  உள்ளேனா  என்று  பார்த்து  விட்டு
அடுத்த  கட்டம்  பற்றி  பேச வேண்டும்.
மேலதிகாரி , இன்னும்  நீங்கள்  முன்னேற  வேண்டும்  என்று  கூறினாலும்
அதற்கு  ஏற்ப  தன்னை மெருகேற்ற  வேண்டும் .
மேலதிகாரி  ஏமாற்றும்  நோக்கில்  இதை  அதைச்  சொல்லி
நழுவினாலும்  , அமைதியாக  பேசி , அடுத்த  முறை  அப்படி  ஒரு  சந்தர்ப்பத்தை  கொடுங்கள் என்று  அடி  மேல்  அடி  வைக்க  வேண்டும் .
அம்மி  நகரும் மெதுவாக .இப்படி  இல்லாமல் இலக்கே  இல்லாமல் சென்றால்  , ஆபத்துதான் .

இன்னொரு  முக்கியமான  விஷயம்  இருக்கிறது .
ஒவ்வொருவருக்கும்  ஒரு  குறிப்பிட்ட  திறமை  இருக்கும் .
எப்படி  பாடுவது , ஓவியம்  வரைவது  ,இசைக்கருவி  வாசிப்பது , கவிதை  எழுதுவது போன்ற  பல  கலைகளில்  ஒவ்வொருக்கும்  ஒரு  திறமை  இருக்கும் [உதாரணத்திற்கு சொன்னேன் ,கலைகளும்  திறமைகளும்  பல  வகைகள்  உள்ளன என்பதை  நாம்  அறிவோம் ].எதில்  நமக்கு  இயற்கையாகவே  ஈடுபாடும்  திறமையும்  இருக்கின்றது  என்ற  சுயவிமர்சனம்  செய்து  அதில்  கூர்ந்த  அறிவினை  வளர்த்துக்  கொள்ள  வேண்டும் . இப்படி  நமக்கு பிடித்த ஒன்றில்  ஆழமாக  இறங்கிப்   படித்து  , இன்னும்  தீவிரமான  நுண்ணறிவினை  வளர்த்துக்கொண்டால்  ,நமக்குத் தேவை இருக்கும் . ஒருவேளை  நமக்கு  ஈடுபாடு  உள்ள  துறைதனில் சந்தர்ப்பம்  கிடைக்க வில்லையென்றால் , வெளியே  வேறு  நிறுவனத்தில் அது  அமையுமா  என்று  தெரிந்துக் கொண்டு அதனை நோக்கி போகலாம் .
அப்படி  ஏற்படுத்திக்கொண்டு   விட்டால்  , நீண்ட  பயணத்தில்  களைப்பும்  ஏற்படாது  , நம்முடைய  திறமையும்  மதிக்கப்படும் .
அப்படி  ஒருவேளை  அமையவில்லையென்றாலும் , முழு  மனதுடன்
கொடுக்கப்பட்ட  துறையில்  நுண்ணறிவு  வளர்த்துக்கொள்ளல் வேண்டும் .அதைத்தான்   முதலில் சொல்லியிருந்தேன் .

குறிப்பாக கல்லூரி  முடித்து  வந்து  சேர்ந்தபின்  முதல் ஒரு  வருடத்திலேயே தன்னுடைய  நீண்ட  கால  இலக்கு  என்னவென்பதை  தீர்மானம்  செய்து விட வேண்டும் .அதை  நோக்கி  முயற்சிகள்  எடுக்க  வேண்டும் . அதையும் தாண்டி சொல்வதென்றால் ,கல்லூரியில்  இருக்கும்  பொழுது  கூட  தனக்கு   பிடித்த  துறையில்  எந்த நிறுவனங்கள்  உள்ளன , அதில் சேர என்னச செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதற்கு தேவையான வேலைகளை கல்லூரியிலேயே தொடங்கினால் ரொம்ப நல்லது . கல்லூரி சீனியர்ஸ்  இதற்கு உதவுவர் ,இல்லை குடும்ப மற்றும் நண்பர் வட்டத்தில் யாரேனும் ஒருவரை  வழிகாட்டியாக [ mentor ]ஆக வைத்துக்கொண்டால் நல்லது .

நீண்ட  காலத்  திட்டம்  ஒன்றைப்  பார்ப்போம் .
ஒரு  கஸ்டமர்  ப்ராஜெக்ட்  கொடுக்கும்  முன்  , அந்தக் குழுவின்   திறனை மதிப்பிடுவர் . அதற்கு  பெரும்பாலும்  திட்ட  மேலாளர்   [ப்ராஜெக்ட்  மேனேஜர் ] அல்லது  மென்பொருள்சிற்பி  [software architect ] போன்றோடுடன்   பேசுவர் . அவர்கள்  தேவை  என்னவென்பதை  தெரிந்துக்  கொண்டு  , அதற்கு  ஏற்றார் போல்  , குறுகிய  காலத்தில்  ஒரு திட்டம்  அதற்கு  ஆகும்  செலவையும்  ஒரு  மதிப்பீடு  கொடுத்து  ,அவர்களை  நம்ப  வைத்து  ப்ராஜெக்ட்  வாங்க  வேண்டும் , பிறகு  அதைத்  திறன்பட முடித்தும்தர  வேண்டும் .

இப்படி   கஸ்டமர்  முன்  நின்று  பேசும்  திறன்  வாய்ந்தவர்கள் தேவைப்படுகின்றனர் .அதற்கு ஆழ்த்த தொழில் சார்ந்த அறிவும் பேச்சுத்திறனும்  வேண்டும் .  10 வருடத்திற்குள்  அல்லது  அதிக்கபடி  பதினைந்து  வருடத்திற்குள் இப்படிப்பட்ட  ஒரு  தகுதியனை  நாம்  அடைந்து  இருக்க வேண்டும் .இது  ஒரு  உதாரணம் .
நம்முடைய  அனுபவத்திற்கு  ஏற்ற  செயல்திறன் [value  proposition  ]  நமக்கு  இருக்க  வேண்டும்  என்று  சொல்லவருகிறேன் .

இதற்குத்  தொழில்நுட்ப  அறிவு   [technical skills ] மட்டும்  போதாது, மென்திறனும்  [soft skills ]   முக்கியம் . இதைப்   பற்றியும் ,  .திட்ட  மேலாண்மை [ program management  ]  பற்றியும்  கொஞ்சம்  பேசவேண்டும் .

மேலும்  "Sixth  sense  to  survive " என்று  ஒன்று  வேண்டும் என்று  முன்பு  கூறியிருந்தேன் .அதாவது  , நிறுவனத்தில்  ஏதாவது  வேலை  நீக்க  பூகம்பம்  வரப்போகிறதா  என்று  ஒரு  அளவிற்கு முன்கூட்டியே கணிக்கும்  திறன் பற்றி  பேச  வேண்டும் .  வேலைக்கு  எளிதாக அழைப்பு  வருவதற்கு  முக்கியமாக  ஆட்கள்  தெரிந்து  இருக்க  வேண்டும் [ networking]
[ அதுவும்  ஒரு முக்கிய  காரணம் ]..இதையும்  பேசவேண்டும்


 இன்னும்  இரண்டு  பகுதிகள்  எழுத  வேண்டி இருக்கும்  என நினைக்கிறேன் .
பேசுவோம் .



Wednesday, January 7, 2015

IT துறையில் 40 வயதிற்கு மேல வேலை இல்லையா ....பகுதி 1

"IT  துறையில்   40 வயதிற்கு மேல  வேலை  இல்லையா "  போன்ற  நீயா  நானா  விவாதங்களும்  , மார்க்கெட்  நன்றாக  இருக்கும்  பொழுதே  நீக்கம்  போன்ற  செய்திகளும்   வந்துக்  கொண்டு  இருக்கும்  தருணத்தில்  , அதைப்  பற்றி கொஞ்சம் அலசலாம்  என்று  நினைத்தேன் .

யாரையும்  தேவை  இல்லாமல்  பயமுறுத்தும்  எண்ணம்  எனக்கு கிடையாது , நானும்  இதே  துறையில்தான்  இருக்கிறேன். எனக்கும்  அனைத்தும் பொருந்தும்  வருமுன்  காப்பதே  சிறந்தது என்ற  எண்ணத்தில்  தான் எழுதுகிறேன்.  அதாவது  " 6 th  sense  for  survival " எப்படி  வளர்த்துக்  கொள்வது  என்பதை  அலச  நினைக்கிறேன் .

இல்லை  வந்தால் எப்படி சமாளிப்பது  என்பதையும்  பார்க்கலாம்  என  நினைத்தேன் . தலைக்கு வந்து  தப்பித்த  சமீபத்திய  அனுபவமும்  , வந்து  மாட்டிக்கொண்ட  அனுபவம்  ஒன்றும்  என்னிடம்  உள்ளது . ஆதலால்  பேச  எனக்கு  அருகதை  உள்ளது !



இந்த  விவாதம்  வந்து  இரண்டு  வாரம் இருக்கும் என நினைக்கிறேன் ...
ஒரு  பெரிய  இந்திய  நிறுவனம்  layoff  குறித்து பேச்சு அப்பொழுதே  மெதுவாக  அடிபட  ஆரம்பித்து  இருந்தது .

" Performance  basis " அதாவது  வேலைத்திறன் குறைந்தோரைத்தான்  நீக்கியதாக  அந்தக்  கம்பெனி   சொல்கிறது .

25000 பேருக்கு  மேலே  கைவைக்கப் போவதாகச்சொல்லி  இருக்கிறார்கள் .
12 வருண்டங்களுக்கு  மேல்  பெரும்பாலும்  இந்தியாவிலும்  , சில வருடங்கள்  வெளிநாட்டிலும்  பல  வகை  இந்திய  , அமெரிக்க  கம்பெனிகளில்  வேலை  பார்த்து  இருக்கின்ற  என்னுடைய  சொந்த  அனுபவங்களை  பகிர்ந்து  கொண்டும்  , வருமுன்   காப்பது  பற்றியும் பேசுவோம்  என  நினைத்தேன் .
ஏன்  layoff  செய்கிறார்கள்  என்ற  கேள்விக்கு  பதில்  பெரிய  சூட்சமம்  ஒன்றும்  இல்லை .  பெருநிறுவன பேராசை  தான் ["Corporate Greed " ]  பெரும்பாலும் .  சில  சமயங்களில்  , கம்பெனி மூழ்குவதிலிருந்து தன்னைக் காப்பாற்றி  கொள்ளவும்  இது  நடந்து  அரங்கேறுகிறது .

IT  துறையில்  வேலை  பார்பவர்கள்  வேலை  நிரந்தரம்  இல்லை  என்கின்ற  நிதர்சனத்தை  அறிந்துக்கொண்டு  தான்  வேலையில்  சேர  வேண்டும் .
இதில்  எந்த  மாற்றுக்   கருத்தும்  இல்லை .

இதைப்பார்க்கும்  முன்  , நம்முடைய   IT  துறையினைப் பற்றி  கொஞ்சம்  பார்ப்போம் . 90 களின்  ஆரம்பத்தில் உலகமயமாக்கலினால் திறந்து  விடப்பட்ட  மடை தான்  இந்தத்  துறை   பெருகக்  காரணம்  என்பதை  நாம் அறிந்ததே .

புதிதாக  வளரும் நிலையில்  இருந்த  துறை  என்பதால்  வேலை  வாய்ப்புகள்  கடல்  போல  விரிந்து  பரந்து  இருந்தது . பதவி  உயர்வுகளும் .
அப்பொழுது  அவ்வளவு  கஷ்டம்கிடையாது.இரண்டு  மூன்று  வருடங்களில்  மேலே  மேலே  போய்க்கொண்டே  இருக்க  வேண்டிதான் . காக்காய்  தண்ணீர்  குடிக்க  கற்களை போட்டுக்கொண்டே  வரும்  பொழுது  நீர்  மேலே  வந்த கதையாக  , நீருடன் சேர்ந்து  அடியில் இருக்கும்  அழுக்கும் , இலைகளும்  மேலே  வரத்தான்  செய்யும் . அதாவது  பெரிதாக  திறமை  இல்லையென்றாலும்  , அந்தச்சூழலில்  உயர்  பதவிகளுக்கு  ஆட்கள்  தேவைப்பட்டனர் . சுமாராக  வேலை  பார்த்தவரும்  வெகு சீக்கிரத்தில்  மேனேஜர்  ஆகிவிட்டனர் .[ சுமாராக  5-6 வருடங்களில் ].
" ITS  ALL  SUPPLY  AND  DEMAND "

போகப் போக   IT  துறை  முதிர்ச்சி  அடையத்  தொடங்கியது .சமீபத்தில் வேலை  நிறுத்தம்  செய்யத்  துணிந்த கம்பெனியில்   மட்டும்  3L  பேருக்கு  மேல்  வேலை  செய்கிறனர் . பெரும்பாலும்   நிறைய
ப்ரோக்ராமர்ஸ்    அல்லது  என்ட்ரி லெவலில் [ entry  level  ] வேலை செய்யும்  ஆட்கள்  தேவைப்படுகின்றனர்  .  ஆளுமைப்  பொறுப்புகள்  குறைவாகத்தான்   இருக்கும் .இதனால்  ஒரு  வேலையினை  ரொம்ப  வருடங்களாக  செய்யும்  நிலை  வந்தது . திறமை  உள்ள  பிடிக்காதவர்கள்  கம்பெனி  விட்டு கிளம்பினர் .

"attrition"  என்று  சொல்லுவர்  இதனை .
இதனை  சமாளிக்க  , சூட்சமமாக  கையாண்டனர்  கம்பெனிகள்  அல்லது  "corporates"

சும்மா  புதுப்  புது  பெயரில்  பதவிகள் [positions ]  தயார்  செய்தனர் .
பூவும் ஒன்றுதான்  புய்ப்பமும்  ஒன்றுதான்....

எங்கேயோ  மேலே  போய்க்கொண்டு  இருக்கிறோம்  என்கின்ற  பிம்பத்தை  கொடுக்கத்தான்  வேறு  என்ன . இது  மாய  வலையா  இல்லை  உண்மையான  வளர்ச்சியா  என்று  பகுத்து  அறிவும்  அரசியலும்  தெரிந்து  இருக்கவேண்டும்  . கொடுக்கப்படும்  பதவி  உயர்வு  என்ன  புதுப்  பணி [roles]  இருக்கிறது என்று பார்க்க  வேண்டும் . செய்த  வேலையினை  சற்று அதிகமான  சம்பளத்திற்கு
 வேறு  ஒரு  பெயரில்  [ முன்பே சொன்ன  பூ  புய்ப்பம் ]  அளவில் தான்  இருந்தால் அது  சரிப்படாது  , எச்சரிக்கை  மணி .

அந்த  நேரத்தில்  நீங்கள்  கிளம்பி  விடுவீர்கள்  என்பதற்காக  உங்கள்  வாயினை  அடைப்பதற்கு  செய்யப்பட்ட  ஒரு  சமரசம் .
இதனை  சிலர்  போராடி  வாங்குவர்  , தனக்குத்  தகுதி   உண்டு , எத்தனை வருடம்  அதே  இடத்தில்  இருப்பேன்  என்று  இருக்கும்  அலுவலகத்தில்  கேட்டுப்   பார்த்து  அலுத்துப்போய் வெளியே  ஒரு  நல்ல வேலையினை [ நல்ல  வேலையா  இல்லை  இக்கரைக்கு  அக்கரை  பச்சையா??]  வாங்கிவிட்டு  ராஜினாமா [resign ]செய்தபின்  நடக்கும்  பாருங்க  ஒரு  பேச்சு  வார்த்தை ....அது  எப்படிச்சொல்ல ..

இத்தனை  நாள்  ஏன்  பதவி  உயர்வு  தரமாட்டேன் என்கிறார்  என்று  கேட்டபொழுது , சும்மா  உப்பு  சப்பு  இல்லாத  காரணம்  ஒன்றைக்கொடுத்தவர்கள்  இப்பொழுது அந்தர்  பல்டி  ஒன்றை  அடிப்பார் .

உப்புசப்பு  இல்லாத  காரணம்  என்ன  , அது  எப்படி  இருக்கும்  என்பதைப்  பார்ப்போம் .
கஸ்டமர் இடத்தில்  சென்று  வேலை  பார்க்கச்  சொல்லுவர் .
நம்முடைய  அலுவலகத்தில்  வேலை  பார்ப்பது  போல  வருமா  அது ???
வெகு  சில  நேரங்களில்  நல்ல  கஸ்டமர்கள்  அமைவர்  , அப்படியே  அமைந்தாலும்  நாம்  விரும்பும்  , ஆளுமை  சார்ந்த  வேலை  கிடைப்பது  கிடையாது . அவர்கள்  என்ன  கொடுப்பரோ அதைத்தான்  எடுத்து  செய்ய  வேண்டும்  , அதுதானே  நிதர்சனம் . இப்படி இருக்கையில்  , இது  நாம்  வேலை  செய்யும்  கம்பெனியின் தேவை  , நம்முடைய  விருப்பம்  அன்று .
நம்மை  அனுப்பி  வைப்பர்  , நன்றாக  வேலை  செய்து  பெயரும்  வாங்குவோம் , ஆனால்  ஆளுமை  சார்ந்த  வேலை  கிடைப்பது  அபூர்வம்  , ஏன்  என்றால்  , கஸ்டமர்  மேனேஜர்கள்தான்   அந்த  மேர்ப்பார்வை வேலையினை செய்வார்கள் .இப்படி  இருக்க  , நம்முடைய  ஆண்டு  அப்ரைசல்[ appraisal ]  அல்லது  பணித்திறன் மதிப்பீடு  வரும் .

வேலையினை  திறம்பட  செய்து  உள்ளேன்  , பதவி  உயர்வு  வேண்டும்  பல  ஆண்டுகளாக  கேட்டுக்கொண்டு  இருக்கிறேன்  , என்னாயிற்று  என்றால்  ,
"நீங்கள்  நன்றாக  வேலை  பார்த்து  உள்ளீர்கள், இல்லை  என்று  சொல்லவில்லை  , ஆனால்  ஆளுமை  பங்கு  வகிக்கவில்லையே , ஆதலால்
பதவி  உயர்வு  கிடையாது"  என்பர் .

இது  முட்டையில்  இருந்து  கோழி  வந்தாதா  , கோழியில்  இருந்து  முட்டை  வந்ததா கதைதான் . அவர்கள்  தேவைக்கு  நம்மை  அனுப்புவர்  , "என்னுடைய  அனுபவத்திற்கேற்ற ஆளுமை  பங்கு  வகிக்கும்  சூழல்  இல்லை  , எனக்கு அங்கே  வேண்டாம்"  என்று  நீங்கள்  கூறினாலும்  ,  வணிகத் தேவை [ business  requirement ]  என்று  சொல்லி  அனுப்பி  வைப்பர்  , ஆனால்  பதவி  உயர்வு  வரும்  பொழுது , அதனைக்  கொடுக்காமல்  இருக்க  அதையே  காரணம்  சொல்லுவர் .எப்படி  இருக்கிறது  நரித்தனம் !

நீங்கள்  தானே  அனுப்பி  வைத்தீர்கள்  என்று  எல்லாம்  கேட்டு  ஒன்றும்  பயன்  இல்லை .

" இங்க  சந்த்ருன்னு   ஒரு  மானஸ்தன்  இருந்தானே " ன்னு  நக்கல்  வேணும்னா  அடித்துவிட்டு  வரலாம்  , அதுவும்  மனதில்  தான்  அந்தக்  கம்பெனியில்  தொடருவதாக  இருந்தால்  சொல்கிறேன் .

இதுவாவது  பரவாயில்லை  , நமது அனுபவம்  கூடக்கூட , பதவி  உயர்வும்  அதற்குத்தகுந்த வேலையும்  செய்யவில்லையென்றால்   , அதையே  காரணம்  காட்டி  வெளியேயும்  போகச்  சொல்லுவர் .
இந்த  வேலை  செய்ய  ஒரு  சில  வருடங்கள்  அனுபவம்  உள்ள  ஒருவர்  போதுமே  , நீங்கள்  எதற்கு  என்றுதான்  அவர்கள்  நினைப்பார்கள் .
வேலைநீக்கம்  [layoff ]  நடப்பதற்கு  இது  ஒரு  சூட்சமமான  காரணம்.


இப்போ  மேலே  அடித்த  அந்தர்  பல்டியினையும் [ ராஜினாமா  செய்தப்  பின் ]  பார்ப்போம் .

நீங்கள்  தான்  இந்த  டீமின்  உயிர்நாடி  என்பதைப் போல் இருக்கும்  பேச்சு.
இதைக் கொடுப்பேன்  அதைக்  கொடுப்பேன்  என்று  சொல்லி  சிலரை  உட்காரவும்  வைத்து  விடுவர் .ஆனால்   உள்ளே  உங்களுக்கு  எதிராக ஒரு  கத்தி  தீட்டப்பட்டுக்கொண்டு  இருக்கும்  ....வெளியே  சிரித்துக்கொண்டு
உள்ளே  அவர்கள்  உங்கள்  HR  record  இல் உங்களுக்கு ஒரு  பெரிய  கரும்புள்ளி குத்தி வைத்து  இருப்பர் . நீங்கள்  " star  performer " அதாவது  உங்களுக்கு  தெரிந்த  ஒன்று  உங்கள்  மேனேஜருக்கு   கூட  சரியாக  தெரிந்து  இருக்காமல்  , அல்லது  உங்கள்  மொத்த  டீமில்  யாருமே  அதனை  சரியாய்  செய்து  முடிப்பார்கள்  என்ற  நம்பிக்கை  மேல்  உள்ளவர்களுக்கு  வராத  வரை  நீங்கள்  தப்பிப்பீர்கள்,  இது  சிரமம்  தான்! . எப்படியோ  உங்களிடம்,அதை  "knowledge  transfer " என்றப்பெயரில்  அதனை  சிலருக்கு  பகிர்ந்து கொடுக்க  வைத்து  விடுவர் .  சிலர்  இதையும்  தாண்டி  ஒரு  "critical  skillset" தன்  பெயரில்  வைத்துக்கொள்வர் . இது  ராஜ  தந்திரம் .
இது  சரியா  தவறா  என்ற  தார்மீக  விவாதத்திற்குள் போவது  இந்தக்  கட்டுரையின்  நோக்கம்  அல்ல.

அப்படி  ஒரு  critcal  skillset   இல்லாதவர்கள்  தான்  90% மேல்  இருப்பார்கள் . அப்பொழுது  அவர்களை  தூக்குவதில்  எந்தப்  ப்ரெச்சனையும்   இருக்காது  கம்பெனிகளுக்கு .

மேலும் , உங்கள்  சம்பளமும்   அனுபவமும்   ஒரு  அளவிற்கு  சம  நிலையில்  இருக்க  வேண்டும் . வெளியில்  இருந்து  வரும்  பொழுது ஒரு  20-30% சம்பள  உயர்வு [hike ] வாங்கி  வருபவர் இந்த  சமன்பாட்டில்  இருக்க  மாட்டார்கள்  பெரும்பாலும் . அதன்பிறகு நீடித்து  தாக்குப் பிடிக்க அதற்கு  தகுதியாக  தன்னை  வளர்த்துக்கொள்ள  வேண்டும் , இல்லையேல்  கத்திதான்

இந்தச்  சூழலில்  யாருடைய  சம்பளம்  குறையாக  உள்ளதோ  அவர்களை  விடுத்து  அதிக  சம்பளம்  வாங்குபவர்களையும்  , முன்பு  சொல்ல  resign  செய்து  மிரட்டி  உயர்வு   வாங்கியவர்களையும்  , மேலாளருக்கு  பிடிக்காதவர்களையும்  , கை  வைப்பார்கள் .

"ரொம்ப  ஆடினாய்  அல்லவா  ,இருக்குடி  ஆப்பு  உனக்கு"   என்று  என்றைக்கோ  செய்ப்பட்ட  ஆப்புதான்  இது . இதனை  என்னுடைய  பழைய  கம்பெனி  VP  ஒரு  முறை சிரித்துக்கொண்டே கம்பெனி  மீட்டிங்கில்  வெளிப்படையாக  சொன்னார் .

"யாரை  எப்பொழுது  கவனிக்க  வேண்டும்  என்று  எங்களுக்குத்  தெரியும் " என்று . நம்பியாரின்  வசனம்  போலத்தான்  இருந்தது  அது.


அடுத்தக்  கட்ட  பணிநீக்க   காரணத்தைப்  பார்ப்போம் .

1) ஒரு பெரிய  கம்பெனி  மற்றொரு  கம்பெனியினை  கையகப்படுத்தும் [ takeover ] சூழலில்  , தேவை  இல்லாத  ஆட்களை  குறைக்கும்  சூழல்  பெரும்பாலும்  உண்டு . ஒரு  குறிப்பிட்ட  துறை  சார்ந்த  வணிகத்திற்கு  கையகப்படுத்தி  இருப்பர்  , அதனால்  தேவை  இல்லாத  துறையின்   ஆட்களை  போகச்  சொல்லுவர்  , அல்லது  தேவைக்கு  அதிகமான  ஆட்கள்  ஒரே  வேலையினைச்  செய்ய  இருந்தாலும்  [ கையகப்படுத்தப்பட்ட  பின்னர் ]

வெகு  சில  கம்பெனிகள்  இதனை  ஆகாமல் பார்த்துக்  கொள்ள  முயல்வர் , பெரும்பாலும்  இந்தச்  சூழலில்  "layoff"  நடந்தே  தீரும் .

2) கம்பெனிகள்  ஸ்டாக்  மார்க்கட்டில் [ stock  market ] லிஸ்ட்  ஆகி  இருந்தால்  இன்னும்  கஷ்டம்தான் . ஒவ்வொரு  காலாண்டும்   அவர்கள்  முன்னேற்றம்  காட்ட  முயல்வர்  . அப்பொழுதுதான்  பங்கு  மதிப்பு கூடும் .
எப்படியாவது  போன  வருடத்தினைக் காட்டிலும்  அதிக  லாபம்  காட்ட  வேண்டும்  என்கின்ற  வெறியில்  , என்ன  வேண்டுமானாலும்  செய்யத்  தயாராக  இருப்பார்கள்  .

நான்  முன்பு  வேலைபார்த்த  ஒரு கம்பெனியில்   நடந்த  ஒரு  உதாரணம்  சொல்கிறேன் . [ இதைப்  போன்ற  வேறு  கதைகளும்  எனக்குத்  தெரியும் ].
அப்பொழுதுதான்  வேறு கம்பெனியில்  இருந்து துணைத்  தலைவர் [ VP  ]
பதவிக்கு  ஒருவர்  வந்து  இருந்தார்  ஒருவர் . வந்த  சில மாதங்கள்  ப்ராஜக்ட்ஸ்  இன்றி  மந்தமாக  இருந்தது  எங்கள்  அந்த  கம்பெனி .
சரி , ப்ராஜக்ட்ஸ்  அதிகம் செய்து  , வணிகம்  அதிகமாக்கி   , ஸ்டாக்
  மார்க்கெட்டில் பங்கு  உயர்த்துவது  நல்ல  நேர்  வழி , இல்லை,  இருக்கும்  ஊழியர்களை விரட்டி விட்டு  . அந்தச்  சம்பளக்  குறைப்பின்  மூலமாக  நட்டம்  இல்லையென்று  காண்பித்தல்  கொடூர  வழி  .  இந்தக் VP  தேர்ந்தெடுத்தது  இரண்டாம்  பாதையைத்தான் .
தான் வந்த  பின் லாபம்  இல்லையென்று  மேலதிகாரம்  நினைத்துவிடக் கூடாதென்று  எடுத்த  முடிவு  இது .

" இப்போதைக்கு  இதைச்  செய்வோம்  , பின்பு  ப்ராஜக்ட்ஸ்  வந்த  பின்  , தேவைப்  பட்டால்  ஆட்கள்  எடுத்துக்  கொள்வோம்  , WE  WILL CROSS THE BRIDGE WHEN IT COMES"   என்று  பேசியதாக  எனக்கு  வந்தது  செய்தி .


இப்படி  போகின்றது  IT  வாழ்க்கை .
" performance based industry unlike government sector " என்பதுதான்   இதன் அடிப்படை அணுகுமுறை .
ஒரு  அளவிற்கு  சம்பளத்தினை  குறைத்து  அனைவருக்கும்  வேலையினைக்  கொடுக்கலாமே? என்று  யோசிக்கிறோம் . இதனைச்  சில  கம்பெனிகள்   செய்கின்றனர் . அனால்  நல்லத்  தகுதியானவர்கள்  அதை  விட  அதிகமான  சம்பளத்திற்கு  வெளியே  சென்று  விடுகின்றனர் .
ஆதலால்  கம்பெனிகள்  நல்ல  சம்பளம்  கொடுக்கவேண்டி  தள்ளப்படுகின்றனர் .

நாற்பது  வயது  தொடும்  பொழுது  திட்டத்திட்ட  பதினெட்டில்  இருந்து  இருபது  ஆண்டு  கால  அனுபவம்  வந்து  விடுகின்றது .
மேற்கூறிய  கண்ணோட்டத்தில்  கம்பெனிகள்    யோசிக்கும் பொழுது  , அவ்வளவு  அனுபவம்  வாய்ந்தவர்களை  வைத்து  என்ன  வேலை  வாங்க  வேண்டும்  என்று  யோசிப்பார்கள் . குறைந்த  ஊதியம்  வைத்து  அந்த வேலையினைச்  செய்ய  முடியுமாவென்று  பார்ப்பார்கள் .
அப்பொழுது  கத்தி  அவர்களை  நோக்கி  எறியப்படும்  சாத்தியக்கூறு
அதிகம்தான் . எல்லோரையும்  அனுப்பிவிட  முடியாதுதானே  , எப்படி  நம்மைக்  காத்துக்  கொள்ள என்று  முதலில்  இருந்தே  திட்டமிடல் வேண்டும் .
சரி  இதனை  எப்படி  ஒரு  அளவிற்கு  சமாளிப்பது  என்பதைப்  பாப்போம் !
"என்னையும்  அரசியல்  வாதி  ஆக்கி விட்டீங்களா  பாவிகளா  " என்று  முதல்வனில்  அர்ஜுன்  குமுறுவது போலத்தான்  திட்டத்திட்ட  அதுவும்!

vertical domain knowledge , horizontal skillset , presales போன்ற  சிலவற்றையும்  பார்ப்போம் .

 IT  துறையில்  இருப்பவர்களுக்கு இந்தக்  கட்டுரையில்  இருப்பவை  முன்பே  தெரிந்தது  பெரும்பாலும் .பொதுவாக  எளிமைப்  படித்தி  எழுதியுள்ளேன்  அவ்வளவுதான்  .மேலும் நண்பர்களின்  விவாதங்களும்
கருத்துக்களும்  அனுபவங்களும்  பகிரும்  ஒரு  மேடையாக  இருக்கும்  என  நினைத்தேன் .

பார்ப்போம் .