Friday, December 26, 2014

பிஞ்சிலே பழுக்க வைக்க வேண்டாமே !

பிஞ்சிலே  பழுக்க  வைக்க வேண்டாமே !

டல்லாசில்  இரண்டு வருடம்  முன்  , ஒரு  குழந்தைகள் பொம்மைக்கடையில் என்  நண்பர்  மகளுக்காக  சில  பொம்மைகள்  பார்த்துக்கொண்டு  இருந்தேன்.

" I KNOW YOU CAN AFFORD MUM, ITS ONLY 30 dollars " என்று ஒரு  குரல்  கேட்டது.
திரும்பிப்பார்த்தால்  , ஒரு நான்கு வயது மதிக்கத்தக்க  தங்க  நிறத்தில்  நெற்றி  வரை  முடியுடன்  [ முஷ்ரூம்  கட் !] செய்த  ஒரு  அமெரிக்க  சிறுவன்  இதைச்சொன்னான்  என்றுத்  தெரியவந்தது . அவன்  அம்மா  

" NO sweety, your budget is 20 dollars. You need to chose within the budget"
என்று  சொல்கிறார்கள் . அந்த  நோ  கொஞ்சம்  அழுத்தமாகவே  வந்தது .

  நாம்  எங்கு இருக்கிறோம்  , என்ன  நடக்கிறது இங்கே  என்று சரியாக  விளங்கிக்கொள்ள சற்று  நேரம்  பிடித்தது  எனக்கு . 
அந்தச்  சிறுவனின்  கேள்வி  ஏற்படுத்திய  ஷாக்  தான்  வேறு  என்ன .
எதையும் வாங்காமல்  அந்த  இரண்டாவது  மாடியிலுருந்து  எதையோ யோசித்தவாறே   , மறுபடியும்  அந்த  அம்மா  பையனை  ஒரு முறை பார்த்து  விட்டு  இறங்கி  வந்தேன்  தரைக்கு . நிஜமாகவே தரைக்கு  வர  இன்னும் கொஞ்சம்  நேரம்  ஆனது  வேற  விஷயம் .மனம்  அங்கேயேதான்  சுழன்றுக்கொண்டு இருந்து  பம்பரம்  போல் .

அந்த  வயதில்  டி  நகர்  , ரங்கநாதன்  தெருவில்  நடு  ரோட்டில்  உருண்டு  புரண்டு , லாலா  வேண்டும்  [ என்  அப்போதைய  மொழியில்  கார் ] என்று  அழுத  நாட்களை  அம்மா சொன்னதுண்டு . அந்தப்பிம்பம்  ஓடி  மறைந்தது  மனதில்  , எப்படி  இருந்து இருக்கும்  என்று .

இங்கே   விஷயத்திற்கு வருவோம்.
அவனுடைய  அம்மா  அவனுக்கு மிகவும்  இளம்   வயதிலயே  பொருளாதாரமும்  , பணத்தை  கையாளும்  விதத்தையும்  சொல்லிக்கொடுக்கிறார்கள்  என்பது எனக்கு  விளங்காமல்  இல்லை.
ஒரு  பொருளை  வாங்கித்தர முடியாமல் போனால்  கூட , அவனுக்கு  வீட்டின்  பொருளாதார  சூழ்நிலை  தெரிந்து  வளர  வேண்டும்  , ஒரு  அளவிற்கு   மேல்  ஆசைப்பட கூடாது போன்ற  விஷயங்களை   சொல்லித்தந்துக் கொண்டு  இருக்கிறார்  . நண்பர்களிடம்  வியப்புடன்  இதைபற்றி பேசியும்  விவாதமும்  செய்தேன்.  இவன்  நாளை குடும்ப  சூழ்நிலை  தெரிந்த , பணத்தை  எப்படி  கையாள  வேண்டும்  என்கிற  பக்குவம்  நிறைந்த  ஒரு  நல்ல இளைஞனாக  வருவான்  என்பதில்  மாற்றுக்கருத்து  இருக்க  முடியாது ..

அவன்  கேட்ட  கேள்வியின்  ஆழம்  வேற தளத்தில்  இருந்தது தான்  நான்  இதை அவ்வளவு  யோசிக்கக்  காரணம்.

" ஏன்  வாங்கித்தர  மாட்டேன்குற  அம்மா   ?" என்பது  வேற .

உன்னால்  வாங்கித்தர  பொருளாதாரத் தகுதி [ affordability ] இருந்தும் ஏன்  வாங்கித்தர  தெரியவில்லை  என்கின்ற  கேள்விதான்  என்னைக் கவலைப்படச் செய்தது .

ஆனால்  அவன்  வயதில்  என்னைப்   போல்  தரையில்ப்புரண்டு  அழுவதையே  ஒரு  அப்பாவாக  நான்  விரும்புவேன் .
அந்த  நேரம்  கோவம்  வரலாம் , ஆனால்  நாளை  இதைப்பற்றி  என்  அம்மா  என்னிடமும்  , என்  மனைவிடமும் , என் நண்பர்களிடமும்  சொல்லிச்  சிரித்திட  ஒரு  நிகழ்வு  இருக்காதே . இதைக்காட்டிலும்  அவன்  தன குழந்தைத்தனத்தை  இத்தனை  இளம்  வயதில்  ஏன்  இழக்க  வேண்டும் .

கேட்டதை  வாங்கிக்கொடுக்க  வேண்டும்  என்று சொல்லவரவில்லை.
கொஞ்சம்  தாச்சா  காண்பித்து , ஒரு  பலூனையோ  ,
ஒரு  சிறிய  பொம்மையினை காண்பித்து  , இது  superman   உபயோகித்த  கார்  போன்று  ஒன்றைச் சொல்லி அவனுக்கு  பிடித்த  ஒன்றில்  மனதை  திருப்பச் செய்து  , அல்லது  அந்த  இடத்தை  காலி செய்வது  தான்  எனக்கு  உச்சிதாமகப்  பட்டது.அவர்கள்  மனதை  மாற்ற  வேறு  வழி  இல்லாமலா  போகும் .

அந்த  அம்மா  செய்த  அணுகுமுறை  சிறந்தது  , எனக்கும்  அதில்  பாடம்  உண்டு , ஒரு  விதத்தில்  அதனை  நான்  பயன் படுத்திக்கொள்வேன்  , ஆனால்   3-4 வயதில்  அல்ல. இந்த  ஒரு  நிகழ்வு  மட்டும்  இல்லை  நான்  சொல்லவருவது , எல்லாவற்றையும்  சீக்கிரமே  கற்றுக்கொடுத்துவிட  வேண்டும்  என்று  நினைக்கும் அவசர  மனோநிலையினைத்தான்  நான்  யோசித்து  வந்தது..

சமீபத்தில்  பள்ளிகள்  போட்டு  படுத்தும்  பாட்டில்  ,தன்  இரண்டாவது  படிக்கும்  மகன்  சொன்னதாக  என்  நண்பர்  சொன்னது  , " அப்பா  நான்  நாம  ஏன் பா  பொறக்கணும் !?"  இதற்கு  மேல்  என்ன வேண்டும்  , அவர்கள்  மன  நிலைமையினை உள்ளே  சென்றுப்பார்க்க . அவன்  அம்மாவும்  கூடே  சேர்ந்து  அவனைப் போட்டு   அழுத்தி  எடுக்கிறாள்  , அதனால்  நான்  அவனை  கொஞ்சம்  சமநிலை  பிடிக்க  வெளியே கூட்டிப்போய் மறுபடியும்  சிறுவனாக்கினேன்  என்றுச்  சொன்னார் .

சின்ன  சின்ன  விஷயங்களில்  இருக்கும்  ஆனந்தத்தை  அனுபவிக்கட்டும் .
மழையில்  நனையட்டும் , கொஞ்சம்  குளிரும் வெயிலும் பார்கட்டும் ,
மண்ணில்  புரளட்டும்  ,  மற்ற  குழந்தைகளுடன்  டூ  சேக்கா  எல்லாம்  விட்டுப்  பின்பு  சேரட்டும் , பஞ்சு  மிட்டாய் வாயில்  ஒழுகத்  திரியட்டும் .பொருளாதாரம்  எல்லாம்  பேசி  அவர்களை  உங்களுக்கு  சமமாக  பேச  சிந்திக்க வைக்க  வேண்டாம்  அந்த  வயதில் . ஒருவேளை   அவர்களுக்கு  வாழ்கை  இவ்வளவு  சிக்கலானதா   என்கின்ற சலிப்பு  வந்து விட  வாய்ப்பு  இருக்கிறது .

வாழ்வின்  யதார்த்தமும் , சூழ்ச்சியும் , வெற்றியும்  ,தோல்வியும்  , மார்க்   , career  பற்றிய குழப்பங்கள்  இப்படி  எல்லாவற்றையும்  கடக்க  அவர்களுக்கு இன்னும்  காலம்  இருக்கிறது ..  பிஞ்சில்  பழுத்து  விட்டார்கள்  என்று  சொல்லும்  காலம்  போய் , விதை  துளிர்த்து  மண்ணை  எட்டிப்பார்த்து  வெளியே  வரும்  பொழுதே  பழுக்க  வைக்க  வேண்டாமே!
இதைச்  சொல்ல  நான்  ஒன்றும்   பெரிய  குழந்தைகள்  மன  நிலை படித்த  அப்பா  டக்கர்  இல்லை. ஒரு  அப்பாவாக  சொல்கிறேன்  அவ்வளவுதான் . அந்த  வயதைக்  கடந்து  வந்தவர்கள்   தானே  எல்லா  அப்பாக்களும் .

கொய்யாக்களை   " ethylene " போட்டு சீக்கிரமாகவே  பழமாக்கிட  வியாபாரிகள்  இருக்கின்றனர்  , குழந்தைகள்  பழங்கள்  அல்லவே  , பூக்கள்  ஆயிற்றே , மலரும்  போது   மலர்வர்  , தண்ணீர்  ஊற்றுவோம்  , அனால்  இதழ்களை  போட்டு  விரித்து  எடுக்கவேண்டாம்  என்று  சொல்கிறேன் .


No comments:

Post a Comment