Saturday, August 29, 2015

டப்பா சோளமும் , பாட்டில் குளிர் பானங்களும் .

தலைப்பு  உணவைச் சார்ந்து  இருந்தாலும்  , நான்  பேச  வந்தது  அதையும்  தாண்டிய  ஒரு  கண்ணோட்டம் .

சிறுதொழில்கள்  பெருக  வேண்டியது குறித்து .

அமெரிக்காவில் வேலை  பார்க்க வந்து சில  வருடங்கள்  ஆகிறது ..
இங்கே  ஷாப்பிங்  செய்வது எனக்கு  முன்பெல்லாம் அலுப்பாய்  இருக்கும் .
எல்லா இடங்களிலும்  பெரும்பாலும்  ஒரே  போன்ற  கட்டமைப்புதான் .
கடைக்குள்  எந்த  ஊரில்  நுழைந்தாலும் அதே  போன்ற வடிவமைப்பும்   ,
சாமான் வரிசைகளும் சலிப்பைத் தவிர எதைக் கொடுக்கும் .
மளிகைக் கடை முதல் [ வால்மார்ட்  போன்ற  கடைகளையும்  சேர்த்து தான்  சொல்கிறேன் ]

இந்தியா  வரும்  பொழுது  , நம்ம  பாண்டி  பஜாரில் தெருவோரக் கடைகளில்
வணிகம்  செய்வது போன்று வருமா  என்று  நினைப்பதுண்டு . இப்பொழுது   நெரிசல்  காரணமாக , தெருவோரக் கடைகள்  அனைத்தையும்  அப்புறப் படுத்தி விட்டு  , பெரிய  கடைகள்  மட்டுமே  மிஞ்சி  இருக்கிறது அங்கே .

இந்த  செயின் ஆப்   ஸ்டோர்ஸ் வந்தாலே சிறு  வணிகர்கள்  பாதிப்படுகின்றனர்  ஒரு  பக்கம்  என்பதை  நாம் அறிந்ததே . இன்னொரு  பக்கம்  நான் சொல்லும்  , பல்வகை [variety ]  குறைவது . இது  ஷாப்பிங்  அனுபவத்தை ருசி குறைக்கச்  செய்யும் .

யோசித்துப்  பாருங்கள்  , வேலைப்   பழுவில் , வெளியே  செல்வது  குறைந்து  இருக்கையில்  , அதே  சலிக்க  வைக்கும்  கடைகளில்  நேரே  உள்ளே  சென்று
வாங்கி  வருவது நன்றாக   இருக்குமா  அல்லது  , மெதுவாக  அந்த  பாண்டி  பஜார் மர   நிழல்களுக்கிடையில்  , நறுக்கி  வைத்த   மாங்காயும்  , வெள்ளரிப்பிஞ்சும்  மிளகாய்ப் பொடி தடவி சாப்பிட்விட்டு எதுவும்  வாங்காமல் வந்தாலும்  சரிதான்! அந்த  அனுபவமே  தனிதான் .

வாழ்க்கையில்  நிறங்கள்  வேண்டும்  எல்லாவற்றிலும்  .கருப்பு  வெள்ளையாகத்தான்  தோன்றுகிறது  எனக்கு  இந்த  மால்களும்  , பெரியக்  கடைகளும்  சில  தடவைகளுக்குப்பின் .

இது ஒரு  பக்கம்   இருக்கட்டும் .

சில  வருடங்களாக  டெக்சாஸ்   ஆஸ்டின் என்கின்ற  ஊரில்  இருந்து  வருகிறேன் .இது அமெரிக்க  நகரகங்களில் சற்று  வித்தியாசமான  ஊர்   என்று  சொல்லலாம் .

வெயில்  106-108 அளவிற்கு  ஜூலை  ஆகஸ்டில்  மண்டையப்  பிழந்தாலும்  ,
அதையும்  தாண்டி  இந்த ஊரில்  மக்கள்  விரும்ப` சிலவைகள்  இருக்கின்றது .
குறிப்பாக  நான்  பேச  வந்த  தலைப்பின் கீழ்  வரும்  , சிறு வணிகங்கள் . உதாரணமாக  உணவகங்கள்  , பெரும்பாலும்   புட்  செயின்ஸ் [ food  chains ]   இருக்கும்  அமெரிக்க  நகரங்களில் , இங்கே  நிறைய  சிறு  வணிகர்கள்  கடை  அமைத்துள்ளனர் .

 குடும்பங்கள் நடுத்தும்  பிட்சா   உணவங்ககள்,   [ இத்தாலி  நாட்டிலிருந்து  குடிபெயர்ந்து  வந்த சில  குடும்பங்கள்  நடத்தும்  கடைகளும்  அடங்கும் ], ஆப்பிரிக்கா  எதியோப்பிய  நாட்டு  உணவகங்கள் [ நம்ம  ஊரு  தோசை  போன்ற  ஒன்றை  அடிப்பகுதியாகக்  கொண்டு அதன்  மீது  பல  வகைக்  கரி வகைகளைப் பரப்பி இவர்கள் கொடுக்கும்  விருந்து  அலாதி .
அதுவும்  கையில்தான்  சாப்பிட  வேண்டும் வகையில்  இருக்கும்  என்பதில்  எனக்கு  இரட்டிப்பு  மகிழ்ச்சி . அந்தக்  கடையில்  உட்கார்ந்து  சாப்பிட  வைக்கப்  பட்டு  இருக்கும்  மோடா  போன்ற  நாற்காலிகளும்  அந்த அனுபவத்தைக்  கூட்டும் .]

இதில்  பிட்சா  போன்ற உணவிற்கு  நான்  வக்காலத்து வாங்கவில்லை .
இத்தாலியக்  குடும்பங்கள்  தங்கள்   பாரம்பரியத்தை வெளிக்காட்டும்  வகையில்  நடத்தும்  சிறு கடைகளைக்  குறியிட்டேன்  , அவ்வளவே !


 ஐஸ்கிரீம் கடை  ஒன்று  இருக்கிறது .
ஐஸ்கிரீம்  அவ்வளவு  சாப்பிடாத  நான்  , இந்தக்  கடையினில்  சாப்பிட  ஆரம்பித்த  பின்  ,கொஞ்சம்  அடிக்கடி  சாப்பிடத் தொடங்கி விட்டேன் .
வெறுமனே  ஐஸ்கிரீம் கப்பில்  போட்டு  மட்டும்  தராமல் , நன்றாக  அடித்து  , கொஞ்சம்  பிஸ்கட்டும்  , பழங்களும்  கலந்தடித்து ஒரு  கலவையாகத்   தருவர் ..
இது  ஒரு  உதாரணம்   மட்டுமே .
இப்படி  பல   இருக்கிறது .வித்தியாசமாக  யோசிப்பார்கள்

இதை  பாஸ்கின்  ராபின்ஸ்  போன்ற  கடைகளில்  பார்க்க  முடியுமா!

இது  உணவு  சார்ந்த  வணிகம் .

இதைப்  போன்று  கோல்ட் ஜிம்  போன்ற  செயின்  ஆப்  பிட்நெஸ்
 சென்டர்ஸ்களுக்கிடையில் சிறு  பிட்நெஸ்  கிளப்ஸ்  நிறைய  பார்க்கிறேன் .
ஒன்றில்  சேர்ந்து  சில  மாதங்கள்  பயிலவும்  செய்தேன் .
நிறைவான  அனுபவமாக  இருந்தது .

ப்ரேசிலியன்   ஜோஜிட்சு  , யோகா  , கிக் பாக்சிங்  போன்று  பல  வகையான தற்காப்பு   வல்லுனர்கள்  சிறிய  அளவில்  நடத்தும்  பயிற்சிக்கூடங்களும்  அடங்கும்  இதில் .நல்லக் கூட்டமும்  பார்க்கிறேன் .

இதைக்  கலையாக  மற்றும்  சொல்லித்தராமல்   ,உடலைப்  பேணும்  ஒரு
யுகித்யாக  முன்னிறுத்துகின்றனர் . எந்த  வயதினரும்  படிக்கும்  வகையிலும்
சொல்லித்தருகின்றனர் .

ஏன்  நம்ம  ஊரில்  அழிந்து  வரும்   சிலம்பாட்டமும்  , கேரளாவின்  களரிப்பட்டுவும்  பெரு  நகரங்களில்  சொல்லிக் கொடுக்கபடுவதில்லை என்றுத்  தோன்றியது . ஜிம் மில்  மட்டும்  இன்றி  , இது  போன்ற  கலைகளை
 உடல்  நலம்  பேணும்  ஒரு கட்டமைப்பில் கொண்டு  வந்துப் பார்க்கலாமே .
அழிந்து  வரும்  கலைகளும்  மேன்படும் , முக்கியமாக  சலிப்புத்  தட்டாது  , உடம்பும்  மனமும்  சீர்படும் .

இப்படி  எல்லா  தளத்திலும்  சிறு  வணிகம்  பெருகி  நிற்கின்றது இங்கே .

"keep  austin  weird  "என்பது இந்த  நகரத்தின்  தாரக  மந்திரம் .
அதாவது  வித்தியாசமா  கோக்குமாக்கா   இருக்க  வேண்டி சொல்லப்படும்  தாரக   மந்திரம் . அரசே  சிறு  தொழில்  நடத்துவோருக்கு  நிறைய
உதவி  செய்கிறது . கடன்  கொடுக்கும்  வழிகளை எளிமைப் படுத்தியது  இதில்  முதன்மையாகும் .


இங்கே  இப்படி  இருக்க  , நாம்தான்  நம்முடைய  பாரம்பரிய  அண்ணாச்சி  மளிகைக்  கடைகளையும்  , தெருவோர  சிறு  வணிகர்களையும்  விட்டு ,சூப்பர் மார்கெட் போன்ற  கடைகளுக்கு  போய்க்கொண்டு  இருக்கிறோம் .

பொள்ளாச்சி  இளநீர்  விடுத்து  கோக்கிற்கும் , ,   தெருவோரத்தில்  அல்லது  மெரினாவிலோ  சுடச் சுட தீயினில்  வறுத்துத்  தரப்படும் காம்புடன்  கூடிய சோளம்  விற்கும்  கடைகளையும்  விட்டு விட்டு , கூடாரத்தில்  டப்பாவில்  போட்டு தரப்படும் மசாலா  சோளத்தை  நாடுகிறோம் .

இருட்டுக்கடை  அல்வா  என்பது நெல்லை  டவுனின்  ஒரு  அங்கம் .
இப்படி  சில  அங்கங்களின்  குறியீடுதான்  ஒரு  ஊர் . இவைகள்  காலப் போக்கில்  அழிந்துவிடக் கூடாது .

சோளம்  என்பதை  ஒரு  குறியீடாக  மட்டுமே  சொல்கிறேன்!
சிறுதொழில்கள்  பெருகட்டும் ,வாழ்க்கை  இன்னும்  வண்ணமயமாகட்டும் .