Wednesday, January 7, 2015

IT துறையில் 40 வயதிற்கு மேல வேலை இல்லையா ....பகுதி 1

"IT  துறையில்   40 வயதிற்கு மேல  வேலை  இல்லையா "  போன்ற  நீயா  நானா  விவாதங்களும்  , மார்க்கெட்  நன்றாக  இருக்கும்  பொழுதே  நீக்கம்  போன்ற  செய்திகளும்   வந்துக்  கொண்டு  இருக்கும்  தருணத்தில்  , அதைப்  பற்றி கொஞ்சம் அலசலாம்  என்று  நினைத்தேன் .

யாரையும்  தேவை  இல்லாமல்  பயமுறுத்தும்  எண்ணம்  எனக்கு கிடையாது , நானும்  இதே  துறையில்தான்  இருக்கிறேன். எனக்கும்  அனைத்தும் பொருந்தும்  வருமுன்  காப்பதே  சிறந்தது என்ற  எண்ணத்தில்  தான் எழுதுகிறேன்.  அதாவது  " 6 th  sense  for  survival " எப்படி  வளர்த்துக்  கொள்வது  என்பதை  அலச  நினைக்கிறேன் .

இல்லை  வந்தால் எப்படி சமாளிப்பது  என்பதையும்  பார்க்கலாம்  என  நினைத்தேன் . தலைக்கு வந்து  தப்பித்த  சமீபத்திய  அனுபவமும்  , வந்து  மாட்டிக்கொண்ட  அனுபவம்  ஒன்றும்  என்னிடம்  உள்ளது . ஆதலால்  பேச  எனக்கு  அருகதை  உள்ளது !



இந்த  விவாதம்  வந்து  இரண்டு  வாரம் இருக்கும் என நினைக்கிறேன் ...
ஒரு  பெரிய  இந்திய  நிறுவனம்  layoff  குறித்து பேச்சு அப்பொழுதே  மெதுவாக  அடிபட  ஆரம்பித்து  இருந்தது .

" Performance  basis " அதாவது  வேலைத்திறன் குறைந்தோரைத்தான்  நீக்கியதாக  அந்தக்  கம்பெனி   சொல்கிறது .

25000 பேருக்கு  மேலே  கைவைக்கப் போவதாகச்சொல்லி  இருக்கிறார்கள் .
12 வருண்டங்களுக்கு  மேல்  பெரும்பாலும்  இந்தியாவிலும்  , சில வருடங்கள்  வெளிநாட்டிலும்  பல  வகை  இந்திய  , அமெரிக்க  கம்பெனிகளில்  வேலை  பார்த்து  இருக்கின்ற  என்னுடைய  சொந்த  அனுபவங்களை  பகிர்ந்து  கொண்டும்  , வருமுன்   காப்பது  பற்றியும் பேசுவோம்  என  நினைத்தேன் .
ஏன்  layoff  செய்கிறார்கள்  என்ற  கேள்விக்கு  பதில்  பெரிய  சூட்சமம்  ஒன்றும்  இல்லை .  பெருநிறுவன பேராசை  தான் ["Corporate Greed " ]  பெரும்பாலும் .  சில  சமயங்களில்  , கம்பெனி மூழ்குவதிலிருந்து தன்னைக் காப்பாற்றி  கொள்ளவும்  இது  நடந்து  அரங்கேறுகிறது .

IT  துறையில்  வேலை  பார்பவர்கள்  வேலை  நிரந்தரம்  இல்லை  என்கின்ற  நிதர்சனத்தை  அறிந்துக்கொண்டு  தான்  வேலையில்  சேர  வேண்டும் .
இதில்  எந்த  மாற்றுக்   கருத்தும்  இல்லை .

இதைப்பார்க்கும்  முன்  , நம்முடைய   IT  துறையினைப் பற்றி  கொஞ்சம்  பார்ப்போம் . 90 களின்  ஆரம்பத்தில் உலகமயமாக்கலினால் திறந்து  விடப்பட்ட  மடை தான்  இந்தத்  துறை   பெருகக்  காரணம்  என்பதை  நாம் அறிந்ததே .

புதிதாக  வளரும் நிலையில்  இருந்த  துறை  என்பதால்  வேலை  வாய்ப்புகள்  கடல்  போல  விரிந்து  பரந்து  இருந்தது . பதவி  உயர்வுகளும் .
அப்பொழுது  அவ்வளவு  கஷ்டம்கிடையாது.இரண்டு  மூன்று  வருடங்களில்  மேலே  மேலே  போய்க்கொண்டே  இருக்க  வேண்டிதான் . காக்காய்  தண்ணீர்  குடிக்க  கற்களை போட்டுக்கொண்டே  வரும்  பொழுது  நீர்  மேலே  வந்த கதையாக  , நீருடன் சேர்ந்து  அடியில் இருக்கும்  அழுக்கும் , இலைகளும்  மேலே  வரத்தான்  செய்யும் . அதாவது  பெரிதாக  திறமை  இல்லையென்றாலும்  , அந்தச்சூழலில்  உயர்  பதவிகளுக்கு  ஆட்கள்  தேவைப்பட்டனர் . சுமாராக  வேலை  பார்த்தவரும்  வெகு சீக்கிரத்தில்  மேனேஜர்  ஆகிவிட்டனர் .[ சுமாராக  5-6 வருடங்களில் ].
" ITS  ALL  SUPPLY  AND  DEMAND "

போகப் போக   IT  துறை  முதிர்ச்சி  அடையத்  தொடங்கியது .சமீபத்தில் வேலை  நிறுத்தம்  செய்யத்  துணிந்த கம்பெனியில்   மட்டும்  3L  பேருக்கு  மேல்  வேலை  செய்கிறனர் . பெரும்பாலும்   நிறைய
ப்ரோக்ராமர்ஸ்    அல்லது  என்ட்ரி லெவலில் [ entry  level  ] வேலை செய்யும்  ஆட்கள்  தேவைப்படுகின்றனர்  .  ஆளுமைப்  பொறுப்புகள்  குறைவாகத்தான்   இருக்கும் .இதனால்  ஒரு  வேலையினை  ரொம்ப  வருடங்களாக  செய்யும்  நிலை  வந்தது . திறமை  உள்ள  பிடிக்காதவர்கள்  கம்பெனி  விட்டு கிளம்பினர் .

"attrition"  என்று  சொல்லுவர்  இதனை .
இதனை  சமாளிக்க  , சூட்சமமாக  கையாண்டனர்  கம்பெனிகள்  அல்லது  "corporates"

சும்மா  புதுப்  புது  பெயரில்  பதவிகள் [positions ]  தயார்  செய்தனர் .
பூவும் ஒன்றுதான்  புய்ப்பமும்  ஒன்றுதான்....

எங்கேயோ  மேலே  போய்க்கொண்டு  இருக்கிறோம்  என்கின்ற  பிம்பத்தை  கொடுக்கத்தான்  வேறு  என்ன . இது  மாய  வலையா  இல்லை  உண்மையான  வளர்ச்சியா  என்று  பகுத்து  அறிவும்  அரசியலும்  தெரிந்து  இருக்கவேண்டும்  . கொடுக்கப்படும்  பதவி  உயர்வு  என்ன  புதுப்  பணி [roles]  இருக்கிறது என்று பார்க்க  வேண்டும் . செய்த  வேலையினை  சற்று அதிகமான  சம்பளத்திற்கு
 வேறு  ஒரு  பெயரில்  [ முன்பே சொன்ன  பூ  புய்ப்பம் ]  அளவில் தான்  இருந்தால் அது  சரிப்படாது  , எச்சரிக்கை  மணி .

அந்த  நேரத்தில்  நீங்கள்  கிளம்பி  விடுவீர்கள்  என்பதற்காக  உங்கள்  வாயினை  அடைப்பதற்கு  செய்யப்பட்ட  ஒரு  சமரசம் .
இதனை  சிலர்  போராடி  வாங்குவர்  , தனக்குத்  தகுதி   உண்டு , எத்தனை வருடம்  அதே  இடத்தில்  இருப்பேன்  என்று  இருக்கும்  அலுவலகத்தில்  கேட்டுப்   பார்த்து  அலுத்துப்போய் வெளியே  ஒரு  நல்ல வேலையினை [ நல்ல  வேலையா  இல்லை  இக்கரைக்கு  அக்கரை  பச்சையா??]  வாங்கிவிட்டு  ராஜினாமா [resign ]செய்தபின்  நடக்கும்  பாருங்க  ஒரு  பேச்சு  வார்த்தை ....அது  எப்படிச்சொல்ல ..

இத்தனை  நாள்  ஏன்  பதவி  உயர்வு  தரமாட்டேன் என்கிறார்  என்று  கேட்டபொழுது , சும்மா  உப்பு  சப்பு  இல்லாத  காரணம்  ஒன்றைக்கொடுத்தவர்கள்  இப்பொழுது அந்தர்  பல்டி  ஒன்றை  அடிப்பார் .

உப்புசப்பு  இல்லாத  காரணம்  என்ன  , அது  எப்படி  இருக்கும்  என்பதைப்  பார்ப்போம் .
கஸ்டமர் இடத்தில்  சென்று  வேலை  பார்க்கச்  சொல்லுவர் .
நம்முடைய  அலுவலகத்தில்  வேலை  பார்ப்பது  போல  வருமா  அது ???
வெகு  சில  நேரங்களில்  நல்ல  கஸ்டமர்கள்  அமைவர்  , அப்படியே  அமைந்தாலும்  நாம்  விரும்பும்  , ஆளுமை  சார்ந்த  வேலை  கிடைப்பது  கிடையாது . அவர்கள்  என்ன  கொடுப்பரோ அதைத்தான்  எடுத்து  செய்ய  வேண்டும்  , அதுதானே  நிதர்சனம் . இப்படி இருக்கையில்  , இது  நாம்  வேலை  செய்யும்  கம்பெனியின் தேவை  , நம்முடைய  விருப்பம்  அன்று .
நம்மை  அனுப்பி  வைப்பர்  , நன்றாக  வேலை  செய்து  பெயரும்  வாங்குவோம் , ஆனால்  ஆளுமை  சார்ந்த  வேலை  கிடைப்பது  அபூர்வம்  , ஏன்  என்றால்  , கஸ்டமர்  மேனேஜர்கள்தான்   அந்த  மேர்ப்பார்வை வேலையினை செய்வார்கள் .இப்படி  இருக்க  , நம்முடைய  ஆண்டு  அப்ரைசல்[ appraisal ]  அல்லது  பணித்திறன் மதிப்பீடு  வரும் .

வேலையினை  திறம்பட  செய்து  உள்ளேன்  , பதவி  உயர்வு  வேண்டும்  பல  ஆண்டுகளாக  கேட்டுக்கொண்டு  இருக்கிறேன்  , என்னாயிற்று  என்றால்  ,
"நீங்கள்  நன்றாக  வேலை  பார்த்து  உள்ளீர்கள், இல்லை  என்று  சொல்லவில்லை  , ஆனால்  ஆளுமை  பங்கு  வகிக்கவில்லையே , ஆதலால்
பதவி  உயர்வு  கிடையாது"  என்பர் .

இது  முட்டையில்  இருந்து  கோழி  வந்தாதா  , கோழியில்  இருந்து  முட்டை  வந்ததா கதைதான் . அவர்கள்  தேவைக்கு  நம்மை  அனுப்புவர்  , "என்னுடைய  அனுபவத்திற்கேற்ற ஆளுமை  பங்கு  வகிக்கும்  சூழல்  இல்லை  , எனக்கு அங்கே  வேண்டாம்"  என்று  நீங்கள்  கூறினாலும்  ,  வணிகத் தேவை [ business  requirement ]  என்று  சொல்லி  அனுப்பி  வைப்பர்  , ஆனால்  பதவி  உயர்வு  வரும்  பொழுது , அதனைக்  கொடுக்காமல்  இருக்க  அதையே  காரணம்  சொல்லுவர் .எப்படி  இருக்கிறது  நரித்தனம் !

நீங்கள்  தானே  அனுப்பி  வைத்தீர்கள்  என்று  எல்லாம்  கேட்டு  ஒன்றும்  பயன்  இல்லை .

" இங்க  சந்த்ருன்னு   ஒரு  மானஸ்தன்  இருந்தானே " ன்னு  நக்கல்  வேணும்னா  அடித்துவிட்டு  வரலாம்  , அதுவும்  மனதில்  தான்  அந்தக்  கம்பெனியில்  தொடருவதாக  இருந்தால்  சொல்கிறேன் .

இதுவாவது  பரவாயில்லை  , நமது அனுபவம்  கூடக்கூட , பதவி  உயர்வும்  அதற்குத்தகுந்த வேலையும்  செய்யவில்லையென்றால்   , அதையே  காரணம்  காட்டி  வெளியேயும்  போகச்  சொல்லுவர் .
இந்த  வேலை  செய்ய  ஒரு  சில  வருடங்கள்  அனுபவம்  உள்ள  ஒருவர்  போதுமே  , நீங்கள்  எதற்கு  என்றுதான்  அவர்கள்  நினைப்பார்கள் .
வேலைநீக்கம்  [layoff ]  நடப்பதற்கு  இது  ஒரு  சூட்சமமான  காரணம்.


இப்போ  மேலே  அடித்த  அந்தர்  பல்டியினையும் [ ராஜினாமா  செய்தப்  பின் ]  பார்ப்போம் .

நீங்கள்  தான்  இந்த  டீமின்  உயிர்நாடி  என்பதைப் போல் இருக்கும்  பேச்சு.
இதைக் கொடுப்பேன்  அதைக்  கொடுப்பேன்  என்று  சொல்லி  சிலரை  உட்காரவும்  வைத்து  விடுவர் .ஆனால்   உள்ளே  உங்களுக்கு  எதிராக ஒரு  கத்தி  தீட்டப்பட்டுக்கொண்டு  இருக்கும்  ....வெளியே  சிரித்துக்கொண்டு
உள்ளே  அவர்கள்  உங்கள்  HR  record  இல் உங்களுக்கு ஒரு  பெரிய  கரும்புள்ளி குத்தி வைத்து  இருப்பர் . நீங்கள்  " star  performer " அதாவது  உங்களுக்கு  தெரிந்த  ஒன்று  உங்கள்  மேனேஜருக்கு   கூட  சரியாக  தெரிந்து  இருக்காமல்  , அல்லது  உங்கள்  மொத்த  டீமில்  யாருமே  அதனை  சரியாய்  செய்து  முடிப்பார்கள்  என்ற  நம்பிக்கை  மேல்  உள்ளவர்களுக்கு  வராத  வரை  நீங்கள்  தப்பிப்பீர்கள்,  இது  சிரமம்  தான்! . எப்படியோ  உங்களிடம்,அதை  "knowledge  transfer " என்றப்பெயரில்  அதனை  சிலருக்கு  பகிர்ந்து கொடுக்க  வைத்து  விடுவர் .  சிலர்  இதையும்  தாண்டி  ஒரு  "critical  skillset" தன்  பெயரில்  வைத்துக்கொள்வர் . இது  ராஜ  தந்திரம் .
இது  சரியா  தவறா  என்ற  தார்மீக  விவாதத்திற்குள் போவது  இந்தக்  கட்டுரையின்  நோக்கம்  அல்ல.

அப்படி  ஒரு  critcal  skillset   இல்லாதவர்கள்  தான்  90% மேல்  இருப்பார்கள் . அப்பொழுது  அவர்களை  தூக்குவதில்  எந்தப்  ப்ரெச்சனையும்   இருக்காது  கம்பெனிகளுக்கு .

மேலும் , உங்கள்  சம்பளமும்   அனுபவமும்   ஒரு  அளவிற்கு  சம  நிலையில்  இருக்க  வேண்டும் . வெளியில்  இருந்து  வரும்  பொழுது ஒரு  20-30% சம்பள  உயர்வு [hike ] வாங்கி  வருபவர் இந்த  சமன்பாட்டில்  இருக்க  மாட்டார்கள்  பெரும்பாலும் . அதன்பிறகு நீடித்து  தாக்குப் பிடிக்க அதற்கு  தகுதியாக  தன்னை  வளர்த்துக்கொள்ள  வேண்டும் , இல்லையேல்  கத்திதான்

இந்தச்  சூழலில்  யாருடைய  சம்பளம்  குறையாக  உள்ளதோ  அவர்களை  விடுத்து  அதிக  சம்பளம்  வாங்குபவர்களையும்  , முன்பு  சொல்ல  resign  செய்து  மிரட்டி  உயர்வு   வாங்கியவர்களையும்  , மேலாளருக்கு  பிடிக்காதவர்களையும்  , கை  வைப்பார்கள் .

"ரொம்ப  ஆடினாய்  அல்லவா  ,இருக்குடி  ஆப்பு  உனக்கு"   என்று  என்றைக்கோ  செய்ப்பட்ட  ஆப்புதான்  இது . இதனை  என்னுடைய  பழைய  கம்பெனி  VP  ஒரு  முறை சிரித்துக்கொண்டே கம்பெனி  மீட்டிங்கில்  வெளிப்படையாக  சொன்னார் .

"யாரை  எப்பொழுது  கவனிக்க  வேண்டும்  என்று  எங்களுக்குத்  தெரியும் " என்று . நம்பியாரின்  வசனம்  போலத்தான்  இருந்தது  அது.


அடுத்தக்  கட்ட  பணிநீக்க   காரணத்தைப்  பார்ப்போம் .

1) ஒரு பெரிய  கம்பெனி  மற்றொரு  கம்பெனியினை  கையகப்படுத்தும் [ takeover ] சூழலில்  , தேவை  இல்லாத  ஆட்களை  குறைக்கும்  சூழல்  பெரும்பாலும்  உண்டு . ஒரு  குறிப்பிட்ட  துறை  சார்ந்த  வணிகத்திற்கு  கையகப்படுத்தி  இருப்பர்  , அதனால்  தேவை  இல்லாத  துறையின்   ஆட்களை  போகச்  சொல்லுவர்  , அல்லது  தேவைக்கு  அதிகமான  ஆட்கள்  ஒரே  வேலையினைச்  செய்ய  இருந்தாலும்  [ கையகப்படுத்தப்பட்ட  பின்னர் ]

வெகு  சில  கம்பெனிகள்  இதனை  ஆகாமல் பார்த்துக்  கொள்ள  முயல்வர் , பெரும்பாலும்  இந்தச்  சூழலில்  "layoff"  நடந்தே  தீரும் .

2) கம்பெனிகள்  ஸ்டாக்  மார்க்கட்டில் [ stock  market ] லிஸ்ட்  ஆகி  இருந்தால்  இன்னும்  கஷ்டம்தான் . ஒவ்வொரு  காலாண்டும்   அவர்கள்  முன்னேற்றம்  காட்ட  முயல்வர்  . அப்பொழுதுதான்  பங்கு  மதிப்பு கூடும் .
எப்படியாவது  போன  வருடத்தினைக் காட்டிலும்  அதிக  லாபம்  காட்ட  வேண்டும்  என்கின்ற  வெறியில்  , என்ன  வேண்டுமானாலும்  செய்யத்  தயாராக  இருப்பார்கள்  .

நான்  முன்பு  வேலைபார்த்த  ஒரு கம்பெனியில்   நடந்த  ஒரு  உதாரணம்  சொல்கிறேன் . [ இதைப்  போன்ற  வேறு  கதைகளும்  எனக்குத்  தெரியும் ].
அப்பொழுதுதான்  வேறு கம்பெனியில்  இருந்து துணைத்  தலைவர் [ VP  ]
பதவிக்கு  ஒருவர்  வந்து  இருந்தார்  ஒருவர் . வந்த  சில மாதங்கள்  ப்ராஜக்ட்ஸ்  இன்றி  மந்தமாக  இருந்தது  எங்கள்  அந்த  கம்பெனி .
சரி , ப்ராஜக்ட்ஸ்  அதிகம் செய்து  , வணிகம்  அதிகமாக்கி   , ஸ்டாக்
  மார்க்கெட்டில் பங்கு  உயர்த்துவது  நல்ல  நேர்  வழி , இல்லை,  இருக்கும்  ஊழியர்களை விரட்டி விட்டு  . அந்தச்  சம்பளக்  குறைப்பின்  மூலமாக  நட்டம்  இல்லையென்று  காண்பித்தல்  கொடூர  வழி  .  இந்தக் VP  தேர்ந்தெடுத்தது  இரண்டாம்  பாதையைத்தான் .
தான் வந்த  பின் லாபம்  இல்லையென்று  மேலதிகாரம்  நினைத்துவிடக் கூடாதென்று  எடுத்த  முடிவு  இது .

" இப்போதைக்கு  இதைச்  செய்வோம்  , பின்பு  ப்ராஜக்ட்ஸ்  வந்த  பின்  , தேவைப்  பட்டால்  ஆட்கள்  எடுத்துக்  கொள்வோம்  , WE  WILL CROSS THE BRIDGE WHEN IT COMES"   என்று  பேசியதாக  எனக்கு  வந்தது  செய்தி .


இப்படி  போகின்றது  IT  வாழ்க்கை .
" performance based industry unlike government sector " என்பதுதான்   இதன் அடிப்படை அணுகுமுறை .
ஒரு  அளவிற்கு  சம்பளத்தினை  குறைத்து  அனைவருக்கும்  வேலையினைக்  கொடுக்கலாமே? என்று  யோசிக்கிறோம் . இதனைச்  சில  கம்பெனிகள்   செய்கின்றனர் . அனால்  நல்லத்  தகுதியானவர்கள்  அதை  விட  அதிகமான  சம்பளத்திற்கு  வெளியே  சென்று  விடுகின்றனர் .
ஆதலால்  கம்பெனிகள்  நல்ல  சம்பளம்  கொடுக்கவேண்டி  தள்ளப்படுகின்றனர் .

நாற்பது  வயது  தொடும்  பொழுது  திட்டத்திட்ட  பதினெட்டில்  இருந்து  இருபது  ஆண்டு  கால  அனுபவம்  வந்து  விடுகின்றது .
மேற்கூறிய  கண்ணோட்டத்தில்  கம்பெனிகள்    யோசிக்கும் பொழுது  , அவ்வளவு  அனுபவம்  வாய்ந்தவர்களை  வைத்து  என்ன  வேலை  வாங்க  வேண்டும்  என்று  யோசிப்பார்கள் . குறைந்த  ஊதியம்  வைத்து  அந்த வேலையினைச்  செய்ய  முடியுமாவென்று  பார்ப்பார்கள் .
அப்பொழுது  கத்தி  அவர்களை  நோக்கி  எறியப்படும்  சாத்தியக்கூறு
அதிகம்தான் . எல்லோரையும்  அனுப்பிவிட  முடியாதுதானே  , எப்படி  நம்மைக்  காத்துக்  கொள்ள என்று  முதலில்  இருந்தே  திட்டமிடல் வேண்டும் .
சரி  இதனை  எப்படி  ஒரு  அளவிற்கு  சமாளிப்பது  என்பதைப்  பாப்போம் !
"என்னையும்  அரசியல்  வாதி  ஆக்கி விட்டீங்களா  பாவிகளா  " என்று  முதல்வனில்  அர்ஜுன்  குமுறுவது போலத்தான்  திட்டத்திட்ட  அதுவும்!

vertical domain knowledge , horizontal skillset , presales போன்ற  சிலவற்றையும்  பார்ப்போம் .

 IT  துறையில்  இருப்பவர்களுக்கு இந்தக்  கட்டுரையில்  இருப்பவை  முன்பே  தெரிந்தது  பெரும்பாலும் .பொதுவாக  எளிமைப்  படித்தி  எழுதியுள்ளேன்  அவ்வளவுதான்  .மேலும் நண்பர்களின்  விவாதங்களும்
கருத்துக்களும்  அனுபவங்களும்  பகிரும்  ஒரு  மேடையாக  இருக்கும்  என  நினைத்தேன் .

பார்ப்போம் .


2 comments:

  1. அழகாகத் தொகுத்து விவரித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ! இதில் தானே ஜீவனம்...வாழ்வியல் சார்ந்து எழுதுவோம் என்று நினைத்தேன் .

      Delete