Friday, October 31, 2014

simple pleasures of life

நினைவில் நிற்பவை :

நண்பர்கள் உறவினர்கள் வந்து கிளம்பும் பொழுது , மணி கணக்கில் பேசிவிட்டு கிளம்ப  முற்படும் பொழுது , வாசல்  வரை வழி அனுப்ப வந்தபின் , ஏதோ ஒரு அர்த்தமற்ற அல்லது சம்பந்தம் இல்லாத சம்பவத்தை பற்றி பேசத்தொடங்கி அது அரை மணி நேரமோ அதற்கு மேலோ  தொடர்ந்து , பின்பு அதுதான் அன்றைய சந்திப்பின் சிறப்பம்சமாக  அமைவதுண்டு பெரும்பாலான சமயங்களில். இப்பொழுது நினைத்தாலும் பல சந்திப்புகள்  இன்னும் நினைவில்  இருக்க  இதுவே காரணம்.

அப்பாவும் மகேந்திரன் மாமாவும் மகிழம்பூ வீட்டு வாசலில் இதை பெரும்பாலும் செய்வதுண்டு. சைக்கிள் பெடலில் கால் வைத்த  வாறே மகேந்திரன் மாமா பேசிக்கொண்டே இருப்பார்கள். சிறுவனாக  அந்த அரட்டைகளை நானும் கேட்டு புரிந்தும் புரியாமல் சிரித்து   இருக்கிறேன்.
அவர்களது சத்தமான சிரிப்புதான்  அதை எனக்கு இன்றும் நினைக்க வைக்க காரணம்.

வெளியே வந்த பின் , வீட்டினுள்  இருந்தே கை காட்டிட்டு கதவை மூடிக்கொண்டு  , அடுத்த சேனலை மாற்றப்போகும்  இந்த காலத்து அடுக்கு மாடி வாழ்க்கைக்கு இந்த சுகம் எங்கே புரியப்போகிறது!

Thursday, October 30, 2014

Gravity /புவியீர்ப்பு விதி.

வெகு சில இயக்குனர்கள்,  ஜெயமோகன்  ,  எஸ் ரா ,சுஜாதா             போன்றோரின்  கதை சார்ந்து  மற்றும் வசனத்துடன் படம் எடுக்கிறார்கள் அல்லது இலக்கிய  ரசனை உள்ளவர்கள் என்றும் பெரும்பாலோர் மசாலா இயக்குனர்கள் என ஒரு பேச்சு  உள்ளது
கமல் சார்  கூட ஒரு மேடையில் இது பற்றி பேசினார். தமிழ் படங்களுக்கும் ,
இலக்கியத்திற்கும் பாலம் இன்னும் பலப்பட  வேண்டும் என்ற கோணத்தில் இருந்தது அவர் பேச்சு.

இதனை நான்  முழுவதுமாக  ஏற்க முடியவில்லை!

இவர்களின் inspiration !  ஆங்கில, சீன  படங்களுடன் மட்டும் நின்று விடுவதில்லை.அதையும் தாண்டி சங்க இலக்கியம்  வரை சென்று தான் வந்து இருக்கிறார்கள்.

ஒரு அம்பானது , பன்றி , மான் , புலி [ சரியான  வரிசை மற்றும் விலங்குகளின் பெயர்  நியாபகம் இல்லை!]  இப்படி பல மிருகங்களை அடித்து தைத்து , முடிவாக ஒரு மரத்தின் மீது போய்
குத்தி நிப்பதாக ஒரு சங்க இலக்கிய பாடல் உண்டு. நம்ம பள்ளியில் தமிழ் பாடத்தில் படித்து இருப்போம்.தலைவனின் வீரத்தை பறை சாற்றும் பாடல் இது என புரிந்து இருக்கும். இயற்பியல் விதிக்கு அப்பாற்பட்டு  உள்ளதே என்று யோசித்ததுண்டு. இருந்தாலும்  அதன் அழகை ரசித்ததுண்டு, ஏனோ  , ஒரு வேளை  அவ்வளவு பலசாலியோ எனறு கூட ஒரு பக்கம் நம்பியதும் உணடு .
நிற்க.

நமது கதாநாயகர்கள்  , அம்பே இல்லாமல்  , வெறும் கையில்லே  பல மனித மிருகங்களை புவிஈர்ப்பு சக்தியை மதிக்காமல் தூக்கி  வீசுகிறார்களே.
இது சங்க இலக்கியத்தில்  இருந்து தான் " inspire " ஆகி எடுக்கப்பட்டது என்று தான் நினைக்கிறேன் . இனிமேல்  குறை கூற  வேண்டாம் யாரும்!

நியூட்டன் தன்னுடைய இயற்பியல் விதியனை திருத்தி  அமைப்பார்  ஒரு தமிழ் படம் பார்த்தார் என்றால்.

பின்குறிப்பு : இந்த பறக்கும் காட்சிகள் நாளுக்கு நாள் அதிகமாக ஆகிக்கொண்டே  போகிறது . ஒரு அளவிற்கு மேல்  என்னாலும்  தாங்க  முடியவில்லை!

Sunday, October 26, 2014

சூடான விமர்சனம்

சூடான விமர்சனம்:

2009 இல் என் சின்ன மாமா பெங்களுரு வந்து இருந்தார்.
நான் நிறைய படங்கள் பார்ப்பேன்.ஒவ்வொன்றைப்பற்றியும் விமர்சனம் மனதில் ஓடும் . நண்பர்கள் சந்திப்பில் அதை பற்றி பேசுவது உண்டு.

செந்தில் , பாலு இருவருடன் இது பற்றி தொலை பேசி வாக்குவாதங்களும் நடக்கும்.

சரி சின்ன மாமா வருகை பற்றி தொடருவோம்.

அவர்கள்  நிறைய படம் பார்க்கும் பழக்கம் இல்லாதவர்.
பெங்களூருவில்  பொழுதைக்கழிக்க  , "விண்ணைத்தாண்டி வருவாயா " சென்றோம் . நிறைய பேசாத மாமாவிடம் ,படத்தின் இடைவேளையில் , "என்ன மாமா படம் பிடித்ததா ?" என்று கேட்டேன்.

கேட்டு முடிக்கும்முன் பதில் வந்தது, "அவள் விண்ணைத்தாண்டி எங்கே , வீட்டை தாண்டி கூட வர மாட்டாள் போல இருக்கே "என்று!

என் வாழ்நாளில் நான் கேட்ட சிறப்பான ஒரு வரி "ஹைக்கூ" விமர்சனம் இதுதான்!

Saturday, October 25, 2014

சொர்கமே என்றாலும்:

சொர்கமே என்றாலும்:

இதை  ரொம்ப நாட்களாக எழுத  வேண்டும் என்று நினைத்து இருந்தேன்......

சில வருடங்களுக்கு  முன்னர் அத்தை மாமா இங்கு வந்து இருந்தார்கள்..ஒரு காலணி கடைக்குச்சென்று இருந்தோம்.இது டல்லஸ் பக்கத்தில் ஒரு ஔட்லெட் மால்.எல்லா கடைகளிலும்  உள்ள சேல்ஸ் ரேப் இங்கேயும் இருந்தார்கள்.ஆனால் துடிப்பான இளைஞன் இல்லை.சற்று நெற்றி சுருங்கி போய் , கொஞ்சம் தள்ளாடிப்போன , ஆனால் கம்பீரம்  குறையாத குறைந்தது 70 வயது  இருக்கக்கூடிய பெரியவர். செருப்பு  மாதிரி தேர்வு செய்த  பின் , "என்ன அளவு  வேண்டும்? , எடுத்துத்தருகிறேன் "என்றார்.எங்களுக்கு  சங்கடமாக  இருந்தது.அத்தனை வயதில்  இதை அவரிடம் செய்விப்பதற்கு.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை , "      I am just doing this for insurance " என்று சொன்னார். இந்த  விஷயம் எனக்கு நிறைய கேள்விகளை எழுப்பியது.பிள்ளைகள் பெற்றோர்களை பார்த்துக்கொள்ளுதல் இங்கே எதிர் பார்க்க முடியாது என்ற பக்கத்தை  நான் அறிந்ததே.அதை விடுத்து  ஒரு பெரிய கேள்வி , வாழ் நாள் முழுதும் நல்ல வேலையில்  இருந்ததாக சொன்னார் ,"medicare" பாலிசி  வேறு உண்டு .[அமெரிக்க அரசாங்கம் கொடுப்பது]. இதையும் மீறி இவர் ஏன்  வேலை செய்ய வேண்டும் என்று!

வீடு வந்து இதை பற்றி கொஞ்சம் படிக்கத்துவங்கினேன்.அப்பொழுது தான் சில விஷயங்கள் எனக்கு தெரிய வந்தது.இதை சொல்வதற்கு முன்பு சில உதாரணங்கள்   பார்ப்போம்.
எங்கள் வீட்டில் குட்டி பொண்ணு பொறந்த பொழுது , 3 நாட்கள் இருந்து இருப்போம்  மகப்பேறு  மருத்துவமனையில் .வசதிகள் ரொம்ப சிறப்பாக இருப்பினும் , வந்த பில் தலை சுத்த  வைக்கத்தான் செய்தது.

 32000 டாலர்ஸ்.நம்ம ஊரு பணத்தில்  , அன்றைய தேதிக்கு 16 லட்சம்  ரூபாய்கள். 75000 வரை நான் கட்ட வேண்டியதாகவும் , மற்றதை என் கம்பெனி மூலம் நான் பெற்ற இன்சூரன்ஸ் பார்த்துக்கொண்டது. இதில் ஒரு சின்ன உள் குத்து உள்ளது .

 அந்த இன்சூரன்ஸ்க்கு தவணைத் தொகை மாதம் நான் 25000 வரை கட்டி கொண்டு இருந்தேன்.என் கம்பெனி 75000 வரை கட்டி கொண்டு இருந்தது.  இதை சொல்வதற்கு காரணம் வருடத்திற்கு  தவணைத் தொகை 12 லட்சம் வரை ஆகும் என்பதை நினைவுப்படுத்த.இது அதிகம்தான்.

 மணிக்கு 8-10 டாலர்ஸ் வாங்கி கொண்டு சாதாரண மக்கள் இத்தனை விலை கொடுத்து  நல்ல இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது கடினம். சரியான பாலிசி இல்லை என்றால்  கையில் இருந்து  நிறைய கட்ட வேண்டி இருக்கும் . சரி , இது  அடிக்கடி நடக்கும் நிலை அல்ல , வேற ஒரு உதாரணம் பாப்போம்.

பின்னொருநாள் அலுவலகத்தில் எங்கள் டீமில் பேசிக்கொண்டு இருந்தோம் . ஒருவர் பெரிய வீடு வைத்து இருந்தார் , சுமார் 6 பெட்ரூம் வீடு என்று சொன்னார். பசங்க பெருசாகி வெளியூர் சென்று விட்டதாகவும் ,இன்னும் சில வருடத்தில் வேலையில் இருந்து விடுப்பு எடுக்கும் சூழ்நிலையில் ,அப்பொழுது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப ,  தற்போது உள்ள வீட்டை விற்று விட்டு கொஞ்சம் ஊரை விட்டு  வெளியே சென்று தங்கிக்கொள்வேன் என்று சொன்னார்..தற்போதைய  வாழ்கை தரத்தை தொடருதல் முடியாத காரியம் என்றார்.அவரக்கு 50 வயதிற்கு மேல் , இத்தனை வருடம் நல்ல அலுவலகத்தில் வேலை செய்து உள்ளார் அமெரிக்க குடிமகன் , இவரே இப்படி சொல்கிறாரே என யோசித்தேன்.

கொஞ்சம் என்னுடைய  கணக்கியல் மூளைய கசிக்கினேன் .
 வட்டி விகிதம் நினைவிற்கு வந்தது . நம்ம ஊரில்  பென்ஷன் வரும் வேலையாக இருந்தாலும் , நம்முடைய PF அல்லது சேமிப்புக்கணக்கின் வட்டியை நம்பித்தான் பெரும்பாலான மக்களின்  ஓய்வுக்காலம் உள்ளது. நமக்கு 9-10 % வட்டி கிடைப்பதால்  , நம்  சேமிப்பு முதலை  முடிந்த வரை  தொடாமல் , வட்டியை நம்பி மாத வாழ்கை பெரும்பாலும் ஓடும் என நம்பலாம். தேவைக்கு ஏற்ப , மருத்துவ செலவோ அல்லது இதர செலவோ வந்தால் , முதலை உபயோகிப்போம்.

0.1% வட்டியுடன் நாம் வட்டியினை நம்பி வாழ இயலாது. சில வருடங்களில் நம்முடைய சேமிப்பு காணாமல் போகும். இதில் ,  நான்  மேற் கூறிய  மருத்துவ செலவு வந்தால் ஒரு தடவையில் கூட  மொத்த  சேமிப்பும் கரைய வாய்ப்பு அதிகம் உள்ளது [ சரியான காப்பீடு இல்லாத பட்சத்தில்].

" medicare " மற்றும் அரசாங்க பென்ஷன் இங்கு இருந்தாலும்   , வாழ் நாள் முழுவதும் அரசுக்கு  எவ்வளவு  வரி கட்டி இருக்கோமோ அதை பொருத்து தான் அது அமையும்.சாமானியனுக்கு அது மிக குறைச்சலாகவே வரும். இது நல்ல சம்பளம் வாங்குபவருக்கும் பொருந்தும்.இப்பொழுது என் அலுவலக நண்பர் வீட்டை விற்று கொஞ்சம் வாழ்கை தரத்தை குறைத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று சொன்னது சரியென்று பட்டது.  கட்டாயம் இல்லை வீட்டை விற்பது, ஆனால் அவர் சொன்னது தேவை பட்டால் நான் தயாராக இருக்க வேண்டும் என்பது,வாழ்நாள் பொருத்து.

இதில் இருந்து புலப்படுவது என்னவென்றால் ஒய்வு காலம்  பற்றி  கட்டாயம்  மிதமான அல்லது குறைந்த  வருமானம் வாங்கும் ஒருவர்  கவலைப்பட்டுத்தான்  ஆக வேண்டும்.நம்மை போன்ற சமூக கட்டமைப்பும் இங்கு இல்லை. அவர் அவர் நிதி நிலைமையை  அவர் அவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பா மகன் , அம்மா மகனாக இருந்தாலும்.

விதிவிலக்கு  இருக்கலாம்.

 2008-2009 இல் நடந்த "sub prime crisis" நேரத்தில் அமெரிக்காவில் பலர் வீட்டை விற்பதற்கு இந்த சமுதாய குடும்ப கட்டமைப்பு நிலையும் ஒரு முக்கிய காரணம் என்பது என் கருத்து .ஏன் என்றால் , இந்த மாதிரி   ஒரு சூழலில்  , நம்ம ஊரில் அப்பா அல்லது அண்ணனோ குடும்பத்தில் ஒருத்தர்
தோள் கொடுத்து நம்மைதாங்கி இருப்பர் .வேலை இல்லாமல் போனாலும் நமக்காக்க இவர்கள் இருந்தனர்.இதன் காரணமாகவே 2008 இல் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவை நாம் கடந்து வந்தோம்  பெரிய பாதிப்பு இல்லாமல்.

இப்பொழுது முதலில் கூறிய  70 வயது பெரியவரின்  உரையாடலுக்கு வருவோம்..நம்ம ஊரில் , ஒரு வேளை  உடம்பு சரி இல்லாமல் போனாலும், அரசு மருத்துவமனை என்று ஒன்று உள்ளது.வசதி கம்மியாக இருப்பினும் , சாமானியனுக்கு வேண்டிய அடிப்படை மருத்துவ வசதி இங்கு கிடக்கும்.
முக்கியமாக அவசர உதவி சிகிச்சை , நம்ம  அரசு பொது மருத்துவமனையில் கிடைக்கும்.சிறிய உதாரணம்  , எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வயதான காலத்தில்  பெரும்பாலும் வருவதால் அதற்கு செலவு அதிகம் இங்கு. நம்ம ஸ்டான்லியில் கம்மி விலையில் நம்ம மக்கள் மருத்துவம் பெறுகின்றனர் .

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் , இங்கு அரசு மருத்துவனை என்று ஒன்று கிடையாது.ஒரு இடத்தில அவர் வேலை பார்ப்பதால் , அந்த  நிறுவனத்தின் காப்பீடு கிடைப்பதால் ,அந்த பெரியவர்  தொடர்ந்து வேலை பார்க்கும் காரணம் விளங்கியது எனக்கு.இதுவே பல முதியவர்கள் இங்கு வேலை பார்பதற்கு காரணம் என உணர்ந்தேன் . இதை பற்றி என் குஜராதீய நண்பர் ஒருவரிடமும் பேசினேன்.அவர் தன்னுடைய இருபதுகளில் , குஜராத்தில் ஏற்பட்ட வறட்சி மற்றும் வேலை இல்லாத திண்டாட்டததின் பொழுது , உறவினர் உதவியுடன் அமெரிக்கா குடியேறியவர் . நான் சொல்லியதை ஆமோதித்தவராக , தன உறவினர்  சிலர் , வயசு காலத்தில் நாடு திரும்பியதாகச்சொனார்.

வயதானவர்களின் வாழ்கைத்தரம் , நடுத்தர , கீழ்தட்டு மக்களுக்கு எங்கு சிறந்தது என்ற கேள்விக்கு பதில் உங்களிடம் விடுகிறேன்.

எதிர் வாதம் அல்லது ,இங்கு ஏன் மருத்துவ  செலவு அதிகம் உள்ளது என்பதையும் பார்த்து விடுவோம்.
என் நண்பர் வட்டமே இதற்கும் உதவினர் ஒரு வகையில்!
என் பழைய  கம்பெனியின் மற்றொரு ப்ராஜெக்ட் மேனேஜர்  ஒருவரை ஒரு விடுமுறை நாளில் சந்திதித்தேன் .
என் மண்டையில் எவ்ளோ குடைச்சல் இருந்தால் இதை பற்றி அவரிடமும் பேசி இருப்பேன் பாருங்க! காரணம் உண்டு , ஏன் என்றால் , அவரின் மனைவி  இங்கு ஒரு மருத்துவர்!  சிக்கிட்டாண்டா  ஒருத்தன் என
 வறுத்து எடுத்தேன் அவரை.

ஒரு புன்முறுவலுடன்  இரண்டு சீரிய கணைகளை   விடையாக வீசினார்..

1) இங்கு மருத்துவ படிப்பு செலவு ரொம்ப அதிகம். என் மனைவி படிக்க 70-80 லட்சம் ஆகி இருக்கும் .
மற்றும் படிக்கும் காலமும் ,"house surgency " காலமும்  ரொம்ப அதிகம்.

2) இதை  விட முக்கியாமான ஒன்று  ,இங்கு உள்ள மருத்துவர்களும் இன்சூரன்ஸ் எடுத்தாக வேண்டும் என்பதே.இதன் தவணை ரொம்ப அதிகம்.
ஒரு வேலை நோயாளிக்கு வயித்தியம் தப்பி , அவருக்கு எதாவது ஒன்று ஆகியோ அல்லாத சரியான முறையில் வயித்தியம் பார்க்கப் படவில்லை  என்று சந்தேகித்து யாரேனும் வழக்கு தொடர்ந்தால் , இந்த காப்பீடு அதற்கு உதவும் என்றார்.

இரண்டும் மறுக்க முடியாத வாதம்.
கடைசியில் ஒரு பெரிய குத்து வைத்தார். " failure rate "  அல்லது   வயித்தியம் பயன் அளிக்காமல்  இறக்கும் விகிதம் இங்கு மிக குறைவு.
இதை  தார்மீக நோக்கிலும் பார்த்துக்கொள்ளுங்கள் அல்லது மருத்துவரின் பயம் [ வழக்கின் காரணமாக ] கட்டப்படும் தண்டம் என்று  வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

ஒவ்வொரு உயிரின் மதிப்பும் இங்கு அதிகம் என்றார்!
எனக்கு  இது சப்பென்று அறைந்தது போன்று தான் இருந்தது . இதை நான் ஏன் சொல்கிறேன் என்று உங்களுக்கு புரியும் என்று விட்டுவிடுகிறேன்.

இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டாலும், நம்ம ஊரில் மருத்துவர்களின் திறன் [பெரும்பாலான] சிறந்ததே. இங்கு உள்ள நிலையை பார்க்கும் பொழுது , நாம் கட்டும் மருத்துவ செலவுத்தொகை  குறை தான்.
பெருமை கொள்வோம்.

இவர் சொன்ன கண்ணோட்டம் காசு உள்ளவர்களுக்கு , வருமான கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் நிலைபற்றி  தான் நான் பேசுகிறேன் .

நம்ம ஊரின் சுகதாரமின்மை , ஊழல் மற்றும் வாகன நெரிசல் பற்றி இங்குள்ள  தரத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்  நிலைதனை கேள்வி பட்டுஅல்லது படித்து இருப்போம், நானே கூட நினைத்தது உண்டு. இது மறுப்பதற்கு அல்ல.மாற்றம் வேண்டும் தான்.

ஆனால்  , மேலே சொன்ன சம்பவத்தின்  பிறகு , நம்ம நாட்டில் இது போன்ற ஒரு முக்கியாமான வசதி உள்ளதே , இதை ஏன் யாரும் பேசவில்லை என்று தோன்றியது.அதான் காரணமாகவே இந்த பதிவு.

நல்லதும் பேசுவோம்!

இதை எல்லாம்  தாண்டி நாம இருக்கோம் நம்ம பெற்றவர்களுக்கு!