Wednesday, February 18, 2015

மனம் ஏன் பழசை நினைத்து ஏங்குகிறது .????

இளையராஜா  பாடல்கள்  பற்றி  சமீபத்திய  ஒரு  பேட்டியில்  இயக்குனர்  விக்ரமன் சொன்னார் , பழைய  பாடல்களை   கேட்கும்  பொழுது  அழத்  தொடங்கி  விடுவேன்   என்று .

கவலையற்ற  தினங்களை  நியாபகப்படுத்தும்  ஒரு  அனுபவத்தை  அதைக்  கொடுப்பதனால்  என்றும்  சொன்னார் . எவ்வளவு  ஆழமான  நிதர்சனமான
கருத்து .

என் மனதில்  இந்த  சின்னப்  பொறி  நிறைய  எண்ணத்  துகள்களை
கலைத்து  ஒரு  புரட்டு புரட்டிப்போட்டது .

மனம் ஏன்  பழசை  நினைத்து  ஏங்குகிறது ???

காலமும்  , காலம்  கொடுத்த  சில பல கசப்பான  இனிப்பான நினைப்புகள்
ஆழ்  மனதில்  படிய  வைத்து  போன  பிம்பங்களை  தூசி  தட்டி  எடுக்கும்  ஒரு  ஊடகம் தான்  பாடல்கள்  போல . இது  போன்று  வேறு  ஊடகங்களும்  இருக்கலாம் , ஒவ்வொருவர்  ரசனை மற்றும்  அனுபவம்   சார்ந்து .

இந்த நொடியில்   இல்லாமல்  , கண்களை  மூடியோ  அல்லது  நினைப்பிலோ
"time  travel"  செய்யும்  ஒரு  வழிதானே  அந்த  பழைய  நினைவுகள்  கொடுப்பது .

நம்மிடம்  இப்பொழுது  இல்லாமல்  போன  மனிதர்களையோ  , அல்லது  தொலைத்த  மீட்டுக்கொள்ள  முடியாத  சந்தோஷங்களை  தேடி  அலையும்  ஒரு  தேடல்  என்றும்  சொல்லலாம் .

இன்னும்  சொன்னப்போனால்  கால  வெள்ளத்தில்  தொலைந்த  நம்மை  மறுபடியும் , அதாவது  பழைய  நம்மை  ஒரு  முறை  நினைவால்  ஸ்பரிசித்து  வரும்  ஒரு  அனுபவமாகவும்  அது  இருக்கும்  பல  சமயங்களில் .

என்னுடைய  சில  முந்தய  வலைப்பூக்களில் என்னுடைய  பால்ய  தினங்களைப்  பற்றி  அடிக்கடி  குறிப்பிட்டு  இருப்பேன் .
அதை  நான்  அடிக்கடி  குறிப்பிட  வேண்டும்  என்று  மெனக்கிட்டு  சொல்லவில்லை . ஆனால்  அசை  போட  ஆனந்தமாய்  இருந்ததால்  சொல்லி  இருப்பேன்  என   பிற்பாடு  ஒரு  சந்தர்ப்பத்தில்  உணர்ந்தேன் .


அக்காவிடம்  பேசிய  பொழுது   ". நீ  சமீப  காலங்களாக அடிக்கடி உன்
சின்னப்   பையன்  நினைவுகளை  பதிவிடுகிறாய் , நல்லது "  என்ற  அவள்  சொன்ன பொழுதுதான் .

நினைவுகள்  வரமாகவும்  சாபமாகவும்  அமைகின்றன என்பதை  நாம்  அறிவோம் இழந்த  சந்தோஷங்களை  நினைவுப்  படுத்துவதால்  கசப்பாகவும்  , இல்லாத  சில  சந்தோஷங்களை  நினைத்து  அமிழ்ந்து  போக  உதவுவதாலும் தானே !

அம்மாச்சியின்  மடியில் படுத்து  சொடக்கு  எடுத்துக்  கொண்டு  , " சுகவாசி " என்று  அவர்கள்  செல்லமாக  கடிந்து  கொண்ட  தருணத்தையும்  ,
அக்காவும்  நானும்  சிறு வயதில்  கவலையற்று  ஆனால்  ஒரு  5 ஸ்டார்   மிட்டாயின்  காரணத்தால்  சண்டையிட்டுக்  கொண்ட  நாட்களையோ நினைத்து  மறுபடி  மறுபடி   பூரித்துப்  போகக்கூடிய  சக்தி  நினைவுகளுக்கு  மட்டுமே  உண்டு .குறிப்பாக  அந்த  மிட்டாய்  கிடைப்பதே  அந்த  வயதின்  பெரிய  தேவையாகவும்  , கவலையாகவும்  இருந்து உள்ளது  ஒரு  காலம்  என்று  எண்ணி  மறுபடி  மறுபடி  பூரிக்கத்தான் .

அப்பாவுடன்  புதிதாக  வாங்கப்பட்ட  சாம்பல்  நிற  லாம்பி  ஸ்கூட்டரில்  முதல்  முறை  உட்கார்ந்து  போன  பொழுது  துரத்திய  எருமை  மாட்டின்  குரலும்
காதில்  இப்பொழுதும்  கேட்பது  அதே  சக்தியால்தான் .

எல்லா  பற்களும்  தெரியும்  சிரிப்புடன்  , தளர்ச்சி  இன்றி  வந்த அம்மாவின் அந்த  பழைய  நடையும்   குதூகலமும்  நான்  மறுபடி  தொட்டு  வருவதும்  நினைப்பில்தானே.

இப்படி  பல  நம்  ஒவ்வொருவருக்கும் .

இதே  போல பழைய   சோகங்களை  அசை  போடவும்,  சில  சமயங்களில்
சுழற்சியாக  அசை  போடவும்  தான்  செய்கின்றது  மனம் . திரும்பத்  திரும்ப  போட்டு  உளப்பி  எடுக்கும் . இதைத் தாண்டி  வந்துவிட்டால்  நல்லது  என்று  சொல்லித்தெரிய  வேண்டியது  இல்லை.

சில  வாரங்களுக்கு  முன்பு  என்  கல்லூரி  நண்பனை  வருடங்கள்  கழிந்து  சந்தித்தேன் . அன்று  இரவு  முழுவதும்  பேசிக்கொண்டே  இருந்தோம் .
GCT  கல்லூரியில்  பச்சை  நிற  இரும்புக்  கட்டிலில்  படித்துக்கொண்டு  இருக்கிறோம்  என்று  எங்களையே  ஏமாற்றிக்  கொண்டு  , போட்ட
அரட்டைகளை  நியாபகப் படுத்திச்  சென்றது  அந்த  சந்திப்பு .

அசை போட்டு  கொண்டே  இருந்தேன்  , ஏன்  இப்படி  நினைக்க  நினைக்க  நினைவில்  இனிப்பைச்  சுரக்கிறது  கல்லூரி  நாட்கள்  என்று.
யோசித்து  யோசித்து  கொஞ்சம்  பிடி  கொடுத்தது .
அது  பொறுப்புகள்  அற்ற  நாட்கள்  , " wild  carefree  days ".
எல்லாவற்றையும்  பார்த்துக்  கொள்ள  பெற்றோர்கள்  இருந்ததால்   ,
பொறுப்புகள்  இன்றி  கழிந்த  நாட்கள் .

இப்படிப்  பட்ட  தினங்களை  நினைத்து  மனம்  ஏங்கத்  தானே  செய்யும்!

இளையராஜா  பெரியவரா  ,  ரெஹ்மான்  பெரியவரா  என்ற  சண்டைதான்
அப்போதைய  கவலை  , ஹாஸ்டல்   மெஸ்ஸில்  இன்று  கல்  இட்லிதனை  எதனைக்கொண்டு  உடைத்து  உள்ளே  அனுப்புவதுதான்  என்பதுதான்  அன்றைய  ஒரு  இரவின்  கவலையாகவும்  இருந்து  இருக்கக்  கூடும் .
இப்போ  இருக்கும்  பொறுப்புகள்  நான்  சொல்லியா   தெரிய  வேண்டும்!
கடைசி  வருடம்  நெருங்கவும்  , வேலை  அமைய  வேண்டும்  என்ற  பதட்டம்  தொற்றிக்கொள்ள  ஆரம்பித்ததில்  தொடங்கி  அது  அப்படியே  வெவ்வேறு  விதத்தில்  காலத்தை  வியாபித்துக்  கொண்டது  வேறு  கதை .

பிள்ளைகளின்  சிரிப்பும்  , இசையும்  , நண்பர்களுடன்  பேசும்  ஒரு  தொலை பேசி  உரையாடலோ  , சந்திப்போ   , அல்லது  ஒரு  நல்ல  வாசிப்போ ஏதோ  ஒன்றின்  மூலம்  அதனை  மீட்டு  எடுக்க  முயற்சிக்கிறோம் .
இந்த  வருடத்தில் அதனை  இன்னும்  அதிமாக  செய்வோமாக !

குறிப்பாக  நம்  பிள்ளைகளுக்கு  முடிந்த  வரை  இப்படி  கவலையற்ற
நாட்களை  வாழ்  நாள்  முழுவதும்  கொடுக்க  முயற்சிப்போம் , கடவுள்  அருளால் .

வேலை  பிடிங்கித்  தின்ற  பகல்  இரவுகளுக்கு  மத்தியில் பழயதை  நினைவூட்டிச்  சென்றது  இந்தப்  பதிவும் .இதைத்தான்   சொன்னேன்  மேலே  " with  no  strings  attached "  தருணங்களை  தொட்டு  வரும்  ஒரு  பயணம்  என்று!