Saturday, November 29, 2014

அபார்ட்மென்ட் வாழ்க்கையும் குரங்கும் :

அபார்ட்மென்ட் வாழ்க்கையும் குரங்கும் :

சென்னையில் எங்கள் தெருவே எங்களுக்கு அடுத்த வீடு போலதான் .ஆனால்
அது எண்பதுகளில் உருவான நட்புப்  பட்டாளம் . அந்தக்காலனி  இன்றைக்கு சொல்லப்படும் gated  community இல்லையென்றாலும் , எங்கள் குடும்ப நட்பு வட்டத்தில் ஒருவருக்கொருவர் connected  தான் . தனி வீட்டிலேயே இருந்துப்பழகிய எனக்கு , அபார்ட்மெண்ட் வாழ்கை மேல் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது . நண்பவர்  வட்டம்  எப்படி  இருக்கும் அபார்ட்மென்டில்  என்ற  எதிர்பார்ப்பும் , நிறைய  வீடுகள்  இருந்ததனால் .

கட் செய்வோம் . எனக்கு திருமணமான  புதிது . பெங்களூரில் ஒரு அபார்ட்மென்ட் வாடைகைக்கு பிடித்தேன் .மனைவிக்கும் எனக்கும் office  ரொம்ப  தூரம் இல்லாமலும் , பஸ்  ஆட்டோ வசதி  மற்றும்  கடைகள் அருகில் இருப்பது  போன்ற  ஒரு இடம் தேடிப்பிடித்தேன் . மெயின் ரோட்டில் இருந்து பார்த்தால் ஒரு நகரத்தின் அனைத்து  விதமான அவசர வாழ்க்கைக்கு உண்டான அம்சங்களுடன் இருந்தாலும்  , ஒரு தெரு தள்ளி உள்ளே வந்தால்  ஊர்ப்பக்கம் போன ஒரு பீலிங் கொடுக்கும்.

குறிப்பாக நடக்கும் தொலைவில்  இருந்த அந்த பஜார் தெரு..
பெரிய ஆலமரத்தின் கீழ் பழக்  கடைகளும்  , பூ விற்பவர்களும் , காய் கரிக்கடைகளும்  , பக்கத்துல நாயர்  சாயா கடையும்  , சற்று நடந்தால் ஒரு  நாத்தம் பிடித்த பெலான்தூர் எரியும் அந்த இடத்தை எனக்கு ரொம்பப்பிடிக்க வைத்து விட்டது . நாத்தம் பிடித்த எரி  என்றாலும்  ,அதை ஒட்டின வளைவான தெருவும்   , அழகான கோவிலும்  , ஏரியைத்தாண்டி தெரியும் அழகிய தென்னந்த்தோப்பும் ஒரு ஒட்டு வீடும்  , காலையில் நடந்தால்  அந்தக்காட்சி நாத்தத்தை தாண்டிய கவிதைதான் எனக்கு.குறிப்பாக நகர  நெரிசலில் இருந்து தள்ளிய  ஒரு இதமான  மனநிலைமையைக்   கொடுக்கும்.வேலைப்பழு அதிகம் இருக்கும்  போது  எல்லாம்  , அந்தப்பக்கமா  ஒரு  நடைப்போட்டோம்னா ஒரு recharged  feeling  வரும்.

எதையோ பகிர நினைத்து  , எங்கோ வந்து விட்டேன் .
சரி அப்படியே கொஞ்சம் ரிவர்ஸ்  அடிச்சு  , வீட்டுக்கு வருவோம் , அதாவது அபார்ட்மென்டுக்கு .

லிப்டும்  , அதில்  இருந்து வெளியே வந்தால்  சாத்தப்பட்ட கதவுகளும் ,
கிரில் வாய்த்த corridors உம்   எனக்கு புதுசு.
மனிதர்களே  பார்ப்பது அபூர்வம் போன்று இருந்தது  பெரும்பாலான நேரத்தில் .
முதல் பத்தியில் நான் சொன்ன  என்  பழைய  வாழ்க்கைக்கு முரணாக .

மேலே குறிப்பிட்ட எல்லாத்தையும் விட , அந்த அபார்ட்மென்டில்  எனக்கு
பிடித்தது  , குரங்கு! ஆமாம் குரங்கு .அதுவும்  pipe  வழியா மாடி  ஏறி வந்து , இரண்டாவது  மாடி  பால்கனி  வழிய  எங்கள்  கிச்சனுள் வந்து , உருளைக் கிழங்கையும்  காரட்டையும் சுவைக்கும் குரங்கு , குறிப்பாக சொல்வதென்றால்  அழகிய  குரங்குக்  குட்டிகள்!

கிட்சென் granite  counter  இல் தொங்கிக்கொண்டு அவர் ஒரு கையில் காரட் சாப்பிட்ட ஸ்டைல் அலாதி. ஐயோ யம்மானு என் மனைவி உள்ளே இருந்து  ஓடி வந்தது வேறு கதை.

இது  இப்படி இருக்க , அபார்ட்மென் ட்   விதிமுறைப்படி  , எங்கள்  வீட்டு அன்றாடக்குப்பைகளை  ஒரு கவரில் கட்டி வெளியே வைத்து விட வேண்டும்  தினமும் . ஒருவர்  வந்து  collect  செய்துகொள்வார்  காலையில், சில நாட்கள் நானே கொண்டுப்போட்டு விடுவேன் .

அடுத்த வீட்டில் நாற்பதைக்கடந்த ஒரு மலையாள குடும்பம்.
என்ன காரணமோ  தெரியவில்லை அவர் சிரிக்கவே  மாட்டார் .வேகமா  வருவார்  போவார் . வீட்டில்  அவர் அடிக்கும் விசில்   சுவர்  தாண்டி  தூள்  பறக்கும் . பூஜை  மணியும் தான் .வீட்டில்  குஷிப்பார்ட்டி  தான் என்பதில்
எனக்கும்  சந்தேகம்  இல்லை. சேட்டன்  வெளியே வைக்கும் காலி  பீர் பாட்டில்  சொன்னத்தகவல் தான் நமக்கு எட்டிருச்சே!

நான்  காலையில்  8 மணிக்கு  மேலதான் எழுந்திருப்பேன் . காலையில் 7 மணிக்கே மனைவிக்கு  இன்போசிஸ்  பஸ் வந்து விடும். வீட்டில்  வேலை செய்யும்  ஷீலா  என்னும்  நேபால்க்காரம்மா வேலை முடித்து  கதவைச்சாற்றி சென்று  விடுவார்கள் . மேல் சொன்ன  குப்பை பையையும் வெளியே வைத்து  விட்டு செல்வார்கள் . இது  தான் வழக்கம் .

ஆபீசில் இருந்து  வந்த  என் மனைவி அன்று  ரொம்ப  சூடாக  இருந்தாள் .
வேலை  டென்சனா  என்று பார்த்தால்  இல்லை. சேட்டன்   கொடுத்த   டென்ஷன் . அன்று  வேலைக்காரம்மா  கொஞ்சம்  லேட்டா  வந்து இருக்காங்க . குப்பையை  வெளியே வைக்கவும் நேரம் ஆகிவிட்டு  இருந்தது.
இதற்குள்  நம்ம  குட்டிகொரங்கார்  வந்து  தன  வேலையைக்காண்பித்து  இருக்கிறார். கவரைப்பிரித்து  உள்ளே இருந்த  மாங்கொட்டைகளை  சிதரடிச்சு , அதில் வெங்காயத்தோலும்  மற்ற  குப்பைகளும் கலக்கி அடிச்சு  ஒரு  வழி  ஆகி இருந்தது  தரை .

[ இந்த  காட்சி  நான்  இன்னொரு  நாள் நான் கண்டது .அது தெரியாமல்  தொடைத்து சமாளித்து வேறு கதை. இதைப்போல்  தான்  அவர்  பார்த்த  அன்றைக்கும்  இருந்து  இருக்க வேண்டும்!]

மூச்சு  இறைக்க  வந்து என் மனையிடம்  மறுநாள்  முறை  இட்டு  இருக்கிறார் , கூச்சலுடன் . எனக்கு பிடிக்காமல்  போனது  என்னவென்றால்  அவர் இதை  தன் 3  மனைவி இடம்  சொல்லச்சொல்லி  இருக்க வேண்டும்  , இல்லை  அவர் என்னிடம்  பேசி இருக்க வேண்டும்  , என் மனையிடம்  கத்தியது  எனக்கு  கடுப்பைக் கிளப்பியது . மனைவியும், என்ன அந்த  ஆள்  அப்படி  கத்தறான்  தெரியாம  நடந்து  தானே  , நாமும் புதுசு  குரங்கை  கட்டியா  போடமுடியும்  , இனிமே ஜாக்கிரதையா  இருக்கத்தான்  முடியும் , இதுக்கு  ஏன்  அவன்  அவ்ளோ  டென்ஷன்  ஆகரான்னு  தெரியலை வென்றாள் .

அவருடைய  கருப்பு socks இல்  மாம்பழ  சாறுபட்டு விட்டதாகவும்  , தொவைச்ச socks  வென்றும் திரும்ப  திரும்ப  பொலம்பினதாகவும் சொன்னாள் ."தொவைச்சsocks " என்றதும்  எனக்கு  சிரிப்பை  அடக்க  முடிய வில்லை.கோபம்  சென்றுவிட்டது .

என்ன  இவ்ளோ  serious ஆ  பேசிட்டு இருக்கேன்  , நீங்க  கூல்  ஆ  இருக்கீங்கன்னு அவ  இன்னும் டென்ஷன்  ஆனது  தான் மிச்சம் . அவள்  பேச சொன்னதால் , நான் அவரிடம்  , இனிமே  ஆகாம  பாத்துக்கறேன்   என்று  சொல்லி வந்தேன்.

" உங்களை  இதையா  நான்  பேச சொன்னேன்னு " இன்னும்  கடுப்பானாள் .
என்  மேல  அக்கறையே  இல்லை ங்கற  அளவிற்கு கொண்டு வந்து  விட்டது  அந்த  குரங்கு  செய்த  சேட்டை .
எனக்கு  என்னமோ அவரைப்  பார்த்ததும்  சிரிப்பு  வந்துடுச்சு . கதவைத்   தட்டும்  போது  அந்த  கருப்பு socks  அந்த  க்ரில்லில்  கண்ணில்  பட்டதால் ..

அவர் என்னிடம்  கொஞ்சம்  அமைதியாகத்   தான் பேசினார் . . தான்  கத்தினது  கொஞ்சம்  ஓவர் என்று  உணர்ந்தார்னு  நினைச்சேன்.

சில நாட்கள்  போனது .
நான் கும்பிடும்  ஆண்டவன்  என்னைக்கைவிடவில்லை .
அருமைக்குரங்கார்  இந்த முறை  அதைப்போன்ற  ஒரு  லீலையை  எங்கள்  வீட்டின்  முன்  செய்துவிட்டு இருந்தார். நிறைய  தேங்காய்க்  கொப்பரைகள்
வேறக்கிடந்தன . சேட்டன்  வீட்டில்  இருந்துதான்  வேறு எங்கே.

எனக்கு  இருப்புக்கொள்ளவில்லை .

 ட்ரிங்  ட்ரிங் ......சேட்டனுக்கு  தமிழ்  தெரியும்!

" சார்  , நாங்களாவது  , குரங்கு  முன்  வாசல்  வரை வரும்னு  எதிர்பார்க்கலை
apartment க்கு  புதுசு. நீங்க இங்க தான இருக்கீங்க ரொம்ப நாளா .

இங்க பாருங்க  என்ன இது?" என்று   வீட்டின்  முன்  இருந்த  கோலத்தை காண்பித்தேன் .

 வந்து  போய் னு  எதையோ முழுங்கினார் ....

சரி எதுவும்  கேக்காம  வந்துடீங்களே ன்னு  என் மனைவி   சொன்னது  காதில்  வந்து  விழுந்தது  அந்த நேரம்.

" அப்புறம்  உங்கள் குரங்கை  கொஞ்சம்  கட்டி போடுங்க  சார்  , வாக்கிங்  வேணும்னா  கூட்டிட்டு  போங்க  வெளியே பார்க்ல ...
2  எதன்னா  செஞ்சு  வச்சுதுன்னா  கஷ்டம்  பாருங்க "...

அவர்  முகம்  பார்க்க  கோடிப்புண்ணியம்  செய்து  இருக்க வேண்டும்.

டப்  , கதவு  சார்த்தப்பட்டது .

நாங்கள்  இருந்த  மூன்று  வருடமும்  ,என்னைக்கண்டால்  வேகமாக  முகத்தை எங்கோ பார்ப்பது  போல  சென்று விடுவார்!

அதன்  பிறகு நாங்கள்  குரங்கையும்  பார்க்க  வில்லை  வீட்டினுள் . என்ன  ஒரு மாயம் .





Wednesday, November 26, 2014

கணேசனும் தொள தொள டிராயரும் ...

கணேசனும் தொள  தொள  டிராயரும் :

சில  மனிதர்களும்  அவர்களால் ஏற்படும் நிகழ்வுகளும் , வாழக்கையில் நமக்கே நாம் கேட்கும் விடை தெரியா பெரியக்கேள்விகளுக்கும் , புதிர்களுக்கும் முன்னாலோ பின்னாலோ விடை கொடுத்துச்செல்கின்றன. . விடை கொடுக்க முடியாவிட்டாலும் , ஆசுவாசப்படுத்திக்கொள்ள துணை புரிகின்றன. கணேசனும் அப்படித்தான் .

என் வயதோ அல்லது ஒத்த வயதில் விளையாட  ஆள்  இல்லாத வயது அது.
சுவற்றில் பந்தை வீசி விளையாடிய ஒரு நாள். தெருவில் விழுந்த பந்தை பொறுக்க சென்ற பொழுது , நீளமான இப்பொழுதுள்ள 3/4த்ஸ் போல தொள  தொள டிராயருடன் பெரிய வரிசையான பற்களுடன் சிரித்தான் கணேசன் .
பந்தை நீட்டியவாறே ,

" நானும் வரட்டா ?"

அப்பொழுது என்னை  விட ரொம்பப்பெரியவனாக இருந்த அவனிடம் யோசித்தவாறே , " வா" வென்றேன் .

" நீ அஜய்  குட்டிப்பயனோட relative ஆ ?"

" இல்லை.என்னை வேலைக்கு ஊர்ல இருந்து கூட்டிட்டு வந்துருக்காங்கலெ "

அந்த "காங்கலெ " என்னை  அவனிடம் சற்று துரிதமாகவே பழகியவனாக நினைக்கத்தூண்டியிருக்க வேண்டும்,என் சொந்த ஊரும் நெல்லையானதால் .

" எங்க இருந்து வந்து  இருக்க ?"

" தூத்துக்குடி ".

" எனக்கு பௌலிங்  தான்  பிடிக்கும் .நீ பேட் செய்வியா ?"

" சின்னப்பய நீ என்ன  வா போன்னு கூப்புடுத ...இந்த ஊர்ல இப்படித்தான் போல . சரி நான் மட்டை  பிடிக்கேன் .அந்தாக்ல போய்  விளையாடுவோம் நான். விளையாடுரதைப்பார்த்தா என்னை ஏசுவாங்க "

" மொட்டை மாடி போய்  விளையாடலாம் வா".

குஷியாக மாடி வந்தோம் .

" உனக்கு ,மாங்கா பிடிக்குமா?அங்க பாரு எவ்ளோ புளிப்பு மாங்கா  எங்க வீட்ல
"

" ரொம்பப்பிடிக்கும் !ஊர்ல   பக்கத்துக்கு தோட்டத்துல  கவுட்டிவில்லில் அடிச்சு சாப்பிடுவோம் .".


அவன் மட்டை பிடித்த விதம் அலாதி. பீமன் கதையை பிடித்த போலோ  அல்லது " base  ball bat " பிடித்தது போலோ இருந்தது. ஆனால் பட்டயக்கிளப்பினான் . இரண்டு  மூன்று முறை மாடிக்கண்ணாடி அதிர்ந்தது .

" என்னடா சத்தம் மேல "   அம்மா கத்தினதை நாங்கள்  கண்டுக்கொள்ளவில்லை .

விளையாடி முடித்ததும் மாங்காய் சாப்பிட்டோம் .

" உப்பு  மிளகாய் போட்டு சாப்பிட்டா நல்ல  இருக்கும்லே .எடுத்தாரியா ?"

" நாளைக்கு ".

அன்றைய தினம்  எனக்கு மிக மகிழ்ச்சியான நாள் .விளையாடுவதற்கும் பேசுவதற்கும் ஒரு புதிய தோழன் குதித்து வந்தான் என நினைத்தவாறே தூங்கிப்போனேன் . அந்த  நேரம் தான் " மை  டியர்  குட்டிச்சாத்தான் " படம் வந்து  இருந்தது.

மறுநாள் அஜய் வீட்டிற்குள் சென்று கணேசனைத்தேடினேன் .கிச்சனுள் எதையோ சுமந்துக்கொண்டு இருந்தான் . என்னைத்தெரியதவனாக எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தான் .அஜய் அப்பா அவனை அதட்டிக்கொண்டு இருந்தது எனக்கு பிடிக்கவில்லை .

அஜய் அப்பா அந்தப்பக்கமாகச்சென்றார் .
" என்ன பண்ணிட்டு இருக்க , எப்ப வருவ?"

சரியாக பதில் வராமல் பழயபடி சுவற்றுடன் விளையாட எத்தனித்தேன் .

" திரும்ப வந்தவன் , " நீ  அங்க  வந்து  என்னைத்தேடாதே , நான் வரும்போது வர்றேன்  சரி , இப்போ விளையாடுவோம் .

கோச்சுக்காத ...இன்னைக்கு நான் பந்து வீசறேன் ".

குழப்பத்துடன் ஆடியதில் முதல் பந்திலேயே விக்கேட்டைச்சரித்தான்.

"     சின்னப்பசங்க கூட  விளையாண்டா இப்படித்தான் . போட்டியே இல்லைலா ...ஹ ஹா "

என் கவுரவம் பாதிக்கப்பட்டதாக கோபத்துடன் விளையாடினேன் .

அவனும் இன்னும் வேகமாக வீச , நான் சுழற்றிய பெரும்பாலான வீச்சுகள் காற்றை சலசலதுச்சென்றது . பெரிய பற்கள் தெரிய இன்னும் எக்காளமாகாச்சிரித்தான் .

இன்னும் கோபத்துடன் கடைசியில்  ஒரு பந்தை பொளந்தேன் .நிஜமாகவே பந்தைப்பிழந்து விட்டேன்.

" கோவதைப்பாருலே , சரி ஒப்புகுதேன் , நீ  பெரியவன்தான்,நம்ம ஊருப்பயன்னு காமிச்சுட்டே ".

சிரித்துக்கொண்டோம் .

" என்ன செய்ய இனிமேல , மாங்காய் அடிப்போமா ".

" அடிப்போம்  ஆனா  ,கைல   வேணாம் . கவுட்டிவில் செய்வோம்.
இங்க பழைய டயர் இருக்கா?"

கொண்டு வந்துக்கொடுத்தேன் .

வீட்டில் நிறைய  மரங்கள் . ஒரு கெட்டியான நொச்சி மரக்கிளையிலிருந்து " Y " வடிவில் கவுட்டிவில் செய்ய  ஒரு பகுதியை ஓடித்தான் . டயரைக்கிழித்து
அந்த  ரப்பரை  வைத்து கவுட்டிவில் செய்து முடித்தான் .

எனக்கு அன்றைக்கு முழுவதும் , கவுட்டிவில் ட்ரைனிங் .

" அந்த தெரியுது பாரு அந்த கொத்தை அடி.பக்கத்துல குருவிக்கூடு இருக்கு.
பாத்து அடி ".

பொத்துன்னு சத்தத்தோட பெரிய குலை வந்து விழுந்தது .
அம்மா வந்தார்கள் .

" என்ன நடக்குது இங்க"

" அம்மா அந்த மாங்காய அடிச்சு விழவச்சுட்டேன் .எனக்கு மாங்கா பச்சடி வேணும் ".

"சரி பார்த்து .கல் தலை பட்டுட போகுது .உமா ஆன்டி வீட்டில அடிக்காம பாத்துக்கோ "

"கணேசா , பார்த்து  " ன்னு  சொல்லிட்டு அம்மா உள்ளே சென்றார்கள் .

 சரியாய் அடித்து அன்றைய தினம் திருப்தியாக முடிந்தது .

அன்று இரவு.

" கணேசன் உன்னை  விட ரொம்பப்பெரியவன் . அவனை  நீ வானு கூப்பிடாதே "

 "சரிம்மா "

அடுத்த நாள் கணேசன் வந்ததும் .

" நீங்க முதல்ல பேட் செய்யுங்க "

" என்னாலே புதுசா மருவாத .நீ வானே கூப்டுலே .எனக்கு அதுதான் பிடிச்சு  இருக்கு"......

" சரி லே ! இந்தா மாங்கா பச்சடி சாப்டு.சூப்பரா இருக்கும் .".

என்னோட ஸ்கூல் நண்பர்களுடன் சேர்ந்து கொஞ்சம் தள்ளி வேளச்சேரி சென்று ஒரு கிரிக்கெட் டீம் தயார் செய்தோம்.ஒரு ப்லெட்  லைட் டோர்னமென்டில் பெயர் கொடுத்தோம் .ஏற்கனவே கலந்து ஜெயிக்கவில்லையென்ராலும் , இந்த முறை கணேசன் துணை .

அடுத்த வாரம் நினைத்து எங்கள் கிரிக்கெட் ட்ரைனிங் பலமா  இருந்துச்சு.

கணேசனுக்கு ஏகப்பட்ட மரியாதை அங்கே, அவனுடைய சிக்ஸர்களே காரணம் .முதல் கட்ட ஆட்டங்கள் முடிந்து
செமி பைனல் வரை வந்தாச்சு. இனி ஆட்டம் சூடாத்தான்  இருக்கும்.
கணேசனை நாங்க மிடில் ஆர்டரில் தான் இருக்குவோம்.
அவன் வந்தாலே எல்லோரும் பௌண்டரி  லைன்ல தான்  .
இப்ப சொல்வதென்றால் நம்ம தோனி  போல.   அந்த மாட்சில் அம்பயர் கொஞ்சம் போங்கு பண்ணிட்டுத்தான் இருந்தான்.கணேசனுக்கு கடுப்பு.

"மக்கா அவனை பொளக்கனும்லே சேட்டை செய்யட்டும் , பொளந்துடரேன் அவனுள  ".

அவனிடம் யாரும் வால்  ஆட்டவில்லை.தொள  தொள  டிராயருடன் எப்படித்தான் ஒடுவானோன்னு நினைத்தேன் .ஆனா அவன் நின்ன இடத்துலேயே விளாசினான் .சில பௌண்டரிகளும் பல  சிக்சர்களும் பறந்தன.எதிர்பார்த்தது போல  , பௌண்டரி லைன்ல கேட்ச் கொடுத்து அவுட் ஆனான் .

மேட்ச் அதற்குள் எங்கள் கையில் வந்து விட்டது.
மேட்ச் முடிந்து வெற்றியுடன் வெளியே வந்தோம் ,ஒரே கூச்சல் கும்மாளம் . எதிர் கட்சி கேப்டன் கடுப்பில் பிதற்றினான் என்னைப்பார்த்து.அவனுக்கும் எனக்கும் குறைந்த பட்சம் ஐந்து வயது வித்தியாசம் இருக்கும்.

" என்னடா ரொம்ப துள்ற .ஆள்  இருக்காங்கன்னு திமிரா . அடியப்போட்டுடுவேன் . அடங்கு டா " என்றான் .

பொள்  என்று ஒரு சத்தம் கேட்டு எல்லாரும் அதிர்ந்து  நின்றோம் .
வாங்கியவன் சுருண்டு விழுந்தான் . அடித்தது யார்ன்னு சொல்லவேண்டாம் .
மத்தவங்க கிட்ட வந்ததும்,பேட்  கைல பிடிச்சவாறே , பீமன் போல நின்றான் கணேசன். சரமாரியாக கெட்ட  வார்த்தைகள் வேற விழுந்தது.

சென்னைப் பசங்களுக்கு அதில் முக்கால்வாசி அர்த்தம் தெரிந்து இருக்காது , என்னையும் சேர்த்து .கூட்டம் விலகியது.

அந்த  நாள் எங்கள்  நட்பு இன்னும் அடர்த்தியானது .

" என்னாலே  , அவன்  பேசிகிட்டு கிடக்கான் , நீயும் கேட்டுட்டு  இருக்க, பெரிய கொம்பனா அவன்..."

நான் சிரித்துக்கொண்டே வந்தேன்.

" எனக்கு அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லேன்.நிறைய தெரியலை"

"கொஞ்சமா சொல்றேன், சின்னப்பய நீ  ".

இன்னும் ஒரு  மாதம் சென்றது. இந்த சமயத்தில் எனக்கு அரைப்பரிட்சை .கணேசனை அடிக்கடி பார்க்க முடியவில்லை.பார்த்த பொழுதும் சோகமாவே இருந்தான் .

" நாளை பரிட்சை முடியுது . நாம ஆட்டம் போடுவோம் ".

" அஜய் அப்பா என்னை விளையாடப்போக கூடாதுன்னு சொல்லிட்டார் .
எனக்கு அம்மைய தேடுது .பாப்போம் , அவங்க ஆபீஸ் போனப்பறமா வரேன் மதியம் ."

கணேசன் துள்ளல் இல்லாமல் அமைதியாக இருந்தான் .விளையாட மனம் இல்லாததால் , பேசிக்கொண்டு இருந்தோம்.

" நீ ஏன் ஸ்கூல் க்கு போகல ?"

" போனேன் . ஆனா படிப்பு ஏறலை .அப்றமா அய்யாதான் இங்க அனுப்பிடாக "

" ஏன் அனுப்பினாங்க ?, உன் கூட  இருக்க வேண்டாமா ?".

" அனுப்பிட்டாங்க  எல்லாருமா சேர்ந்து அவ்ளோதான்.
சரி நாம மீன் பிடிப்போம் வரியா? மதகு உடஞ்சு தெருவெல்லாம் தண்ணீ.
வெளில சிலது துள்ளிக்கிட்டு கிடந்தது .ஊர்ல நான்ஆத்து மீன்  பார்த்தது இல்ல.".

தண்ணீரில் ஒரே ஆட்டம் போட்டோம் .அவனுடைய கவலை முகம் கலைந்தது .

மரத்தடியில் வந்து உக்கார்ந்தோம் .

" மாமா வந்தாரு போனவாரம் என்னைப்பாக்க .இன்னும் நாலு அஞ்சு மாசம் கழிச்சு கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்கார் .அம்மை கடிதாசி வேற போட்டு இருந்தாக நேத்து .

அடடே மறந்துட்டேன் .இந்த கோவில்பட்டி கடலை மிட்டாய் .நமதுப்போச்சு தண்ணீல ".

சொல்லிக்கொண்டே அந்த நனைத்த தொள  தொள  டிராயர்ல இருந்து கடலை மிட்டாய் எடுத்துக்கொடுத்தான் . நமுத்தாலும் சுவை தூக்கலாகவே இருந்தது .
அந்த தொள  தொள  டிராயர் அவன் மாத்தி  நான் அவ்வளவா பார்த்தது  இல்லை.
காக்கி நிறத்தில் . அப்பாவிடம்  சொல்லி அவனுக்கு வேற கலர்ல வாங்கிதரச்சொல்லனும் என  நினைத்தேன் .

" இவ்ளோ நாளா  எனக்கு உன் டிராயர் ஏன் இவ்ளோ பெருசா இருக்குன்னு தெரியாது.இப்பதான தெரியுது உள்ள திண்ன கடலை மிட்டாய்  அடைச்சு  வச்சு  இருக்கன்னு ".

நமட்டுச்சிரிப்பு சிரிப்பு சிரித்தான்.
"அம்மைய பாக்கணும் .மூணு மாசம் கொள்ளாது .

வரேன்லே ".

                                       ----------------------------------

இரண்டு நாட்கள் கழித்து அஜய் வீட்டில் சில புதிய முகங்கள் தெரிந்தன .
மாமாவாக இருக்கும்னு நினைச்சேன் . கணேசன் க்ரோட்டன்ஸ் செடி பக்கத்துல நின்னுட்டு இருந்தான் .


அம்மா கூப்பிட்டார்கள் .

" டேய் , கணேசன் ஏதோ காச எடுத்துட்டான்னு அஜய் அம்மா சொன்னாங்க .
ஊருக்கு அனுப்பராங்களாம் ".

ஓடினேன் .கணேசன் வெளியே வந்தான்,.உள்ளே சோகமா  இருந்த  முகம் , என்னைப்பார்த்ததும்  கண் சிமிட்டினான் .

" ஊருக்கு போறேன்னு அம்மா சொன்னங்க .எப்போ வருவ"

" அங்க  தான்  இனிமே .அம்மையோட அங்கேயே இருந்துட வேண்டிதான் .
அண்ணாச்சி கடைல வேலை வாங்கித்தாறேன்னு மாமா சொன்னாரு.அவருக்கு  என்மேல பாசம் .உன்னைத்தான்டெ தேடும் .
சரி  இங்க  வா .

அன்னைக்கு மேட்ச் முடிஞ்ச  போது  , சில அர்த்தம் கேட்டீல ....இந்தா நேரம் வந்துருச்சு ".


அப்புறமா கணேசன் கிளம்பிப்போனது , நான் அழுதது எதிர்பார்த்ததுதான் .
அவன் விட்டுச்சென்றது நிறைய கேள்விகளும் தான் அந்த வயதில் .
ஏன் வந்தான் , அவன்  ஏன் வேலை பாக்கணும் , ஏன் திருடினான் இன்னும் பல .

எட்டு ஒன்பது வருடங்கள் கழிந்து நான் கோவையில் அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்த புதுசு.


ஒரு வாரம் கழிந்து இருக்கும் .முதல் முறையாக வீட்டை விட்டு வந்ததும் , தனிமையும் சேர்ந்து என்னமோப்படுத்தியது .

அன்றைய  காலையில் ஹாஸ்டலில் பாக்கு மரம் பார்த்தவாறே  ஒரு சொல்லத்தெரியாத வெறுமைதனை உணர்ந்தேன் .

" அம்மையதேடுதுலே " வின் அர்த்தம் அப்பொழுது எனக்கு புரிந்தது,
ரொம்ப வருடம் கழிந்து  அவன்  நினைப்பும் கூடவே வந்தது.
அவன் திருடியது ஒரு சாக்கு என்றும் எனக்கு அது தலையில் அடித்தது .

 ராகிங் அதிகம் அப்பொழுது .

சென்னை பசங்களை சென்னை சீனியர்சும் , தெற்கு மாவட்டங்கள் பசங்களை அந்தப்பக்கம் உள்ள சீனியர்சும் ராக்கிங் செய்கின்ற வழக்கம் ....அங்கேயும் பிரிவினை தான்.

"டேய் , இவனை என்னனு பாரு.பாக்க மெட்ராஸ் பய  போல  கிடக்கான் .கேட்டா நெல்லைங்கறான் ".

" இல்ல சார்  , நேடிவ் ப்லேசு நெல்லை ".

" சரி  நம்ம  ஊர்ல என்னடே ஸ்பெஷல் "

" அல்வா  சார்".

" குசும்பு  டே உனக்கு .ஏன் தாமரவரணி இல்லையா .நீ  மெட்ராஸ் பயதான்."

" இல்லை சார் , எனக்கு நெல்லைதான் சார் "

நெல்லைபயல்னு சொல்றதுதான் பிடிக்கும் எனக்கு , கெத்தும்  கூட.

" சரி  இந்தா இருக்கான்  பாரு கெளதம் .இவனை பார்த்து ரெண்டு கெட்ட வார்த்தை பேசு ..."

"என்னலே தயங்கிட்டே நிக்கான் .இவன் நம்ம ஊர்ப்பய  இல்லைலே .
அங்க அப்படி  சொல்றது  , இங்க  இப்படி  சொல்றது "

சரமாரியாக பல வார்த்தைகள் வந்து விழுந்ததை எதிர்பார்க்க வில்லை அவர்கள்.

பேசியது உள்ளே  இருந்த கணேசன்.

----------------------------------------------------------------------------------------------------------








Tuesday, November 11, 2014

கவிதை என்றால் என்ன ? உங்கள் பிள்ளைகள் கேட்டால் என்ன சொல்வீர்கள் ???


கவிதை  என்றால்  என்ன :



ச்வீட் ஸ்டாலே
ச்வீட் சாப்பிடுகிறதே
!

[ படத்தில்  பார்த்து  இருப்பீர்கள்.....பார்த்திபன் பேசுவதாக  வரும்...]

இப்படி வார்த்தைகளை ஒடித்துப் போட்டு  விட்டால் கவிதை
ஆகி விடாது என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்வோம்...

இந்த கேள்வி வந்து போவதுதான் மனதில்.
கவிதை என்றால் என்ன?

திரைப்படம்  நிறைய  பார்க்கும்  எனக்கு  சினிமா  பாடல்  ஒன்று  மனதில் தோன்றியது ....

குணா  படத்தில்  வரும் "

உன்னை  நினைச்சு பார்க்கையில மனசுல கவிதை அருவி மாதிரி கொட்டுது ..
அதை எழுதனும்னு   உக்காந்தா  ...எழுத்துதான் .ம்ம் ...வார்த்த ...."

என்கிறதைப்  போல அதீத காதலை சொல்லத்தெரியாமல்  , இடைப்பட்டதாக ஒன்றை வெளிக்கொணரும் வழிதான்  கவிதையோ?

இப்படி சொல்லிக்கொண்டே  போகலாம்....

[ இந்தப்பாடலில் எனக்கு மிகவும் பிடித்த  வரி ..
" இதையும் எழுதிக்கோ ....
நடுவுல மானே தேனேன்னு லாம் போட்டுக்கோ!...

என்ன ஒரு நக்கல்  இது !
].

அகராதியில் தேடினால் , கீழே கொடுக்கப்பட்ட விளக்கம் வந்தது .

"
literary work in which special intensity is given to the expression of feelings and ideas by the use of distinctive style and rhythm; poems collectively or as a genre of literature.

"
 உணர்சிகளின் வெளிப்பாட்டிற்கும் , கருத்து பரிமாற்றத்திற்கும் அதிக செறிவு கொடுக்கப்பட்டு  , அதற்கென்று ஒரு தனிப்பாணியினையும்  அழகையும் கொண்ட  ஒரு வித இலக்கியம்  என்று சொல்லலாமா ? [ மேற்சொல்லப்பட்டதின்  தமிழாக்க முயற்சி].

இதனை மறுக்கவில்லை . ஆனால் எனக்கு மிகவும்  திருப்தியாக  இல்லை.
பள்ளி செல்லும் குழந்தைக்கு கவிதைக்கும்   உரைநடைக்கும் என்ன வித்தியாசம் என்று விளக்கம் சொல்வீர்கனால் என்ன சொல்வீர்கள் ?

எனக்கும்   இருந்தது அந்தக்கேள்வி !

இதற்க்கு விடையாக  வந்தது  நான் சமீபத்தில் படித்த ஒரு குழந்தைகளுக்கான புத்தகம் .

சொல்லப் போனால் நான் படித்த குழந்தைகளுக்கான புத்தகங்களில் இது  என்னுடைய டாப்  5 என்று சொல்லுவேன்.


பள்ளி  செல்லும் முன்/பின்   மார்டின்  என்னும் சிறுவனின் உலகம்  பற்றியது இது.

இந்தக்கதையோட்டம் மார்டினின் எண்ண  ஓட்டங்களுடன் தவ்விக்கொண்டே இருக்கும்......இயற்கையுடன் பிணைந்து அவனது கற்பனைகள் ஒரு குழந்தையின்  உலகத்திற்கு நம்மை  அழைத்துச் செல்கிறது .

முதல்  நாள்  பள்ளி செல்கிறான்....அங்கே  வகுப்பறையில் அவனது ஆசிரியர் கரும்பலகையின் முன்  கைகளை வீசி  வீசி எதையோ பேசுகின்றார்கள்...

கரும்பலகை காலியாக  இருக்கிறது..

மார்டின்  மனது சிறிது  நேரம் கழித்து ,

அங்கே கைகளை ஆட்டி ஆட்டி பேசும் அவனது ஆசிரியைப்பார்கிறான் ...

தன் சிறகுகளை விரித்து  பறக்கும்  ஒரு :"sea  gull " பறவையைபோல்  காட்சி அளிக்கிறது அவனுக்கு....அப்படியே காட்சி விரிந்து  , அந்த கரும் பலகைக்கு பதில் அங்கே  அந்த " sea  gull " பறவை  ஒரு ஆற்றின்   மீது பறப்பதாக தோன்றுகிறது அவனுக்கு.....அந்த ஆற்றைக்கனவு  கண்டதும் ,தன்  அம்மாவுடன் அந்த  ஆற்றிற்கு சென்ற சுற்றுலா  நியாபகம்  வருகிறது....

" எவ்வளவு   அழகா இருந்தது  அந்தக்காட்சி.....இப்படி வகுப்பினுள் அடைபட்டு  இருக்க வேண்டாமே..வெளியே போய்  ஆற்றின் முன்  படிக்கலாமே.....?
அந்த ஆறு  எவ்வளவு அழகு.....அதில் ஓடும் மீன்களும்......சில சமயம் சிரிக்கவும் செய்யும் ஆறு....தன்  தோழி  எதினாவின் சிரிப்பைப்போல....

அவள்  சிரிப்பு ஒரு பட்டாம்பூச்சியின் சிரிப்பைப்போலவும்  இருக்கும்....
ஒரு நாள்  நான் ஒரு பட்டாம்பூச்சியை பிடித்தே  விட்டேன்.....

"

இப்படி அவன் கற்பனை  அவனை எங்கோ அழைத்துச்   செல்கிறது....
இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் அவன்  கற்பனை எப்படி  தொடர்ச்சியாக தாவித்தாவி போகிறது என்று....அதுதான்  அவர்கள் உலகம்.

திடீர்  என்று  வகுப்பிற்குள் திரும்பி வருகிறான் கற்பனை  விட்டு....

" எவ்வளவு "" bore " அடிக்கிறது  இந்த "ABC ".....அந்த நாட்களையும்  , காற்றையும்  , மழையையும்  நான் " மிஸ்" செய்கிறேன்.....

மழை...ஆஹா  மழை....
நான் ஒரு நாள் படம் வரைந்துக்கொண்டு இருந்தேன்..அப்பொழுது  இடியும்  மின்னலுடன் மழை பெய்தது...பயத்தில்  நான் நடுங்கினேன்...கொஞ்சம் தண்ணீர் கொட்டி   நான் வரைந்த  படம்  பிசகி வண்ணங்கள் வெளியே வந்து  விட்டது....."


தன்   அம்மாவிடம் ,
"
மேலே வானத்தில்   மழை காரணமாக  இப்படித்தான் அம்மா ....வானத்தில் நிறங்கள் தெளித்து கொஞ்சம் பிசகி இருக்கிறது..."
 என்று சொல்கிறான்..

" கண்ணா ...நீ சொன்னது தாண்டா   கவிதை....நான்  இதை என் கவிதைப்புத்தகத்தில் குறித்து  வைத்துக்கொள்கிறேன் "...

[ டேய் உன்னை படம் வரையச்சொன்னால்   , தரை எல்லாம்  color  சிந்தி  நாசம் பண்ணி  வச்சு  இருக்கியேன்னு திட்டப்படாது! என்று  சொல்ல வருகிறார் போலும் ஆசிரியர் ]
" அம்மா இப்படிதான்  நிறைய கவிதை எழுதி வைத்து இருக்கிறார்கள் ...."

" அம்மா  கவிதைன்னா  என்ன"..

" அதுவாடா கண்ணா....கவிதைகள் நம் நினைவில் படங்கள்  வரையும்...மனதில் பாட்டுப்  பாடும்...

நீ கொஞ்சம் நேரம் முன்ன  சொன்னதுதான்  கவிதை......"

அம்மா இன்னும் சொன்னார்கள்.....

"கவிதை நம் மனதில் இருக்கும் வலியினையும் [pain ]  ,அழகானவற்றையும்  அல்லது  உனக்கு புரியாத  ஒன்றையும்  வார்த்தைகளாக  மாற்றும்  ஒரு வழி "........

" முழுசா  புரியலை அம்மா "

"சொல்கிறேன் கேள் .....நிறைய பேர்  கவிதை அல்ப்பம் [ "SILLY "] என்று நினைப்பார்கள்......ஆனா
அவை முத்தங்கள்  போன்றது....சின்ன  சின்ன  அர்த்தம்  இல்லாத ஆனால்  அழகானவைகள் ..ஆனால்  அதற்கு மதிப்பே இல்லை ...."


" அப்படியா...கவிதைன்ன  முத்தங்களா.....அப்போ எனக்கு  பிடுக்குமே...!"


இப்படி போய்க்கொண்டே இருக்கிறது  இந்த கதை..
கவிதைக்கு  இதை  விட என்ன  விளக்கம்  வேண்டும்!


இதன் ஆசிரியர் " martine  audet " என்பவருக்கு என் சலாம் !
புத்தகத்தின் பெயர் " MARTIN on  the  moon ".

இப்படி  பிள்ளை  கேட்கும் கேள்விக்கு பல நேரம்  பதில் சொல்ல  முடிவதில்லை......ஆனால் கோபப்படாமல் பொறுமையாக  பதில்  சொல்லியே  ஆக  வேண்டும்,,,,இரண்டு  மூன்று முறை கோவித்துக்கொண்டால் ,  கேள்வி கேட்கக்கூடாது என்று அவர்கள் மனதும் உலகமும் சுருங்கி விட அதிக வாய்ப்புண்டு..எனக்கும்தான் இதை நான் திரும்ப சொல்லிக்கொள்கிறேன்...
அவர்கள் கற்பனை சக்தியினை பெருக்க நாம் துணை  இருக்கவேண்டும் ...
வேறு யாரிடம் கேட்க முடியும்..


நான் அப்பா அம்மாவை கேட்ட சிலவை இங்கே..

" எப்படிம்மா  பொறந்தேன் நான்....

அக்கா /அம்மா :  " நம்ம வீட்டுக்கு வர்ற ஆப்பிள் காரிகிட்ட இருந்து வாங்கினோம் உன்னை"

இன்னொன்னு  "extrava"  வாங்கி  இருக்க வேண்டிதான்னு இப்போ  கேக்கத்தோணுது !எனக்கு தம்பியோ தங்கையோ....

இன்னொரு நாள் , அலைச்சலுடன்  வந்த அப்பா கைக்கடிகாரம் கழட்டிக்கொண்டு இருந்தார்கள்...

" எப்படிப்பா english   புரிஞ்சுக்கறது.."

" இங்கிலீஷ் வார்த்தைய  , உன்  மூளை   தமிழில் translate  செய்யும்   , அப்படி புரிஞ்சுப்ப "

"நமக்கு ok  பா .....மத்தவங்க எல்லோருக்கும் தமிழ் தெரிஞ்சா தான இந்த translation  நடந்து புரிய  முடியும்....அவங்க எல்லாம்  என்ன செய்வாங்க?".

அப்பா  ஏதோ யோசித்து விட்டு அமைதியாக  இருந்து விட்டார்கள்.....

நானே இப்படி  கேட்டு  இருந்தாதால்  , என் மகள்  என்னவெலாம்  கேக்க போகிறாள்  என்று தயார் நிலையில்  இருக்கிறேன்!

இப்போவே  என்னைத்  திருப்பி  படம் பார்த்து கதை கேட்கிறாள் ...நாளை  என்ன கேப்பானு தெரியலை..

ஆனா  இருக்கவே இருக்கு  ஒரு technique ...நம்ம  கல்லூரிகளிலும் செமினார்களிலும் கேட்டு வாங்கிக்கொண்டது தான்..

"VERY  good  question ....I   will  get  back  to  you  in  person "!....

ஒரு பக்கம் அது சிரிப்பூடுவதாக இருந்தாலும், நமக்குத்  தெரியவில்லை என்று  கோபப்படுவதை விட   இது நல்லது.பொறுமையாக  விடை தேடி  அவர்களுக்கு அதன்  பதில்  சொல்ல வேண்டும்  , அல்லது  சிந்திக்க  வைக்க வேண்டும்.அவர்கள் படைப்பாற்றல் நசுக்கப்படாது . அதை விட முக்கியம்  நம்மிடம் அவர்களுக்கு நம்பிக்கை வரும் , எதையும்  கேட்கலாம் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று.


நாமும் புதிதாக  சிலவற்றை தெரிந்துக்கொள்ள  ஒரு சந்தர்ப்பம்  என்று கூட  பார்க்கலாம் அல்லது  மூளை நமதுப்போகாம இருக்க உதவும்!


அன்புடன்,
செம்மல்  க .



Sunday, November 9, 2014

இந்தியச்சுற்றுலா : பாதுகாப்பும் சுகாதாரமும்

சுற்றுலா  சென்றால் உயிரோடு வருவோமா ?

சமீபத்தில் சாய் பாபா ஆசிரமத்தில் தங்கி  இருந்த ஒரு ஆஸ்திரேலியா நாட்டு பாட்டியினை காணவில்லை. "embassy"  மூலமாக இரண்டு மாதங்களுக்கு பிறகு கண்டுபிடித்ததில் , 20000 ரூபாய்க்காக [ அது கோடியாக கூட  இருக்கட்டும் ] , கொலை செய்யப்பட்டது தெரியவந்து  உள்ளது. செய்தது அந்தத்  தங்கும் இடத்தின் காவலாளி [ watchman ].வெளி நாட்டில்  இருந்து  வரும் 75 வயது பாட்டியினையும் விட்டு  வைக்க வில்லை நம்மவர்கள்.

ஆக்ரா அருகில் சில வெளிநாட்டவர் சுற்றுலா வந்த பொழுது , குடும்பத்துடன் தாக்கப்பட்டனர்  சென்ற வருடம். சில நாடுகளில் இந்திய  சுற்றுலா செல்வது பாதுகாப்பு இல்லை என அறிவிற்கும் அளவிற்கு கொண்டு சென்று  உள்ளது இந்த  மாதிரிச்  செயல்கள்.

இன்னொரு  சம்பவம் . நடந்து  நிறைய  வருடங்கள்  ஆகிவிட்டது.. ஆனால்  மறக்க முடியாது. முக்கிய பத்திரிக்கை ஒன்றின்  முன் பக்கச்செய்தியாக வந்து  இருந்தது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மகாபலிபுரம் செல்லவேண்டும்  என்று ஒரு வெளிநாட்டவர் கட்டணம் பேசியுள்ளார் . ஆட்டோவிலேயே மகாபலிபுரம் வந்து சேர்ந்து  இருக்கிறார் .பேசியபடி 500 Rs  நீட்டியவருக்கு
அதிர்ச்சி .

"அய்ய  , 500 ரூபா  எவனுக்கு  வேணும். 500 டாலர்ஸ்  கொடு துரை  "...

இது நடந்து  இருபது வருடம்  இருக்கும். வெளிநாட்டவருக்கும்  அதை தலை சுற்றும் பணம் தான். மாத  சம்பளமே 3 அல்லது  நான்கு  ஆயிரம்  இருக்கலாம் அப்பொழுது. ஆடோககாரர்கள் செய்த கலாட்டாவினில் பணத்தைக்கட்டிவிட்டு ,வந்த இடத்தில் முதல் அனுபவமே மோசமாக  இருக்க  , நேராக சென்று " embassy " யில்  புகார் கொடுத்து விட்டார் .

இதனை அவர்கள் நாட்டு " மீடியா"  சும்மா  விட்டு இருக்காது.


என்ன  விதமான கண்ணோட்டத்தை கொடுத்து  இருக்கிறோம்  நாம்????

சின்ன நாடுகள் பல பெரிய அளவிற்கு பார்க்கும் இடம் இல்லையென்றாலும்  ,
செயற்கை முறையில் , "theme  parks " மற்றும் இதர வசதிகள்  மூலமாக  சுற்றுலா வருமானத்தை பெருக்குகின்றன. அரசாங்கமும் சுற்றுலாத்துறை வருமானத்தை ஒரு தீவிரமான அங்கமாக எடுத்துகொள்ள வில்லை  என்றுதான் தோன்றுகிறது . முக்கியமான சுற்றுலா இடங்களில்  கூட சுகாதாரம்  இல்லை.நம் நாட்டை  வந்து பார்த்துச்செல்வோர் வெளியே சொல்லும்  நற்செய்திதான் [ word  of  mouth ] . அடுத்தவர்களை வரத்தூண்டும்.


செயற்கையாக யார் வேண்டுமானாலும் " malls " மற்றும்  தீம்  பார்க்குகளும் கட்டலாம் .

தாஜ்மஹாலின் காதலையும், தஞ்சைப்பெரியக் கோவிலின் கம்பீரத்தையும் ,
ஹிமாச்சல பிரதேசத்தின் மலைக் காட்சிகள் கொடுக்கும் ரம்யத்தையும் , நெல்லை காந்திமதி அம்மன் நெல்லையப்பர் கோவிலில் உள்ள சப்தஸ்வர  தூண்களின் இசையினையும்  .மெரீனா பீச்சின்  கரையோர அழகையும் அலையின் பேச்சையும், ஆழப்புழாவின் " back  water " படகு வீடுகளும் , குற்றாலம் , "jog  falls " போன்ற நீர்வீழ்ச்சிகளின் ரீங்காரத்தையும் , வைரமுத்து  அவர்களின் கவிதை வரிகள் சொல்வது போல்  "புது வெள்ளை மழையாக " காட்சி தரும் இமயத்தையும் ,  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு   தன்  சிற்பங்கள் வாயிலாக கூட்டிப்போகும் மாமல்லபுரத்தையும் ,  அழகிய  கோவில் சிற்பங்கள் நிரம்பி வழியும்  ஹொய்சாலா அரசாட்சியின் 800 வருட கலாசாரத்தைப்  பறைச்சாற்றும் " ஹளபேடு " கோவில்களையும்   , ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற கோட்டைகளையும் ,
அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கசெயும் "குத்துப்  மினாரையும்"  , மொகலாய ஆட்சியின் சாட்சியாக  நிற்கும் கோட்டைகளையும் , மைசூர் அரண்மனையின் விசாலத்தையும் செழுமையினையும் . அபூர்வ  விலங்கினங்கள் பலவற்றையும் கொண்ட காடுகளையும் தன்வசம் கொண்டது  இந்தியா .

மேற் சொன்ன  பட்டியல் சீனப்பெருஞ்சுவர் போல  இன்னும்  நீண்டுக்கொண்டே போகும் .பார்த்து முடிக்க  வெளிநாட்டவருக்கு எத்தனை முறை இந்தியா வர வேண்டி  இருக்கும் ?!!


இதனை  நான் சொல்லக்காரணம் உண்டு.
மேல நான் சொன்ன பட்டியல் போல   எனக்குத்  தெரிந்து எந்த நாட்டிலும் கிடையாது. அதாவது ,இவை சில நாடுகளில் தனித்தனியே  கிடைக்கலாம்  ....
ஆன்மீகமும் , மலையும்   , கடலும் , காடுகளும் , பனியும் , வெயிலும் , கலாச்சாராமும் , பழமையும்  ஒரே இடத்தில கிடைக்காது .இருந்தால்  சொல்லுங்கள்.

இவை அனைத்தையும்  வைத்துக்கொண்டும் , சிங்கப்பூர்  , துபாய்  போன்ற நாடுகள் ஈட்டும வருவாய்  கூட  நாம்  ஈட்டவில்லை என்பது வருத்தம்தான்.


ஒரு சிறிய புள்ளி விவரம்:

துபையின் சுற்றுலா வருமானம்:

27 பில்லியன் டாலர்கள் .

இந்தியா :

18.45 பில்லியன் டாலர்கள் 

அராசங்கம் மட்டும் அல்ல. சுற்றுலா என்பது பலருக்கு வாழ்வாதராமாக இருக்கிறது  , இருக்கும்.

தமிழ் நாட்டு கால்கள் நெய்த பட்டுத்துணியும்   , மணிப்பூர் மேகாலயாவின்  விரல்களும்  செதுக்கிய  கை வினைப்பொருட்களும்  வாங்க பல  நாட்டவர் காத்துக்கிடக்கின்றனர் .

மெரினா பீச்சில் சூடாக பஜ்ஜி விப்பவர் முதல், கன்னியாகுமரியின்  கடல் ஓரத்தில் கிழிஞ்சல்கள் விற்கும்  பாட்டிக்கும் , கொடைக்கானலில் "cycle "
வாடகை  விட்டு பொழப்பை நடத்தும் கடைக்காரருக்கும் , காஷ்மீரில் படுகு சவாரி செய்விக்கும்  தாத்தா விற்கும் ,  5 star  ஹோட்டலில் பரிமாறும்  சர்வர்  வரை   பலரின் வாழ்வாதாரம் இந்த  சுற்றுலாதான்.

இது  வரை எதையும் செய்ய வில்லையா  என்கின்ற  கேள்வியும் வரும் .
பதில் இருக்கிறது  அதற்கும். நல்ல சுகாதாரமும்  , வசதியும் , " hassle  free " பயண அனுபவத்தையும் கொடுக்கும் 5 ஸ்டார் தங்குமிடங்களும் , அதைப்போன்ற  " travel  agency " களும்  இருக்கத்தான் செய்கின்றன .
ஆனால் அவை  வெளிநாட்டு மக்களுக்கும் அவர்கள்  நாட்டு பண மதிப்பிலும்
அதிகம்  தான். நாம் பார்க்கும்  வெளிநாட்டவர் கூட்டம்  பெரும்பாலும்  அங்கு  உள்ள பணக்காரர்களாகத்தான் இருக்கக்கூடும் . வெளி நாட்டில் வாழும்
நடுத்தர மக்களும் நிறைய இழுக்க நம்முடைய  அரசாங்கம் தலை  இட்டு மாற்றம் கொண்டு வந்தால் தான் முடியும்.

சுகாதாரமும்  , சரியான கழிப்பிடமும்  , கொடுத்த  காசிற்கு  நம்மை ஏமாற்ற மாட்டார்கள்  என்ற நம்பிக்கையும்  , இவை எல்லாவற்றையும் விட வந்து சென்றால் உயிரும உடைமையும் பாதுகாக்கப்படும்  என்ற  உணர்வும் கொடுப்பது  நமது அரசாங்கத்தின் மட்டும்  அல்ல  , அனைவரின் பங்களிப்பும் அவசியம்.

சரி அரசாங்கம்  என்ன செய்யலாம்.

அமெரிக்காவில் உள்ள "grand  canyon "   இடத்திற்கு சென்று வந்த அனுபவம்  உண்டு  ஒருமுறை....அத்தனை சிறந்த  இடம் என்று சொல்ல முடியாது.
" trekking " போவோருக்கு அதிகம் பிடித்தமாக   இருக்கும்.
ஆனால்  அதற்கு வரும் கூட்டம் தலை சுற்றும் அளவிற்கு  இருக்கிறது.
எல்லாம் "மார்க்கெட்டிங் " மாயாஜாலம்.

ஒரு சின்ன உதாரணம் தருகிறேன் .
அந்த  இடத்தை  சுற்றிப்பார்க்க , ஹெலிகாப்ட்டர் சவாரி ஏற்பாடு செய்து உள்ளன சில தனியார்  நிறுவனங்கள்.இது அந்த இடத்தை இன்னும் சிறப்பாக்குகிறது. இது தனியார்  வசம்  இருந்தாலும் , சுற்றுலா வருகையினை கூட்டிட வேண்டி செய்யப்பட்ட ஒரு முயற்சி ஆகும்.
அரசாங்க  ஒத்துழைப்பு வேண்டும்  இதற்கும் வான் வழி பயணம்  என்பதால்.
மேலும்  அழகிய " view  points " கட்டி  வைத்து  இருக்கிறார்கள் . இது அரசாங்கத்தின்  வேலை தான்.மற்றும்  குப்பை இல்லாம் இடத்தை  அழாக பராமரிக்கிறார்கள் . படு சவாரியும்  உண்டு.

" Trekking " செல்வோருக்கு சரியான வழிகாட்டு  முறைகளும் பாதுகாப்பு  ஏற்பாடுகளும் அரசாங்கம் பார்த்துக்கொள்கிறது.இது ஒரு முக்கியமான  காரணம்.

இவை எல்லாம்  சேர்ந்து இந்த இடத்தை இன்னும்  சிறப்பான சுற்றுலாத்தலமாக மாற்றி  இருக்கின்றது .

பொது இடங்களில் துப்பாமலும் ,  மற்ற அசிங்கங்கள் செய்யாமலும் ,  இருப்பது பொது மக்களின் கடமை. இவை  அனைத்தையும் விட பாதுகாப்பு அளிப்பதிலும் பொது  மக்களின் பங்கும் உண்டு .

சில வருடங்கள்  முன்பு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பயணத்தின் முடிவில்  சென்னை விமான நிலையத்தில் கண்டது கீழ வரும்  காட்சி.

தூரத்தில் உறவினர்  கை  காட்டிக்கொண்டு  இருக்க , பிரிந்த  சோகம்  களைந்து பெட்டி   படுக்கைகளை [ சாமான்களை!]  சுருட்டிக்கொண்டு வேகமா  ஓடி வந்த ஒருவர்,

" ஒரு நிமிஷம் வந்துடறேன் " என்று சொல்லியவாறே.
விமான நிலையத்தை ஒட்டிய நடைபாதை மீது துப்பிவிட்டு வந்து,
" எத்தனை நாட்கள் ஆயிற்று " என்கிறார் ...........

Saturday, November 8, 2014

Unspoken / Undervalued Cine hero

சில நாட்களுக்கு முன்பு  இயக்குனர்  வசந்தின் " Rhythm " படத்தினை மீண்டும் பார்த்தேன் . செல்லுலாய்டில் ஒரு கவிதை அந்தப்படம் என்று சொன்னால் மிகையாகாது .

ஆனால்  இந்தப்பதிவு படத்தைப்பற்றி அன்று.

படத்தின்  நாயகன் " action  king " அர்ஜுன் பற்றி.
 அர்ஜுனின் சார்ஜாவின் ," mellowed  down subtle  " நடிப்பினை நாம் எத்தனை முறை கவனித்து  இருப்போம் என்று தெரியவில்லை. அந்த "விடோவேர்" பாத்திரத்திலும் "bomb  squad " மற்றும் " journalist " பாத்திரத்திலும் பன்முகம் கொண்ட  நடிப்பினை வெளிப்படுத்தி  இருக்கிறார் .  , "action king"  என்ற  பெயர் அதனை நம்மை  சரியாக  கவனிக்க வைக்காமல் கூட செய்து இருக்கலாம் .

 டைரக்டர் வசந்திற்கு ஒரு சலாம் இந்த பாத்திரத்துக்கு அர்ஜுனை தேர்வு  செய்தமைக்கும் , நடிக்க  வைத்தமைக்கும் .

"gentleman"  படத்தில் கிச்சா கேரக்டர் , ...
 வெளியே  சாந்தமும்  , உள்ளே ஒரு எரிமலையின் சூட்டையும் சுமந்துக்கொள்ளும் அந்த  பாத்திரம் , என்றைக்கும் மனதில் விட்டு விலகாது.இப்பொழுது  என்னால் வேற யாரையும்  நினைத்து  பார்க்க முடியவில்லை " கிச்சா" வாக .

சமயங்களில்   ஒரு கதைக்கு  இதை விட அதிகமான "star  value " கொண்ட  ஒரு நடிகனை அணுகி , ஏதோ காரணத்தினால் வேண்டாம் என்று சொல்லப்பட்டு , பின்பு அர்ஜுனுக்கு சென்றதாக படித்து உள்ளேன்  .அல்லது  ஒரு படத்திற்கு  ரொம்ப நாட்கள் [ gentleman ,முதல்வன் ] செலவிட  வேண்டும் என்கின்ற சூழ்நிலை ஏற்படும் பொழுது  , அர்ஜுன் அந்த சவாலுக்கு தயாராகி நடித்து  இருப்பதாக நினைக்கிறேன் .

கொஞ்சம் கன்னடம் வாசனை கலந்த தமிழ் பேசினாலும் அதில் ஒரு  நேர்த்தி இருக்கத்தான் செய்யுது. 

ஒரு சம்பவம்   நியாபகம்  வருகிறது , படத்திற்கு  வெளியே.
நான் முதலில் வேலை பார்த்த நிறுவனத்தில் , கொஞ்சம் கூச்ச சுபாவம்  கொண்ட பிரகாஷம் என்னுடன்  ஒரு நாள் மதிய வேளையில்  பேசிக்கொண்டு  இருந்தார். சினிமாவில் எனக்கு  எந்த நடிகரின் "dancing style " பிடிக்கும்  என்று கேட்டார். விஜய் தான் என்று சொன்னதாக  நியாபகம்.
அவர் சொன்னது  அர்ஜுன் ! என்னை சற்று  கூர்மையாக பார்கச்சொன்னார் .
அப்பொழுது  மறந்த நான் , சமீபத்தில்  " காற்றே  என் வாசல் வந்தாய் " பாட்டில் அதனை கவனித்தேன்.   அர்ஜுனுக்கு என்று  ஒரு  ஸ்டைல்  இருக்கத்தான்  செய்கிறது.

கடைசியாக , என்னுடைய " all  time  favorite " படங்களில்  , முதல் பத்திற்குள் எப்பொழுதும்  மாறாத  "குருதிப்புனல் " படத்தில் , வேகமும், நேர்மையும் , கோபமும்  ஒன்றுசேர தேவைப்பட்ட " அப்பாஸ் " பாத்திரத்தில் நடித்ததில் , அதே  பாத்திரத்தை  , "drohkaal " ஹிந்தி  படத்தில் செய்த " Legend nasaruddin  shah " வைக்காட்டிலும்  அந்த  பாத்திரத்தில் அர்ஜுனே பிரகாசம் செய்தார் என்பது  என் கருத்து. நேரம்  இருந்தால் " drohkaal " பாருங்கள் தெரியும்.


Friday, November 7, 2014

கருப்புச்சட்டையும் அம்னீசியாயும்

கருப்புச்சட்டையும்  அம்னீசியாவும்  :

வாரக் கடைசிகள் மிகவும் போர் தான் நண்பர்கள் இல்லாத புது ஊரினில்.
அப்பொழுதுதான் வேலைக்கு சேர்ந்து  மூன்று மாதங்கள்  இருக்கும் , பெங்களூருவில் .நண்பர் வட்டம்  இன்னும் சரி வர அமையவில்லை வெற்றிக்கு .
10*8 அறையில் இரு கட்டிலுடன்  இருக்கும் P .G  ல்  இரண்டு நாட்களை கழிக்க வேண்டும் .இதில் ரூம் மேட் இரவில்  வேலை செய்யும் கால்  சென்டரில் வேலை பார்ப்பவர் . பேசிக்கொள்ளும் சந்தர்ப்பம் மிகக்குறைவுதான் .

"இந்த வாரம் இங்கே இருந்து பழகலாமா   இல்லை ,ஊருக்கு  போவோமா  ?  வாரா வார அலைச்சலும் செலவும் வேண்டுமா ?"எனக்குழம்பியவாறே மதியம் சாப்பிட்டு முடித்தான்.

வெள்ளிகிழமை 5 மணிக்குதான் சென்னைக்கு போகவா வேண்டாமா என்ற குழப்பத்தில்  இருந்து  விடுபட்டு , போய்விடுவது என்கிற முடிவுக்கு வந்தவுடன் , அவசரமாக  பஸ் பிடித்து மெஜெஸ்டிக் வந்து சேர்கிறான்.
எப்பொழுதுமே வெள்ளிக்கிழமைகளில் பெங்களுரு -சென்னை பஸ் கூட்டமாகத்தான் இருக்கும் , அன்றைக்கும் விதிவிலக்கு இல்லை.

கொஞ்சம் சொகுசான KSRTC  பஸ் இனி  கிடைக்காது என உணர்ந்தும்   , தனியார் பேருந்தும் யானை விலை  சொல்வார்கள் எனத்தெரிந்ததாலும்  , தமிழ் நாடு போக்குவரத்தில்   டிக்கெட் வாங்கும் பெரிய வரிசையில் சென்று நின்றான் . கூட்டம் இங்கே ஒரு அளவிற்கு தேவலை . அரை மணி நேரத்தில் டிக்கெட் வழங்கும் இடத்திற்கு அருகில்  வந்து விட்டான். டிக்கெட் கொடுப்பவரிடம்  பணம்  கொடுக்க முனைந்த  பொழுது, " can  you  get  one  for  me  as  well  bro , in  a  hurry " எனறு  ஒரு  குரல்  கேட்டது.  ஸ்டைல் ஆக ஒரு இளைஞன்  , காசை நீட்டிக்கொண்டு நின்றான்.

"எல்லோருக்கும் தான் அவசரம் , அப்புறம் மற்றவர்கள் எல்லாம் பொழுது  போகமாலா அங்கே  நிற்கிறார்கள் " என அவன்  நினைத்து முடிப்பதுற்குள் , "reservation  form " என்று உள்ளே இருந்து குரல் வந்தது. "சாரி" என்று அடுத்தவனிடம்  சொன்னது  கூட கேட்டு இருக்காது  என நினைத்தான்   . டிக்கெட்  வாங்கி விட்டு அவனை திரும்பிப்பார்த்த வாறே நடந்தான் . வரிசை மீறுபவர்களை அவனுக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை என்பதை அவன் முகபாவேமே காட்டிக்கொடுத்தது .கேட்டவனும்  வரிசையில் நின்றுக்கொண்டு  தான் இருந்தான் இப்பொழுது  வழி இல்லாமல். 

ஐந்தாம் நம்பர் பிளாட்பாரம் எங்கு இருக்கிறது என்பதைத்தேடி , கையில்  ஒரு தண்ணீர் பாட்டிலுடன் வந்து பஸ்சினுள் நுழைந்தால் , எல்லா  இடங்களிலும் ஆட்கள்  இருந்தது  போலத்தான் இருந்தது முதலில் அவனுக்கு . 
கடைசி வரிசையில் இருந்து ஒருவர் கை காண்பிக்கவும் , குலுக்கல்  சீட்டை நோக்கிப்போய் உட்கார்ந்தான் .இன்றைக்கு நல்ல "roller  coaster "   பயணம் தான் போல என நினைத்தவாரே கையினில் இருந்த  போன வார விகடனை புரட்டிக்கொண்டு  இருந்தான், காதில்  ஹெட் போனில், " பறவையே எங்கு  இருக்கிறாய் " என்ற  இசை ஞானினியின் குரல் ஒலிக்க   , சூழலை மறந்த  நிலையில்  இருந்தான்.

"excuse  me  , can  you  move a  bit " என்ற குரல் , யாராக இருக்கக்கூடாதென்று நினைத்தானோ அதே சற்று முன் டிக்கெட் வாங்கிதரச்சொன்னவன் தான்.
இது என்னடா  கொடுமைன்னு நினைத்த  வாறே, நகர்ந்துகொண்டே , முகத்தை பார்க்காதவாறு புத்தகம் படிக்கத்தொடங்கினான் .

"Hello , I  am Avinash" என  கையை  நீட்டினான் . இவன் தன்னை  அடையாளம் கண்டானா இல்லையா  என்ற குழப்பத்துடன்  , "Hi , I am vetri" என சங்கடத்துடன் கை குலிக்கினான் .

" தமிழ்தானே , பாட்டு கேட்டது  உங்க  ஹெட்  போனிலிருந்து .சென்னையில்  எங்கே ?"

" ஆதம்பாக்கம், கிண்டி பக்கத்துல , நீங்க?"

" நான் அண்ணா  நகர் , இங்க  C  A  பண்ணிட்டு இருக்கேன் , நீங்க?"

" நாங்க இங்க விப்ரோல  இருக்கேன் , VLSI  hardware  ல இருக்கேன் ".

சற்று நேரத்தில்  , தயக்கங்கள்  சற்று விலகி  நன்றாக  பேசத்தொடங்கி  இருந்தனர் .

இவனுக்கு  மனதுள்  குழப்பம்  இருக்கத்தான் செய்தது.

" நம்மளை  அடையாளம் காணாமல்  தான்  இப்படி  பேசறானா , இல்லை easyaa  எடுத்துக்கொண்டானா ?. சொல்லிவிடுவோமா ?"  என  யோசித்துக்கொண்டே  பேசிக்கொண்டு வந்தான் .

நான்  இங்க வந்து மூன்று வருடங்கள்  ஆகிறது போன்ற விசாரிப்புகள் முடிந்து, அரசியல், இளையராஜா  இசை என்று  நிறைய பேசிக்கொண்டு  வந்தார்கள்.

"எனக்கு இந்த IT   பிடிக்காது , அதான் +1 போதே காமர்ஸ் குரூப் எடுத்து, B  COM  பண்ணிட்டு  , C  A  படிக்க  வந்துட்டேன் . எப்படித்தான் அந்த கம்ப்யூட்டர்ல   நாள் எல்லாம் "code " பண்ணிட்டு  இருப்பீங்களோ ?" என்றான் அவினாஷ்.

" நான் software  engineer  இல்லை ,இதிலும் கம்ப்யூட்டரில் தான் வேலை . ஆனால் கோடிங் கம்மிதான் . சுலபமா  சொல்றதா  இருந்தா நீங்கள் பேசிட்டு  இருக்கும்  phonela  இருந்து  , tablet  , கம்ப்யூட்டரின்   CPU  , PS4 கேம்ஸ் , காரின்  airbag  கன்ட்ரோல்  போன்ற  எல்லாவற்றிற்கும் உள்ளே ஒரு "மைக்ரோசிப்" இருந்து எல்லாவற்றையும் கன்ட்ரோல்  செய்யும் . அந்த  "சிப்" செய்யும் வேலையில்  இருக்கிறேன் ".

"Interesting .இப்படிதான் ஒரு  " voltage  difference  " இருக்கணும், நம்மளோட "field  knowledge" ல. அப்போதான்  தகவல்  இங்கேயும் அங்கேயும் போய்  வரும் ! என்ன நான் சொல்றது சரிதானே! எனக்கும் கொஞ்சம் சயின்ஸ்  தெரியும் " எனச்  சிரித்தான் அவினாஷ்.

இரவு  நேர உணவு முடிந்து , "குட் நைட் " சொல்லிப்படுத்தாகிவிட்டது..

இவன் மண்டையில்  மட்டும் குழப்பம் இன்னும் தீரவில்லை." நல்லா  பேசிட்டு இருக்கானே, நட்பு தொடரும்னு  நினைக்கறேன் , ஒரு வேளை  டிக்கெட்  வாங்கி கொடுத்து  இருக்கணுமோ ? " என அவன்  மனம் குழப்பியது.

" ஒரு வேளை  நம்பர் கேட்டான்  என்றால் , சொல்லி விட வேண்டிதான் , அது  நான்  தான் என்று .தான்  செய்ததில் தவறு இல்லை , அவன் கேட்டது  தான் தவறு  " என சமாதனம் செய்துக்கொண்டு  தூங்கிப்போனான் இவன் .

 மறு நாள்  காலை கண் விழித்த  பொழுது  , அவினாஷ்  பையினை   மாட்டிக்கொண்டு தயாராக  இருந்தான் . பூந்தமல்லியில்  இறங்குவான்  போல.கிண்டிக்கு  கொஞ்சம்  தூரம்  இருப்பதால் , கண்ணை கசக்கிக்கொண்டே அவினாஷ்   பக்கம்  திரும்பினான் .

 கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் , " நேற்று டிக்கெட்  வாங்கும் இடத்துல கருப்பு  சட்டை  மாட்டிக்கொண்டு , உங்களைப்   போலவே  ஒருத்தனை  பார்த்தேன்.டிக்கெட்  வாங்கித்தர மாட்டேன்னு  சொல்லிட்டான் ..
அது நீங்களா?"


இவன் :  !!!??????.................

l


Wednesday, November 5, 2014

ரேஷன்கடைத்திருடன் :

ரேஷன்  கடைத்திருடன் :

ஊடகங்களிலும் , சதுரங்க வேட்டை போன்ற படங்களிலும் பல விதமான நூதன ஏமாற்று வேலைகளை படித்தும் பார்த்தும் இருக்கிறோம்.

அப்பொழுது  நான்  நான்காவது படித்துக்கொண்டு இருப்பேன்  என நினைக்கிறேன்  . கிரிக்கெட்  மட்டையுடன் விளையாட  ஆள் கிடைக்க மாட்டார்களா  என , " மால்கம்  மார்ஷல் " போல வேகப்பந்து பௌலேர் ஆகணும்னு வெறியோட  சுற்றித்திரிந்த நாட்கள் .அரைப்பரிட்சை விடுமறை.மழை நன்றாக பெய்து  எப்பொழுதும் போல ஏரி   நிரம்பி , மதகு  உடைக்கப்பட்டு தெருவெங்கும் தண்ணீர் , நாங்கள் எப்பொழுதும் விளையாடும் அரசாங்க பொது விளையாட்டு திடலிலும் தான்.

விளையாட இடம்  இன்றி நாங்கள்  தேங்கிக்கிடக்கும் நீரினில்  கற்களை வீசி எரிந்து  விளையாடுவோம் முழுவதுமாக மூழ்குவதர்க்குள் ,  எத்தனை  முறைவேகமாக நீரினைக்கிழித்து மூழ்கியும் , வெளியே வந்தும் போகிறது  அந்தக்கல் என்ற எண்ணிக்கை  விளையாட்டு விளையாடிக்கொண்டு இருந்தோம். கல்லினை சரியான கோணத்தில் சாய்த்து அடிக்கும் இலகுவும் , வீரியமும் சேர்ந்து தூரத்தையும் , வெளியே வந்து போகும  எண்ணிக்கையையும் தீர்மானிக்கும் .

பத்திற்கு மேல்  வரச்  செய்வது  எனக்கு பழக்கம் ஆகிவிட்டது. எங்கள் போட்டியினை , மெலிந்த தேகத்துடன்  ஒரு 25 வயது மதிக்க தகுந்த ஒருவன் சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்தான்.

" நல்ல அடிக்கறடா  தம்பி " என்று பேச்சு கொடுத்தான்.எனக்கு ஒரே பெருமிதம்.

" கிரிக்கெட் விளையாடுவையா .நல்ல பௌலெரா வருவ.விடாம  பிராக்டிஸ் செய்" என்று சொன்னதும் எனக்கு அதில் இன்னும் தீவிரம் அதிகமாயிற்று.

"அப்புறம் தம்பி , வீடு எங்க இருக்கு. அப்பா என்ன பண்றாரு?."

" இங்க  தான் அங்கிள் .தோ  தெரியுதே  அந்த வீடு தான் " என்றேன்.

" சரி வா வீட்டுக்கு போவோம். அம்மா இருக்காங்களா  வீட்டுல..ஸ்கூலில் உன்னை கோச்சிங் கிளாசில் சேர்க்கச்  சொல்லி சொல்றேன் ".

"சரி அங்கிள் போலாம் " என்று அழைத்துப்போனேன் .

வீடு வந்ததும். அம்மாவை அழைத்தேன்.

" மாமி, நான் இங்க  பக்குதுல ரேஷன்  கடையில  வேலை பாக்கறேன்.தம்பி நல்ல பந்து வீசறான். ஸ்கூலில்  கோச்சிங்  சேத்து  விடுங்க.
அப்புறம் கிருஷ்ணாயில் உங்களுக்கு  எல்லாம் ஒழுங்கா   வருதா  ரேஷன்  கடைல ?"

" இல்லையே , கொஞ்சம் நாள் வெயிட் பண்ணச்  சொல்லி சொன்னாங்க ,கஷ்டமாத்தான்  இருக்கு " என்றார்கள் அம்மா.

" சரி மாமி , ரொம்ப பேருட்ட சொல்ல வேண்டாம். உங்களுக்கு தெரிந்த ரெண்டு மூன்று பேருக்கும் மட்டும் சொல்லுங்க.என்கிட்டே கொஞ்சம் இருக்கும்.வேலை பார்க்கிறவங்களுக்கு கொஞ்சம்  எக்ஸ்ட்ரா  உண்டு . ஒரு கேன் 7 ரூபா , வேணும்னா  சொல்லுங்க."

எப்பொழுதும்  உஷாராக  இருக்கும் அம்மாவும் , என்னை பற்றி அவர் புகழ்ந்து பேசியது நினைத்தோ , அந்த ஆளைப்  பார்த்தால்  ரேஷன் கடை பய்யன் போல இருந்ததாலோ நம்பி விட்டார்கள்.

" சரி இருங்க கேன்  எடுத்துட்டு வரேன்".

"டேய் அத்தையா  வீட்லயும் , அஜய் வீட்லயும்  நான் சொன்னேன்னு சொல்லி இங்கே வர சொல்லு" என்று என்னை அனுப்பி வைத்தார்கள்.

முடிவில் 3 வீடுகளில் இருந்து ஒரு கணிசாமான தொகை வந்ததும்  ,
" சரி , நீங்க எல்லாம்  இங்கேயே இருங்க , தம்பிய என் கூட அனுப்பி வையுங்க . கூட்டமா போனா  நல்ல இருக்காது." என்றான்.

அவன் பேசின வேகமும் தொனியும் எல்லோரையும் நம்ப வைத்தது போலும்.
எனக்கு சைக்கிள் முழுவதுமாக ஓட்ட  வராது . குரங்கு பெடல் அடித்த  வாறே அவன் பின்னையே சென்றேன். இரண்டு தெரு போன பின் , பேசிகிட்டே வந்த அவன் குரல் கேட்க வில்லை. வண்டிய நிறுத்தி  திரும்பிப்பார்த்தால்   ஆளைக்காணோம் .

எனக்கு ஒன்றும் புரியவில்லை.வீட்டிற்கு வேகமா வந்து அம்மாவிடம்
" அந்த அங்கிள் காணோம் மா " என்று சொன்னேன்.

கொஞ்சம் குழப்பங்களுக்கு பின் , எனக்கு எதுவும் திட்டு கூட  விழ வில்லை.
அம்மாவும்  , பக்கத்துக்கு வீடு ஆன்டி  களும் ஏதோ பேசிக்கொண்டார்கள்.

"சரி , வீட்ல யாரும் சொல்லி திட்டு வாங்க வேண்டாம்னு " ஒரு குரல் மட்டும் எனக்கு நியாபகம் இருக்கு!

இதில் என்னோட கிரிக்கெட்  கோச்சிங்  மேல வெறுப்பை கிளப்பி விட்டு  போன பாதகனை   எனக்கு என்றும் மறக்க முடியாது.

எத்தனையோ  திருட்டை கேள்வி  பட்டு இருப்பீர்கள்  இது  மண்ணெண்ணெய் மூலமா திருட்டு   அந்த நூதன  திருடனின்  திருவிளையாடல் இன்றைக்கும் என்னை வியக்க  வைக்கிறது. அந்த  நேரத்தில் பல்ஸ்  பார்த்து  , கிரிக்கெட் பிடிக்கும்னு  தெரிஞ்சு  அதை வச்சு கொக்கி போட்டது "மாஸ்டர்  ஸ்ட்ரோக் "


அந்த திருடனைப் பார்த்து  நான் கேக்க வேண்டிய ஒரே  கேள்வி ,

 நம்ம  கவுண்டர் சொல்வது போல ,
" என்னை பார்த்து ஏன்டா அப்படி ஒரு கேள்வி  கேட்ட" ங்கரத்தைப்போல ,அத்தனை  பேருக்கு மத்தில என்னை  எதுக்குடா  உன் திருட்டுக்கு   மார்க்கெடிங் மேனேஜர்  ஆக்குன  ?...