Thursday, January 8, 2015

IT துறையில் 40 வயதிற்கு மேல வேலை இல்லையா ....பகுதி 2

பகுதி ஒன்றில்   தகவல்  தொழில்நுட்பத்  துறையின் பணிமுடக்க  [layoff ]  காரணம்   பற்றி பார்த்தோம் [பகுதி  ஒன்றின்  லிங்க்  இங்கே

http://moongilkoodu.blogspot.com/2015/01/it-40-1.html
]

சரி  நிறுவனங்கள் லாபத்தைப் பெருக்க  ஆட்குறைப்பு  நடவடிக்கை
எடுக்கத்தான்  செய்கின்றன .
[
தற்போதைய  சூழலில்  தொழிற்சங்கங்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள்
பற்றி இணையத்தில் பேச்சு  அடிபடுகிறது  , என்ன  நடக்கப்போகிறது  என்று
நானும்  ஆவலாகத்தான் இருக்கிறேன் ]

 அது நடந்தால்  நன்மையே .

தற்போதைக்கு  இது  தான்  நிதர்சனம் என்று  வைத்துக்கொள்வோம் .இந்தக்  கசப்பை  ஏற்றுக்கொண்டு என்ன  செய்து  நம்மை  முடிந்த  வரை  காத்துக் கொள்ள  முயற்சி  செய்யலாம் என்று  பார்ப்போம் .
அல்லது  வந்து விட்டால்  எப்படி  வெளி  வருவது  பற்றியும் அடுத்து வரும்
பகுதிகளில்  பார்ப்போம்
ஆனால்  எக்காரணம்   கொண்டு  ஒடிந்து  போய் உட்காருவது உகந்தது  அல்ல. எல்லாவற்றிற்கும்  ஒரு  வழி  இருக்கும் .
சும்மா  சொல்லவில்லை, ;அனுபவத்தில்தான் சொல்கிறேன்.
 [ இது  பகுதி  மூன்றில்  வரும் ].

முதலில் எப்படி  நம்மை  எப்படி  இன்னும்  கூர்மையாக்கிக் கொள்வோம் என்பதைப் பார்ப்போம்.
முன்பே  பகுதி  ஒன்றில்  இதைப்  பற்றி  சில  வரிகள்  மெலிதாகப்  பார்த்தோம் .
இன்னும்  ஆழமாகப் பார்ப்போம் .
எந்தத்  துறையில்  வேலை பார்த்தாலும்  அதில் பல  துணைத்துறைகள்  அல்லது  கூறுகள்  இருக்கத்தான்  செய்யும் .

சாப்ட்வேர் என்று  பொதுவாக  பார்த்தால் , தேவைகளைத்   திரட்டுதல் [requirement  gathering .]   ,நிர்மாணித்தல் [architecting ],  வடிவமைப்பு   மற்றும் செயற்படுத்தல் [design  and  implementation  ] ,சோதித்தல் [ testing ] [சிலவற்றைச்   சொல்லியுள்ளேன் ] என்று  சில  கூறுகள்  இருக்கும்  .ஒவ்வொன்றும்  கடல்தான் . ஒவ்வொரு  தனித்துறைக்கும்  வல்லுனர்கள்  தேவைப்படுவர் .

நாம்  எல்லோரும்  கேள்விப்பட்ட ஒரு  கதைதான்  , ஆனால் இந்த  அமைப்பில்   சாலப்பொருந்தும் .

ஒரு  கப்பல்  ஓடவில்லை .எவ்வளவோ  முயன்றும்  பெரியக்கப்பலில் என்னக்  கோளாறு  என்று  யாராலும்  கண்டு  பிடிக்க  முடியவில்லை .
ஒருவன்  வந்தான் .   இந்த  போல்டை  சரி  செய்  என்று  சொன்னான் .
கப்பல் ஓடியது  மறுபடியும் . அவன்  சார்ஜ்  செய்த  தொகை  பல லட்சங்கள் .
என்ன  இது  ஒரு  போல்டை  சரி  செய்ய  இவ்வளவு  கேட்கிறாய்  என்று  அவனிடம்  கேட்டதற்கு , "போல்டை  சரி  செய்வதற்கு அதிமாக  கேட்கவில்லை , எந்த  போல்ட்  என்று  தெரிய  வேண்டும் அல்லவா  , அதற்குத்தான் "என்றான் .அவனுக்கு  பணம் கொடுக்கப்  பட்டது.

இதேப்போல்தான்  , நிபுணர்  ஒருவர்   இருந்தால்  , அவனும்  எந்த  போல்டை  எந்த  நேரத்தில் எந்த  பிரச்சனைக்கு சரி  செய்ய  வேண்டும்  என்று  தெரிந்து  இருக்க  வேண்டும் . அந்த  வேகமும் , துல்லியமும்தான்  அவனுடைய  சிறப்பு . இதை  தகவல்  தொழில்  நுட்பம் அல்லது  எந்தத் துறைக்கும்  பொருத்தி கொள்ளலாம் .

கம்பெனி கள் இப்படிப்பட்ட  ஆட்களையே  வைத்துக்  கொள்ள  விரும்புவர் .

மேற்கூறிய  ஒவ்வொரு  துறையிலும்  நுணுக்கமான  அறிவினைப்  பெற  முயல வேண்டும் .  குறிப்பாக  ஏதாவது  ஒன்றில் ஆழ்ந்த குறிப்பிட்ட  துணைத்துறை சார்ந்த அறிவினைப்  [ specific  vertical  knowledge ] பெற  வேண்டும் .அந்தக் குறிப்பிட்ட துணைத் துறையில் ஏதாவது சிக்கல்  வந்தால் உங்கள்  பெயர் தான்  நினைவில்  வர  வேண்டும் .அந்த  அளவிற்கு  அதைப்பற்றி
அக்கு  வேறு  ஆணி  வேறாக  தெரிந்து  இருக்க  வேண்டும் .

வேலை  சேர்ந்த முதல்  சில  வருடங்களுக்குள்  இது  போன்ற  ஒரு  குறிப்பிட்ட துறை  சார்ந்த  நுண்ணறிவினைப்  பெற்றுக்கொள்ள  வேண்டும் .

வேலை  நீக்கம் நடக்கும்முன்  கம்பெனியின்  உயர்  மேலதிகாரிகள்   ,உங்கள்
மேலாளரிடம் இடம்  ஒரு  பட்டியல் தயார்  செய்யச் சொல்லுவர் .எந்த  எந்த  வேலைக்கு  யார்  தேவைப்  படுவர்  என்ற  பட்டியல்  தான்  அது.

உதாரணம் பார்ப்போம் .

ஒரு  வீடு  கட்டும்  பணியினை  எடுத்துக்கொண்டால் , கீழ்வரும்  ஆட்கள்  வேண்டும்  என்று  ஒரு  கணக்கு  இருக்கட்டும் .

1) 10 சித்தாள்
2) 1 கொத்தனார்
3) 2 எலக்ட்ரீசியன்
4) 3 ப்ளும்பெர்
5) 2  பெயிண்ட்டர்கள்

இதில்   ஆட்கள் குறைக்க  வேண்டும் என்று  முடிவு  செய்யப்பட்டு ஒரு  பட்டியல் தயார்  சொல்லச்சொல்கின்றனர் ,அப்பொழுது  இதில்  யார்  கிடைக்க  கஷ்டம்  என்று  பார்ப்பார்கள் . சித்தாள்  வேலையினை  செய்ய  மலிவாக  ஆட்கள்  கிடைப்பார்கள்  என்று  முடிவு  செய்கின்றனர் . சிலரைக்  குறைக்கவும்   முடிவு  செய்கின்றனர் .

மிச்சம்  இருக்கும்  சித்தாட்களை  வைத்து  அதிமாக  வேலை  வாங்கி  சமாளிக்க  முடியும்  என  அவர்கள் நம்புவதால் அப்படி  ஒரு  முடிவு . கொத்தனார் சம்பளம்  அதிகம்  அதைக்  கைவைத்தால்  நிறைய  சேமிக்க முடியும் என்று  நினைக்கிறார்கள் .
அப்பொழுது  அந்த  சித்தாட்களில்  யாரவது  கொத்தனார்  செய்யும்  வேலையினை  செய்ய  முடியுமா  என்று  பார்க்கப்படுகிறது .
அப்படி  இருந்தால் , அந்த  சித்தாளை   கொத்தனார்  வேலையினை  பார்க்கச்  சொல்லிவிட்டு  , அந்த  கொத்தனாரை  தூக்க  முடிவு  செய்வர் .

அவர்கள்  குறிக்கோள்  , வேலையும் பாதிக்கப்படக்கூடாது  ,ஆனால்  குறைந்த  ஆட்களை  வைத்து  வேலையினை  முடிக்க  வேண்டும் .

இப்படிப் பல வரிசைமாற்றம்  மற்றும்  சேர்க்கை அடிப்படையிலும்  [permutation  and combination ] எது  குறைந்த  செலவில்  சமாளிக்க  உதவுமோ  அதனைச்  செய்வர்.


இதில்  அந்த  கொத்தனார்  கொஞ்சம்  சாமர்த்தியசாலி  என்று  வைத்துக்கொள்வோம் . அவனுக்கு  தெரிகிறது  ஒரு  நாள்  தனக்கு   இப்படி  நிலை வரக்கூடும் என்று .அவன்  என்ன  செய்து  இருப்பான் , வீட்டைக்  கட்டும்பொழுது ,பொறியாளரிடம் இடம்  வேலை  பார்த்தப்  பொழுது தன்னை விட்டால்  சில  குறிப்பிட்ட  வேலைகளைச்  செய்ய  ஆள்  இல்லை  என்ற  நிலையினை  ஏற்படுத்திவிட்டு  இருப்பான்.
அவன்  இல்லை  என்றால் , வேலை முடியாது  என்ற  ஒரு பிம்பத்தை  நிதர்சனப்படுத்தி இருப்பான் . அப்பொழுது  மேற்கூறிய சித்தாளை வைத்து  கொத்தனார்  வேலையினை  செய்யும்  நிலை  ஏற்படாமல்  தன்னைக்  காத்துக்  கொள்கிறான் .அதை  எப்படி  செய்கிறான்  என்பதற்குள்  போவது அவர்  அவர்  சாமர்த்தியம் .

இன்னொரு  உதாரணம்  சொல்ல  வேண்டும்  என்றால் , மேலே  கூறிய
திறன்களில் , electrician மற்றும்  plumbing  வேலைக்கு  தேவை  அதிகம்  இருக்கின்றது  என்று  வைத்துக்கொள்வோம் . தன்  வேலை  தவிர்த்து  , electrician  அல்லது  plumbing  வேலைகளையும்  தெரிந்துக் கொண்டால் நல்லது . இதைத்தான் கிடைமட்ட துறைசார்ந்த  அறிவு  [ "horizontal domain  knowledge"] என்று  சொல்வார்கள் .வேலை  நீக்கம்  செய்யும்  பட்டியல்  போடும்பொழுது
உங்கள்  திறமைகளை  [ skill sets ] பட்டியல்  போட்டு  முடிவு  எடுக்கப்படும்  பொழுது , இது  போன்ற  பல்துறை  அறிவு  உதவும் .

அப்படியே  இல்லையென்றாலும்  வெளியே  சென்று  வேலைதேடும்  பொழுது
  போட்டிக்கிடையில்  நமக்கு  வேலை கிடைப்பது  இலகுவாக  இருக்கும் .

ஒன்று  மட்டும்  சொல்ல முடியும்  , மிகவும்  கடுமையாக உழைப்பது  மட்டும்  அல்ல அது  , அதுவும்  வேண்டும் ,  ஆனால் அதையும்  மீறி   ஒரு விஷயத்தை  ஆழமாக  அறிந்துக்  கொண்டு  , அதில்  இருக்கும்  நுணுக்கங்களில்
அவன்தான் கில்லாடியாக இருக்க வேண்டும். ஆவணங்கள் [documentation ] செய்து கொடுத்தாலும் அதனை  ஒருவன்  படித்து  ,வேலையில் செயல்முறையில் சிறப்பாக  தன்  அளவிற்கு  செய்ய   ,நீண்ட காலம்  கொள்ளும்  அளவிற்கு  அவனிடம்  ஆழாமான  அறிவும்  திறனும் இருக்க வேண்டும் . சைக்கிள்  ஒருவன் பயின்றவுடன் ஓட்டுவதற்கும்  , இரண்டு  கைகள்  விட்டு  ஓட்டுவதற்கும்  உள்ள வித்தியாசம் அது .

இதனைப் பெறுவதற்கு  ஒரு  திட்டம்  வேண்டும் .
அந்தக்குழுவில்  எதில்  தேவை  இருக்கிறது  என்கின்ற  அரசியலும்   அறிவும் வேண்டும் .அந்த  குறிப்பிட்ட  துறையில் தீவிரமாக  ஆழ்ந்து  இறங்கி  அறிவையும்  செயல்  திறனையும்  வளர்த்துக்கொண்டால்,  நம்மைத்  தேவை மிகுந்தவானாக  [demanding ] ஆக்கிக்கொள்ள  முடியும்   என்ற புரிதல் வேண்டும் இவரைத்தான்   நிபுணர் [specialist  ]என்று  சொல்வோம் .

இந்த  குறிப்பிட்ட  துணைத்துறை  நமக்கு  பிடித்த  ஒன்றாக  அமைந்து  விட்டால்  ரொம்ப  நன்று . அது  நம்மை  அடுத்தக்  கட்டத்திற்கு  எடுத்துச்  செல்லும் .அப்படி இல்லையென்றாலும்  , அதற்குத்  தேவை  இருந்தால்
" survival  of  the  fittest "  அல்லது  " adapt  for  survival " போன்ற  கோட்பாடுகளின்படி தேவைக்கு  ஏற்ப
நம்மைத்  தகுதிப்  படுத்திக்கொள்ள  வேண்டும் .

ஒரு  ப்ராஜெக்ட் செய்வதை  ஒரு போரின் பத்ம வியுகமாக  வைத்துக்  கொள்வோம் . உள்ளே  செல்ல மட்டும்  தெரிந்தால்  போதாது  , வெளியே  வரவும்  தெரிய  வேண்டும்  அல்லவா .

வெளியே  கொண்டு  வரும்  போர்த்திறன்  அறிந்தவன்  ஒருவன்தான்  இருக்கிறான்  என்றால் , அவனைத் தள்ளி  வைக்க  முடியாது  அல்லவா ?
இன்னும்  சொல்லப்போனால் பத்ம வியுகத்தில் உள்ளே  சென்று  மாட்டிக்கொண்டால்  என்ன  ஆவது  என்ற  பயம் வந்தால்  அந்தத்  தளபதியினை  கைவைக்க  முடியாதுதானே .அந்தத்  தளபதியாக  இருக்க  நம்மைப் தயார்  செய்ய வேண்டும்.நீண்ட  காலத்திட்டம்  இது .
வருடங்கள்  கழியக்  கழியக்  அரைத்த  மாவையே  அரைக்காமல் , அடுத்த  வருடம்  என்ன  கற்றுக்கொள்ளலாம் என்று திட்டமிட்டு  அதன்  படி
திறமைகளை வளர்த்துக் கொள்ள  வேண்டும் .

மேலே  முதலில் சொல்லப்பட்ட  சித்தாள் 10 பேரில்  சிலரைத்   தானே  எடுக்க  முடிவு  செய்தனர் . அவர்கள்  தரப்பில்  இருந்து  பார்ப்போம்  இப்பொழுது .
அதில்  இரண்டு  பேர்  அந்தக்   கொத்தனாருடன்  கூடயே  இருந்து  எப்படியோ
ஒரு அளவிற்கு தொழிலைக்  கத்துக்கொண்டு விடுகின்றனர் . அப்பொழுது  அவர்களின்  மதிப்பு  அதிகம்  தான் . இரண்டு  மூன்று பேர்  குறைத்த  பின்னும்
வேலை  வாங்கும் சூழலில்  இவர்களின்  தேவை  அதிகமாக  இருக்கும் .
இதுவும்  ஒரு  வகையில்  வேலையினைத்தக்க வைத்துக்கொள்ளும் ஒரு  முறைதான் . நான்  இதை வேறு  கண்ணோட்டத்தில்  பார்ப்பேன் .
வேலையினைக்  காத்துக்கொள்ளும் முயற்சி என்று பார்த்தால் அதில்
உன்னதம் இருக்காது .தொழிலைத்  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும்  ஈடுபாடும் தான் முதன்மையாக இருக்க  வேண்டும் . அப்பொழுது
அறிவும்  திறனும்  இன்னும்  சிறப்பாக  வளரும் , நமது  தேவையும் கூடும் .
இதைதான்  "vertical and  horizontal knowledge " என்பதற்கு  ஒரு  உதாரணமாகக் கூறுவேன்.தன் வேலை  மட்டும்  இல்லாமல் , இன்னும்  என்னத் தெரிந்துக்கொள்ள  முடியும் என்று  அலசி , எது  நிறுவனத்திற்கு  தேவை  என்பதையும்  அறிந்து
அதை  கற்றுக்கொள்ளும்  முயற்சியில்  ஈடுபட்டு  , சமயம்  வரும்  பொழுது  அல்லது அமைத்துக்கொண்டு  அதனைக்  கற்றுக்கொள்ள வேண்டும் .

எப்படிப்பட்ட நிறுவனத்தில்  வேலை  செய்ய  வேண்டும் ?

தொழில் சார்ந்த  இலக்குகளை  ["career goals"] என்று  தனக்கென்று  ஒரு  திட்டம்  வகுத்து  , இந்தக்   நிறுவனத்தில் தன்னுடைய  தேவைக்கேற்ற  வேலை  கிடைக்குமா  என்று  ஆராய  வேண்டும் . பணம்  மட்டுமே குறிக்கோளாக  இல்லாமல் , நிறையத் தெரிந்துக்கொள்ளும்
சூழலை [ learning curve ]  கொடுக்கும்  நிறுவனத்தை தேர்ந்து  எடுத்து சேர  வேண்டும் . இதுதான்  துறையில்  நீண்ட  நாள்  தாக்கு  பிடிக்க உதவும் .
அல்லது  வருடாந்திர  செயல்  திறன் விவாதம்  போதோ , மற்றொரு  தகுந்த  சூழலில் மேலதிகாரியிடம் , "எனக்கு  இவற்றை எல்லாம்  தெரிந்துக்  கொள்ளும் ஆவல்  இருக்கிறது . எனக்கு  அப்படி  பட்ட  ஒரு  ப்ராஜெக்ட் வந்தால்  , சந்தர்ப்பம்  கொடுங்கள் " என்று  சொல்லி  வைக்க வேண்டும் .
இது  நன்மதிப்பையே  கொடுக்கும்  , சரியாய்ப்   பேசினால் .
பணம்  மட்டும்  குறிக்கோள்  இல்லை  , மேலே  போக  தன்னைத்
தயார்  செய்து  கொள்கிறான்  என்ற  பிம்பத்தைக்  கொடுக்கும் .
குறிப்பாக , அடுத்த  பதவி  உயர்வு வேண்டும்  என்றால் என்ன  என்ன  தகுதி
தேவைப்படுகிறது  என்ற  ஒரு  எதிர்பார்ப்பை  மேலதிகாரியிடம்  முன்பே
கேட்டு வைத்துக்கொண்டு , அதனை  அப்ரைசல்  சந்திப்பின்  பொழுது  எழுத்தில் குறிக்கோள்களாக  வைத்துக்  கொள்ள வேண்டும் .
அடுத்த  ஆண்டு  அதை  அடைந்து  உள்ளேனா  என்று  பார்த்து  விட்டு
அடுத்த  கட்டம்  பற்றி  பேச வேண்டும்.
மேலதிகாரி , இன்னும்  நீங்கள்  முன்னேற  வேண்டும்  என்று  கூறினாலும்
அதற்கு  ஏற்ப  தன்னை மெருகேற்ற  வேண்டும் .
மேலதிகாரி  ஏமாற்றும்  நோக்கில்  இதை  அதைச்  சொல்லி
நழுவினாலும்  , அமைதியாக  பேசி , அடுத்த  முறை  அப்படி  ஒரு  சந்தர்ப்பத்தை  கொடுங்கள் என்று  அடி  மேல்  அடி  வைக்க  வேண்டும் .
அம்மி  நகரும் மெதுவாக .இப்படி  இல்லாமல் இலக்கே  இல்லாமல் சென்றால்  , ஆபத்துதான் .

இன்னொரு  முக்கியமான  விஷயம்  இருக்கிறது .
ஒவ்வொருவருக்கும்  ஒரு  குறிப்பிட்ட  திறமை  இருக்கும் .
எப்படி  பாடுவது , ஓவியம்  வரைவது  ,இசைக்கருவி  வாசிப்பது , கவிதை  எழுதுவது போன்ற  பல  கலைகளில்  ஒவ்வொருக்கும்  ஒரு  திறமை  இருக்கும் [உதாரணத்திற்கு சொன்னேன் ,கலைகளும்  திறமைகளும்  பல  வகைகள்  உள்ளன என்பதை  நாம்  அறிவோம் ].எதில்  நமக்கு  இயற்கையாகவே  ஈடுபாடும்  திறமையும்  இருக்கின்றது  என்ற  சுயவிமர்சனம்  செய்து  அதில்  கூர்ந்த  அறிவினை  வளர்த்துக்  கொள்ள  வேண்டும் . இப்படி  நமக்கு பிடித்த ஒன்றில்  ஆழமாக  இறங்கிப்   படித்து  , இன்னும்  தீவிரமான  நுண்ணறிவினை  வளர்த்துக்கொண்டால்  ,நமக்குத் தேவை இருக்கும் . ஒருவேளை  நமக்கு  ஈடுபாடு  உள்ள  துறைதனில் சந்தர்ப்பம்  கிடைக்க வில்லையென்றால் , வெளியே  வேறு  நிறுவனத்தில் அது  அமையுமா  என்று  தெரிந்துக் கொண்டு அதனை நோக்கி போகலாம் .
அப்படி  ஏற்படுத்திக்கொண்டு   விட்டால்  , நீண்ட  பயணத்தில்  களைப்பும்  ஏற்படாது  , நம்முடைய  திறமையும்  மதிக்கப்படும் .
அப்படி  ஒருவேளை  அமையவில்லையென்றாலும் , முழு  மனதுடன்
கொடுக்கப்பட்ட  துறையில்  நுண்ணறிவு  வளர்த்துக்கொள்ளல் வேண்டும் .அதைத்தான்   முதலில் சொல்லியிருந்தேன் .

குறிப்பாக கல்லூரி  முடித்து  வந்து  சேர்ந்தபின்  முதல் ஒரு  வருடத்திலேயே தன்னுடைய  நீண்ட  கால  இலக்கு  என்னவென்பதை  தீர்மானம்  செய்து விட வேண்டும் .அதை  நோக்கி  முயற்சிகள்  எடுக்க  வேண்டும் . அதையும் தாண்டி சொல்வதென்றால் ,கல்லூரியில்  இருக்கும்  பொழுது  கூட  தனக்கு   பிடித்த  துறையில்  எந்த நிறுவனங்கள்  உள்ளன , அதில் சேர என்னச செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதற்கு தேவையான வேலைகளை கல்லூரியிலேயே தொடங்கினால் ரொம்ப நல்லது . கல்லூரி சீனியர்ஸ்  இதற்கு உதவுவர் ,இல்லை குடும்ப மற்றும் நண்பர் வட்டத்தில் யாரேனும் ஒருவரை  வழிகாட்டியாக [ mentor ]ஆக வைத்துக்கொண்டால் நல்லது .

நீண்ட  காலத்  திட்டம்  ஒன்றைப்  பார்ப்போம் .
ஒரு  கஸ்டமர்  ப்ராஜெக்ட்  கொடுக்கும்  முன்  , அந்தக் குழுவின்   திறனை மதிப்பிடுவர் . அதற்கு  பெரும்பாலும்  திட்ட  மேலாளர்   [ப்ராஜெக்ட்  மேனேஜர் ] அல்லது  மென்பொருள்சிற்பி  [software architect ] போன்றோடுடன்   பேசுவர் . அவர்கள்  தேவை  என்னவென்பதை  தெரிந்துக்  கொண்டு  , அதற்கு  ஏற்றார் போல்  , குறுகிய  காலத்தில்  ஒரு திட்டம்  அதற்கு  ஆகும்  செலவையும்  ஒரு  மதிப்பீடு  கொடுத்து  ,அவர்களை  நம்ப  வைத்து  ப்ராஜெக்ட்  வாங்க  வேண்டும் , பிறகு  அதைத்  திறன்பட முடித்தும்தர  வேண்டும் .

இப்படி   கஸ்டமர்  முன்  நின்று  பேசும்  திறன்  வாய்ந்தவர்கள் தேவைப்படுகின்றனர் .அதற்கு ஆழ்த்த தொழில் சார்ந்த அறிவும் பேச்சுத்திறனும்  வேண்டும் .  10 வருடத்திற்குள்  அல்லது  அதிக்கபடி  பதினைந்து  வருடத்திற்குள் இப்படிப்பட்ட  ஒரு  தகுதியனை  நாம்  அடைந்து  இருக்க வேண்டும் .இது  ஒரு  உதாரணம் .
நம்முடைய  அனுபவத்திற்கு  ஏற்ற  செயல்திறன் [value  proposition  ]  நமக்கு  இருக்க  வேண்டும்  என்று  சொல்லவருகிறேன் .

இதற்குத்  தொழில்நுட்ப  அறிவு   [technical skills ] மட்டும்  போதாது, மென்திறனும்  [soft skills ]   முக்கியம் . இதைப்   பற்றியும் ,  .திட்ட  மேலாண்மை [ program management  ]  பற்றியும்  கொஞ்சம்  பேசவேண்டும் .

மேலும்  "Sixth  sense  to  survive " என்று  ஒன்று  வேண்டும் என்று  முன்பு  கூறியிருந்தேன் .அதாவது  , நிறுவனத்தில்  ஏதாவது  வேலை  நீக்க  பூகம்பம்  வரப்போகிறதா  என்று  ஒரு  அளவிற்கு முன்கூட்டியே கணிக்கும்  திறன் பற்றி  பேச  வேண்டும் .  வேலைக்கு  எளிதாக அழைப்பு  வருவதற்கு  முக்கியமாக  ஆட்கள்  தெரிந்து  இருக்க  வேண்டும் [ networking]
[ அதுவும்  ஒரு முக்கிய  காரணம் ]..இதையும்  பேசவேண்டும்


 இன்னும்  இரண்டு  பகுதிகள்  எழுத  வேண்டி இருக்கும்  என நினைக்கிறேன் .
பேசுவோம் .



No comments:

Post a Comment