Tuesday, January 13, 2015

ஒட்டகச்சிவிங்கியும் கிட்டப்பார்வையும் .....

 ஒட்டகச்சிவிங்கியும் கிட்டப்பார்வையும் .....

வேலை இல்லாத வாரக்கடைசிகள் அபூர்வமாகிப்போன துறையில் நானும் இருப்பதால் , சமீபத்திய இரண்டு மாதங்கள்  மிகவும் இனிமையாகக் கழிந்தது , வேலை இல்லாததால். பிடித்த விஷயங்களை செய்வதும் , தூங்குவதும் குழந்தையுடன் இன்னும் அதிக நேரம் செலவிடுவதற்கும் நல்ல வாய்ப்பாக இருந்தது.

நாளையில் இருந்து திரும்பவும் ஓட்டம் தொடங்கப்  போகிறது என நினைத்துக்கொண்டே படுத்து இருக்கையில், மகள் எப்பொழுதும்  போல ,
"bookchi bookchi " என்று ஒரு கதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து படம் பார்த்து கதை சொல்லச் சொன்னாள் .

மேல சொன்ன தலைப்புடன்[ ஆங்கிலத்தில்;தான் , " THE  near  sighted  giraffe "] இருந்த அழகான படங்களுடன் கூடிய அந்த புத்தகத்தை நான் பல நாட்கள் பார்த்து உள்ளேன் , ஆனால் இந்த கதையினை படித்துச்  சொன்னது கிடையாது.

ஒரு காட்டில் ஒரு ஒட்டகச்சிவிங்கிக்கு கிட்டப்பார்வை  .

 காட்சிகள் சரிவர தெரியாமல் நிறைய  சங்கடங்கள். கண் தெரியாமல் ஒரு மரத்தின் கிளையில் தலை முட்டுகிறது , ஒரு குரங்கு அதனை கண்ணாடி  அணியச்  சொல்லுகிறது . மற்ற விலங்குகள் கண்ணாடி அணிந்த தன்னை பார்த்து என்ன நினைக்குமோ என்று யோசித்து  , அது கண்ணாடி அணிய மறுக்கிறது .  பிரச்சனைய சமாளிக்க , "helmet"  ஒன்றை போட்டுக்கொள்கிறது .
பிறகு ஒரு சிறுத்தையின்  மீது கால் இடறி விழுகிறது. இதன் பிறகும்  கண்ணாடி போடாமல் , வாலுக்கு மணி கட்டிக்கொள்கிறது , மற்ற மிருகங்கள் இதன் வருகை தெரிந்துகொள்ள . இப்படி போகிறது அதன் நாட்கள் .
சில வாரங்கள் கழித்துப்பார்த்தால் அதன் பின் புறத்தில் ஒரு தலைகாணி [முள்ளில் விழுந்ததில் இருந்து ], முதுகில் ஒரு ஏணி [ பள்ளத்தில் விழுந்ததில் இருந்து]  என பல சுமைகளை கூடவே தூக்கிக் கொண்டு சென்றது.

[ முழுக்கதையினை   சொல்லவில்லை இங்கே   , கொஞ்சம்  சுருக்கியுள்ளேன் , புத்தகத்தில்  ஒட்டகச்சிவிங்கி  இன்னும்  நிறைய  இடங்களில்  தடுமாறுகிறது !, சுமையும்  கூடுகிறது  ஒவ்வொரு  முறையும் ]

ஆனால்  கண்ணாடி மட்டும் அணிய மறுத்தது . இந்த வினோத தோற்றத்தினால் மற்ற மிருகங்கள்  அதனை அதிமாகவே  கேலி செய்தன, சில பாவமாக பார்த்தன .

இந்த கதை இப்படி போய்க்கொண்டு இருக்க, என் மகள் என் மடி விட்டு இறங்கி ஓடி விட்டாள் . குழந்தைகளின்  கவனம்  சிறிது நேரத்திற்கு மேல் ஒரு இடத்தில இருக்க மாட்டேன் என்கிறது."Attention  span " எனச்சொல்வர்  இதனை.

தொலைக்காட்சி  மற்றும் இன்டர்நெட் மூலமாக இவர்கள் கார்டூன்ஸ்  பார்த்து ,நொடிக்கு பல முறை காட்சிகள் மாரிப்பழகி , கதை கேட்கவோ , சற்று ஆழமாக ஒரே இடத்தில உட்கார்ந்து மனதை செலுத்தும் காரியத்தில் மனம் சேர மாட்டேன் என்கிறது. இதற்க்கு நாமும் காரணம். வேலை அல்லது சோம்பேறித்தனத்தால்  , தொலைக்காட்சி போட்டால் அழாமல்  இருக்கிறார்கள் என்று பழக்கி விட்டு , இப்படி ஆகிறது. இனி இதை மாற்ற முடிவு செய்து உள்ளேன். இதற்கு என்னுடைய அலுவலக நண்பர் முன்னோடி . வாரத்திற்கு சில மணி நேரங்கள் தான் தொலைக்காட்சி பார்க்க   விடுகிறார். முடிந்த வரை இயற்கையுடன் கூடிய சம்பாஷணைகளை பழக்கி விட்டு இருக்கிறார். சைக்கிள் எடுத்துக்கொண்டு அவர்களுடன் ஏரியினை   சுற்றி வருவதும் , படம் வரைதலும் , நிறைய புத்தகங்கள் வாசிப்பதும் , ஓடி ஆடி விளையாடவும்  பழக்கி இருக்கிறார். அடிப்படையில் அவர்களின்  படைப்பாற்றலை ["creative  intelligence  "]  பெருக்குதல் ஆகும்  .

அனைவரும் இதனைச்  செய்ய வேண்டும்.

கதையைத்தொடுருவோம் . கடைசியில் ஒரு சிறுத்தை ஒரு மரம் ஏறி அந்த ஒட்டகச்சிவிங்கியின் மீது ஒரு கண்ணாடி மாட்டி  விடுகிறது.
இப்பொழுது தன்னுடைய கோலத்தை  ஒரு நீர் நிலையில்  அது பார்க்கிறது .
இவ்வளவு  கோமாளியாகவா காட்சியளித்தோம் என்று மற்ற அனைத்தையும் கழற்றி எறிந்து , கண்ணாடி மட்டும் அணிந்த பின , தான் அழகாகவே  இருக்கிறோம் என உணர்கிறது. இப்படி அந்த கதை முடிந்தி விட்டது.

கண்ணாடி அணிந்து இருந்தால் தாழ்வு  மனப்பான்மை வரக்கூடாது  என குழந்தைகளுக்குச்  சொல்லவும் , மற்றவர்கள் அப்படி அணிந்து இருந்தால் அதை பற்றி குழந்தைகள்  என்ன நினைக்கிறார்கள்  என தெரிந்து கொள்ளவும்  பெற்றோர்களுக்கு சொல்லி முடிக்கிறார்கள் கதையின் ஆசிரியர்கள்
பெஞ்சமின்  மற்றும்  பில்  மக்லீன் .

[ NEW  BURLINGTON  , LONDON  வெளியீடு ].

எனக்கு இந்தக்கதை இன்னும் நிறைய ஆழமானவற்றைச் சொல்லியது.  இந்தக்கதையின் மூலமே அந்த ஒட்டகச்சிவிங்கி , கண்ணாடி அணிந்தால்  தன்னைப்பற்றி " மற்றவர் என்ன நினைப்பர்" அல்லது " WHAT  OTHERS    THINK " என்பதே .

நாமும் பல  சூழ்நிலைகளில்  ஒரு விஷயத்தை அணுகும் பொழுது , சரியான  கோணத்தை விட்டு ,  " மற்றவர் என்ன நினைப்பர்" என்கிற நினைப்பில் வேறு முடிவு எடுக்கிறோம் , அல்லது நமது சந்தோஷங்களை  குறைத்துக்கொள்கிறோம் . இதனால்  பாரம் தான் கூடுகிறது .
உண்மையில்  ,பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம்மை பற்றி சிந்திக்க எவர்க்கும் நேரம் இருப்பதில்லை அல்லது சரியானதைச் செய்தால் [ கண்ணாடி அணிந்துகொண்டால் !] பலர் நமக்காக
மகிழ்ச்சியே அடைவர் . மற்றவரை பாதிக்காத வகையில் எடுக்கும் எந்த முடிவும் சரியானதே என்பது என் கண்ணோட்டம் .

இன்னொரு  வகையில் பார்த்தால் , கண்  தெரியாதது என்பது  அந்த ஒட்டகச்சிவிங்கியின் குறைபாடு. அதற்க்குண்டான தீர்வை அது புறத்தில்  தேடுகிறது.நமது கண்ணோட்டம் சரியாக இருந்தால் மற்றது தானாகவே விளங்கும்.

பிள்ளைக்கு கதை சொல்லப்போய்  எனக்கும் சிலவற்றை  வலியுரித்திச்சென்றது இந்தக்கதை .

 சரியான கண்ணாடி அணிந்து வாழ்கையினை  தொடருவோம்



No comments:

Post a Comment