Wednesday, November 5, 2014

ரேஷன்கடைத்திருடன் :

ரேஷன்  கடைத்திருடன் :

ஊடகங்களிலும் , சதுரங்க வேட்டை போன்ற படங்களிலும் பல விதமான நூதன ஏமாற்று வேலைகளை படித்தும் பார்த்தும் இருக்கிறோம்.

அப்பொழுது  நான்  நான்காவது படித்துக்கொண்டு இருப்பேன்  என நினைக்கிறேன்  . கிரிக்கெட்  மட்டையுடன் விளையாட  ஆள் கிடைக்க மாட்டார்களா  என , " மால்கம்  மார்ஷல் " போல வேகப்பந்து பௌலேர் ஆகணும்னு வெறியோட  சுற்றித்திரிந்த நாட்கள் .அரைப்பரிட்சை விடுமறை.மழை நன்றாக பெய்து  எப்பொழுதும் போல ஏரி   நிரம்பி , மதகு  உடைக்கப்பட்டு தெருவெங்கும் தண்ணீர் , நாங்கள் எப்பொழுதும் விளையாடும் அரசாங்க பொது விளையாட்டு திடலிலும் தான்.

விளையாட இடம்  இன்றி நாங்கள்  தேங்கிக்கிடக்கும் நீரினில்  கற்களை வீசி எரிந்து  விளையாடுவோம் முழுவதுமாக மூழ்குவதர்க்குள் ,  எத்தனை  முறைவேகமாக நீரினைக்கிழித்து மூழ்கியும் , வெளியே வந்தும் போகிறது  அந்தக்கல் என்ற எண்ணிக்கை  விளையாட்டு விளையாடிக்கொண்டு இருந்தோம். கல்லினை சரியான கோணத்தில் சாய்த்து அடிக்கும் இலகுவும் , வீரியமும் சேர்ந்து தூரத்தையும் , வெளியே வந்து போகும  எண்ணிக்கையையும் தீர்மானிக்கும் .

பத்திற்கு மேல்  வரச்  செய்வது  எனக்கு பழக்கம் ஆகிவிட்டது. எங்கள் போட்டியினை , மெலிந்த தேகத்துடன்  ஒரு 25 வயது மதிக்க தகுந்த ஒருவன் சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்தான்.

" நல்ல அடிக்கறடா  தம்பி " என்று பேச்சு கொடுத்தான்.எனக்கு ஒரே பெருமிதம்.

" கிரிக்கெட் விளையாடுவையா .நல்ல பௌலெரா வருவ.விடாம  பிராக்டிஸ் செய்" என்று சொன்னதும் எனக்கு அதில் இன்னும் தீவிரம் அதிகமாயிற்று.

"அப்புறம் தம்பி , வீடு எங்க இருக்கு. அப்பா என்ன பண்றாரு?."

" இங்க  தான் அங்கிள் .தோ  தெரியுதே  அந்த வீடு தான் " என்றேன்.

" சரி வா வீட்டுக்கு போவோம். அம்மா இருக்காங்களா  வீட்டுல..ஸ்கூலில் உன்னை கோச்சிங் கிளாசில் சேர்க்கச்  சொல்லி சொல்றேன் ".

"சரி அங்கிள் போலாம் " என்று அழைத்துப்போனேன் .

வீடு வந்ததும். அம்மாவை அழைத்தேன்.

" மாமி, நான் இங்க  பக்குதுல ரேஷன்  கடையில  வேலை பாக்கறேன்.தம்பி நல்ல பந்து வீசறான். ஸ்கூலில்  கோச்சிங்  சேத்து  விடுங்க.
அப்புறம் கிருஷ்ணாயில் உங்களுக்கு  எல்லாம் ஒழுங்கா   வருதா  ரேஷன்  கடைல ?"

" இல்லையே , கொஞ்சம் நாள் வெயிட் பண்ணச்  சொல்லி சொன்னாங்க ,கஷ்டமாத்தான்  இருக்கு " என்றார்கள் அம்மா.

" சரி மாமி , ரொம்ப பேருட்ட சொல்ல வேண்டாம். உங்களுக்கு தெரிந்த ரெண்டு மூன்று பேருக்கும் மட்டும் சொல்லுங்க.என்கிட்டே கொஞ்சம் இருக்கும்.வேலை பார்க்கிறவங்களுக்கு கொஞ்சம்  எக்ஸ்ட்ரா  உண்டு . ஒரு கேன் 7 ரூபா , வேணும்னா  சொல்லுங்க."

எப்பொழுதும்  உஷாராக  இருக்கும் அம்மாவும் , என்னை பற்றி அவர் புகழ்ந்து பேசியது நினைத்தோ , அந்த ஆளைப்  பார்த்தால்  ரேஷன் கடை பய்யன் போல இருந்ததாலோ நம்பி விட்டார்கள்.

" சரி இருங்க கேன்  எடுத்துட்டு வரேன்".

"டேய் அத்தையா  வீட்லயும் , அஜய் வீட்லயும்  நான் சொன்னேன்னு சொல்லி இங்கே வர சொல்லு" என்று என்னை அனுப்பி வைத்தார்கள்.

முடிவில் 3 வீடுகளில் இருந்து ஒரு கணிசாமான தொகை வந்ததும்  ,
" சரி , நீங்க எல்லாம்  இங்கேயே இருங்க , தம்பிய என் கூட அனுப்பி வையுங்க . கூட்டமா போனா  நல்ல இருக்காது." என்றான்.

அவன் பேசின வேகமும் தொனியும் எல்லோரையும் நம்ப வைத்தது போலும்.
எனக்கு சைக்கிள் முழுவதுமாக ஓட்ட  வராது . குரங்கு பெடல் அடித்த  வாறே அவன் பின்னையே சென்றேன். இரண்டு தெரு போன பின் , பேசிகிட்டே வந்த அவன் குரல் கேட்க வில்லை. வண்டிய நிறுத்தி  திரும்பிப்பார்த்தால்   ஆளைக்காணோம் .

எனக்கு ஒன்றும் புரியவில்லை.வீட்டிற்கு வேகமா வந்து அம்மாவிடம்
" அந்த அங்கிள் காணோம் மா " என்று சொன்னேன்.

கொஞ்சம் குழப்பங்களுக்கு பின் , எனக்கு எதுவும் திட்டு கூட  விழ வில்லை.
அம்மாவும்  , பக்கத்துக்கு வீடு ஆன்டி  களும் ஏதோ பேசிக்கொண்டார்கள்.

"சரி , வீட்ல யாரும் சொல்லி திட்டு வாங்க வேண்டாம்னு " ஒரு குரல் மட்டும் எனக்கு நியாபகம் இருக்கு!

இதில் என்னோட கிரிக்கெட்  கோச்சிங்  மேல வெறுப்பை கிளப்பி விட்டு  போன பாதகனை   எனக்கு என்றும் மறக்க முடியாது.

எத்தனையோ  திருட்டை கேள்வி  பட்டு இருப்பீர்கள்  இது  மண்ணெண்ணெய் மூலமா திருட்டு   அந்த நூதன  திருடனின்  திருவிளையாடல் இன்றைக்கும் என்னை வியக்க  வைக்கிறது. அந்த  நேரத்தில் பல்ஸ்  பார்த்து  , கிரிக்கெட் பிடிக்கும்னு  தெரிஞ்சு  அதை வச்சு கொக்கி போட்டது "மாஸ்டர்  ஸ்ட்ரோக் "


அந்த திருடனைப் பார்த்து  நான் கேக்க வேண்டிய ஒரே  கேள்வி ,

 நம்ம  கவுண்டர் சொல்வது போல ,
" என்னை பார்த்து ஏன்டா அப்படி ஒரு கேள்வி  கேட்ட" ங்கரத்தைப்போல ,அத்தனை  பேருக்கு மத்தில என்னை  எதுக்குடா  உன் திருட்டுக்கு   மார்க்கெடிங் மேனேஜர்  ஆக்குன  ?...






No comments:

Post a Comment