Wednesday, November 26, 2014

கணேசனும் தொள தொள டிராயரும் ...

கணேசனும் தொள  தொள  டிராயரும் :

சில  மனிதர்களும்  அவர்களால் ஏற்படும் நிகழ்வுகளும் , வாழக்கையில் நமக்கே நாம் கேட்கும் விடை தெரியா பெரியக்கேள்விகளுக்கும் , புதிர்களுக்கும் முன்னாலோ பின்னாலோ விடை கொடுத்துச்செல்கின்றன. . விடை கொடுக்க முடியாவிட்டாலும் , ஆசுவாசப்படுத்திக்கொள்ள துணை புரிகின்றன. கணேசனும் அப்படித்தான் .

என் வயதோ அல்லது ஒத்த வயதில் விளையாட  ஆள்  இல்லாத வயது அது.
சுவற்றில் பந்தை வீசி விளையாடிய ஒரு நாள். தெருவில் விழுந்த பந்தை பொறுக்க சென்ற பொழுது , நீளமான இப்பொழுதுள்ள 3/4த்ஸ் போல தொள  தொள டிராயருடன் பெரிய வரிசையான பற்களுடன் சிரித்தான் கணேசன் .
பந்தை நீட்டியவாறே ,

" நானும் வரட்டா ?"

அப்பொழுது என்னை  விட ரொம்பப்பெரியவனாக இருந்த அவனிடம் யோசித்தவாறே , " வா" வென்றேன் .

" நீ அஜய்  குட்டிப்பயனோட relative ஆ ?"

" இல்லை.என்னை வேலைக்கு ஊர்ல இருந்து கூட்டிட்டு வந்துருக்காங்கலெ "

அந்த "காங்கலெ " என்னை  அவனிடம் சற்று துரிதமாகவே பழகியவனாக நினைக்கத்தூண்டியிருக்க வேண்டும்,என் சொந்த ஊரும் நெல்லையானதால் .

" எங்க இருந்து வந்து  இருக்க ?"

" தூத்துக்குடி ".

" எனக்கு பௌலிங்  தான்  பிடிக்கும் .நீ பேட் செய்வியா ?"

" சின்னப்பய நீ என்ன  வா போன்னு கூப்புடுத ...இந்த ஊர்ல இப்படித்தான் போல . சரி நான் மட்டை  பிடிக்கேன் .அந்தாக்ல போய்  விளையாடுவோம் நான். விளையாடுரதைப்பார்த்தா என்னை ஏசுவாங்க "

" மொட்டை மாடி போய்  விளையாடலாம் வா".

குஷியாக மாடி வந்தோம் .

" உனக்கு ,மாங்கா பிடிக்குமா?அங்க பாரு எவ்ளோ புளிப்பு மாங்கா  எங்க வீட்ல
"

" ரொம்பப்பிடிக்கும் !ஊர்ல   பக்கத்துக்கு தோட்டத்துல  கவுட்டிவில்லில் அடிச்சு சாப்பிடுவோம் .".


அவன் மட்டை பிடித்த விதம் அலாதி. பீமன் கதையை பிடித்த போலோ  அல்லது " base  ball bat " பிடித்தது போலோ இருந்தது. ஆனால் பட்டயக்கிளப்பினான் . இரண்டு  மூன்று முறை மாடிக்கண்ணாடி அதிர்ந்தது .

" என்னடா சத்தம் மேல "   அம்மா கத்தினதை நாங்கள்  கண்டுக்கொள்ளவில்லை .

விளையாடி முடித்ததும் மாங்காய் சாப்பிட்டோம் .

" உப்பு  மிளகாய் போட்டு சாப்பிட்டா நல்ல  இருக்கும்லே .எடுத்தாரியா ?"

" நாளைக்கு ".

அன்றைய தினம்  எனக்கு மிக மகிழ்ச்சியான நாள் .விளையாடுவதற்கும் பேசுவதற்கும் ஒரு புதிய தோழன் குதித்து வந்தான் என நினைத்தவாறே தூங்கிப்போனேன் . அந்த  நேரம் தான் " மை  டியர்  குட்டிச்சாத்தான் " படம் வந்து  இருந்தது.

மறுநாள் அஜய் வீட்டிற்குள் சென்று கணேசனைத்தேடினேன் .கிச்சனுள் எதையோ சுமந்துக்கொண்டு இருந்தான் . என்னைத்தெரியதவனாக எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தான் .அஜய் அப்பா அவனை அதட்டிக்கொண்டு இருந்தது எனக்கு பிடிக்கவில்லை .

அஜய் அப்பா அந்தப்பக்கமாகச்சென்றார் .
" என்ன பண்ணிட்டு இருக்க , எப்ப வருவ?"

சரியாக பதில் வராமல் பழயபடி சுவற்றுடன் விளையாட எத்தனித்தேன் .

" திரும்ப வந்தவன் , " நீ  அங்க  வந்து  என்னைத்தேடாதே , நான் வரும்போது வர்றேன்  சரி , இப்போ விளையாடுவோம் .

கோச்சுக்காத ...இன்னைக்கு நான் பந்து வீசறேன் ".

குழப்பத்துடன் ஆடியதில் முதல் பந்திலேயே விக்கேட்டைச்சரித்தான்.

"     சின்னப்பசங்க கூட  விளையாண்டா இப்படித்தான் . போட்டியே இல்லைலா ...ஹ ஹா "

என் கவுரவம் பாதிக்கப்பட்டதாக கோபத்துடன் விளையாடினேன் .

அவனும் இன்னும் வேகமாக வீச , நான் சுழற்றிய பெரும்பாலான வீச்சுகள் காற்றை சலசலதுச்சென்றது . பெரிய பற்கள் தெரிய இன்னும் எக்காளமாகாச்சிரித்தான் .

இன்னும் கோபத்துடன் கடைசியில்  ஒரு பந்தை பொளந்தேன் .நிஜமாகவே பந்தைப்பிழந்து விட்டேன்.

" கோவதைப்பாருலே , சரி ஒப்புகுதேன் , நீ  பெரியவன்தான்,நம்ம ஊருப்பயன்னு காமிச்சுட்டே ".

சிரித்துக்கொண்டோம் .

" என்ன செய்ய இனிமேல , மாங்காய் அடிப்போமா ".

" அடிப்போம்  ஆனா  ,கைல   வேணாம் . கவுட்டிவில் செய்வோம்.
இங்க பழைய டயர் இருக்கா?"

கொண்டு வந்துக்கொடுத்தேன் .

வீட்டில் நிறைய  மரங்கள் . ஒரு கெட்டியான நொச்சி மரக்கிளையிலிருந்து " Y " வடிவில் கவுட்டிவில் செய்ய  ஒரு பகுதியை ஓடித்தான் . டயரைக்கிழித்து
அந்த  ரப்பரை  வைத்து கவுட்டிவில் செய்து முடித்தான் .

எனக்கு அன்றைக்கு முழுவதும் , கவுட்டிவில் ட்ரைனிங் .

" அந்த தெரியுது பாரு அந்த கொத்தை அடி.பக்கத்துல குருவிக்கூடு இருக்கு.
பாத்து அடி ".

பொத்துன்னு சத்தத்தோட பெரிய குலை வந்து விழுந்தது .
அம்மா வந்தார்கள் .

" என்ன நடக்குது இங்க"

" அம்மா அந்த மாங்காய அடிச்சு விழவச்சுட்டேன் .எனக்கு மாங்கா பச்சடி வேணும் ".

"சரி பார்த்து .கல் தலை பட்டுட போகுது .உமா ஆன்டி வீட்டில அடிக்காம பாத்துக்கோ "

"கணேசா , பார்த்து  " ன்னு  சொல்லிட்டு அம்மா உள்ளே சென்றார்கள் .

 சரியாய் அடித்து அன்றைய தினம் திருப்தியாக முடிந்தது .

அன்று இரவு.

" கணேசன் உன்னை  விட ரொம்பப்பெரியவன் . அவனை  நீ வானு கூப்பிடாதே "

 "சரிம்மா "

அடுத்த நாள் கணேசன் வந்ததும் .

" நீங்க முதல்ல பேட் செய்யுங்க "

" என்னாலே புதுசா மருவாத .நீ வானே கூப்டுலே .எனக்கு அதுதான் பிடிச்சு  இருக்கு"......

" சரி லே ! இந்தா மாங்கா பச்சடி சாப்டு.சூப்பரா இருக்கும் .".

என்னோட ஸ்கூல் நண்பர்களுடன் சேர்ந்து கொஞ்சம் தள்ளி வேளச்சேரி சென்று ஒரு கிரிக்கெட் டீம் தயார் செய்தோம்.ஒரு ப்லெட்  லைட் டோர்னமென்டில் பெயர் கொடுத்தோம் .ஏற்கனவே கலந்து ஜெயிக்கவில்லையென்ராலும் , இந்த முறை கணேசன் துணை .

அடுத்த வாரம் நினைத்து எங்கள் கிரிக்கெட் ட்ரைனிங் பலமா  இருந்துச்சு.

கணேசனுக்கு ஏகப்பட்ட மரியாதை அங்கே, அவனுடைய சிக்ஸர்களே காரணம் .முதல் கட்ட ஆட்டங்கள் முடிந்து
செமி பைனல் வரை வந்தாச்சு. இனி ஆட்டம் சூடாத்தான்  இருக்கும்.
கணேசனை நாங்க மிடில் ஆர்டரில் தான் இருக்குவோம்.
அவன் வந்தாலே எல்லோரும் பௌண்டரி  லைன்ல தான்  .
இப்ப சொல்வதென்றால் நம்ம தோனி  போல.   அந்த மாட்சில் அம்பயர் கொஞ்சம் போங்கு பண்ணிட்டுத்தான் இருந்தான்.கணேசனுக்கு கடுப்பு.

"மக்கா அவனை பொளக்கனும்லே சேட்டை செய்யட்டும் , பொளந்துடரேன் அவனுள  ".

அவனிடம் யாரும் வால்  ஆட்டவில்லை.தொள  தொள  டிராயருடன் எப்படித்தான் ஒடுவானோன்னு நினைத்தேன் .ஆனா அவன் நின்ன இடத்துலேயே விளாசினான் .சில பௌண்டரிகளும் பல  சிக்சர்களும் பறந்தன.எதிர்பார்த்தது போல  , பௌண்டரி லைன்ல கேட்ச் கொடுத்து அவுட் ஆனான் .

மேட்ச் அதற்குள் எங்கள் கையில் வந்து விட்டது.
மேட்ச் முடிந்து வெற்றியுடன் வெளியே வந்தோம் ,ஒரே கூச்சல் கும்மாளம் . எதிர் கட்சி கேப்டன் கடுப்பில் பிதற்றினான் என்னைப்பார்த்து.அவனுக்கும் எனக்கும் குறைந்த பட்சம் ஐந்து வயது வித்தியாசம் இருக்கும்.

" என்னடா ரொம்ப துள்ற .ஆள்  இருக்காங்கன்னு திமிரா . அடியப்போட்டுடுவேன் . அடங்கு டா " என்றான் .

பொள்  என்று ஒரு சத்தம் கேட்டு எல்லாரும் அதிர்ந்து  நின்றோம் .
வாங்கியவன் சுருண்டு விழுந்தான் . அடித்தது யார்ன்னு சொல்லவேண்டாம் .
மத்தவங்க கிட்ட வந்ததும்,பேட்  கைல பிடிச்சவாறே , பீமன் போல நின்றான் கணேசன். சரமாரியாக கெட்ட  வார்த்தைகள் வேற விழுந்தது.

சென்னைப் பசங்களுக்கு அதில் முக்கால்வாசி அர்த்தம் தெரிந்து இருக்காது , என்னையும் சேர்த்து .கூட்டம் விலகியது.

அந்த  நாள் எங்கள்  நட்பு இன்னும் அடர்த்தியானது .

" என்னாலே  , அவன்  பேசிகிட்டு கிடக்கான் , நீயும் கேட்டுட்டு  இருக்க, பெரிய கொம்பனா அவன்..."

நான் சிரித்துக்கொண்டே வந்தேன்.

" எனக்கு அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் சொல்லேன்.நிறைய தெரியலை"

"கொஞ்சமா சொல்றேன், சின்னப்பய நீ  ".

இன்னும் ஒரு  மாதம் சென்றது. இந்த சமயத்தில் எனக்கு அரைப்பரிட்சை .கணேசனை அடிக்கடி பார்க்க முடியவில்லை.பார்த்த பொழுதும் சோகமாவே இருந்தான் .

" நாளை பரிட்சை முடியுது . நாம ஆட்டம் போடுவோம் ".

" அஜய் அப்பா என்னை விளையாடப்போக கூடாதுன்னு சொல்லிட்டார் .
எனக்கு அம்மைய தேடுது .பாப்போம் , அவங்க ஆபீஸ் போனப்பறமா வரேன் மதியம் ."

கணேசன் துள்ளல் இல்லாமல் அமைதியாக இருந்தான் .விளையாட மனம் இல்லாததால் , பேசிக்கொண்டு இருந்தோம்.

" நீ ஏன் ஸ்கூல் க்கு போகல ?"

" போனேன் . ஆனா படிப்பு ஏறலை .அப்றமா அய்யாதான் இங்க அனுப்பிடாக "

" ஏன் அனுப்பினாங்க ?, உன் கூட  இருக்க வேண்டாமா ?".

" அனுப்பிட்டாங்க  எல்லாருமா சேர்ந்து அவ்ளோதான்.
சரி நாம மீன் பிடிப்போம் வரியா? மதகு உடஞ்சு தெருவெல்லாம் தண்ணீ.
வெளில சிலது துள்ளிக்கிட்டு கிடந்தது .ஊர்ல நான்ஆத்து மீன்  பார்த்தது இல்ல.".

தண்ணீரில் ஒரே ஆட்டம் போட்டோம் .அவனுடைய கவலை முகம் கலைந்தது .

மரத்தடியில் வந்து உக்கார்ந்தோம் .

" மாமா வந்தாரு போனவாரம் என்னைப்பாக்க .இன்னும் நாலு அஞ்சு மாசம் கழிச்சு கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்கார் .அம்மை கடிதாசி வேற போட்டு இருந்தாக நேத்து .

அடடே மறந்துட்டேன் .இந்த கோவில்பட்டி கடலை மிட்டாய் .நமதுப்போச்சு தண்ணீல ".

சொல்லிக்கொண்டே அந்த நனைத்த தொள  தொள  டிராயர்ல இருந்து கடலை மிட்டாய் எடுத்துக்கொடுத்தான் . நமுத்தாலும் சுவை தூக்கலாகவே இருந்தது .
அந்த தொள  தொள  டிராயர் அவன் மாத்தி  நான் அவ்வளவா பார்த்தது  இல்லை.
காக்கி நிறத்தில் . அப்பாவிடம்  சொல்லி அவனுக்கு வேற கலர்ல வாங்கிதரச்சொல்லனும் என  நினைத்தேன் .

" இவ்ளோ நாளா  எனக்கு உன் டிராயர் ஏன் இவ்ளோ பெருசா இருக்குன்னு தெரியாது.இப்பதான தெரியுது உள்ள திண்ன கடலை மிட்டாய்  அடைச்சு  வச்சு  இருக்கன்னு ".

நமட்டுச்சிரிப்பு சிரிப்பு சிரித்தான்.
"அம்மைய பாக்கணும் .மூணு மாசம் கொள்ளாது .

வரேன்லே ".

                                       ----------------------------------

இரண்டு நாட்கள் கழித்து அஜய் வீட்டில் சில புதிய முகங்கள் தெரிந்தன .
மாமாவாக இருக்கும்னு நினைச்சேன் . கணேசன் க்ரோட்டன்ஸ் செடி பக்கத்துல நின்னுட்டு இருந்தான் .


அம்மா கூப்பிட்டார்கள் .

" டேய் , கணேசன் ஏதோ காச எடுத்துட்டான்னு அஜய் அம்மா சொன்னாங்க .
ஊருக்கு அனுப்பராங்களாம் ".

ஓடினேன் .கணேசன் வெளியே வந்தான்,.உள்ளே சோகமா  இருந்த  முகம் , என்னைப்பார்த்ததும்  கண் சிமிட்டினான் .

" ஊருக்கு போறேன்னு அம்மா சொன்னங்க .எப்போ வருவ"

" அங்க  தான்  இனிமே .அம்மையோட அங்கேயே இருந்துட வேண்டிதான் .
அண்ணாச்சி கடைல வேலை வாங்கித்தாறேன்னு மாமா சொன்னாரு.அவருக்கு  என்மேல பாசம் .உன்னைத்தான்டெ தேடும் .
சரி  இங்க  வா .

அன்னைக்கு மேட்ச் முடிஞ்ச  போது  , சில அர்த்தம் கேட்டீல ....இந்தா நேரம் வந்துருச்சு ".


அப்புறமா கணேசன் கிளம்பிப்போனது , நான் அழுதது எதிர்பார்த்ததுதான் .
அவன் விட்டுச்சென்றது நிறைய கேள்விகளும் தான் அந்த வயதில் .
ஏன் வந்தான் , அவன்  ஏன் வேலை பாக்கணும் , ஏன் திருடினான் இன்னும் பல .

எட்டு ஒன்பது வருடங்கள் கழிந்து நான் கோவையில் அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்த புதுசு.


ஒரு வாரம் கழிந்து இருக்கும் .முதல் முறையாக வீட்டை விட்டு வந்ததும் , தனிமையும் சேர்ந்து என்னமோப்படுத்தியது .

அன்றைய  காலையில் ஹாஸ்டலில் பாக்கு மரம் பார்த்தவாறே  ஒரு சொல்லத்தெரியாத வெறுமைதனை உணர்ந்தேன் .

" அம்மையதேடுதுலே " வின் அர்த்தம் அப்பொழுது எனக்கு புரிந்தது,
ரொம்ப வருடம் கழிந்து  அவன்  நினைப்பும் கூடவே வந்தது.
அவன் திருடியது ஒரு சாக்கு என்றும் எனக்கு அது தலையில் அடித்தது .

 ராகிங் அதிகம் அப்பொழுது .

சென்னை பசங்களை சென்னை சீனியர்சும் , தெற்கு மாவட்டங்கள் பசங்களை அந்தப்பக்கம் உள்ள சீனியர்சும் ராக்கிங் செய்கின்ற வழக்கம் ....அங்கேயும் பிரிவினை தான்.

"டேய் , இவனை என்னனு பாரு.பாக்க மெட்ராஸ் பய  போல  கிடக்கான் .கேட்டா நெல்லைங்கறான் ".

" இல்ல சார்  , நேடிவ் ப்லேசு நெல்லை ".

" சரி  நம்ம  ஊர்ல என்னடே ஸ்பெஷல் "

" அல்வா  சார்".

" குசும்பு  டே உனக்கு .ஏன் தாமரவரணி இல்லையா .நீ  மெட்ராஸ் பயதான்."

" இல்லை சார் , எனக்கு நெல்லைதான் சார் "

நெல்லைபயல்னு சொல்றதுதான் பிடிக்கும் எனக்கு , கெத்தும்  கூட.

" சரி  இந்தா இருக்கான்  பாரு கெளதம் .இவனை பார்த்து ரெண்டு கெட்ட வார்த்தை பேசு ..."

"என்னலே தயங்கிட்டே நிக்கான் .இவன் நம்ம ஊர்ப்பய  இல்லைலே .
அங்க அப்படி  சொல்றது  , இங்க  இப்படி  சொல்றது "

சரமாரியாக பல வார்த்தைகள் வந்து விழுந்ததை எதிர்பார்க்க வில்லை அவர்கள்.

பேசியது உள்ளே  இருந்த கணேசன்.

----------------------------------------------------------------------------------------------------------








No comments:

Post a Comment