Monday, July 4, 2016

ஆட்டோவில் வந்த கிருஷ்ணர்

 மனதில் நிறைய கசப்பான  அனுபவங்கள்  படிந்து இருந்தது....
ஆட்டோக்காரர்களைப் பற்றித்தான் சொல்கிறேன் .

பைக்கில்  அடிபட்டு  கிடந்த  பொழுது என்னை  நடு ரோட்டில்  கண்டுகொள்ளாமல்  அப்படியே  விட்டுச்சென்ற  ஆட்டோகாரர்  முதல்  ,
இங்கே  வரமாட்டேன்  அங்கேதான்  வருவேன்  எனச்சொல்லி சவாரி  வேண்டாம்  என்று சொல்லும்  ஆட்டோக்காரர்  ஒரு பக்கம்  என,
வீடு  அருகில்  வந்ததும்  , ரோடு  சரி  இல்லை , அது சரி இல்லை  , இது  சரி இல்லையென  நொட்டம்  சொல்லி  இன்னும்  அதிமாகப் பேரம்  பேசும்  ஆட்டோக்காரர்  வரை  பலரைப் பார்த்ததினால்  ஏற்பட்ட மனப்படிமம் தான் .

அன்றைய  காலை  எவ்வளவு  சீக்கிரமா  கிளம்பியிருந்தாலும்  ,
பதற்றத்துடனே  போயிற்று . கால்  டாக்ஸிக்காரன்  , வழி  தெரியாமல்  , ஒன்  வேயின்  மாற்றுப்பாதையில்  நுழையத் தெரியாமல் ஊர்  எல்லாம் சுற்றி  ,
கடைசி  நிமிடத்தில் கொண்டு  வந்து  சேர்த்தான்  விசா  இன்டர்வியூக்கு .

அங்கே  வந்த  பிறகுதான்  பார்க்கிறேன்  ஒரு  முக்கியமான  "payslip "மறந்து   இருப்பதை . அது  இல்லையென்றால்  , விசா கிடைப்பது  கஷ்டம் .
கிளம்பின  அவசரத்தில்  , கடைசி  மாச "payslip"ஐ  வேறு  பைலில்  வைத்து  விட்டேன்.

அமெரிக்கன்  எம்பஸியில் போன்  எடுத்து  வரக்கூடாது என்பதால்   வீட்டிலேயே விட்டுச் சென்றிருந்தேன் . ஆட்டோக்காரரிடம்தான் போன்  வாங்கி வீட்டிற்க்கு  விஷயம் சொன்னேன்.அனைவரும் பதறிப்போய்  இருந்தனர். அடுத்து என்ன என்று கேட்டதற்கு ,"இப்போதைக்கு ஒன்னும் பண்ண முடியாது, திரும்பவும்  பணம் கட்டி appointment  book  panni   வேறு ஒரு நாள் மறுபடி வர வேண்டும் ". அனைவரும் பதட்டம் அடைந்தனர்.
குறுகிய விடுமுறையில் நிறைய வேலைகளுடன் வந்தமையால்.

இதைகேட்டு கொண்டு இருந்த ஆட்டோ  ஓட்டுனர் , "என்ன சார்  , வீட்ல எதன்னா  மறந்து  உட்டுட்டு வந்துட்டீங்களா ? டென்ஷன் உடுங்க  சார் , நமக்கு உள்ற ஆள்  தெரியும் , எத்தனை மணிக்கு interview , வீட்டுக்கு போயிட்டு  எடுத்தாந்துரலாம் " என்றார்.

எனக்கு நம்பிக்கை இல்லை." அமெரிக்கன் embassy " இன் "document  review " department . இவருக்கு இங்கே ஆள்  எப்படி தெரியும்.சும்மா  சவாரிக்கென்று  சொல்கிறார்  என நான் பெரிதாக  எடுத்துக்கொள்ளவில்லை .

"என்னா  சார் , நம்பிக்கை இல்லையா  , போன வாரம் கூட  ஒரு கேரளா போலீஸ் காரர்  இது போல தான் எதையோ மறந்து வச்சுட்டேன்னு சொன்னார்.
அரை மணிநேரத்துல பார்க் ஓட்டல்க்கு போய்   , எடுத்தாந்து  , உள்ள அனுப்பி வச்சேன். கடைசில அந்த ஆளு , என்கிட்ட்ட ஒரு இருவது ரூவாய்க்கு  பேரம் பேசிக்கினார் சார் . எனக்கு அங்க உள்ளே விடும்  செக்யூரிட்டி  பசங்களை தெரியும் சார்.டீ  தம்  அடிக்க வெளியதான வருவாங்க.பார்த்து அனுப்பி விடறேன் சார். நம்பி வாங்க " என்றார்.

சரி போய்தான்  பார்ப்போமே என்று நானும் சரி என்றேன். வீடு வந்தோம்   விட்டுப்போன document  உடன். வேகாம ஒரு uturn  போட்டு  , அப்படியே டாப் கியரில்  விட்டார்  ஆட்டோவை . 25 நிமிடத்தில் வந்தோம் இந்த முறை.கலையில் டிராபிக் சேர்த்து ஊரை சுற்றியதில்  ஒரு மணி நேரம் ஆகியது இந்த தூரத்திற்கு.

" நீங்க உள்ள போங்க சார் , செக்யூரிட்டி எதன்னா  பிரெச்சனை செஞ்சா  நான் வரேன்  " என்றார்.   அவர் கொடுத்த தைரியத்தில் உள்ளே சென்றேன்  .
காவலாளியும்  அரை மணி நேரம் லேட்  என்று கோவித்துக்கொண்டே  உள்ளே  விட்டார்.,
" இன்றைக்கு டாகுமென்ட் செக்கிங் மட்டும் தான். அதானால்  விடறோம்.நாளை சரியான நேரத்திற்கு consulatekku  போய்டுங்க " என்று  உள்ளே விட்டனர். நல்லபடியா முடிந்தது அன்றைய  தினத்திற்கான வேலைகள் .முயற்சியே செய்யமால் விட்டுவிட நினைத்த  எனக்கு இது பெரிய`பாடமாக  இருந்தது .

பெரிய நிம்மதியுடன்  வெளியே வந்த என்னை , "அதான் சொன்னேனே சார் , எல்லாம்  பார்த்துக்கலாம்னு  வாங்கன்னு ".
ஆட்டோ ஸ்டாண்டில்  , சிலருக்கு  இது தெரிந்து  , "என்ன சார் , நம்ம தோஸ்து  முடிச்சு கொடுத்து இருக்கார் , டீ  சாப்ட எதன்னா  செஞ்சுட்டு  போ  சார்"என்றார்! .

அப்பொழுதான் கவனித்தேன் அவரை . சுறுசுறுப்பான எறும்பு போல பரபரப்பா இருந்தார் .சரியான உயரம் , சற்றே மெலிந்த தேகம். "என் பேரன் ஸ்கூல் போறான் சார் " ன்னு அவர் சொன்ன போது தான் அவருக்கு  ஐம்பது வயதிற்கு மேல் ஆகிறதென்று எனக்குத்தெரியும் .

"நீங்க எப்போ  வெளிய வருவீங்கன்னு  தெரியலை.அதான் மத்தியானம் இன்னும் சாப்டலை .காலைல டீ  தான் அடிச்சேன்.உங்களை உட்டுட்டு  இன்னைக்கு ஊட்டுக்கு போய்  படுத்திடலாம்னு  இருக்கேன் " என்றார்.

" டீ  மட்டும் சாப்பிட்டு இருந்ததால் , வயிறு கெட்டுப்போய் அல்சர்  வரும்.
அப்புறமா  நீங்க  ஹாஸ்பிடல்  செலவு  அதிகமா  கொடுக்க வேண்டி  இருக்கும் ".
" பார்ப்போம் சார்  அங்க இங்க ஒட்டிட்டு  இருப்பேன் .டீ குடிச்சு  பழகிடுச்சு "

ஆட்டோவில் பல மதங்கள்  சார்ந்த சாமி  படங்கள் இருந்தன .நான் பார்ப்பதை கவனித்தவர் ,"நான் எல்லா சாமியும்  கும்பிடுவேன்".

"உங்களைப்  போலவே  எல்லோரும் இருந்தால் நாட்டில் பிரச்சனையே  இருக்காதே  " என்றேன் .

 போன் போட்டு தகவல் சொன்னேன்.நம்ப முடியாமல் திகைத்தனர் . அம்மா , மனைவி , அக்கா என  ஆளாளுக்கு  பல  கோயில்களுக்கு நேந்து  இருந்தனர்  இந்த இடைப்பட்ட  நேரத்தில் .
  • வீட்டிற்குள்  வரச்சொல்லி காபி கொடுக்க வேண்டும் என்று அக்கா சொன்னாள் . திருநெல்வேலியில் இருந்து  வாங்க வந்த அல்வா  பொட்டலத்தை கொடுத்த அக்கா 
  • " பேர பிள்ளைக்கு  கொடுங்கள் . காலத்தினால்  செய்த உதவி   மறக்க முடியாது சார் !".அவருக்கு மிகுந்த சந்தோசம்.
உண்மை தான் . வந்த மூன்று வாரத்தில்  , அன்று தப்பிப் போய் இருந்தால் , என்னுடைய அடுத்த  மூன்று  வாரமும் எனக்கும் குடும்பத்திற்கும்  தொடர் இயக்கமாக நிறைய குழப்பங்களை கொடுத்து  இருக்கும  , பண  விரயமும் கூட .

ஆட்டோவைப்  பார்த்த என் மகள்   ரொம்ப சந்தோஷம்   கொண்டாள் . அவளை  வைத்து. ஒரு சிறிய ரவுண்டு அடித்து  விட்டுச்சென்றார்  
பட்  பட்    என்ற  சத்தமும்  , குலுக்கலும் அவளுக்கு என்னமோ செய்து இருக்கும் போல,குதூகலத்துடன்  திரும்பி  வந்தாள்  . ஆட்டோவை விட்டு இறங்க மனம் இல்லாமால் இருந்த அவளை  இழுத்து வந்தோம் .

இரண்டு வருடம் கழித்துப்  பார்த்ததால்  ,அம்மாவிடம் போகமால் இருந்த என் மகளை ஆட்டோ காமித்தே  அவளுடன்  மீண்டும் நெருக்கம் ஆனார்கள் அம்மா .அவளுடைய  அம்மா தாத்தாவும்  ஒரு ஆட்டோ பொம்மையுடன் வந்தார் அவளைப்பார்க்க. ஆட்டோவினால்தான் எத்தனை  மாயங்கள் . 
  • மறுநாளும்  அடுத்த கட்ட  நேர்காணல்   இருந்ததால்  , "சார் நானே  வந்து கூட்டிட்டு  போறேன்  ,  டைமுக்கு   கொண்டு போய் விட்டுடறேன் சார்  " என்றார்.தொலை  பேசி எண்ணையும்  விட்டுச்சென்றார் . பெரிய உதவி செய்ததை  மனதில் வைத்துக்கொண்டு  , சும்மாவே இன்னும்  கொடுங்கள்  என்று கேட்காமல் , உழைத்துச்  சம்பாதிக்க  வேண்டும்  என்ற எண்ணம்  எனக்கு அவர் மேல இருந்த மரியாதையை  இன்னும் கூட்டியது . ஆட்டோக்காரர்கள் மேலும்  .
மறு நாள் காலை சொன்ன படியே நேரத்திற்கு வந்தார் .
அக்கவைப்பார்த்து  "மேடம்  , அல்வா  சூப்பர்  , நாங்க சாப்டு  பக்கத்து  வீட்டுக்கும்  கொடுத்தோம் " என்றார் . சின்ன  பொட்டலத்தையும் பகிர்ந்து  உண்ணும்  எண்ணம்  எத்தனை பேருக்கு வரும்.

  "எல்லாம் சரியா எடுத்துக் கிட்டீங்களா  சார் , போலாமா " என்று விருட்டென  விட்டார்  ஆட்டோவை .
  • "ஜெமினி மேம்பாலம்  வந்திருச்சு சார்,.காசு எதுவும் இப்போதைக்கு  வேண்டாம் ,  என்னுடைய  செல்போனுக்கு   கால் பண்ணுங்க  . நானே வீட்ல விட்டுடறேன் "  .  கால் டாக்ஸி போல கால் ஆட்டோ  சர்வீஸ் ஆனது  இந்த முறை. இதுவும் ஒரு வித்தியாசனமான  அனுபவம்தான்.
  • "your visa is  approved   ,please  read  your  rights " என்று சொன்னார் எம்பஸி ஆபிசர் .விசா நேர்காணல்   முடிந்தது .
  • "கொஞ்சம் தள்ளி  டீ  கடை பக்கத்தில்  நிக்கறேன் , வந்துடுங்க "என போன் செய்தேன்  . சிறுது  நேரத்தில் ஆட்டோ வந்தது.சிரித்த முகத்துடன்  வந்தார். . 
"நம்ம  ஆட்டோவிற்கு   ராசி உண்டு சார். நீங்க " pass " ஆவீங்கன்னு தெரியும் எனக்கு.வேற எங்கேயும்  போகல இன்னைக்கு .

அப்றமா  சார்  , இன்னைக்கு  காலைல  நாஸ்தா  சாப்டேன் .....டீ  யோட  நிறுத்தலை !நீங்க சொன்னது தான் பொண்டாட்டியும் சொல்லிட்டு இருந்தா  , ஹாஸ்பிடல்   செலவுன்னு நீங்க  சொன்னது பயத்தை  கொடுத்திருச்சு .காசு செலவுன்னு நினைச்சாத்தான் ". சிரித்தேன்.
  • "ராயப்பேட்டை ஏரியாலதான் ரொம்ப காலமா இருந்தோம்.குடிசை  மாற்று  வாரியத்துல  இந்த ஏரியா விட்டு போகச்சொல்லிடாங்க சார் 
  • O .M .R  பக்கமா இருக்கோம்  இப்போ " என்று சொல்லிக்கொண்டே தான் முன்னாடி இருந்த ஏரியா  பக்கமா சென்றார் .
  • தன்னுடைய  தெருவிற்கு கொண்டு சென்றதும்  , அதின் நினைவுகளும் அவர் முகத்தில் தெரிந்த  வருத்தம் எனக்கும் அப்பிக்கொண்டது  ஆனாலும்  சிறிது நேரத்தில்  குஷியாகி  விட்டு." இதுதான்  சார் எங்க தெரு " என்று காண்பித்தார் .
  • அந்த வழியாக வந்து இருக்க வேண்டியது இல்லை என்றாலும்  , கொஞ்சம் சுற்றி வளைத்து  வந்தாலும் அவர்கள் இருந்த தெருவிற்கு என்னைக்கூட்டி வந்து காண்பித்தது  எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
* " என்ன  குமாரு , என்ன இந்த பக்கம் .ரொம்ப  நாள் ஆச்சு பார்த்து " போன்ற நல விசாரிப்புகளும் , கை அசைப்புகளும் நடந்துக்கொண்டே இருந்தது அவர் ஓட்டுகையில் . 

" எல்லாரையும் தெரியும் போல !"

" எத்தனை வருஷமா ஓட்டிட்டு இருக்கேன் ......"
  • அவர்கள் குடும்பம் பற்றி கேட்கத்   தோன்றியது  ."மகனுக்கு இன்னொரு ஆட்டோ வாங்கித்தர காசு இல்லை.அவனுக்கும் அதில் அந்த அளவு இண்டரெஸ்ட்   இல்லை.வேற எதன்னா  ஒரு நல்ல தொழில் பார்த்து செட்டில் செஞ்சுடணும்னு இருக்கேன் சார் .அப்போ அப்போ  எதன்னா வேலைக்கு போறான். பெரிய கட்டிடத்துல  பெயின்டிங்க்  அடிக்கற  வேலையும்  பார்ப்பான்  .அது ரிஸ்க் சார் , வேலை இல்லைனாலும் பரவா இல்லை , வேணாம்னு சொல்லிட்டேன், இப்போ ரெண்டு வாரமா  வீட்ல தான் இருக்கான். அவன் பொண்டாட்டி  ஊருக்கு  போய்  இருக்கான். "
  • அணைகள்  கட்டப்படும்  பொழுது  , ஒரு  கிராமத்தையே  இடம்  பெயர்க்கும்  சூழல்  ஏற்படும்  என்று  படித்திருக்கிறேன் .வேகமாக   மாறிக்கொண்டு இருக்கும் வணிகமயமாக்கப்பட்ட உலகத்தில் இப்படி  வேறு  காரணங்களுக்காகவம்  இடம் பெயர்தல் நிகழ்கிறது. சொல்லபோனால் நிறையவே   , ஆனால்   வெளியில்  பெரிதாக  தெரியாமல்    அல்லது  கமுக்கமாக.
  • "30 வருஷத்திற்கு  மேல ஓட்டிட்டு  இருக்கேன் சார். வாடகை  ஆட்டோதான்  வச்சு இருந்தேன். இப்போ ஓட்டிட்டு  இருக்க ஆட்டோ சொந்தமா  வாங்கி "due " கட்டிட்டு  இருக்கேன்.  இந்த ஆட்டோ "due"  மட்டும் கட்டிமுடிச்சுட்டேன்னா , ஆட்டோவை வித்துட்டோ அல்லது , வாடகைக்கு விட்டுட்டோ அப்பாடான்னு இருந்துடுவேன். நம்ம வட்டத்துல  நல்ல பேரு சார் எனக்கு.முழுசா அரசியலுல  இறங்கி  நம்ம ஏரியா   மக்களுக்கு எதன்னா   செய்யனும்னு தோணிட்டே  இருக்கும் .போன எலக்க்ஷன்ல   கூட , ரெண்டு வாரம் பூரா  வேலைக்கு போகாமல்  , கட்சி வேலை செய்தேன் சார். பைசாலாம் கிடையாது. இதுக்கு எல்லாம்  அந்த மாசம்  dues  கட்ட கஷ்டப்பட்டேன்".
  • இப்படியாக  இன்னும்  பல  சம்பாஷணைகளுடன்  நாங்கள்  விடைபெற்றுக்கொண்டோம்  .  உங்களுக்கு  என்ன  வேண்டும்  , என்று  கேட்ட  பொழுது  , எனக்கு  " M  G  R " போட்ட  மாதிரி  கோல்டு கலர்ல  , ஒரு  வாட்ச்  வாங்கித்தாங்க  சார்  அடுத்த  முறை  வரும்  போது  என்றார் .... சிரித்துக்கொண்டே  வழியனுப்பி  வைத்தேன் .
    * அடுத்த  நாள்  ,  திருநெல்வேலி  பயணம்.  ரயில் பயணங்கள் எப்பொழுதும் .சுகமானதுதான் ...பாலிய காலத்தில் வருடா வருடம் அம்மாச்சி தாத்தா  வீட்டிற்கு வத்தலகுண்டு செல்கையில் , கொடை ரோட்டில் இறங்கும்  பயணமும் , கல்லூரி விடுப்பில் கோவையில்  இருந்து  சென்னை  வரும் பயணமும் ஏற்படுத்திய தாக்கம் மட்டும் அல்ல அது.ஒரு சின்ன  திடுக்குடன்   கிளம்பும் வேகம் ஆகட்டும் , சீரிய வேகத்தின் பின் தண்டவாளத்துடன்  இணைந்து கொடுக்கும் ரீங்காரம்  ஆகட்டும் , கண்கள் மூடிகேட்டால் சந்கீதமாகவோ  , அமைதி கொடுக்கும் தியானமாகவோ மன நிலைக்கேற்றவாறு தோன்றும் . நல்ல இசையும் தியானம்தானே  .அப்போ இரண்டும் ஒன்று தான்.

அந்த  தியானத்தில்  இருந்து மகள்  மடியில்  வந்து  அப்பிக்கொண்டதும்  வெளியே  வந்தேன் .ஜன்னல் வழி மகளுக்கு காட்சிகளை விவரித்து வந்தேன்."ஆட்டோ ஆட்டோ " என்றாள் சிக்னலில் நிற்கும் ஒரு ஆட்டோவினை பார்த்து. "

தேவாவின்  [ அதுதான்  அவருடைய  பெயர் ] வார்த்தைகள் மனதில்  வந்து  போனது .

*   "ஆட்டோகாரர்கள் பற்றி நிறைய தவறான பேச்சு  இருக்கு  சார்  வெளியே.சில பேர் இருக்காங்க .ஆனா பொதுப்படையா வெறுப்பு வேணாமே  சார்.மழைலயும் வெயிலயும் விடி காலையிலும் நடு ராத்திரிலயும் நாங்க தான இருக்கோம் .எல்லா  நேரத்துலயும் பஸ்  ஓடாது"
  • அவர்கள் உலகத்தில் இருந்து பார்க்கும் பொழுது.....அவர்கள் சிரமங்கள் தெரிய வந்தது. மனதில் இருந்த  வெறுப்பும்  அகன்றது .

என்  கன்னத்தை  ஒரு  பிஞ்சுக்கை அழுத்தியதில்  , அந்த  நினைப்பிலிருந்து விடுபடுகிறேன் .

"அப்பா  கதை  சொல்லு "என்றாள்  மகள்.

சரி  நாம  மஹாபாரதத்தை தொடருவோம் கண்ணா ..

" அர்ஜுனனை  பார்த்து  கர்ணன்  அம்பை  விடுறார் .
அது  ரொம்ப  பயங்கரமான  அம்பு .தலையை  நோக்கி  வருது ...
"

" அப்புறம்  என்ன  ஆச்சு  அப்பா "

" கிருஷ்ணர்  தன்  காலால  ஒரு  அடி  பலமா  பூமியை  நோக்கி  அழுத்தறார் .
தேர்  ஒரு  அடி  கீழே  போயிடுது . அர்ஜுனன்  தலை  தப்பித்தது ..."


என்  மனதில்  வேறு  ஒரு  காட்சி  ஓடிக்கொண்டு  இருந்தது .
அன்றைக்கு  வீட்டின்  முன்  , காக்கி  உடை  அணிந்து , குனிந்து  ஆட்டோவின்  கியாரைப்  போட்டு  , ஒரு  வளை  வளைத்து  , ஆட்டோவினை  விருட்டென விட்ட அந்தக்காட்சி ..

கிருஷ்ணர்  அர்ஜுனன் தேர் மட்டுமா  ஓட்டுகிறார் . சில  நேரங்களில்  ஆட்டோவின்  சாரதியாகவும்தான் வருகிறார் !

========================================================================






Friday, July 1, 2016

சிலந்தி மனிதனின் கை :

சிலந்தி  மனிதனின் கை :

அந்த  "spiderman " விரல்களைப் பார் .எவ்ளோ  தத்ரூபமா  நிஜமான  கை  போலவே  இருக்கு . அந்த  விரல்  மடக்கி  அவன்  சிலந்தி  தெளிக்கும்  விதம்
படம்  பார்க்கிற  போலவே  இருக்கு .

அக்கா  சொன்னது  மேலே . அவன்  கல்யாண அட்டையின்  பின்புறத்தில்  வரைந்த  ஒரு  சிலந்தி  மனிதனின்  ஆக்சன்   படம் . ஒற்றைக்  காலை  கொஞ்சம்  மடக்கி  , தலையினை  மேல  பார்த்தவாறே அவன்  கட்டை  விரலைத்தவிர  மற்ற  நடு  இரு  விரல்களையும்
மடக்கி  , சிலந்தி  வலையினை  எரியும்  நிலையில்  தயாராக  இருந்தான் .

பக்கத்து  வீட்டு  வெனிடா சொன்ன  பொழுது  அவன்   முதலில்  நம்பவில்லை  தான் . இப்போ  அவனுக்கே  சந்தேகம்  வந்தது , சிலந்தி  மனிதன்  அப்படி  தத்ரூபமா  இருக்கிறானோ ??

அன்று நண்பர்களுக்கு  காண்பிக்க  பள்ளிக்கு  தன்  புத்தங்களுக்கு இடையில்
அந்த சிலந்தி  மனிதனின்  படத்தை  எடுத்துச்  செல்கிறான் .

பள்ளியில்....

" நீங்கள்  எந்த  காரியம்  செய்தாலும்  , அதில்  முழுவதுமாக மனத்தைச்   செலுத்த  வேண்டும் .  உங்களுக்கு  இது  எவ்வளவு  புரியும்னு  தெரியலை .
ஆனா  ஒரு  காலத்துல  புரியும் .
நீங்க  என்ன  செய்யறீங்களோ  அதாகவே  ஆகிடனும்
பாடினால்  , அந்த  பாட்டாவே  , வரைஞ்சால்  அந்த  ஓவியவாகவே ...."  என்கிறார்  ஆசிரியை .

வகுப்பு  அமைதியாக  இருந்தது ....


அன்று  வீட்டுக்கு  வந்து  விடுகிறான் .

" டேய்  அந்த  "spiderman"  படம்  எங்க .
அதைக்   குப்பை  மாதிரி  போட்டுடாதே .
ஜெம்  கிளிப்` இல்லை  , stapler  போட்டு  வை .
" என்றாள் அவனுடைய   அக்கா .

" ஸ்டேப்ளர்  வேண்டாம் .
அவனுக்கு  வலிக்கப் போகுது ."

அக்கா  விநோதமாகப்  பார்க்கிறாள் . .

"சரி !"

" சரி  , இதை  எப்படி  வரைஞ்ச . கண்ணுல  இருந்து  ஆரம்பிச்சியா "

"இல்ல . கைல  இருந்து` ஆரம்பிச்சு  அப்படியே  மேல  போனேன் "

"அதான்  கை  , அவ்ளோ  நல்ல  வந்து  இருக்கு "

" ஏன்  அப்படி ?"

" தெரியலை  அப்படித்தான்  தோணுச்சு "

அடுத்த  நாள்  காலையில்  ,
பக்கத்து  வீட்டு  வெனிட்டா  வைத்துக்  கேட்கையில் ,
அந்த  அட்டையில்  சிலந்தி  மனிதன்  இருந்த  இடத்தில்  வெற்றிடம்  தான்  உள்ளது . சரியாக  அவனுடைய  தலை  முதல்  கால்  வரை  இருந்த  இடம் .

 அவனுடைய  அம்மா அம்மா  பேசுவது  , காதில்  விழுகிறது .

" என்ன  லலிதா   , நேத்துதானே  ஒட்டடை  அடிச்சோம்  , அதுக்குள்ள  எப்படி  வீட்டில்  , இவ்வளவு  தூசு  , சிலந்தி  வலை  , அதுவும்  , இந்த கடைசி  ரூம்ல  ஏதோ  குகைக்குள்ளே  வந்தது  போல "

அம்மா  , சிலந்தி  மனிதன்  டீச்சர்  சொன்ன  போது  , பையில்தான்  தான்  இருந்தானென  சொல்லத்தோன்றியதை  அடக்கிக்கொண்டான் .........

---------------------------------------------------------------------------------------------------------------------------


Friday, June 17, 2016

பெட்டிக்குள் வானவில்

[------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"ரே  ஜேன்"  எழுதிய  " APPLE  PIP PRINCESS"  என்ற  புத்தகத்திலிருந்து  .
RETOLD / TRANSLATED  WITH MINOR CHANGES  BY SEMMAL G.
--------------------------------------------------------------------------------------------------------------------

பெட்டிக்குள்  வானவில் :

தூர  தேசத்தில் ஒரு  ராணி ...அவங்களுக்கு  மூன்று  ராஜகுமாரிகள் ...

சுசன்னே  , மிரண்டா  மற்றும்  பெலிசிட்டி.......ரொம்ப  செழிப்பான  நாடு .....
அந்த  ராணியின்  ஆட்சியின்  கீழ்  , எங்கும்  சந்தோசம்  பரவி  இருந்தது ...

மலைகளும்  , ஆறுகளும்  , பசுமையும்  நிறைந்து  வழிந்த  ஊர்  அது.
மக்கள்  அனைவரும்  கடுமையாக  உழைத்தும்  , அதன்  பலனை 
அனுபவித்தும்  வாழ்ந்தனர் .இதை  விட  சொர்க்க பூமி  எங்கு  இருக்கமுடியும் 
இந்த  உலகத்தில்  என்ற  நினைப்போட  இருந்தனர்  அந்த  மக்கள் .

வாழக்கை  ஒரே  போல   இருப்பதில்லையே ...
ஒரு  நாள்  , உடல்  நலம்  சரியின்றி  , அந்த ராணி  இறந்து  விடுகின்றார்கள் .

அவர்களுடன்  சேர்ந்து  அந்த  நாட்டின்  வளமும்  , சந்தோஷமும்  , கூடவே 
போய்விடுகிறது . மக்கள்  பசியாலும் , பஞ்சத்தாலும்  வாடுகின்றனர் .

போவதற்கு  முன்  , மகள்களிடம்  , என்னிடமிருந்து  ஒரு  சொத்து  நீங்கள்  எடுத்துக்கொள்ளலாம் என  சொல்கிறார்  ராணி .

மூத்தவளான  சுசன்னே  ராணியின் அழகிய  வேலைப்பாடுடன்  கூடிய  
ஹீல்ஸ்  காலணியினை  வாங்கிக் கொள்கிறாள் .

இரண்டாமவளான  மிரண்டா , ராணியின்  , அழிகிய விலையுயர்ந்த  , முத்துக்களால் சூழப்பட்ட வேலைப்பாடுகளுடன்  கூடிய  ஒரு  அழகிய  முகம் பார்க்கும்  கண்ணாடி  ஒன்றினைப்  பெற்றுக்கொள்கிறாள் .

இளையவள் கொஞ்சம்  தயக்கமுடன்  ,  அம்மாவின்  நியாபகம்  எப்போதும்  வரவேண்டுமென்பதை மனதிற்கொண்டு  அவர்களின்  இளைய  வயதில் உபயோகித்த  ஒரு  மரப்பெட்டியினை வாங்கிக் கொள்கிறாள் .

பின்னொரு  நாள்  அவளுக்கு  அம்மாவின்  நியாபகம்  ரொம்ப  வருகிறது .
அந்தப்பெட்டியினை எடுத்து  தடவிப் பார்க்கிறாள் .அம்மாவின்  நியாபகமும்  வாசமும்  வருகிறது அதில்  அவளுக்கு   , அதில்  தலை  வைத்து  தூங்கிபோகிறாள் . அதில்  என்ன  இருக்கிறதென்றுகூட பார்க்கத்  தோன்றவில்லை அவளுக்கு .

காலம்  சுழல்கிறது . ராஜாவிற்கு  தன்னுடைய  நாட்டை  இனிமேல்  தன்னுடைய  ஒரு ` மகளிடம்  ஒப்படைத்து  விட்டு  போக  நினைக்கிறார் .


" உங்கள்  மூவருக்கும்  உங்கள்  திறமைகளை  வெளிக்காட்ட  ஒரு  சந்தர்ப்பம்  தருகிறேன்  ," என்கிறார் .

மூத்தவள் , நிலவைத் தொடும்  ஒரு  பெரிய  கட்டிடம்  கட்டி  அதன் மேல்  நின்று 
நிலவைத்  தொட்டு   , கம்பீரமாக  , அங்கு  நின்றுக்  காண்பித்தாள் .

ஊர்  மக்களைத்  துன்புறுத்தி  , அவர்களின்  வீட்டினில் , இருந்த மர   சாமான்களை  எல்லாம்  , கொண்டு வரச்செய்து  , அதை வைத்து அந்த  மரத்தாலான கட்டிடத்தைக்கட்டுகிறாள் .

இரண்டாமவளும்  இதே போல  , உலோகத்தினாலான  ஒரு  வானுயர்ந்த 
கோபுரத்தைக்கட்டி , அதன்  மூலம்  நட்சத்திரத்தை பிடித்து  அவள்  தலையில்  சூட்டி  
தன்னை  அம்மா  கொடுத்த  கண்ணாடியில்  அழகு  பார்க்கிறாள் .இதனால்  ஆனால்   மக்களுக்கு நன்மையொன்றும்  இல்லை.
  
பெலிசிட்டி  , கொஞ்சம்  சாதுவான  பயந்த பிள்ளை .

அக்காக்கள்  , இருவரும் , அழகும்  , கம்பீரமும்  , நிறைந்தவர்கள் , தன்னால்  என்ன செய்து  விட  முடியுமென  பெரிய  நம்பிக்கையின்றி   சோர்ந்து போய்  இருக்கிறாள் .

எப்பொழுதும்  போல  , சோர்வாகி  இருக்கும்  பொழுது  , அம்மாவிடம்  பேசுவாதாக  நினைத்து  , அந்த  சிறிய  மரப்பெட்டியுடம்  பேசுகிறாள் .

" அம்மா  நான்  என்ன  செய்வேன் ....எனக்கு  எந்தத்  திறமையும்  இல்லையே "

அதிலிருந்து  பதில்  எதுவம்  வரவில்லை .

ஆனால் , அந்தப்  பெட்டியினை  திறந்துப் பார்க்க  ஏதோவொன்று உந்தியது  அவளை .

பெட்டியினைத்  திறக்கிறாள் .

ஒரு  பக்கம்  கண்கள்  கூசியது  அவளுக்கு .
சூரிய  ஒளியின்  சில  கீற்றுக்களை  ஒரு கம்பி  போல  சேகரித்து வைக்கப்பட்டு  இருக்கிறது அதில் .

சில்லென்ற  மழையின்  தூறல்கள்  சில, ஒரு  பிடி  உருண்டை போல 
கோர்த்து  வைக்கப் பட்டுள்ளது இன்னொரு  பக்கம் .

முக்கியமாக  ஒரு  அழகிய  குட்டி  வானவில்  அந்தப்  பெட்டியினுள்  
கமுக்கமாக ஒளித்து வைக்கப்பட்டு  இருந்ததைப் பார்க்கிறாள் .

ஒரு  குயிலின்   இறக்கையும்  , ஒரு  அழகிய  சுருக்குப்பையில்  சில  ஆப்பிள் 
பழ  விதைகளும் , கருஞ்சிவப்பில்  ஒரு  சிலந்தியின்  வலையும்  கூட  இருக்கிறது  அங்கே .

அந்த  ராணி  அவர்களுடைய  இளவயதில்  , அங்கொன்றும்  இங்கொன்றுமாக 
சேர்த்த  மாயப்பொருட்கள்  அவை .

இவற்றை வைத்து  என்ன  செய்ய  என்று  யோசித்து  ஒரு முடிவுக்கு  வருகிறாள் 
இளையவள் . இப்படியே  ரொம்ப  யோசித்துக்கொண்டு   இருந்தால் 
காலம்தான்  கடக்கும்  , செயலில்  இறங்குவோமென முதலில் 
காய்ந்து போய்   இருந்த  ஒரு  நிலத்தைச்  சுத்தப்படுத்தி , நன்றாகத்   தோண்டி ,
இறுகிய  மண்ணைத்  தளர்த்துகிறாள் .

தன்னிடமிருந்த  மாய  ஆப்பிள்  விதைகளை  மண்ணில்  விதைக்கிறாள் .
மழை காணா  பூமியென்பதால்  , பெட்டியினுள்  இருந்து  சில 
மழைத்  துளிகளை  எடுத்துத் அந்த  விதையின்  மீது  தெளிக்கிறாள் .

அதே  போல  , சூரிய  ஒளியினையும்  படரச்  செய்கிறாள் .

இரண்டாம்  நாள்  , இவள் செய்கைகளைப்  பார்த்த  ஜான்  என்ற  ஒரு இளைஞன்  , அவளுக்கு  உதவ  வருகிறான் .

தன்னிடமிருந்த சில  மற்ற  விதைகளைத்  தந்து  கூடமாட  இருந்தும் உதவுகிறான் .இருவரும்  அந்த  மாலைக்குள்  , நல்ல  நண்பர்களாகின்றனர் .
ரொம்ப  நாட்களுக்கு  பிறகு  பெலிசிட்டி  அன்று  மிகவும்  சந்தோஷமாக உணர்ந்தாள் .

மூன்றாம்  நாள்  காலையில் , பூமியினைத்  துளைத்துக்கொண்டு 
சிறிய  பச்சைத்  துளிர்கள்  வந்து  இருப்பதை   அவர்கள்  இருவரும்  பார்த்தனர் .
அவர்கள்  அம்மாவின்  ஆப்பிள்  விதைகளிலிருந்து  வந்த 
துளிர்கள்தான்  அவை . நிறைய  நம்பிக்கை  கொடுத்தன  
அவைகள் இருவருக்கும் .

இதனைப்  பார்த்துக்கொண்டு  கொண்டிருந்த  ஊர்  மக்கள் , 
இவர்கள்  இருவருக்கும்  உதவ  வருகின்றனர் .
அடுத்த  சில  நாட்களில் , பெரிய கூட்டம்  கூடி   ,அகண்ட  நிலப்பரப்பு  முழுவதும் இது  போல  , பலவகைப்  பழங்களும் , பூச்செடிகளும்  பயிரிடப்பட்டன .
தன்னுடைய  மாய  சிலந்தி  வலை  வைத்து  , ஒரு  பெரிய  கூடாரம் 
அமைக்கிறாள் , அந்தச்  செடிகளை  இரவின்  பனியிலிருந்து  காப்பாற்ற ..

போட்டி  முடிய  இன்னும்  கடைசி  இரு  நாட்களே  இருந்தன
பெலிசிட்டி  நினைத்தாள்  , இன்று  முழுவதும்  உழைத்தாலும் , பெரிய 
மாயம்  ஒன்றையும்  நிகழ்த்திவிட  முடியாதுதான் . ஆனால்  , இங்கு  நிகழ்ந்து  இருப்பது  , போட்டியினைத்தாண்டி  ஒரு நிகழ்வு .
அந்த  நாடு முழுவதும்  பயிரிடப்பட்ட இடங்களில்  எல்லாம் , துளிர்த்து  இருப்பது  சிறிய  துளிர்கள்  மட்டுமின்றி  , மக்களின்  நம்பிக்கையும் , சந்தோஷமும்தான் .தனக்கு  இதுவே  போதுமென  நினைக்கிறாள் .

போட்டியின்  நாளிற்கு  முந்தய  சாயங்காலம்  , எல்லோரும்  களைத்துப்போய்  இருக்கின்றனர் .மக்களின்  குழந்தைகளும்  , என்ன  நடக்கிறதென்று  பெரிதாகப்  புரியாமல்  பார்த்துக்கொண்டு  இருக்கின்றன .

"எல்லோரும்  இங்கே  வாருங்கள் ...கண்களை  மூடுங்கள் .....
நாள்  சொல்வது  வரை  கண்ணை  மூடுங்கள்  பிள்ளைகளே .....

சூ  மந்திரக்காளி ....இப்போ  கண்ணைத்திரங்கள்  ....." என்கிறாள் .

குழந்தைகள்  , கண்திறந்த  பொழுது  , தூரத்தில்  ஒரு மலை  தெரிய  , அதன்  முன்  மங்கலாக  ஏதோ  தெரிகிறது .சூரிய  ஒளியினை   கொஞ்சம்  மங்கச்  செய்கிறாள்  பெலிசிட்டி .
அங்கே  ஒரு  அழகிய  வானவில்  , வளைந்து  கம்பீரமாகச்  சிரித்துக்  கொண்டு  இருக்கிறது .
அவள்  பெட்டியிலிருந்து  வெளியே  எடுத்து  விட்ட  அம்மாவின்  வானவில் . 

அந்தக்  குழந்தைகள்  ஆரவாரமாக  சிரித்துக்  கொண்டாடின .தன்  அம்மா  சிரித்தார்ப் போல  தோன்றியது  அவளுக்கு .

" என்னமா  , எங்களுக்கு  எதுவும்  இல்லையா " என்றுக்  கேட்கின்றனர்  ஊர் மக்கள் .

மாய  விதைகளால்  , ஒரே  ஒரு  ஆப்பிள்  மரம்  அங்கே  பெரிதாக  வளர்ந்து  இருந்தது .
அது  ஒரு  மிகப்  பெரிய  ஆல  மரம்  போன்று  வித்தியாசமாக  இருந்தது .

"வாருங்கள்  எல்லோரும்  சென்று  , அந்த  ஆப்பிள்  பழங்களைத்தின்போம்  " என்கிறாள்.

மக்களும்  , சந்தோஷமாக  உண்கின்றனர் .
இரவு  கவ்வத்தொடங்குகிறது ...

தன்   பெட்டியிலிருந்து , அந்த  குயிலின்  இறகை  எடுத்து  அந்த  ஆப்பிள் 
மரக்கிளையில்  வருடுகிறாள்  பெலிசிட்டி .

அந்த  ஆப்பிள்  மரத்தின்  , இலைகள்  அசைகிறது .
சுகமான  காற்று  வந்து  வீசுகிறது .

மக்களுக்கு  , கண்ணயர  வேண்டுமெனத்  தோன்றுகையில்  , 
ஒரு  குயிலின்  இசை  கேட்கிறது . அந்த  இறகு செய்த  ஜாலமென  , அம்மாவிற்கு  நன்றி  சொல்கிறாள்  அவள் .
மீண்டும்  சொர்கம்  வந்ததென  நினைத்துக்கொண்டு  அனைவரும்  அவளை  வாழ்த்தி  தூங்கிப்போய்   விடுகின்றனர் .

மறுநாள்  , தீர்ப்பு  வழங்கும்  நாள் .
ராஜா  , சுசன்னா  மற்றும்  மிரண்டாவின்  மர  , மற்றும்  உலோக  கோபுரங்களை  முன்பே  பார்த்துவிட்டார் . எங்கே தன்  இளைய  மகளைக்  காணவில்லையே என்று  ஊருக்குள்  தேடி  வருகிறார் .

தன்   ஊராவென  வியந்துப்போகிறார் .
எங்கும்  பச்சை  பசேலென மரங்கள்  , பூத்துக்  குலுங்கும்  செடிகள் , 
அங்குமிங்கும்  குழந்தைகள்  ஓடி  விளையாடியும்  இருந்தன .
மக்களும்  மிகவும்  சந்தோஷமாக  காணப்பட்டனர் .

" மகளே  பெலிசிட்டி " ....

" அப்பா  மன்னிக்கவும்  , தூங்கிப்  போய்விட்டேன் ....உங்களை  நானே  வந்து  பார்த்து  இருக்கணும் .இந்த  ஒரு  வாரத்தில்  , என்னால் இவ்வளவுதான்  முடிந்தது . ஆப்பிள்  மரம் ஒன்றுதான்  வேகமாக  வளர்ந்தது .இன்னும்  கொஞ்சம்  நாட்கள்  இருந்தால்  , என்னால்  ,இன்னும்  சிறப்பாக  காண்பித்திருக்க  முடியும்" 

என  தூக்கக்கலக்கத்தில்  சொல்கிறாள் .

" கண்ணே  , என் கண்ணே  , உங்க  அம்மாவைப்  பார்த்தது  போல  இருக்கிறது  ...."
என்று  மகளைத்தழுவி ஆனந்தமயமாக  அழுகிறார்   ராஜா .

" என்ன  சொல்கிறாய்  நீ ...திரும்பிப்பார்  ....எவ்வளவு  மரங்கள்  காய்த்துத்  தொங்குகிறது ...
பறவைகளின்  சப்தம்  உனக்கு  கேக்கவில்லையா.....பூக்களின்  மணம்  உன்னை  எழுப்ப  வில்லையா ?!!"

ஒரு  இரவிற்குள்  நடந்த  மாயத்திற்கு  அம்மாவிற்கு  நன்றி  சொல்கிறாள்  பெலிசிட்டி.

அப்புறமென்ன  அந்த  நாடு  அவளுடயதாயிற்று .
மக்களை  சந்தோஷமாக  பார்த்துக்கொண்டாள் ......

ஜானும்  அவளும்  சந்தோஷமாக  வாழ்ந்தனர் .

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 இந்தக் கதையில்  வருவது  போல   மாயப்  பெட்டியினை  நம்மால் , குழந்தைகளுக்கு  விட்டுச்  செல்ல முடியாது .. ஆனால்  , வாழ்க்கைக்கு   வாழத்தேவையான  பலவற்றை  அவர்கள்  அறிவிற்கு  ஊட்டி  விட  முடியும்  நம்மால் .  

வானவில்லையும்,   மழையினையும்  , நல்ல  இசையினையும்  
அவர்கள்  ரசிக்க  ,நல்ல ரசனையினை   அவர்கள்  வளர்த்துக்கொள்ள உதவ  முடியும் . குறிப்பாக  இயற்கையோடு  ஒன்றி  வாழவும்  , இருக்கும்  இயற்கையினை  இன்னும்  கெடாமல்  பார்த்துக்கொள்ளும் கடைமையும்  நமக்கு  உள்ளது .

பிளாஸ்டிக்  பைகளைத்  தவிர்த்து  , மரங்களை நட்டு ,  நம்மால்  முடிந்தவரை  இயற்கைக்கு 
நன்மை  செய்வோம் . பிள்ளைகள்  நம்மைப்  பார்த்து  இதனைத்  தொடருவர் .

நம்முடைய  கனவைத்  திணிக்காமல்  , அவர்கள்  வித  விதமான   கனவினைக்காணவும் ,
அதனைநினைவாக்கவும் , அவர்களே  முயற்சி  செய்து  முன்னேற  முடிந்த  வரை துணையிருப்போம் .

அந்த  வானவில்  , பெட்டியிலிருந்து  வரவேண்டியது  இல்லை.
அவர்கள்  வாழ்க்கையே  வானவில்லாகட்டும் ...


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Friday, June 3, 2016

ராசாளியே பாடல்

ராசாளியே பாடல் :
ரொம்ப நாட்களுக்கு பிறகு திரும்பத் திரும்ப கேட்கத்தூண்டிய  ரகுமான் அவர்களின் பாடல் ...இன்னும்  சொல்லப்போனால் ஜீவன்  நிரம்பி வழியும்  பாடல் .
 முழு வீச்சில் இறங்கி இசையமைத்து இருக்கிறார் போல ..
அல்லது கெளதம் மேனன் கூட்டமைப்பு செய்த மாயமாக கூட இருக்கலாம் .
பறக்கும் ராசாளியே .....என்னடா இது காதல் பாட்டிற்கு , அதுவும் பெண்ணை நோக்கி ராசாளி என்று இருக்கிறது என்று யோசிக்கையில் , கொஞ்சம் அடுத்து வந்த வரிகளும் , இசை வடிவமும் அப்படியே இழுத்துப்  போட்டு விட்டது .
"
முதலில் யார் சொல்வதன்பை ....
முதலில் யார்யெவதம்பை ...
"
இந்த இரண்டு வரிகள் பாடலில் சாராம்சத்தை சொல்லி விடுகிறது.
காதலில் அகப்படாமல் உயரப் பறந்து செல்லும் ராசாளிப் பறவையாக அவள் இருக்கிறாள் என அவ்வாறு அழைக்கிறான் தலைவன் எனக்கொள்ளலாம் .
உச்சம் தொட்டு விட்டது பாடல் என்று நினைக்கையில் ,
அங்கிருந்து அப்படியே வேறு சில பாடல்களின் சரணங்கள் தொடர்கிறது .
நின்னுக்கோரி , வடிவேலன் போன்ற பாடல்கள் வயலின் இசையோடு இழைந்து பிண்ணப்பட்டிருக்கிறது . இந்தச் சரணங்கள் அப்படியே பல்லவியில் போய் சேரும் இடம் மிக அருமை.
பாடலின் முடிவு , அப்படியே தாலாட்டி தூங்கவைத்து விடும் ...
"என் தோழில் குளிர் காய்கின்ற தீ ,,,,
குளிர் காய்கின்ற தீ ...."
தமிழோடு  அழகாக விளையாடிய தாமரைக்கு நன்றி கலந்த வணக்கம் ..

---------------------------------------------------------------------------------------------------------------------------------

Saturday, August 29, 2015

டப்பா சோளமும் , பாட்டில் குளிர் பானங்களும் .

தலைப்பு  உணவைச் சார்ந்து  இருந்தாலும்  , நான்  பேச  வந்தது  அதையும்  தாண்டிய  ஒரு  கண்ணோட்டம் .

சிறுதொழில்கள்  பெருக  வேண்டியது குறித்து .

அமெரிக்காவில் வேலை  பார்க்க வந்து சில  வருடங்கள்  ஆகிறது ..
இங்கே  ஷாப்பிங்  செய்வது எனக்கு  முன்பெல்லாம் அலுப்பாய்  இருக்கும் .
எல்லா இடங்களிலும்  பெரும்பாலும்  ஒரே  போன்ற  கட்டமைப்புதான் .
கடைக்குள்  எந்த  ஊரில்  நுழைந்தாலும் அதே  போன்ற வடிவமைப்பும்   ,
சாமான் வரிசைகளும் சலிப்பைத் தவிர எதைக் கொடுக்கும் .
மளிகைக் கடை முதல் [ வால்மார்ட்  போன்ற  கடைகளையும்  சேர்த்து தான்  சொல்கிறேன் ]

இந்தியா  வரும்  பொழுது  , நம்ம  பாண்டி  பஜாரில் தெருவோரக் கடைகளில்
வணிகம்  செய்வது போன்று வருமா  என்று  நினைப்பதுண்டு . இப்பொழுது   நெரிசல்  காரணமாக , தெருவோரக் கடைகள்  அனைத்தையும்  அப்புறப் படுத்தி விட்டு  , பெரிய  கடைகள்  மட்டுமே  மிஞ்சி  இருக்கிறது அங்கே .

இந்த  செயின் ஆப்   ஸ்டோர்ஸ் வந்தாலே சிறு  வணிகர்கள்  பாதிப்படுகின்றனர்  ஒரு  பக்கம்  என்பதை  நாம் அறிந்ததே . இன்னொரு  பக்கம்  நான் சொல்லும்  , பல்வகை [variety ]  குறைவது . இது  ஷாப்பிங்  அனுபவத்தை ருசி குறைக்கச்  செய்யும் .

யோசித்துப்  பாருங்கள்  , வேலைப்   பழுவில் , வெளியே  செல்வது  குறைந்து  இருக்கையில்  , அதே  சலிக்க  வைக்கும்  கடைகளில்  நேரே  உள்ளே  சென்று
வாங்கி  வருவது நன்றாக   இருக்குமா  அல்லது  , மெதுவாக  அந்த  பாண்டி  பஜார் மர   நிழல்களுக்கிடையில்  , நறுக்கி  வைத்த   மாங்காயும்  , வெள்ளரிப்பிஞ்சும்  மிளகாய்ப் பொடி தடவி சாப்பிட்விட்டு எதுவும்  வாங்காமல் வந்தாலும்  சரிதான்! அந்த  அனுபவமே  தனிதான் .

வாழ்க்கையில்  நிறங்கள்  வேண்டும்  எல்லாவற்றிலும்  .கருப்பு  வெள்ளையாகத்தான்  தோன்றுகிறது  எனக்கு  இந்த  மால்களும்  , பெரியக்  கடைகளும்  சில  தடவைகளுக்குப்பின் .

இது ஒரு  பக்கம்   இருக்கட்டும் .

சில  வருடங்களாக  டெக்சாஸ்   ஆஸ்டின் என்கின்ற  ஊரில்  இருந்து  வருகிறேன் .இது அமெரிக்க  நகரகங்களில் சற்று  வித்தியாசமான  ஊர்   என்று  சொல்லலாம் .

வெயில்  106-108 அளவிற்கு  ஜூலை  ஆகஸ்டில்  மண்டையப்  பிழந்தாலும்  ,
அதையும்  தாண்டி  இந்த ஊரில்  மக்கள்  விரும்ப` சிலவைகள்  இருக்கின்றது .
குறிப்பாக  நான்  பேச  வந்த  தலைப்பின் கீழ்  வரும்  , சிறு வணிகங்கள் . உதாரணமாக  உணவகங்கள்  , பெரும்பாலும்   புட்  செயின்ஸ் [ food  chains ]   இருக்கும்  அமெரிக்க  நகரங்களில் , இங்கே  நிறைய  சிறு  வணிகர்கள்  கடை  அமைத்துள்ளனர் .

 குடும்பங்கள் நடுத்தும்  பிட்சா   உணவங்ககள்,   [ இத்தாலி  நாட்டிலிருந்து  குடிபெயர்ந்து  வந்த சில  குடும்பங்கள்  நடத்தும்  கடைகளும்  அடங்கும் ], ஆப்பிரிக்கா  எதியோப்பிய  நாட்டு  உணவகங்கள் [ நம்ம  ஊரு  தோசை  போன்ற  ஒன்றை  அடிப்பகுதியாகக்  கொண்டு அதன்  மீது  பல  வகைக்  கரி வகைகளைப் பரப்பி இவர்கள் கொடுக்கும்  விருந்து  அலாதி .
அதுவும்  கையில்தான்  சாப்பிட  வேண்டும் வகையில்  இருக்கும்  என்பதில்  எனக்கு  இரட்டிப்பு  மகிழ்ச்சி . அந்தக்  கடையில்  உட்கார்ந்து  சாப்பிட  வைக்கப்  பட்டு  இருக்கும்  மோடா  போன்ற  நாற்காலிகளும்  அந்த அனுபவத்தைக்  கூட்டும் .]

இதில்  பிட்சா  போன்ற உணவிற்கு  நான்  வக்காலத்து வாங்கவில்லை .
இத்தாலியக்  குடும்பங்கள்  தங்கள்   பாரம்பரியத்தை வெளிக்காட்டும்  வகையில்  நடத்தும்  சிறு கடைகளைக்  குறியிட்டேன்  , அவ்வளவே !


 ஐஸ்கிரீம் கடை  ஒன்று  இருக்கிறது .
ஐஸ்கிரீம்  அவ்வளவு  சாப்பிடாத  நான்  , இந்தக்  கடையினில்  சாப்பிட  ஆரம்பித்த  பின்  ,கொஞ்சம்  அடிக்கடி  சாப்பிடத் தொடங்கி விட்டேன் .
வெறுமனே  ஐஸ்கிரீம் கப்பில்  போட்டு  மட்டும்  தராமல் , நன்றாக  அடித்து  , கொஞ்சம்  பிஸ்கட்டும்  , பழங்களும்  கலந்தடித்து ஒரு  கலவையாகத்   தருவர் ..
இது  ஒரு  உதாரணம்   மட்டுமே .
இப்படி  பல   இருக்கிறது .வித்தியாசமாக  யோசிப்பார்கள்

இதை  பாஸ்கின்  ராபின்ஸ்  போன்ற  கடைகளில்  பார்க்க  முடியுமா!

இது  உணவு  சார்ந்த  வணிகம் .

இதைப்  போன்று  கோல்ட் ஜிம்  போன்ற  செயின்  ஆப்  பிட்நெஸ்
 சென்டர்ஸ்களுக்கிடையில் சிறு  பிட்நெஸ்  கிளப்ஸ்  நிறைய  பார்க்கிறேன் .
ஒன்றில்  சேர்ந்து  சில  மாதங்கள்  பயிலவும்  செய்தேன் .
நிறைவான  அனுபவமாக  இருந்தது .

ப்ரேசிலியன்   ஜோஜிட்சு  , யோகா  , கிக் பாக்சிங்  போன்று  பல  வகையான தற்காப்பு   வல்லுனர்கள்  சிறிய  அளவில்  நடத்தும்  பயிற்சிக்கூடங்களும்  அடங்கும்  இதில் .நல்லக் கூட்டமும்  பார்க்கிறேன் .

இதைக்  கலையாக  மற்றும்  சொல்லித்தராமல்   ,உடலைப்  பேணும்  ஒரு
யுகித்யாக  முன்னிறுத்துகின்றனர் . எந்த  வயதினரும்  படிக்கும்  வகையிலும்
சொல்லித்தருகின்றனர் .

ஏன்  நம்ம  ஊரில்  அழிந்து  வரும்   சிலம்பாட்டமும்  , கேரளாவின்  களரிப்பட்டுவும்  பெரு  நகரங்களில்  சொல்லிக் கொடுக்கபடுவதில்லை என்றுத்  தோன்றியது . ஜிம் மில்  மட்டும்  இன்றி  , இது  போன்ற  கலைகளை
 உடல்  நலம்  பேணும்  ஒரு கட்டமைப்பில் கொண்டு  வந்துப் பார்க்கலாமே .
அழிந்து  வரும்  கலைகளும்  மேன்படும் , முக்கியமாக  சலிப்புத்  தட்டாது  , உடம்பும்  மனமும்  சீர்படும் .

இப்படி  எல்லா  தளத்திலும்  சிறு  வணிகம்  பெருகி  நிற்கின்றது இங்கே .

"keep  austin  weird  "என்பது இந்த  நகரத்தின்  தாரக  மந்திரம் .
அதாவது  வித்தியாசமா  கோக்குமாக்கா   இருக்க  வேண்டி சொல்லப்படும்  தாரக   மந்திரம் . அரசே  சிறு  தொழில்  நடத்துவோருக்கு  நிறைய
உதவி  செய்கிறது . கடன்  கொடுக்கும்  வழிகளை எளிமைப் படுத்தியது  இதில்  முதன்மையாகும் .


இங்கே  இப்படி  இருக்க  , நாம்தான்  நம்முடைய  பாரம்பரிய  அண்ணாச்சி  மளிகைக்  கடைகளையும்  , தெருவோர  சிறு  வணிகர்களையும்  விட்டு ,சூப்பர் மார்கெட் போன்ற  கடைகளுக்கு  போய்க்கொண்டு  இருக்கிறோம் .

பொள்ளாச்சி  இளநீர்  விடுத்து  கோக்கிற்கும் , ,   தெருவோரத்தில்  அல்லது  மெரினாவிலோ  சுடச் சுட தீயினில்  வறுத்துத்  தரப்படும் காம்புடன்  கூடிய சோளம்  விற்கும்  கடைகளையும்  விட்டு விட்டு , கூடாரத்தில்  டப்பாவில்  போட்டு தரப்படும் மசாலா  சோளத்தை  நாடுகிறோம் .

இருட்டுக்கடை  அல்வா  என்பது நெல்லை  டவுனின்  ஒரு  அங்கம் .
இப்படி  சில  அங்கங்களின்  குறியீடுதான்  ஒரு  ஊர் . இவைகள்  காலப் போக்கில்  அழிந்துவிடக் கூடாது .

சோளம்  என்பதை  ஒரு  குறியீடாக  மட்டுமே  சொல்கிறேன்!
சிறுதொழில்கள்  பெருகட்டும் ,வாழ்க்கை  இன்னும்  வண்ணமயமாகட்டும் .




Wednesday, February 18, 2015

மனம் ஏன் பழசை நினைத்து ஏங்குகிறது .????

இளையராஜா  பாடல்கள்  பற்றி  சமீபத்திய  ஒரு  பேட்டியில்  இயக்குனர்  விக்ரமன் சொன்னார் , பழைய  பாடல்களை   கேட்கும்  பொழுது  அழத்  தொடங்கி  விடுவேன்   என்று .

கவலையற்ற  தினங்களை  நியாபகப்படுத்தும்  ஒரு  அனுபவத்தை  அதைக்  கொடுப்பதனால்  என்றும்  சொன்னார் . எவ்வளவு  ஆழமான  நிதர்சனமான
கருத்து .

என் மனதில்  இந்த  சின்னப்  பொறி  நிறைய  எண்ணத்  துகள்களை
கலைத்து  ஒரு  புரட்டு புரட்டிப்போட்டது .

மனம் ஏன்  பழசை  நினைத்து  ஏங்குகிறது ???

காலமும்  , காலம்  கொடுத்த  சில பல கசப்பான  இனிப்பான நினைப்புகள்
ஆழ்  மனதில்  படிய  வைத்து  போன  பிம்பங்களை  தூசி  தட்டி  எடுக்கும்  ஒரு  ஊடகம் தான்  பாடல்கள்  போல . இது  போன்று  வேறு  ஊடகங்களும்  இருக்கலாம் , ஒவ்வொருவர்  ரசனை மற்றும்  அனுபவம்   சார்ந்து .

இந்த நொடியில்   இல்லாமல்  , கண்களை  மூடியோ  அல்லது  நினைப்பிலோ
"time  travel"  செய்யும்  ஒரு  வழிதானே  அந்த  பழைய  நினைவுகள்  கொடுப்பது .

நம்மிடம்  இப்பொழுது  இல்லாமல்  போன  மனிதர்களையோ  , அல்லது  தொலைத்த  மீட்டுக்கொள்ள  முடியாத  சந்தோஷங்களை  தேடி  அலையும்  ஒரு  தேடல்  என்றும்  சொல்லலாம் .

இன்னும்  சொன்னப்போனால்  கால  வெள்ளத்தில்  தொலைந்த  நம்மை  மறுபடியும் , அதாவது  பழைய  நம்மை  ஒரு  முறை  நினைவால்  ஸ்பரிசித்து  வரும்  ஒரு  அனுபவமாகவும்  அது  இருக்கும்  பல  சமயங்களில் .

என்னுடைய  சில  முந்தய  வலைப்பூக்களில் என்னுடைய  பால்ய  தினங்களைப்  பற்றி  அடிக்கடி  குறிப்பிட்டு  இருப்பேன் .
அதை  நான்  அடிக்கடி  குறிப்பிட  வேண்டும்  என்று  மெனக்கிட்டு  சொல்லவில்லை . ஆனால்  அசை  போட  ஆனந்தமாய்  இருந்ததால்  சொல்லி  இருப்பேன்  என   பிற்பாடு  ஒரு  சந்தர்ப்பத்தில்  உணர்ந்தேன் .


அக்காவிடம்  பேசிய  பொழுது   ". நீ  சமீப  காலங்களாக அடிக்கடி உன்
சின்னப்   பையன்  நினைவுகளை  பதிவிடுகிறாய் , நல்லது "  என்ற  அவள்  சொன்ன பொழுதுதான் .

நினைவுகள்  வரமாகவும்  சாபமாகவும்  அமைகின்றன என்பதை  நாம்  அறிவோம் இழந்த  சந்தோஷங்களை  நினைவுப்  படுத்துவதால்  கசப்பாகவும்  , இல்லாத  சில  சந்தோஷங்களை  நினைத்து  அமிழ்ந்து  போக  உதவுவதாலும் தானே !

அம்மாச்சியின்  மடியில் படுத்து  சொடக்கு  எடுத்துக்  கொண்டு  , " சுகவாசி " என்று  அவர்கள்  செல்லமாக  கடிந்து  கொண்ட  தருணத்தையும்  ,
அக்காவும்  நானும்  சிறு வயதில்  கவலையற்று  ஆனால்  ஒரு  5 ஸ்டார்   மிட்டாயின்  காரணத்தால்  சண்டையிட்டுக்  கொண்ட  நாட்களையோ நினைத்து  மறுபடி  மறுபடி   பூரித்துப்  போகக்கூடிய  சக்தி  நினைவுகளுக்கு  மட்டுமே  உண்டு .குறிப்பாக  அந்த  மிட்டாய்  கிடைப்பதே  அந்த  வயதின்  பெரிய  தேவையாகவும்  , கவலையாகவும்  இருந்து உள்ளது  ஒரு  காலம்  என்று  எண்ணி  மறுபடி  மறுபடி  பூரிக்கத்தான் .

அப்பாவுடன்  புதிதாக  வாங்கப்பட்ட  சாம்பல்  நிற  லாம்பி  ஸ்கூட்டரில்  முதல்  முறை  உட்கார்ந்து  போன  பொழுது  துரத்திய  எருமை  மாட்டின்  குரலும்
காதில்  இப்பொழுதும்  கேட்பது  அதே  சக்தியால்தான் .

எல்லா  பற்களும்  தெரியும்  சிரிப்புடன்  , தளர்ச்சி  இன்றி  வந்த அம்மாவின் அந்த  பழைய  நடையும்   குதூகலமும்  நான்  மறுபடி  தொட்டு  வருவதும்  நினைப்பில்தானே.

இப்படி  பல  நம்  ஒவ்வொருவருக்கும் .

இதே  போல பழைய   சோகங்களை  அசை  போடவும்,  சில  சமயங்களில்
சுழற்சியாக  அசை  போடவும்  தான்  செய்கின்றது  மனம் . திரும்பத்  திரும்ப  போட்டு  உளப்பி  எடுக்கும் . இதைத் தாண்டி  வந்துவிட்டால்  நல்லது  என்று  சொல்லித்தெரிய  வேண்டியது  இல்லை.

சில  வாரங்களுக்கு  முன்பு  என்  கல்லூரி  நண்பனை  வருடங்கள்  கழிந்து  சந்தித்தேன் . அன்று  இரவு  முழுவதும்  பேசிக்கொண்டே  இருந்தோம் .
GCT  கல்லூரியில்  பச்சை  நிற  இரும்புக்  கட்டிலில்  படித்துக்கொண்டு  இருக்கிறோம்  என்று  எங்களையே  ஏமாற்றிக்  கொண்டு  , போட்ட
அரட்டைகளை  நியாபகப் படுத்திச்  சென்றது  அந்த  சந்திப்பு .

அசை போட்டு  கொண்டே  இருந்தேன்  , ஏன்  இப்படி  நினைக்க  நினைக்க  நினைவில்  இனிப்பைச்  சுரக்கிறது  கல்லூரி  நாட்கள்  என்று.
யோசித்து  யோசித்து  கொஞ்சம்  பிடி  கொடுத்தது .
அது  பொறுப்புகள்  அற்ற  நாட்கள்  , " wild  carefree  days ".
எல்லாவற்றையும்  பார்த்துக்  கொள்ள  பெற்றோர்கள்  இருந்ததால்   ,
பொறுப்புகள்  இன்றி  கழிந்த  நாட்கள் .

இப்படிப்  பட்ட  தினங்களை  நினைத்து  மனம்  ஏங்கத்  தானே  செய்யும்!

இளையராஜா  பெரியவரா  ,  ரெஹ்மான்  பெரியவரா  என்ற  சண்டைதான்
அப்போதைய  கவலை  , ஹாஸ்டல்   மெஸ்ஸில்  இன்று  கல்  இட்லிதனை  எதனைக்கொண்டு  உடைத்து  உள்ளே  அனுப்புவதுதான்  என்பதுதான்  அன்றைய  ஒரு  இரவின்  கவலையாகவும்  இருந்து  இருக்கக்  கூடும் .
இப்போ  இருக்கும்  பொறுப்புகள்  நான்  சொல்லியா   தெரிய  வேண்டும்!
கடைசி  வருடம்  நெருங்கவும்  , வேலை  அமைய  வேண்டும்  என்ற  பதட்டம்  தொற்றிக்கொள்ள  ஆரம்பித்ததில்  தொடங்கி  அது  அப்படியே  வெவ்வேறு  விதத்தில்  காலத்தை  வியாபித்துக்  கொண்டது  வேறு  கதை .

பிள்ளைகளின்  சிரிப்பும்  , இசையும்  , நண்பர்களுடன்  பேசும்  ஒரு  தொலை பேசி  உரையாடலோ  , சந்திப்போ   , அல்லது  ஒரு  நல்ல  வாசிப்போ ஏதோ  ஒன்றின்  மூலம்  அதனை  மீட்டு  எடுக்க  முயற்சிக்கிறோம் .
இந்த  வருடத்தில் அதனை  இன்னும்  அதிமாக  செய்வோமாக !

குறிப்பாக  நம்  பிள்ளைகளுக்கு  முடிந்த  வரை  இப்படி  கவலையற்ற
நாட்களை  வாழ்  நாள்  முழுவதும்  கொடுக்க  முயற்சிப்போம் , கடவுள்  அருளால் .

வேலை  பிடிங்கித்  தின்ற  பகல்  இரவுகளுக்கு  மத்தியில் பழயதை  நினைவூட்டிச்  சென்றது  இந்தப்  பதிவும் .இதைத்தான்   சொன்னேன்  மேலே  " with  no  strings  attached "  தருணங்களை  தொட்டு  வரும்  ஒரு  பயணம்  என்று!


Tuesday, January 13, 2015

ஒட்டகச்சிவிங்கியும் கிட்டப்பார்வையும் .....

 ஒட்டகச்சிவிங்கியும் கிட்டப்பார்வையும் .....

வேலை இல்லாத வாரக்கடைசிகள் அபூர்வமாகிப்போன துறையில் நானும் இருப்பதால் , சமீபத்திய இரண்டு மாதங்கள்  மிகவும் இனிமையாகக் கழிந்தது , வேலை இல்லாததால். பிடித்த விஷயங்களை செய்வதும் , தூங்குவதும் குழந்தையுடன் இன்னும் அதிக நேரம் செலவிடுவதற்கும் நல்ல வாய்ப்பாக இருந்தது.

நாளையில் இருந்து திரும்பவும் ஓட்டம் தொடங்கப்  போகிறது என நினைத்துக்கொண்டே படுத்து இருக்கையில், மகள் எப்பொழுதும்  போல ,
"bookchi bookchi " என்று ஒரு கதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து படம் பார்த்து கதை சொல்லச் சொன்னாள் .

மேல சொன்ன தலைப்புடன்[ ஆங்கிலத்தில்;தான் , " THE  near  sighted  giraffe "] இருந்த அழகான படங்களுடன் கூடிய அந்த புத்தகத்தை நான் பல நாட்கள் பார்த்து உள்ளேன் , ஆனால் இந்த கதையினை படித்துச்  சொன்னது கிடையாது.

ஒரு காட்டில் ஒரு ஒட்டகச்சிவிங்கிக்கு கிட்டப்பார்வை  .

 காட்சிகள் சரிவர தெரியாமல் நிறைய  சங்கடங்கள். கண் தெரியாமல் ஒரு மரத்தின் கிளையில் தலை முட்டுகிறது , ஒரு குரங்கு அதனை கண்ணாடி  அணியச்  சொல்லுகிறது . மற்ற விலங்குகள் கண்ணாடி அணிந்த தன்னை பார்த்து என்ன நினைக்குமோ என்று யோசித்து  , அது கண்ணாடி அணிய மறுக்கிறது .  பிரச்சனைய சமாளிக்க , "helmet"  ஒன்றை போட்டுக்கொள்கிறது .
பிறகு ஒரு சிறுத்தையின்  மீது கால் இடறி விழுகிறது. இதன் பிறகும்  கண்ணாடி போடாமல் , வாலுக்கு மணி கட்டிக்கொள்கிறது , மற்ற மிருகங்கள் இதன் வருகை தெரிந்துகொள்ள . இப்படி போகிறது அதன் நாட்கள் .
சில வாரங்கள் கழித்துப்பார்த்தால் அதன் பின் புறத்தில் ஒரு தலைகாணி [முள்ளில் விழுந்ததில் இருந்து ], முதுகில் ஒரு ஏணி [ பள்ளத்தில் விழுந்ததில் இருந்து]  என பல சுமைகளை கூடவே தூக்கிக் கொண்டு சென்றது.

[ முழுக்கதையினை   சொல்லவில்லை இங்கே   , கொஞ்சம்  சுருக்கியுள்ளேன் , புத்தகத்தில்  ஒட்டகச்சிவிங்கி  இன்னும்  நிறைய  இடங்களில்  தடுமாறுகிறது !, சுமையும்  கூடுகிறது  ஒவ்வொரு  முறையும் ]

ஆனால்  கண்ணாடி மட்டும் அணிய மறுத்தது . இந்த வினோத தோற்றத்தினால் மற்ற மிருகங்கள்  அதனை அதிமாகவே  கேலி செய்தன, சில பாவமாக பார்த்தன .

இந்த கதை இப்படி போய்க்கொண்டு இருக்க, என் மகள் என் மடி விட்டு இறங்கி ஓடி விட்டாள் . குழந்தைகளின்  கவனம்  சிறிது நேரத்திற்கு மேல் ஒரு இடத்தில இருக்க மாட்டேன் என்கிறது."Attention  span " எனச்சொல்வர்  இதனை.

தொலைக்காட்சி  மற்றும் இன்டர்நெட் மூலமாக இவர்கள் கார்டூன்ஸ்  பார்த்து ,நொடிக்கு பல முறை காட்சிகள் மாரிப்பழகி , கதை கேட்கவோ , சற்று ஆழமாக ஒரே இடத்தில உட்கார்ந்து மனதை செலுத்தும் காரியத்தில் மனம் சேர மாட்டேன் என்கிறது. இதற்க்கு நாமும் காரணம். வேலை அல்லது சோம்பேறித்தனத்தால்  , தொலைக்காட்சி போட்டால் அழாமல்  இருக்கிறார்கள் என்று பழக்கி விட்டு , இப்படி ஆகிறது. இனி இதை மாற்ற முடிவு செய்து உள்ளேன். இதற்கு என்னுடைய அலுவலக நண்பர் முன்னோடி . வாரத்திற்கு சில மணி நேரங்கள் தான் தொலைக்காட்சி பார்க்க   விடுகிறார். முடிந்த வரை இயற்கையுடன் கூடிய சம்பாஷணைகளை பழக்கி விட்டு இருக்கிறார். சைக்கிள் எடுத்துக்கொண்டு அவர்களுடன் ஏரியினை   சுற்றி வருவதும் , படம் வரைதலும் , நிறைய புத்தகங்கள் வாசிப்பதும் , ஓடி ஆடி விளையாடவும்  பழக்கி இருக்கிறார். அடிப்படையில் அவர்களின்  படைப்பாற்றலை ["creative  intelligence  "]  பெருக்குதல் ஆகும்  .

அனைவரும் இதனைச்  செய்ய வேண்டும்.

கதையைத்தொடுருவோம் . கடைசியில் ஒரு சிறுத்தை ஒரு மரம் ஏறி அந்த ஒட்டகச்சிவிங்கியின் மீது ஒரு கண்ணாடி மாட்டி  விடுகிறது.
இப்பொழுது தன்னுடைய கோலத்தை  ஒரு நீர் நிலையில்  அது பார்க்கிறது .
இவ்வளவு  கோமாளியாகவா காட்சியளித்தோம் என்று மற்ற அனைத்தையும் கழற்றி எறிந்து , கண்ணாடி மட்டும் அணிந்த பின , தான் அழகாகவே  இருக்கிறோம் என உணர்கிறது. இப்படி அந்த கதை முடிந்தி விட்டது.

கண்ணாடி அணிந்து இருந்தால் தாழ்வு  மனப்பான்மை வரக்கூடாது  என குழந்தைகளுக்குச்  சொல்லவும் , மற்றவர்கள் அப்படி அணிந்து இருந்தால் அதை பற்றி குழந்தைகள்  என்ன நினைக்கிறார்கள்  என தெரிந்து கொள்ளவும்  பெற்றோர்களுக்கு சொல்லி முடிக்கிறார்கள் கதையின் ஆசிரியர்கள்
பெஞ்சமின்  மற்றும்  பில்  மக்லீன் .

[ NEW  BURLINGTON  , LONDON  வெளியீடு ].

எனக்கு இந்தக்கதை இன்னும் நிறைய ஆழமானவற்றைச் சொல்லியது.  இந்தக்கதையின் மூலமே அந்த ஒட்டகச்சிவிங்கி , கண்ணாடி அணிந்தால்  தன்னைப்பற்றி " மற்றவர் என்ன நினைப்பர்" அல்லது " WHAT  OTHERS    THINK " என்பதே .

நாமும் பல  சூழ்நிலைகளில்  ஒரு விஷயத்தை அணுகும் பொழுது , சரியான  கோணத்தை விட்டு ,  " மற்றவர் என்ன நினைப்பர்" என்கிற நினைப்பில் வேறு முடிவு எடுக்கிறோம் , அல்லது நமது சந்தோஷங்களை  குறைத்துக்கொள்கிறோம் . இதனால்  பாரம் தான் கூடுகிறது .
உண்மையில்  ,பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நம்மை பற்றி சிந்திக்க எவர்க்கும் நேரம் இருப்பதில்லை அல்லது சரியானதைச் செய்தால் [ கண்ணாடி அணிந்துகொண்டால் !] பலர் நமக்காக
மகிழ்ச்சியே அடைவர் . மற்றவரை பாதிக்காத வகையில் எடுக்கும் எந்த முடிவும் சரியானதே என்பது என் கண்ணோட்டம் .

இன்னொரு  வகையில் பார்த்தால் , கண்  தெரியாதது என்பது  அந்த ஒட்டகச்சிவிங்கியின் குறைபாடு. அதற்க்குண்டான தீர்வை அது புறத்தில்  தேடுகிறது.நமது கண்ணோட்டம் சரியாக இருந்தால் மற்றது தானாகவே விளங்கும்.

பிள்ளைக்கு கதை சொல்லப்போய்  எனக்கும் சிலவற்றை  வலியுரித்திச்சென்றது இந்தக்கதை .

 சரியான கண்ணாடி அணிந்து வாழ்கையினை  தொடருவோம்