Monday, July 4, 2016

ஆட்டோவில் வந்த கிருஷ்ணர்

 மனதில் நிறைய கசப்பான  அனுபவங்கள்  படிந்து இருந்தது....
ஆட்டோக்காரர்களைப் பற்றித்தான் சொல்கிறேன் .

பைக்கில்  அடிபட்டு  கிடந்த  பொழுது என்னை  நடு ரோட்டில்  கண்டுகொள்ளாமல்  அப்படியே  விட்டுச்சென்ற  ஆட்டோகாரர்  முதல்  ,
இங்கே  வரமாட்டேன்  அங்கேதான்  வருவேன்  எனச்சொல்லி சவாரி  வேண்டாம்  என்று சொல்லும்  ஆட்டோக்காரர்  ஒரு பக்கம்  என,
வீடு  அருகில்  வந்ததும்  , ரோடு  சரி  இல்லை , அது சரி இல்லை  , இது  சரி இல்லையென  நொட்டம்  சொல்லி  இன்னும்  அதிமாகப் பேரம்  பேசும்  ஆட்டோக்காரர்  வரை  பலரைப் பார்த்ததினால்  ஏற்பட்ட மனப்படிமம் தான் .

அன்றைய  காலை  எவ்வளவு  சீக்கிரமா  கிளம்பியிருந்தாலும்  ,
பதற்றத்துடனே  போயிற்று . கால்  டாக்ஸிக்காரன்  , வழி  தெரியாமல்  , ஒன்  வேயின்  மாற்றுப்பாதையில்  நுழையத் தெரியாமல் ஊர்  எல்லாம் சுற்றி  ,
கடைசி  நிமிடத்தில் கொண்டு  வந்து  சேர்த்தான்  விசா  இன்டர்வியூக்கு .

அங்கே  வந்த  பிறகுதான்  பார்க்கிறேன்  ஒரு  முக்கியமான  "payslip "மறந்து   இருப்பதை . அது  இல்லையென்றால்  , விசா கிடைப்பது  கஷ்டம் .
கிளம்பின  அவசரத்தில்  , கடைசி  மாச "payslip"ஐ  வேறு  பைலில்  வைத்து  விட்டேன்.

அமெரிக்கன்  எம்பஸியில் போன்  எடுத்து  வரக்கூடாது என்பதால்   வீட்டிலேயே விட்டுச் சென்றிருந்தேன் . ஆட்டோக்காரரிடம்தான் போன்  வாங்கி வீட்டிற்க்கு  விஷயம் சொன்னேன்.அனைவரும் பதறிப்போய்  இருந்தனர். அடுத்து என்ன என்று கேட்டதற்கு ,"இப்போதைக்கு ஒன்னும் பண்ண முடியாது, திரும்பவும்  பணம் கட்டி appointment  book  panni   வேறு ஒரு நாள் மறுபடி வர வேண்டும் ". அனைவரும் பதட்டம் அடைந்தனர்.
குறுகிய விடுமுறையில் நிறைய வேலைகளுடன் வந்தமையால்.

இதைகேட்டு கொண்டு இருந்த ஆட்டோ  ஓட்டுனர் , "என்ன சார்  , வீட்ல எதன்னா  மறந்து  உட்டுட்டு வந்துட்டீங்களா ? டென்ஷன் உடுங்க  சார் , நமக்கு உள்ற ஆள்  தெரியும் , எத்தனை மணிக்கு interview , வீட்டுக்கு போயிட்டு  எடுத்தாந்துரலாம் " என்றார்.

எனக்கு நம்பிக்கை இல்லை." அமெரிக்கன் embassy " இன் "document  review " department . இவருக்கு இங்கே ஆள்  எப்படி தெரியும்.சும்மா  சவாரிக்கென்று  சொல்கிறார்  என நான் பெரிதாக  எடுத்துக்கொள்ளவில்லை .

"என்னா  சார் , நம்பிக்கை இல்லையா  , போன வாரம் கூட  ஒரு கேரளா போலீஸ் காரர்  இது போல தான் எதையோ மறந்து வச்சுட்டேன்னு சொன்னார்.
அரை மணிநேரத்துல பார்க் ஓட்டல்க்கு போய்   , எடுத்தாந்து  , உள்ள அனுப்பி வச்சேன். கடைசில அந்த ஆளு , என்கிட்ட்ட ஒரு இருவது ரூவாய்க்கு  பேரம் பேசிக்கினார் சார் . எனக்கு அங்க உள்ளே விடும்  செக்யூரிட்டி  பசங்களை தெரியும் சார்.டீ  தம்  அடிக்க வெளியதான வருவாங்க.பார்த்து அனுப்பி விடறேன் சார். நம்பி வாங்க " என்றார்.

சரி போய்தான்  பார்ப்போமே என்று நானும் சரி என்றேன். வீடு வந்தோம்   விட்டுப்போன document  உடன். வேகாம ஒரு uturn  போட்டு  , அப்படியே டாப் கியரில்  விட்டார்  ஆட்டோவை . 25 நிமிடத்தில் வந்தோம் இந்த முறை.கலையில் டிராபிக் சேர்த்து ஊரை சுற்றியதில்  ஒரு மணி நேரம் ஆகியது இந்த தூரத்திற்கு.

" நீங்க உள்ள போங்க சார் , செக்யூரிட்டி எதன்னா  பிரெச்சனை செஞ்சா  நான் வரேன்  " என்றார்.   அவர் கொடுத்த தைரியத்தில் உள்ளே சென்றேன்  .
காவலாளியும்  அரை மணி நேரம் லேட்  என்று கோவித்துக்கொண்டே  உள்ளே  விட்டார்.,
" இன்றைக்கு டாகுமென்ட் செக்கிங் மட்டும் தான். அதானால்  விடறோம்.நாளை சரியான நேரத்திற்கு consulatekku  போய்டுங்க " என்று  உள்ளே விட்டனர். நல்லபடியா முடிந்தது அன்றைய  தினத்திற்கான வேலைகள் .முயற்சியே செய்யமால் விட்டுவிட நினைத்த  எனக்கு இது பெரிய`பாடமாக  இருந்தது .

பெரிய நிம்மதியுடன்  வெளியே வந்த என்னை , "அதான் சொன்னேனே சார் , எல்லாம்  பார்த்துக்கலாம்னு  வாங்கன்னு ".
ஆட்டோ ஸ்டாண்டில்  , சிலருக்கு  இது தெரிந்து  , "என்ன சார் , நம்ம தோஸ்து  முடிச்சு கொடுத்து இருக்கார் , டீ  சாப்ட எதன்னா  செஞ்சுட்டு  போ  சார்"என்றார்! .

அப்பொழுதான் கவனித்தேன் அவரை . சுறுசுறுப்பான எறும்பு போல பரபரப்பா இருந்தார் .சரியான உயரம் , சற்றே மெலிந்த தேகம். "என் பேரன் ஸ்கூல் போறான் சார் " ன்னு அவர் சொன்ன போது தான் அவருக்கு  ஐம்பது வயதிற்கு மேல் ஆகிறதென்று எனக்குத்தெரியும் .

"நீங்க எப்போ  வெளிய வருவீங்கன்னு  தெரியலை.அதான் மத்தியானம் இன்னும் சாப்டலை .காலைல டீ  தான் அடிச்சேன்.உங்களை உட்டுட்டு  இன்னைக்கு ஊட்டுக்கு போய்  படுத்திடலாம்னு  இருக்கேன் " என்றார்.

" டீ  மட்டும் சாப்பிட்டு இருந்ததால் , வயிறு கெட்டுப்போய் அல்சர்  வரும்.
அப்புறமா  நீங்க  ஹாஸ்பிடல்  செலவு  அதிகமா  கொடுக்க வேண்டி  இருக்கும் ".
" பார்ப்போம் சார்  அங்க இங்க ஒட்டிட்டு  இருப்பேன் .டீ குடிச்சு  பழகிடுச்சு "

ஆட்டோவில் பல மதங்கள்  சார்ந்த சாமி  படங்கள் இருந்தன .நான் பார்ப்பதை கவனித்தவர் ,"நான் எல்லா சாமியும்  கும்பிடுவேன்".

"உங்களைப்  போலவே  எல்லோரும் இருந்தால் நாட்டில் பிரச்சனையே  இருக்காதே  " என்றேன் .

 போன் போட்டு தகவல் சொன்னேன்.நம்ப முடியாமல் திகைத்தனர் . அம்மா , மனைவி , அக்கா என  ஆளாளுக்கு  பல  கோயில்களுக்கு நேந்து  இருந்தனர்  இந்த இடைப்பட்ட  நேரத்தில் .
  • வீட்டிற்குள்  வரச்சொல்லி காபி கொடுக்க வேண்டும் என்று அக்கா சொன்னாள் . திருநெல்வேலியில் இருந்து  வாங்க வந்த அல்வா  பொட்டலத்தை கொடுத்த அக்கா 
  • " பேர பிள்ளைக்கு  கொடுங்கள் . காலத்தினால்  செய்த உதவி   மறக்க முடியாது சார் !".அவருக்கு மிகுந்த சந்தோசம்.
உண்மை தான் . வந்த மூன்று வாரத்தில்  , அன்று தப்பிப் போய் இருந்தால் , என்னுடைய அடுத்த  மூன்று  வாரமும் எனக்கும் குடும்பத்திற்கும்  தொடர் இயக்கமாக நிறைய குழப்பங்களை கொடுத்து  இருக்கும  , பண  விரயமும் கூட .

ஆட்டோவைப்  பார்த்த என் மகள்   ரொம்ப சந்தோஷம்   கொண்டாள் . அவளை  வைத்து. ஒரு சிறிய ரவுண்டு அடித்து  விட்டுச்சென்றார்  
பட்  பட்    என்ற  சத்தமும்  , குலுக்கலும் அவளுக்கு என்னமோ செய்து இருக்கும் போல,குதூகலத்துடன்  திரும்பி  வந்தாள்  . ஆட்டோவை விட்டு இறங்க மனம் இல்லாமால் இருந்த அவளை  இழுத்து வந்தோம் .

இரண்டு வருடம் கழித்துப்  பார்த்ததால்  ,அம்மாவிடம் போகமால் இருந்த என் மகளை ஆட்டோ காமித்தே  அவளுடன்  மீண்டும் நெருக்கம் ஆனார்கள் அம்மா .அவளுடைய  அம்மா தாத்தாவும்  ஒரு ஆட்டோ பொம்மையுடன் வந்தார் அவளைப்பார்க்க. ஆட்டோவினால்தான் எத்தனை  மாயங்கள் . 
  • மறுநாளும்  அடுத்த கட்ட  நேர்காணல்   இருந்ததால்  , "சார் நானே  வந்து கூட்டிட்டு  போறேன்  ,  டைமுக்கு   கொண்டு போய் விட்டுடறேன் சார்  " என்றார்.தொலை  பேசி எண்ணையும்  விட்டுச்சென்றார் . பெரிய உதவி செய்ததை  மனதில் வைத்துக்கொண்டு  , சும்மாவே இன்னும்  கொடுங்கள்  என்று கேட்காமல் , உழைத்துச்  சம்பாதிக்க  வேண்டும்  என்ற எண்ணம்  எனக்கு அவர் மேல இருந்த மரியாதையை  இன்னும் கூட்டியது . ஆட்டோக்காரர்கள் மேலும்  .
மறு நாள் காலை சொன்ன படியே நேரத்திற்கு வந்தார் .
அக்கவைப்பார்த்து  "மேடம்  , அல்வா  சூப்பர்  , நாங்க சாப்டு  பக்கத்து  வீட்டுக்கும்  கொடுத்தோம் " என்றார் . சின்ன  பொட்டலத்தையும் பகிர்ந்து  உண்ணும்  எண்ணம்  எத்தனை பேருக்கு வரும்.

  "எல்லாம் சரியா எடுத்துக் கிட்டீங்களா  சார் , போலாமா " என்று விருட்டென  விட்டார்  ஆட்டோவை .
  • "ஜெமினி மேம்பாலம்  வந்திருச்சு சார்,.காசு எதுவும் இப்போதைக்கு  வேண்டாம் ,  என்னுடைய  செல்போனுக்கு   கால் பண்ணுங்க  . நானே வீட்ல விட்டுடறேன் "  .  கால் டாக்ஸி போல கால் ஆட்டோ  சர்வீஸ் ஆனது  இந்த முறை. இதுவும் ஒரு வித்தியாசனமான  அனுபவம்தான்.
  • "your visa is  approved   ,please  read  your  rights " என்று சொன்னார் எம்பஸி ஆபிசர் .விசா நேர்காணல்   முடிந்தது .
  • "கொஞ்சம் தள்ளி  டீ  கடை பக்கத்தில்  நிக்கறேன் , வந்துடுங்க "என போன் செய்தேன்  . சிறுது  நேரத்தில் ஆட்டோ வந்தது.சிரித்த முகத்துடன்  வந்தார். . 
"நம்ம  ஆட்டோவிற்கு   ராசி உண்டு சார். நீங்க " pass " ஆவீங்கன்னு தெரியும் எனக்கு.வேற எங்கேயும்  போகல இன்னைக்கு .

அப்றமா  சார்  , இன்னைக்கு  காலைல  நாஸ்தா  சாப்டேன் .....டீ  யோட  நிறுத்தலை !நீங்க சொன்னது தான் பொண்டாட்டியும் சொல்லிட்டு இருந்தா  , ஹாஸ்பிடல்   செலவுன்னு நீங்க  சொன்னது பயத்தை  கொடுத்திருச்சு .காசு செலவுன்னு நினைச்சாத்தான் ". சிரித்தேன்.
  • "ராயப்பேட்டை ஏரியாலதான் ரொம்ப காலமா இருந்தோம்.குடிசை  மாற்று  வாரியத்துல  இந்த ஏரியா விட்டு போகச்சொல்லிடாங்க சார் 
  • O .M .R  பக்கமா இருக்கோம்  இப்போ " என்று சொல்லிக்கொண்டே தான் முன்னாடி இருந்த ஏரியா  பக்கமா சென்றார் .
  • தன்னுடைய  தெருவிற்கு கொண்டு சென்றதும்  , அதின் நினைவுகளும் அவர் முகத்தில் தெரிந்த  வருத்தம் எனக்கும் அப்பிக்கொண்டது  ஆனாலும்  சிறிது நேரத்தில்  குஷியாகி  விட்டு." இதுதான்  சார் எங்க தெரு " என்று காண்பித்தார் .
  • அந்த வழியாக வந்து இருக்க வேண்டியது இல்லை என்றாலும்  , கொஞ்சம் சுற்றி வளைத்து  வந்தாலும் அவர்கள் இருந்த தெருவிற்கு என்னைக்கூட்டி வந்து காண்பித்தது  எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
* " என்ன  குமாரு , என்ன இந்த பக்கம் .ரொம்ப  நாள் ஆச்சு பார்த்து " போன்ற நல விசாரிப்புகளும் , கை அசைப்புகளும் நடந்துக்கொண்டே இருந்தது அவர் ஓட்டுகையில் . 

" எல்லாரையும் தெரியும் போல !"

" எத்தனை வருஷமா ஓட்டிட்டு இருக்கேன் ......"
  • அவர்கள் குடும்பம் பற்றி கேட்கத்   தோன்றியது  ."மகனுக்கு இன்னொரு ஆட்டோ வாங்கித்தர காசு இல்லை.அவனுக்கும் அதில் அந்த அளவு இண்டரெஸ்ட்   இல்லை.வேற எதன்னா  ஒரு நல்ல தொழில் பார்த்து செட்டில் செஞ்சுடணும்னு இருக்கேன் சார் .அப்போ அப்போ  எதன்னா வேலைக்கு போறான். பெரிய கட்டிடத்துல  பெயின்டிங்க்  அடிக்கற  வேலையும்  பார்ப்பான்  .அது ரிஸ்க் சார் , வேலை இல்லைனாலும் பரவா இல்லை , வேணாம்னு சொல்லிட்டேன், இப்போ ரெண்டு வாரமா  வீட்ல தான் இருக்கான். அவன் பொண்டாட்டி  ஊருக்கு  போய்  இருக்கான். "
  • அணைகள்  கட்டப்படும்  பொழுது  , ஒரு  கிராமத்தையே  இடம்  பெயர்க்கும்  சூழல்  ஏற்படும்  என்று  படித்திருக்கிறேன் .வேகமாக   மாறிக்கொண்டு இருக்கும் வணிகமயமாக்கப்பட்ட உலகத்தில் இப்படி  வேறு  காரணங்களுக்காகவம்  இடம் பெயர்தல் நிகழ்கிறது. சொல்லபோனால் நிறையவே   , ஆனால்   வெளியில்  பெரிதாக  தெரியாமல்    அல்லது  கமுக்கமாக.
  • "30 வருஷத்திற்கு  மேல ஓட்டிட்டு  இருக்கேன் சார். வாடகை  ஆட்டோதான்  வச்சு இருந்தேன். இப்போ ஓட்டிட்டு  இருக்க ஆட்டோ சொந்தமா  வாங்கி "due " கட்டிட்டு  இருக்கேன்.  இந்த ஆட்டோ "due"  மட்டும் கட்டிமுடிச்சுட்டேன்னா , ஆட்டோவை வித்துட்டோ அல்லது , வாடகைக்கு விட்டுட்டோ அப்பாடான்னு இருந்துடுவேன். நம்ம வட்டத்துல  நல்ல பேரு சார் எனக்கு.முழுசா அரசியலுல  இறங்கி  நம்ம ஏரியா   மக்களுக்கு எதன்னா   செய்யனும்னு தோணிட்டே  இருக்கும் .போன எலக்க்ஷன்ல   கூட , ரெண்டு வாரம் பூரா  வேலைக்கு போகாமல்  , கட்சி வேலை செய்தேன் சார். பைசாலாம் கிடையாது. இதுக்கு எல்லாம்  அந்த மாசம்  dues  கட்ட கஷ்டப்பட்டேன்".
  • இப்படியாக  இன்னும்  பல  சம்பாஷணைகளுடன்  நாங்கள்  விடைபெற்றுக்கொண்டோம்  .  உங்களுக்கு  என்ன  வேண்டும்  , என்று  கேட்ட  பொழுது  , எனக்கு  " M  G  R " போட்ட  மாதிரி  கோல்டு கலர்ல  , ஒரு  வாட்ச்  வாங்கித்தாங்க  சார்  அடுத்த  முறை  வரும்  போது  என்றார் .... சிரித்துக்கொண்டே  வழியனுப்பி  வைத்தேன் .
    * அடுத்த  நாள்  ,  திருநெல்வேலி  பயணம்.  ரயில் பயணங்கள் எப்பொழுதும் .சுகமானதுதான் ...பாலிய காலத்தில் வருடா வருடம் அம்மாச்சி தாத்தா  வீட்டிற்கு வத்தலகுண்டு செல்கையில் , கொடை ரோட்டில் இறங்கும்  பயணமும் , கல்லூரி விடுப்பில் கோவையில்  இருந்து  சென்னை  வரும் பயணமும் ஏற்படுத்திய தாக்கம் மட்டும் அல்ல அது.ஒரு சின்ன  திடுக்குடன்   கிளம்பும் வேகம் ஆகட்டும் , சீரிய வேகத்தின் பின் தண்டவாளத்துடன்  இணைந்து கொடுக்கும் ரீங்காரம்  ஆகட்டும் , கண்கள் மூடிகேட்டால் சந்கீதமாகவோ  , அமைதி கொடுக்கும் தியானமாகவோ மன நிலைக்கேற்றவாறு தோன்றும் . நல்ல இசையும் தியானம்தானே  .அப்போ இரண்டும் ஒன்று தான்.

அந்த  தியானத்தில்  இருந்து மகள்  மடியில்  வந்து  அப்பிக்கொண்டதும்  வெளியே  வந்தேன் .ஜன்னல் வழி மகளுக்கு காட்சிகளை விவரித்து வந்தேன்."ஆட்டோ ஆட்டோ " என்றாள் சிக்னலில் நிற்கும் ஒரு ஆட்டோவினை பார்த்து. "

தேவாவின்  [ அதுதான்  அவருடைய  பெயர் ] வார்த்தைகள் மனதில்  வந்து  போனது .

*   "ஆட்டோகாரர்கள் பற்றி நிறைய தவறான பேச்சு  இருக்கு  சார்  வெளியே.சில பேர் இருக்காங்க .ஆனா பொதுப்படையா வெறுப்பு வேணாமே  சார்.மழைலயும் வெயிலயும் விடி காலையிலும் நடு ராத்திரிலயும் நாங்க தான இருக்கோம் .எல்லா  நேரத்துலயும் பஸ்  ஓடாது"
  • அவர்கள் உலகத்தில் இருந்து பார்க்கும் பொழுது.....அவர்கள் சிரமங்கள் தெரிய வந்தது. மனதில் இருந்த  வெறுப்பும்  அகன்றது .

என்  கன்னத்தை  ஒரு  பிஞ்சுக்கை அழுத்தியதில்  , அந்த  நினைப்பிலிருந்து விடுபடுகிறேன் .

"அப்பா  கதை  சொல்லு "என்றாள்  மகள்.

சரி  நாம  மஹாபாரதத்தை தொடருவோம் கண்ணா ..

" அர்ஜுனனை  பார்த்து  கர்ணன்  அம்பை  விடுறார் .
அது  ரொம்ப  பயங்கரமான  அம்பு .தலையை  நோக்கி  வருது ...
"

" அப்புறம்  என்ன  ஆச்சு  அப்பா "

" கிருஷ்ணர்  தன்  காலால  ஒரு  அடி  பலமா  பூமியை  நோக்கி  அழுத்தறார் .
தேர்  ஒரு  அடி  கீழே  போயிடுது . அர்ஜுனன்  தலை  தப்பித்தது ..."


என்  மனதில்  வேறு  ஒரு  காட்சி  ஓடிக்கொண்டு  இருந்தது .
அன்றைக்கு  வீட்டின்  முன்  , காக்கி  உடை  அணிந்து , குனிந்து  ஆட்டோவின்  கியாரைப்  போட்டு  , ஒரு  வளை  வளைத்து  , ஆட்டோவினை  விருட்டென விட்ட அந்தக்காட்சி ..

கிருஷ்ணர்  அர்ஜுனன் தேர் மட்டுமா  ஓட்டுகிறார் . சில  நேரங்களில்  ஆட்டோவின்  சாரதியாகவும்தான் வருகிறார் !

========================================================================






8 comments:

  1. கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்... ஏழை கண்ணீரை கண்டதும் கண்ணன் வந்தான்... ஆட்டோவில் வந்த கண்ணன்!!!

    ReplyDelete
  2. கருத்துக்களுக்கு மிக்க நன்றி....

    ReplyDelete