Tuesday, July 19, 2016

மூன்று பேரின் உலகம்.

செந்திலும்  அவன் மனைவி  அம்முவும்   அப்பொழதுதான்  திருமணமாகி ,
புது மணத்தம்பதிகளாக  பெங்களூரில்  அவுட்டர்  ரிங்ரோட்டில்  இருந்த
  வெள்ளையும்  நீலமும்  கலந்து  அடிக்கப்பட்ட  அந்த அடுக்குமாடி
கட்டிடத்தில் குடிபுகும்  முதல் நாள் . அபார்ட்மென்ட்டின்   செக்கூரிட்டி  வளைவைத்தாண்டி  அந்த  மேடான பகுதியிலிருந்து  கீழே  இறங்கி   "பி"  ப்ளாக்  நோக்கி  அந்த  சாமான்  சுமக்கும்  வண்டியினை  முன்னாடியிருந்து  வழிகாட்டி  உள்ளே  செல்கையில்  இடது  புறத்தில்  ஒரு  தள்ளுவண்டியில்
இஸ்திரி  போட்டுக்கொண்டு  இருந்தார்  முப்பதுகளில்  இருந்த  அந்த  மனிதர் . பரவாயில்லையே  ,உள்ளுக்குளேயே  ஐயன்[iron ]  செய்ய ஆள்  இருக்கிறார் ,  வெளியே  அலைய  வேண்டியதில்லை  என்று  நினைத்தவாறே  உள்ளே  செல்கிறான்  செந்தில்.

அந்த   ஞாயிற்றுக்கிழமை  வீட்டின்  காலிங்பெல்  அடிக்கவும்  ,
லுங்கியணிந்து  சற்று  குள்ளமாக  அன்று  பார்த்த  அந்த  இஸ்திரி  போடும்  நபர்  வெளியே  நிற்கிறார் .

"புதுசா  குடிவந்து  இருக்கிறதாக  சொன்னாங்க .  நான் கீழதான் இஸ்திரி  போடுறேன் . துணி  இருந்தா  கொடுங்க"  என்கிறார் .
துணியைக்  கொடுத்தவாறே  செந்தில்  பேச்சுக்கொடுக்கிறான் .

" நல்லா  தமிழில் பேசறீங்க .எந்த  ஊர்  நீங்க "

" தர்மபுரி  பக்கத்துல  தேன்கனிக்கோட்டை .கேள்விப்பட்டு  இருக்கீங்களா ..?"

" கேள்விப்பட்டு  இருக்கேன்  , என்  காலேஜ்ல  ஒரு  நண்பர்  அந்த  ஊர்தான் .."

"அப்டியா  சார் ...பத்தொன்பது  துணி  இருக்கு  . சாயங்காலமா  கொடுத்துடுறேன் ..." என்கிறார்  இஸ்திரி  போடும் விஜயன்  .
விஜயன்  மட்டும்  அல்ல  . இன்னும் சில  புதிய  மனிதர்களை  அந்த  ஒரு  வாரத்திற்குள்  சந்தித்தான்  செந்தில்.

செந்திலின்  வீட்டு  வேலை  செய்ய  வந்த அம்மாவின்  பெயர்  ஷீலா .
சுறுசுறுப்புக்கு  இன்னொரு  பெயர்தான்  ஷீலா . ஒரு  வேளை  அவர் 
வந்த  நாடான  நேபாளத்தில்  , "ஷீலா"  என்றால்  சுறுசுறுப்போ  என்று  நினைத்துக்கொண்டான் . அப்படி  ஒரு  வேகம்  அவர்களிடம்.
"ஷீலா " என்றால்  நன்னடத்தை  என்ற  பொருள்  கொள்ளும்  என  அறிகிறான்  பிறகு  , அவர்களின்  பெயர்போலவே  அவர்கள்  நடத்தையும்தான் என
உணரவும்  செய்கிறான் .ஏழு  மணிக்கு  அவன்  மனைவி  , வேலைக்கு  கிளம்பிப்போன  பிறகு  , இவன்  நயிட்  டூட்டி  முடித்துவந்து  காலையில்  படுத்துத்தூங்கினாலும்  , வந்ததும்  போனதும்  தெரியாமல்  , நேர்த்தியாக  வேலை  முடிந்து  இருக்கும்  அவன் எழுவதற்குள் .  ஒரு  பொருள்  கூட  காணாமல்  போனது  கிடையாது .

இன்னொரு  ஞாயிற்றுக்கிழமை  , ஒரு  இளைஞன்  வந்து  கதவைத்தட்டுகிறான் . "ஒரு  பழைய  பல்சார் வண்டி   நிக்குதே  சார்  , உங்களோடதா  , விக்கற  பிளான்  இருக்கா ?"

"இல்லை  , நான் ஆபிசுக்கு  நடந்து  போறேன்  , பக்கத்துல  இருக்குறதால .
வண்டி  ஆக்சிடென்ட்  ஆனதால  , சர்வீஸ்  பண்ணாம  இருக்கு .
ஆனா  நான்  விக்கற  பிளான்ல  இல்லை ."

"சரி  சார் . பரவா  இல்லை . சும்மா  கேட்டுப்பாத்தேன் .நான்  இங்க  வண்டிங்க  வாஷ்  பன்றேன்  .  சண்டே  காலைல  பைவ்  டு  டென்  . வண்டி  நல்ல  புதுசு  மாதிரி  இருக்கும் .உங்களுக்கு  வேணும்னா  சொல்லுங்க .
 "
"கட்டாயமா ...வண்டி  சரி  பண்ணினதும் "

" இதுதான்  என்  நம்பர் . விக்னேஷ்ன்னு  சேவ்  பண்ணிவச்சுக்கோங்க "

நகர்புற வேகமான  வாழக்கை  அந்தத் தம்பதியினருக்கு ஒரு பக்கம்  ஓடிக்கொண்டுதான்  இருக்கிறது. ஓட்டமற்ற  சற்று  நிதானமானவாழ்க்கை ,தரும்   தருணங்களை  பெரும்பாலும்  நாம்  பேசுவோம் .

அவன்  தங்கியிருந்த  பெலந்தூர்  இன்னும்  "ஹல்லி"யாகவே  இருந்தது  ஒரு  புறம் . "ஹல்லி"  என்றால்  கிராமம்  என்று  அர்த்தம்  கன்னடத்தில் , அவனுக்கு  தெரிந்த  சொற்ப  கன்னட  வார்த்தைகளில்  அதுவும்  ஒன்று .

முடி` வெட்டவும்  , பழம்  காய்கறிகள்  வாங்கவும்  அபார்ட்மென்டின்   பின்பறம்  வளைந்து  செல்லும்  அந்தப்  பாதையைப்  பிடித்துப்  போனால்
வந்துவிடும்  அந்த  அழகிய  கடைத்தெரு .பழக்கடைகளும் , காய்கறிக்கடைகளும்  , தின்பண்டக்கடைகளும்  , துணிக்கடைகளும் நிறைந்த  தெரு  அது .முக்கியமாக  ஒரு  அழகிய  பெரிய  அரசமரம்  , எந்தக்கடவுளும்  இல்லாமலேயே  ,அந்த  மரத்தை  இன்னும்  வெட்டாமல்
விட்டுவைக்கப்பட்டிருந்தது   அங்கு  சில  நல்ல  உள்ளங்கள்  இருப்பதை  சொல்லாமல்  சொல்லியது .

அன்றைக்கு  ஒரு நாள்  இளநீர்  பருகிவிட்டு  சில்லறை  இல்லையென்று  சொல்லவும்  ," பரவா  இல்லை  , நீங்க  இங்கதான  இருக்கீங்க  , அப்புறமா  கொடுங்க " என்று  சகஜமாக  சொல்லிப்போனார்  அந்த  தர்மபுரி  இளநீர்க்காரர் .  "தர்மபுரியில்  பொழைப்புக்கு  வேலையே  இல்லையா ,
எத்தனை  பேர்  இதுபோல  , பெங்களூரு  பூரா  இருப்பாங்கன்னு " நினைத்துக்கொண்டே  வீடு  வந்தான்  செந்தில் .

அந்த  நினைப்பின்  நீட்சியாக  ,  தர்மபுரிக்காரரான விஜயனைக்  கொஞ்சம்  நாட்களாக  காணவில்லையே  என்று  விசாரித்தபோது  , அவர்   மொட்டை  மாடியில்   பம்ப்செட்  அறைபோல  ஒரு  அறை  இருப்பதாகவும்  , அதிலிருந்து வேலை  பார்க்கிறார்  என்று  கேள்விப்பட்டு  அங்கே  அவரைப்பார்க்க  போகிறான்  அவன் . இனி  "அவன்"  என்றால்  செந்தில்  எனக்கொள்ளவும் .

கணவனும்  மனைவியும்  , கனத்த இரும்புப்பெட்டியை  லாவகமாக   தேய்த்துக்கொண்டிருப்பதைச்   சற்று  தள்ளி  நின்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் . இருவரின்  ஒல்லியான  கைகள்  , சூடான  கரிகள் நிரம்பிய  அந்த கனத்த இஸ்திரிப்பொட்டியினை   எப்படி சுமந்து   அத்தனை  வேகமாக  வேலை  பார்க்கிறது  என்று  வியந்து  நிற்கிறான்.
"அந்த நொடியில்   என்ன  நினைத்துக்கொண்டிருக்கும்  அந்த  மனசு .
சட்டை  கசங்காமல்  வரவேண்டுமென்ற மும்முரமா  ,  இல்லை  பிள்ளைகள்  இந்நேரம்  ஊரில்  என்ன  பண்ணிக்கொண்டு  இருப்பார்கள்  என்ற  தவிப்பா , அல்லது  இந்தக்கைவலியோட  இன்னும்  ரெண்டே  ரெண்டு  சட்டை எப்படியாவது  பண்ணிடனும்கிற  முனைப்பா ?"   என   அவன்  யோசிக்கிறான்.

ரொம்ப  சோகமாக  இருந்தார்கள்  விஜயனும்  , அவர்  மனைவியும் .
பிள்ளைகளை  நினைத்து  என்றுமட்டும்  சொல்கிறார்  விஜயன் .

"வாழக்கை எப்படி  புரட்டி போடுகிறது  ஒவ்வொருத்தரையும் .
பிள்ளைகளை கூட  வைத்துக்கொள்ள முடியாத  சூழ்நிலை  இவர்களுக்கு " என்று   நினைத்தவாறே  வீடு  வந்து சேர்கிறான்.

மறுபடி  இயந்திர  வாழ்க்கை  வார  நாட்களில் ...எத்தனை  மாதங்கள்   கழிந்ததுன்னு  தெரியலை . இன்னொரு ஞாயிற்றுக்கிழமை ...

விக்னேஷ்  வண்டிதுடைத்துக்கொண்டிருக்கிறான் .

அவன்  அருகில்  மண்டியிட்டவாறே ,
"உன்னைப்  பாத்தா  படிக்கற  பையனைப் போல  இருக்கியே ?"
" ஆமா  சார் . இங்க  பக்கத்துல  இருக்க  காலேஜ்ல  BBA  படுக்கறேன் .
இது  பார்ட்டைம்தான்.  "
"சரி  நான்  வெளியே  போய்ட்டுருக்கேன்  ..கொஞ்சம்  அப்படியே  நடந்து வரியா என்கூட "
" சரி  சார் , போவோம் "
 "உன்னைப்  பார்த்தா ஆச்சரியமா   இருக்கு .வீட்டுக்கு  கஷ்டம்  தராம  நீயே  உன் பொழப்பைப்  பாத்துக்கற ...."
"சிட்டுவேஷன்  அப்படி சார்  ...ஆனா  , இது  என்ன  சார் பெரிய  விஷயம்  . நான்  சின்னப் பையன்  உடம்புல நிறையத்தெம்பு  இருக்கு . உங்க  வீட்ல  வேலை  பாக்கற  ஷீலா  பத்தி  உங்களுக்கு  எவ்ளோ  தெரியும் . அவங்களுக்கு  45 வயசு  இருக்கும் . ரெண்டு  பொண்ணுக்கு  கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டாங்களாம் .   வேற  ஊரு  கூட  இல்லை  , வேற  நாட்டுல  இருந்து   பொழைப்பைத்  தேடிவந்து   , பக்கத்து  ஊரு  சர்ஜாபூர்ல  வந்து  எப்படியோ  செட்டில்  ஆகி  ,மூணு  பசங்க  , புருஷன்  சரியான  வேலை  இல்லை , அந்த  அம்மா  காலைல  அஞ்சு  மணிக்கு அங்க  இருந்து  கிளம்பினா    , மதியத்துக்கு  மேலதான்  திரும்புறாங்க .நாலைஞ்சு  வீட்டுல , வீட்டு  வேலை  பார்த்துட்டு  ,  அப்புறமா  அந்த  " d " ப்ளாக்ல  ஒரு  வீட்ல  , குழந்தைங்களை பார்த்துட்டு  , சமைச்சு  கொடுத்துட்டுவேற  போறாங்க .
அவங்க  பையனுக்கு  இங்க  எதாவது வேலை  உண்டான்னு கேட்டு  வந்தப்போ , இந்தக்கதை  எல்லாம் கேள்விப்பட்டேன் ."

பேசிக்கொண்டே  , அந்த  அபார்ட்மெண்ட்டின்  சின்னப்பூங்காவிற்கு  வந்துசேர்கிறார்கள் . மஜந்தா நிறத்தில் பெயர்  தெரியாத  சிலப்பூக்கள் அங்கே உதிர்ந்து கிடைக்கிறது .  அதைக்கையில்  எடுத்தவாறே  , அவன்  சொல்வதைக்கேட்கிறான்  செந்தில் .

"இதுல  பாருங்க  , இப்படியே  வேலை  பார்த்து  , சர்ஜாப்பூர்ல   ஒரு  பிளாட்  வாங்கிப்போட்டு  இருக்காங்க . வேற  லெவல்  சார்  அவங்க .  அவங்களைப்  பாக்க  பாக்க   வாழ்க்கைல  பெரியதா   ஜெயிக்கணும்னு தோணும் .
நானும்  அவங்களைப்போல  ஒரு  நாள்  பிளாட்  வாங்கி  , என்  பாமிலியோட  வீடுகட்டி  செட்டில்  ஆகணும்  சார் .  இங்க  ஊஞ்சல்ல  விளையடுதுங்க   பாருங்க   சின்னப்பசங்க , அது  போல  ரெண்டு வேணும்!"

"  கேக்கவே  நல்லா  இருக்கு .உன்னால  முடியும் . கீப்  ஒர்கிங் "

" சந்தோஷம்  சார்  என்கூட  டைம்  ஸ்பென்ட்  பண்ணினத்துக்கு .
நீங்க  கைல  வச்சு  ரசிச்சிட்டு  இருக்கீங்களே  அந்தப்பூ ரொம்ப  அழகா  இருக்குல்ல ..! நானும்  பல  நாள் பார்த்து  ரசிச்சு  இருக்கேன் . இதை  எல்லாம்  யாரு  சார்  ரசிக்கறாங்க .எல்லாரும்  ,ஏதோ  தொலைச்சபோல  ஓடிட்டே  இருக்காங்க  இங்க .நீங்க  பரவாயில்லை . உங்ககிட்ட  இதையெல்லாம் சொல்லணும்னு  தோணுச்சு .இந்த  வருஷம்  பைனல்   இயர் .  நான்  கொஞ்சம்  இங்கிலீஷில்  வீக்  . உங்ககிட்ட  இங்கிலிஷ்  பேசட்டுமா ?"

" SURE  . தட்ஸ்   தி  ஸ்பிரிட் .  வாட்ச்  இங்கிலிஷ்  நியூஸ்  டெய்லி .
இட்  வில்  ஹெல்ப் யூர்  கம்யூனிகேஷன்  ஸ்கில்ஸ் "

" Thankyou  Sir  "...

 அந்த  வருடமும்  அப்படியே  ஓடிவிடுகிறது .
அடுத்த  வருடம்  செந்திலுக்கு அந்த  ஆண்டின்  ஆபிஸ்  டார்கெட்  நிர்ணயிக்கப்படுகிறது .அது  சம்பந்தமாக  ஏதோ  நினைத்தவாறே   லிப்ட்  ஏறி  வீட்டுக்கு  வருகையில்  , விஜயனை  மீண்டும் லிப்ட்டினுள்  பார்க்கிறான் .

" என்ன  ட்ரெஸ்  எல்லாம்  பலமா  இருக்கு . எங்க  போய்ட்டு  வரீங்க ..."

" அதுவா  சார்  .ஒரு  கல்யாணத்துல  இருந்து  வரேன் . இங்கயே  இருங்க . அந்த  ஆந்திராக்காரங்க  வீட்டுக்குபோய்  இந்தத்துணியக்   கொடுத்துட்டு வந்துடறேன் "

அந்த  லிப்டுக்கு  வெளியே  , க்ரில்  கம்பிகளை  எண்ணிக்கொண்டே  காத்துருக்கிறான்   செந்தில் .

"அந்த  பைக்  துடைக்கற  பையன் விக்னேஷ்   பத்தி  முதல்ல  தப்பா  நினைச்சுட்டேன் .அவன்  நிறைய  தண்ணி  செலவு  பண்ரான்னு  அஸோஸியேஷன்  ஆளுங்க  கம்பிளைன்ட்  செஞ்சுட்டு  இருந்தாங்க . அப்புறமா  ஒரு  பொண்ணோட  சுத்திட்டு  இருந்ததை  பார்த்தேன் . அவன்  ட்ரெஸ்ஸும்  நடை  உடையும் அவனைத்தப்பா   நினைக்க  வச்சுருச்சு . ஆனா  பாருங்க  , போன  வாரம்  என்  பொண்டாட்டி  இஸ்திரி   போட்டுட்டு   இருக்கும்போது கொஞ்சம்  தள்ளி  நிண்ணு அவளைப் பாத்துட்டு  இருந்தான் . நான்  கொஞ்சம்  கடுப்பாகி போய் என்னன்னு  விசாரிச்சா  , தனக்கு  கல்யாணம்னு  எங்களைக்கூப்பிட  வந்திருக்கான் . நான்  அன்னைக்கு  அவனோட  பார்த்த  பொண்ணோடத்தான்  கல்யாணம் . போட்டோ  காமிச்சான் .அவனுக்கு  அம்மா  இல்லை  , அப்பா  வேற  ஒருத்தியோட  போய்ட்டானாம் ,கல்யாணத்துக்கு  பிரெண்ட்ஸ்  மட்டும்தான்  போல  , எங்களைக்கூட  ஒரே இடத்துல  வேலை  பாக்கறவங்கன்னு  கூப்பிட  வந்து  இருக்கான்  பாவம் .
அங்க  இருந்துதான்  வரேன்  இப்போ ..பெருசா  சாதிச்சுட்டான்  சார்  அவன் . உங்களுக்குத்  தெரியுமா ? " என்கிறார்  விஜயன் .

"தெரியும்  , அன்னைக்கு  , பாஸ்ப்போர்ட்  ஆபீஸ்க்கு  போனேன் . இப்போ  நம்ம  ஏரியா  பாஸ்ப்போர்ட்  அப்ளிகேஷன்  வாங்கி  , டாக்குமெண்ட்ஸ்  சரி  செய்யும்  வேலை  ஒரு  தனியார்  கம்பெனி  செய்யுது .
இவனை  ஒரு  வெள்ளை  சட்டை  , கருப்பு  பாண்ட்  போட்டு  , டிப்  டாப்பா  , அந்த  இடத்த்தில்  பாத்தேன்  , BBA   படிச்சு  முடிச்சுட்டு  அங்க  வேலைக்கு  சேர்ந்து  இருக்கறதா  சொன்னான் .
தற்காலிகமா  ஒரு  10000 வரை  கிடைப்பதாக  சொன்னான் . ஆனா  மேல  , MBA  படிப்பதற்கு  ஆசையாம் . அதுவரை  இந்த  வேலை  செஞ்சு  கொஞ்சம்  பைசா  சேதுக்கப்போறதா  சொன்னான் . இவன்  கல்யாணம்  பண்ணிகிட்ட பொண்ணும் , ஒரு  நல்ல  வேலைக்கு  போய்க்கிட்டு  இருக்கு  போல .
பையன்  சாதிச்சுட்டான் . ரொம்ப  சந்தோஷம் ."

"ஆமாம்  சார் ..... கண்முன்னாடி  ஜெயிச்சு  காமிச்சு  இருக்கான் . என்  பசங்களை  நாளைக்கு  ஒரு  நல்ல  இடத்துக்கு  கொண்டு வந்துட முடியும்கற  நம்பிக்கை  வந்திருக்கு   எங்களுக்கு அவனைப்பாத்து "

சில  மாதங்கள்   கழித்து  அலுவலகம்  போய்க்கொண்டிருக்கிறான்  செந்தில் .
எதிரில்   கருப்பு  நிற  புது  பல்சார்  பைக்கில்  விக்னேஷ்  கம்பீரமாக   வருவதைப்பார்த்தான் .

" என்ன  புது  மாப்பிள்ளை  ..எப்படி  இருக்கீங்க ?"

" VERY  GOOD  Sir . Have a  wonderful  day "

"You  too "... என்றவாறே  நகர்கிறான் .

மனசு  கொஞ்சம்  லேசானது . முந்தின  நாளின்  அலுவலக  அழுத்தம்  பெரிதாக  இருந்தாலும்  , சமாளிச்சுடலாம்னு மனசு  சொல்லியது .அப்புறம்  அதற்கு  மேலே  சிலதையும்  யோசிக்கத்தொடங்கியது .

"எதிலும்  வகையறைப்படுத்த முடியாத  ஒரு  மாயவிசை  இவர்கள்  எல்லோரையும்  இயக்கிக்கொண்டிருக்கு  . அது  வயிற்றுப்பசி  மட்டுமே  அல்ல . சோர்ந்து  இருக்கும்போது  , தன்னைச்சுற்றி  தன்னால் சம்பந்தப் படுத்திக்கொள்ள  முடிந்த  சிலருடைய  வாழ்க்கையே  ,  அவர்களை  உத்வேகப்படுத்தி  ,  தட்டிக்கொடுத்து  ,
தூக்கிவிட்டுக்கொண்டிருக்கு  . நாளை மீது  நம்பிக்கை  கொடுத்து  , ஜெயிக்கும்  வேட்கையினையும்  கொடுத்து  இருக்கிறது "

அலுவலகம்  வந்து  சேர்கிறான் . கொஞ்சம்  அன்றைய  காலை  வேலைகளை
சுறுசுறுப்பாக  முடிக்கிறான் . காபி  சாப்பிடவேண்டுமென  தோன்றுகிறது .
மேல்தளத்தில்  இருக்கும்  கேன்டீனுக்கு  வருகிறான் . காபி  கப்பை  எடுத்துக்கொண்டு , அந்தப்  பெரிய  பால்கனிக்கு  வந்து  தனியாக  நிற்கிறான் . அங்கிருந்துப்  பார்த்தால்  , தூரத்தில்  மெயின்  ரோட்டில்  வண்டிகள் எறும்பு  போல  ஊர்வது  தெரிகிறது . மெதுவாக  காப்பியைக்
குடிக்கையில்  , அன்றைக்கு   விஜயன்  சொன்னது  நினைவிற்கு  வருகிறது .

"  பசங்க  தனியா  நாங்க  இல்லாம  சரியா  படிக்கமாட்டேங்கிறாங்க .நாங்களும்  ஏதோ  இருக்கோம்  இங்க . வாழ்ந்துட்டு  இருக்கோமான்னு  கேட்டா  இல்லை  , வெறுமென  இருக்கோம் . ஆனா  எதுக்கு  இந்தக்  கஷ்டம்  எல்லாம் . எங்க  பசங்க  படிச்சு  நல்ல  மேலே  வரணும்னுதான் .
ஆனா  பெயில்  ஆகறாங்கனு  ஸ்கூலுல கூப்பிட்டு  விட்டதைப்
பாக்கறபோது  , நம்பிக்கை இல்லாம  போச்சு . ரெண்டு  வாரம்  எல்லாத்தையும்  விட்டுட்டு  ஊருக்கு  போய்ட்டோம் . போயிட்டு  வந்தப்பறமாதான்  இந்த
விக்னேஷின்  கல்யாணமும்  , அவன்  எப்படி சாதிச்சிருக்கான்னும் தெரியவருது . எதுனாலும்  பாத்துக்கலாம்னு  நம்பிக்கை  பொறந்தது .
பசங்களை  இங்க கொஞ்சம்  நாள்  கூட்டிட்டு  வந்தோம் . அவனையும்  காமிச்சோம் , அவனைப் பத்தியும்  சொன்னோம்."

 பேசிக்கொண்டே  இருக்காமல்  தலையைச்  சாய்த்தவாறே  கரித்துண்டை  எடுத்துப்போட்டு  , இஸ்திரிப்பொட்டிய  தேய்த்து  வேலையும் செய்வதைப்  பார்க்கிறான்  செந்தில் . மேலும்  பேசுகிறார்  விஜயன் .

"சில  வருஷம்   முன்னாடி  நாங்களும்  கீழ ரோட்டுல  ஐயன்  பண்ணிட்டு  இருந்தோம்  , அப்புறம்  அபார்ட்மென்ட்  உள்ள  வந்தோம்  , இப்போ  மேலே  இங்க  இந்த  ரூம்ல  , நிழல்ல ,...

அங்க  பாருங்க  சார் .அதுபோல  ஒரு  கண்ணாடியாலயே  கட்டின  ஒரு  ஆபிஸ்ல  என்  பசங்களும்  ஒரு  நாள்  ஜம்ன்னு வேலை  பார்க்கணும் .....
பாப்பாங்க ...... உங்களுக்கு  நான்  சொல்றது  தெரியுதா  ....? சாரி  புரியுதா ?"

நினைப்பிலிருந்து  செந்தில்  வெளியே  வருகிறான் . வானம்   பெரிய  நீலப்  போர்வை போல  தெளிவாக இருக்கிறது .

----------------------------------------------------------------------------------------------------------------------


1 comment: