Monday, July 11, 2016

டாக்டர் ஜேக்கப்ஸின் ஹாப்பி டான்ஸ்

அலுவலகத்தில்  ஒரு சக  ஊழியருக்கு  குழந்தை  பிறந்து  இருப்பது  கேள்விப்பட்டு அவருக்கு வாழ்த்து  தெரிவிக்கும்பொழுதே  அந்த  ஆஸ்பத்திரி  பற்றி அறிகிறேன் .

அப்பொழுது எங்களுக்கு  பிள்ளை  இல்லை .அல்லது வரப்போகின்ற  செய்தியும்   இல்லை. எல்லாவற்றையும்  தெரிந்துக்கொள்ளும்  ஆர்வம்  போலத்தான்  இதையும்  கேட்டு  வைத்தேன் .

"மெடிக்கல்  சென்டர்  ஆப்  இர்விங்  "  தான்  நாங்கள்  டெலிவரி  பார்த்தோம் . அங்கே  பெண்கள்  டாக்டர்  குழு  ஒன்று  இருக்கிறது .
ரொம்ப நன்றாக  பார்த்துக்கொண்டார்கள் .

என்ன  " வீட்ல  விசேஷமா " என்று சிரித்தார் .
இல்லை  என்று  சொன்னாலும் , "நம்பிட்டேன்"  என்று  மீண்டும் சிரித்தார்.
அடுத்த  இரண்டு மாதங்களில்  , எங்க வீட்டில் விஷேஷம் .
உங்கள்  வாய் முஹூர்த்தம்  பலித்தது என்று  சொல்லி வந்தேன் .

வீட்டில்  இருந்து இருபது  கிலோமீட்டருக்கு  அப்பால்  இருந்தாலும்  ,  சக  ஊழியர்  சொன்ன  வார்த்தையாலும்  , தெரியாத  ஊரில்  தெரியாத  இடத்திற்கு போவதை விட  , இங்கு சிரமம் பார்க்காமல்  போவதே  மேல் என  முடிவு  செய்தோம்.

அதற்குள்  , என் மனைவி , அங்குள்ள  டாக்டர்ஸ்  பற்றி  " review " [விமர்சனம் ] பார்த்தாள் .டாக்டர்  ஜேக்கப்ஸ்  அவர்களின்  பெயர்  தனித்து  நின்றது .
அவரிடம் அப்பாயிண்ட்மென்ட்   கிடைப்பது  கஷ்டம்  எனத்தெரிந்தாலும்  , முயற்சி  செய்துப்பார்ப்போமே  எனப்பார்க்கையில்  , ஒரு  மாதம் கழித்து   இருக்குமென  தெரிய வருகிறது .

பொறுத்து  இருந்து  அவரைப்  பார்க்கும்  நாளும் வந்தது .
ஒரு  50 வயது  மதிக்கத்தக்க  இளம் பெண் என்றுப்பட்டது எனக்கு அவர்களைப் பார்க்கையில்  , தோற்றத்தில்  40 சொல்லலாம் . , ஆனால்  , பேச்சிலும்  , நடை  உடையிலும்  25 கூட சொல்ல  முடியாது .ஒரு  துருதுருப்பு   இருந்துக்கொண்டே  இருக்கும்  அவர்கள்  பேச்சிலும்  உடல் மொழியிலும் .

முதல் சந்திப்பிலேயே  , ரொம்ப  பழக்கப்பட்டவர்களாக  உணர்ந்தாள்  என்  மனைவி .குறிப்பாக   "sweety"  என்று  அவளை  அழைத்ததால்  வந்த  நெருக்கம்  எனச்சிரித்துக்கொண்டேன் .

மனைவிக்கு   என்று  மட்டும்தான்  சொல்கிறேன் .
என்னுடைய  அபிப்பிராயம்  இந்த  ஊர்க்காரர்களைப்பற்றி  [ அமெரிக்கர்கள் ]அவ்வளவு  நல்லதாக  இருந்தது  இல்லை.  ethics  [நெறிமுறைகள்] நிறைந்தவர்கள்  என்ற  மதிப்பு உண்டு.  வெளியில்
எல்லாம்  சிரித்தார்ப்போல   பேசி  இருந்தாலும் , அவர்களுடைய
உள்ளுலகம்    சற்று  சுருங்கியது  என்பது  என்  கணிப்பு . எல்லாவற்றையும்  வணிகக்கண்ணோட்டத்துடன்  பார்ப்பவர்கள்  என்ற  பிம்பம் மனதில்  உண்டு .

 அமெரிக்காவில்  சில  வருடங்கள்  இருந்தபின்னர்   இவர்களின்  சில  கோட்பாடுகள்  தெரிய  வந்தன ...
"THERE ARE NO FREE LUNCHES " .....

" YOU DONT HAVE TO DO THIS"..... இதைவிட  கடுப்பேற்றும்  ஒரு  தொடர்  எனக்கு  இல்லவே இல்லை ...ஏதாவது  நட்பாக  செய்தால்  கூட  , சந்தேகத்துடன்  இவன்  எதையோ  எதிர்பார்கிறானோ  என்ற  தோரணையில்  கேட்கப்படும்  கேள்வியாகப்பட்டது  எனக்கு .

 தோழமையோ  , பரிவோ  கணக்குப்  பார்த்துதான்  வரவேண்டுமா  என்ன .
??எனக்கு  எந்த  கண்ணோட்டம்  , ஒரு  அலுப்பைத் தந்தது .

இது   போன்ற  சில நிகழ்வுகள்  , இவர்கள்  மீது  வேறு  மாதிரியான மேற்சொன்ன   ஒரு  பிம்பத்தை  ஏற்படுத்தியிருந்தது .

இதைப்  போன்ற  சுபாவம்  அவர்களின்  நெருங்கிய  நண்பரிகளிடம்  செய்வார்களா  என்பதைப்பற்றி  எனக்குத் தெரியாது .
ஆனால்  , ஒரு  வித  தாமரை  இலை மேலே  தண்ணீர்  போன்ற  மனப்பாங்கு  உண்டு  என்பதை  நான்  பல  முறை உணர்ந்து  இருக்கிறேன் .
கணவன்  மனைவி  கூட  வீட்டில்  வீட்டில்  அவர்களுடைய  செலவினை
ரூம் மேட்   போன்று  பகிர்ந்துக்கொள்வர்  எனகேள்விப் பட்டு   இருக்கிறேன் .
நாளைக்கு  பிரிய  வந்தால்  கணக்கு  வழக்கு  சரியாக  இருக்கணும்  போல!
விளக்கம்  கேக்கதீர்கள்! ...எல்லோரையும்  சொல்லவில்லை  , பொதுவாக  நடப்பதைச்   சொல்கிறேன்.அமெரிக்க  டாக்டர்  என்பதால்  , இந்த   என்  கண்ணோட்டம் , DR  ஜேக்கப்ஸ்  மீதும் படர்ந்தது .

ஒரு  நாள்  அலுவலகத்தில்   மிகுந்த  வேலை .
அன்றைக்கு  டாக்டரைப்  பார்க்க  அப்பாயின்ட்மென்ட்  இருந்தது .
அவ்வளவு தூரம்  இருந்ததால்  அரைநாள்  விடுப்பெடுத்து  அலைவது  , அதிகமாகவே  தெரிந்தது .

"வீட்டின்  பக்கமே  ஒரு  டாக்டரைப்  பார்த்து  இருக்கலாம் , எல்லாம்  இது போல தேன்போல பேசி  நடிக்கத்தான்  போறாங்க  , உனக்கு  எங்கே  போனால்  என்ன ?".

"உங்களுக்கென  தெரியும்  , அவங்க  எவ்ளோ  நல்லவங்க ....
அம்மாவுக்கு  அந்தக்  காலத்துல  தம்பி  பொறந்தபோது   , கோடம்பாக்கத்துல  ஒரு  பெரிய  டாக்டரைப்பாத்தங்களாம் .
கொஞ்சம் நேரம் லேட்டா  போனா  கூட  காய்ச்சி  எடுத்துடுவாங்களாம் .
டாக்டரைப்  பாக்கப் போகணும்னாலே  அம்மா  பயத்தோடயேதான்  போவாங்களாம் ..

அப்பாவை ஒரு  தடவ  எதுக்கோ  திட்டி  , அவங்க  ரொம்ப  நாளைக்கு
டாக்டரைப்  பாக்கவே  வரமாட்டேன்னு  சொல்லிட்டாங்களாம் .உங்களை  எவ்ளோ மரியாதையா  நடத்தறாங்க . உங்களுக்கு  அவங்க  அருமை  தெரியலை .

நீங்க  சொல்ற  போல  ஜேக்கப்ஸ்  நடிச்சாங்கனே  வச்சுக்குவோம் ..ஆன  எனக்கு  பயம்  இல்லை  அவங்களை  பாக்க  ...
சந்தோஷமா  வரேன்  " என்றாள் .

"சரி  என்னைக்குடையாம  இருந்தா  சரி "..

அன்றைக்கு  குழந்தையின்  "heart  beat"  மற்றும்  இதர  உறுப்புகள்  இதுவரை  சரிவர  இயங்குகிறதா  என்று ultrasound [அல்ட்ராசவுண்ட் ] இல்  பார்க்கும்  நாள் .
நானும்  கூடவே  இருந்தேன்   ...

 ஜேக்கப்ஸ்  வந்தார்கள் .
ஒரு  ஆனந்த  நடனம்  ஆடினார்கள் ..என் மனைவி  அதுக்கு
" ஜேக்கப்ஸ்  ஹாப்பி  டான்ஸ் "  என்று பெயர்  வைத்தாள் அதன்பிறகு .
எதற்கென்று  சொல்லவில்லையே  நான் .
குழந்தையின்  , அசைவுகளைப்  பார்த்துவிட்டுத்தான் .

" அவள் சரியா  பாக்கவிடமாட்டேங்குறா ...ஒரு பக்கமா  எசகு  பிசகா  படுத்துருக்கா ...பாரு  பாரு  இப்போவே  எவ்ளோ  முடி .......
இங்க  பாரு  அவ  கை  விரல்  எவ்ளோ  நீளம் , அவ  அப்பா  போல "
இப்படி  என்னவெல்லாமோ  பேசிக்கொண்டு  , கூடவே  அந்தக்  ஹாப்பி  டான்ஸையும்  போட்டார்கள் .

அதை  எப்படிச்  சொல்ல ...ஸ்டெதஸ்கோப் மாட்டிக்கொண்டு  , டாக்டர்  கோட்டுடன்    இடுப்பையும்  , காலையும்  ஆட்டி  ஒரு
மெல்லிய  ஆட்டம்  ... சில  சமயங்களில்  கைகளை  காரின்  வைப்பர்  போல  ஆட்டியும் ,ஒருவிதத்தில்  நம்மையும்  தொற்றிக்கொள்ளும்
வகையறா  அது. எனக்கு  ரொம்பப்  பிடித்தது ,கையில்  வெண்ணிற  ஆப்பிள்  லாப்டாப் ஒன்றைக்  வைத்துக்கொண்டே அவர்கள்  போடும்  அந்த ஆட்டம் .

மேலே  நான் அந்த  ஹாப்பி  டான்ஸை  விவரிக்கும்  போது  ஒன்றை கவனித்திருப்பீர்களே !ஆமாம்  எங்கள்  வீட்டிற்கு  வரப்போவது  ராஜகுமாரி ! இதை  அவர்  அன்றைக்கு  முதலில்  சொல்லிவிட்டுதான்  அந்த  ஹாப்பி  டான்ஸை  ஆரம்பித்தார் .

" எனக்கு  மூணு  குழந்தைங்க ...ரெண்டு பசங்க ... அவங்க  உலகத்தில்  இருப்பாங்க  பசங்க ..குறை  சொல்லலை  , ஸ்வீட்  பாய்ஸ் ....பேஸ்  பால்  , மீன்  பிடிக்கறதுன்னு  அவங்க   உலகம்  வேற . வேலை  விட்டு  வீட்டுக்கு  லேட்டா  போனா  , சாப்டியான்னு  கேக்கறது  பொண்ணுதான் ....என்கூட  கொஞ்சம்  பேசறதும் அவதான் .."

பிறகு  என்னைப்பார்த்து ,

" மூணு  வயசு  வரத்தான்  அம்மா  அம்மான்னு  அப்பிக்கிட்டு  இருப்பா  பொண்ணு . என்னதான்  என்கிட்ட  பிரியமா  இருந்தாலும் , அவங்க  அப்பாவுக்கும்  என்  மகளுக்கும்  ஒரு  தனி  bonding  [ ஓட்டுதல் ] உண்டு .
நீ  இன்னும்  சில  வருஷங்களில்  நான்  சொல்வதை  உணர்வாய் ..."

அன்று   வீடு  திரும்புகையில்  , நான்  அமைதியாக  வந்தேன் .

" என்ன  இதையும்  நடிப்புன்னு  சொல்லப்போறீங்களா .!" என்றாள்  மனைவி .

" அதைத்தான்  யோசிச்சுட்டு இருந்தேன் .
பொண்ணைப்  பத்தி  அவங்க  பேசினது  , மனசுக்கு  இதமா  இருந்துச்சு " என்றேன் .

" அப்பவும்  பொண்ணும்  இப்போவே  பார்ட்னர்ஷிப்  போட்டாச்சு  போல ..
என்ன  டீலில்   விட்டுடாதீங்க ..."

வீட்டிற்கு  வந்தபின்  , அந்த  டாக்டரைப்  பற்றி  இந்தியாவிற்கு  போன்  போட்டு  ,  அவர்  இப்படி  அப்படியென  புகழ்ந்து  தள்ளிக்கொண்டு  இருந்தாள்  மனைவி .

"அவங்க  தன்  குடும்பத்தைப் பற்றித்தானே  பேசினாங்க .
ஒத்துக்கறேன்  அவங்க  மத்தவங்களை  விட  கொஞ்சம்  பரவாயில்லை, ஆனா   நீ  சொல்ற  அளவுக்கு இல்ல ....."

" என்ன  இல்ல ...?"

" என்னன்னு  சொல்லத்தெரியலை ..ஆனா  எனக்குள்ள  இன்னும்  முழு  நம்பிக்கை பொறக்கல ..இவங்களோட  உண்மை  முகம்  ஒண்ணு   இருக்கும். அது  ஒரு  நாள்  தெரியும் ...."

நாட்கள்  நகர்ந்தன ...அடுத்த  முறை  நாங்கள்  அவர்களை பார்த்த  பொழுது  நடந்த  ஒரு  உரையாடல்  என்  மனைவியினை  வாய்  மூடச்செய்தது ...

" நெருங்கிடுச்சு  இன்னும்  ஒரு  மாசம் தான் " இது  ஜேக்கப்ஸ் சொன்னது ..

" டாக்டர்  நீங்க  அன்னைக்கு  இருப்பீங்கதானே .."  இது  என் மனைவி ..

" ஹ்ம்ம் ..சொல்ல  முடியாது ..வாரத்தில்  சில  நாட்கள்  நான்  நயிட்  டூட்டியில்  இருப்பேன் ..உன்னோட  பிரசவம்  நாம  பிளான்  செய்த போல  வந்துட்டா  நான்  இருப்பேன் ...வேற  நாள்  தள்ளியோ  முன்னையோ  வந்தா  சொல்ல  முடியாது ...அன்னைக்கு  டூட்டியில்  இருக்கும்  டாக்டர்  பார்த்துப்பாங்க ...
நான்  பேஜர்  [ {PAGER ] வச்சிருப்பேன் ....அவசரம்னா  எனக்கு  மெஸேஜ்   செய்வாங்க ...."

" நீங்க  இருக்கணும்  டாக்டர் ..எனக்குத்  தைரியமா  இருக்கும் ..."

" ஒர்ரி  பண்ணாத  சுவீட்டி .....எல்லாம்  சரியா
  போகும் .."

படி  இறங்கி  கீழே` வரும்  வரை  அமைதியாக  இருந்தேன் ..

" டோன்ட்  ஒர்ரி  சுவீட்டி ..டூட்டி  டாக்டர்  பார்த்துப்பாங்க ...!"
என் நமுட்டுச்  சிரிப்பை  எதிர்கொள்ள  முடியாமல்  , அவள்  அமைதியாக  வந்தாள் .....கொஞ்சம்  தேவை  இல்லாம  சீண்டிட்டோமோ  என  நினைக்கிறேன் அப்பொழுது  .......பிரத்யேக  அக்கறை  ஒன்றும்  இல்லை என்பதை  உணரட்டும்  இவள் .....

அன்றய  இரவின்  முழு  நிலவை  என்  மனைவி  ரசிக்க  முடியவில்லை ..
வெளியே  உட்கார்ந்து  பேசுகையில்  ஏதோ  யோசித்துக்கொண்டு  இருந்தாள் .
" நீ  பயப்படாத  , இந்த ஊருல  , எல்லாம்  நல்ல  வசதி  இருக்கு .
வேற  டாக்டர்  வந்தாலும்  நல்லபடியா  பாத்துப்பாங்க ...."

முழு  நிலவு  தேய்ந்து  , வளர்  பிறையில்  ஒரு நாள்  அதிகாலையில்  ,..
ரொம்ப  வலிக்குது  என்று சொல்லவும்   , மருத்துவமனை  விரைகிறோம் ...வலியினை  அளக்க  ஒரு  கருவியினை  மாட்டி விடுகிறார்கள் ...நேரம்  போகப்  போக அந்த  மெஷின்  வலி  அதிகமாவதைக்  காண்பிக்கிறது ...
ஆனால்  இன்னும்  குடம்  உடைந்து  பிள்ளை  பிறக்கும்  சூழல்  முழுவதும்
உருவாகவில்லை ...இப்படியே  ஒரு  நாள்  கழிகிறது ..
டாக்டர்  ஒரு  வேலையாக  வெளியூர்  போய்விட்டதாகவும் , அவர்  இன்னொரு டாக்டருக்கு  எல்லா  கேஸ்  ஹிஸ்டரியினையும் சொல்லிவிட்டதாக  நர்ஸ்  சொல்கிறார்கள் ..

" ரொம்ப  வலிக்குது ..பயமா  இருக்கு ....டாக்டர்  வேற  இல்லை .."

" அவங்க  இருக்கிறது  கஷ்டம்னு  எதிர்பார்த்ததுதான ...நீ  தைரியமா  இரு ..."

 அன்றைய  இரவு  ஒரு பத்து  மணி  இருக்கும் . இரவு  நேரத்து  டூட்டி  டாக்டர்  வருகிறார் ...."நாளை  காலைல  டெலிவரி  ஆகிடும்னு  எதிர்பாக்கறேன் ..குழந்தை  நல்லா   இருக்கு ...கொஞ்சம்  தூங்கப்  பாருங்க ..."

காலை  நான்கு  மணிக்கு  ரொம்ப  அசவுகரியமாக  இருக்கவும் .....
நர்ஸைக்  கூப்பிடுகிறோம் ... அவர்கள் டாக்டரை  வரச்சொல்கிறார்கள் .....

அவர்களும்  பரிசோதனை   செஞ்சுட்டு  ,

" கொஞ்சம்  காம்ப்ளிகேஷன்  இருக்குமா ....குடம்  உடைஞ்சுடுச்சு , தண்ணி  கம்மியாயிட்டு  வருது . ஆனா  குழந்தை  தொப்புள்  கொடியை  பிடிச்சுட்டு இருக்கு ....தைரியமா  இரு  ..கொஞ்சம்  பார்ப்போம் ..."

மனைவி  பதட்டத்தில்  ஒரு  மாதிரி  ஆகிவிடுகிறாள் ...
பயமா  இருக்கு  , பயமா  இருக்கு  , என்  பிள்ளைன்னு அழத்தொடங்குகிறாள் ..

அப்போது  கதவு  தட்டப்படுகிறது ...
" ஹேய்  சுவீட்டி ...."என்று  சொல்லிக்கொண்டே   உள்ள வராங்க
டாக்டர்  ஜேக்கப்ஸ் ...

" என்   மாமனார் இறந்துட்டாங்க ..அதனாலதான்  ஊரை  விட்டு அவசரமா  கிளம்ப  வேண்டியதயாடிச்சு .......முடிஞ்ச  வரை சீக்கிரமா  வந்து  சேர்ந்தேன் ...."

என்  மனைவிக்கு  அப்போதான்  உயிரே வந்தது  போல  உணர்கிறாள் ..
முகத்தில்  தெளிவு  வருகிறது ...

"நாம  இன்னும் அஞ்சு  நிமிஷத்துல  , சர்ஜெரி  செஞ்சாகணும் ...குழந்தையின்  ஹார்ட்  ரேட்  குறையுது ..." என்கிறார்கள்

"நர்ஸ்  , உடனே  சர்ஜரி ரூமுக்கு  கூட்டிட்டு  போங்க ..."

என்னைப்  பார்த்து  ,
" நீ  எங்க  போற ...அஞ்சு  நிமிஷத்துல  பிள்ளை  கைல  வந்துரும் ....பிறகு  சர்ஜெரி  முடிய   நேரம்  ஆகும் ......சர்ஜெரி  ரூம்  ட்ரெஸ்  இந்தா ,  இதைபோட்டுட்டு  சீக்கிரம்  வந்துடு ...மறக்காம  காமரா  எடுத்துட்டுவா  ..."


கண்  இமைப்பது   இருந்தது ....எங்கள்  குட்டி  தேவதையினை  எடுத்து  எங்கள்  கையில்  கொடுக்கிறார்கள்  ஜேக்கப்ஸ் ......திரை  சீலை  வைத்து  மனைவியின்  கழுத்திற்கு  கீழே  மறைத்திருக்கிறார்கள் ......பிள்ளையை  வாங்கி  கண்களில்  கண்ணீர்  முட்ட  முட்ட  மனைவியின்  தலைமாட்டிடம்  பிடித்துக்கொள்கிறேன் ....
டக்  டக்கென்று  பல  கோணங்களில்  போட்டோக்கள்  எடுக்கப்படும்  சத்தம்  கேக்கிறது ....ஒரு  நர்ஸ்  மட்டும்  ஒரு  அசிஸ்டன்ட்  டாக்டர்  போட்டோ  எடுத்துக்கொண்டு  இருக்கிறார்கள் ....

மறுபடி  அறைக்கு  வந்து  சேர்கிறோம் ...
" என்ன  'டாடி' உன்  கண்ல  கண்ணீர்  வந்துச்சே ....க்ளோசப்ல   எடுக்கச்சொன்னேன் ....இதையெல்லாம்  பாக்கத்தானே டாக்டர்கள்  மட்டும் கொடுத்துவச்சவங்க !

இது  யார்  , குழந்தையோட  பாட்டியா ?....
சாரிமா  .... சி செக்க்ஷன்  [ caesarian ] செய்ய  வேண்டியதயாடிச்சு....
வேற   வழி  இல்லை ..உங்க  பொண்ணை  கஷ்டப்படவச்சதுக்கு  மறுபடியும்  சாரி ..." என்று  சொல்லியவாறே என்   அத்தையினை  அணைத்துக்கொள்கிறார்கள் .... அவர்களும்  கூச்சத்துடன்  , என்னமோ  முணுமுணுத்தார்கள்  ...அது  அவர்கள்  இருவருக்கும்தான்  தெரியும்...

நான்காவது  நாள்  டிஸ்சார்ஜ்  ஆகி  வீட்டுக்கு  வருகிறோம் ...
லிப்ட்டில்  இறங்கி  கீழே  வந்து  , இடது  பக்கம்  திரும்பி  லாபியினை  நோக்கி
நடக்கையில் , turtle  [ ஆமை ] நெக்  ஸ்வட்டர் போட்டுக்கொண்டு  , அதன்  மேலே  , லெதர்  ஜாக்கெட்  போட்டவாறே  , ஸ்டைலாக  ஒற்றைக்காலைத் தூக்கி , முன்னாடி  இருந்த  ஒரு  நாற்காலி  மீது  வைத்துக்கொண்டு  சிரித்தவாறே  இருந்த  டாக்டர்  ஜேக்கப்ஸின் ஒரு  புகைப்படம்  என்னைப்பார்த்து  மட்டும்  , நான்  என்  மனைவியிடம்  , முன்பு  விட்ட  அதே  நக்கல்  சிரிப்பை   உதிர்ப்பது போல  இருந்தது .

நான்  பார்ப்பதைப்  பார்த்த  நர்ஸ்  ,
" DR  ஜேக்கப்ஸ்  எங்கள்  pride  [ பெருமை ]. நாங்கள்  அவர்களுக்கு  கொடுக்கும்  ஒரு  சின்ன  மரியாதை  இந்த  போட்டோ " என்கிறார்கள் .....

பிள்ளையோடு  வீடு  வந்தாயிற்று .....
ஒரு  மாதம்  கழிந்து  மறுபடியும்  , டாக்டரைப்  பார்க்கப் போகிறோம் ...

" டாக்டர்  , நாங்க  ஊர்  மாறப்போகிறோம் ...என்  ஹஸ்பண்டுக்கு  புது  வேலை , வேற    ஊருக்கு  மாற  வேண்டியிருக்கு ...ரொம்ப  தாங்க்ஸ் எல்லாத்துக்கும் .."
"

"எனக்கு  இன்னும்  வருத்தம்  இருக்கு ...சி  செக்க்ஷன்  இல்லாம  இருந்து  இருந்தா  நல்ல  இருந்து  இருக்கும் ...."

விடைபெற்று  வந்தோம் ...ஊரும்  மாறியாச்சு ...

அடுத்த  வருட கிறிஸ்துமஸ்  வருகிறது .......
அந்த  ஞாயிற்றுக்கிழமை  பிள்ளையுடன்  உட்கார்ந்தவாறு  இருக்கையில்  ,
என்  மனைவி  , அவள்  தோழியிடம்  பேசுவது  காதில்  விழுகிறது ..

" நீ  டாக்டர்  ஜேக்கப்ஸ்ட  போ ...SHE  IS  THE  BEST ....." ...

அவளிடம்  நான்  ..." நீ  ஒரு  கிரீட்டிங்  கார்டு  வாங்கி  அதுல  பாப்பா  போட்டோ  வச்சு  அனுப்பு  அவங்களுக்கு ...."

" எதுக்குங்க  அவ்ளோ  சிரமம் ...அவங்க   கடமையத்தானே  செஞ்சு  இருக்காங்க !" என்று  சிரிக்கிறாள் .

" ச்ச   இல்லை  ..அவங்க  எவ்ளோ  நல்லவங்க ....நீ  ஏன்   இப்படி  சொல்ற ..." என்று சொல்லியவாறே  , என்  பிள்ளைக்கு  ஹாப்பி  டான்ஸ்  சொல்லித்தந்துக்கொண்டு  இருந்தேன் .


=====================================================================



















No comments:

Post a Comment