Thursday, December 28, 2017

அருவி ஒரு அனுபவம் .

அருவியில்  குளிக்கும்  அனுபவத்தை  எப்படி வார்த்தைகளால்  விவரிக்க  முடியும் ...!

தமிழ்  தெரியாத என்னுடைய  நண்பர்  ஒருவரை  அழைத்துப்போனேன் .முதலில்  கொஞ்சம்  வசனங்களை  மொழிபெயர்த்தேன்  , அதன்பின்  இந்த  கதைக்கு  மொழி  தேவை  இல்லையென்று  சொல்லிவிட்டார் .
வெளியே  வரும்  போது  , கண்  கலங்கி  இருந்தது  அவருக்கும்  , எனக்கும் .

நாம்  வாழும்   வாழ்க்கையின்  பின்  இருக்கும்  வணிக  அரசியலின்  தாக்கத்தைச் சுட்டிக்காட்டி  அவள்  பேசும்  ஒரு  நீண்ட வசனம்  , " அட  ச ..இந்த  வாழ்க்கை  இவ்ளோதானா  , இதற்குத்தானா இவ்வளவு  ஓட்டம்  " என்பதை   பொட்டில்  அறைகிறது ..

"Man is born free but everywhere he is in chains" என்கின்ற ரூசோவின்  [ ROUSSEAU ]  வார்த்தைகளின்  வலியினை , அந்த  வசனம்  உணரச்செய்கிறது .
இன்னொரு  பக்கம்  கிடைத்த  இந்த  வாழ்க்கை  ஒவ்வொரு   நாளும்  ஒரு  பொக்கிஷம்  , என்னத்தையோ  தேடி  இருக்கும்  சந்தோஷங்களை  தொலைக்காதீர்கள்  , சின்னச்  சின்ன  சந்தோஷங்களில்  உங்கள்  வாழ்வை  நனைத்திடுங்கள்  என்று  அருவியும்  , அவள்  தோழியும்
சொல்லிப்போகிறார்கள் ...

எமிலி  வாழ்ந்து  இருக்கிறாள் ! ..அவள்  யாரென்பதை  பார்த்துத் தெரிந்துக்கொள்ளுங்கள் .

அந்த  அப்பா  மகளின்  அன்னியோன்யம்,  அவள்  வளர்ந்தபின்  , அவளை  நம்பாமல்  போகும்  ஒரு  சூழ்நிலையில்  , " அப்பா என்னை  நம்புங்கள் " என்று  அவள்  கதறுவது  , அவள்  சிறுவயதில்  மகளுக்கு  பிடிக்கவில்லையென்று  தன்னுடைய  புகைபிடிக்கும்  பழக்கத்தை  விடும்  ஒரு அதீத  அன்பு  கொண்ட அப்பாவால்  இப்படியொரு பரிமாணம்  எடுக்க  முடியுமாவென  நம்மை அதிர  வைக்கிறது ...அந்த  முரணே  நம்  சமூகத்தின் வெளிச்சம்.

" மற்றவர்  என்னச்சொல்வர் " என்று  நினைத்து  பயந்தே  , நம்முடைய  வாழ்வினை  எவ்வளவு  சிக்கலாக்கி  சிதைத்து  , பொய்யான  வாழ்க்கையினை  வாழ்ந்து  தொலைக்க  வைக்கிறது என்று, நம்  கலாச்சாரத்தின்  ஒரு  முக்கிய  கறுப்புப் பக்கத்தை நம்முன்  எடுத்து வைக்கிறாள்  அருவி.

நீ கடைசியாக  எப்பொழுது  அழுதாய் என்று  அந்தக்காமுகனிடம்   அவள்  கேட்பதும்  , உயிர்பயத்துடன்  அவன்  ஒரு  கதைசொல்லிகிறான் .
இரண்டு  தோசைகளின்  இடையே  வைத்துச்செய்யப்படும்  ஒரு  வெல்லத்தால் செய்யப்பட்ட  பண்டமும்  , அதைச்செய்துக்கொடுத்த அந்தப்  பாட்டியின்    இறப்பின்பிறகு  , ஒரு   வெல்ல  sandwich  போல  விறகின்  இடையே  அவளைவைத்து எரியூட்டிய      நிகழ்வும்  ஒன்று போலத்தோன்றியத்தின்  விளைவே அவன்  கடைசியாக  அழுததன்  காரணம்  என  அவன்  சொல்லியது  , அன்பு எல்லாவற்றையும்  வெல்லும்  என்பதின்   சாட்சி .

அவளுடன்  தவறாக  நடந்துக்கொண்ட  மனிதர்களை அவள்  மன்னிப்பு  மட்டும்  கேட்கச்சொல்லுவது   என்னால்  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை ...மற்றபடி  அருவி பார்த்துவிட்டு  வந்தபின்  , வீட்டுக்கு  சீக்கிரமாக  வந்து  , பெண்  குழந்தைகளை  இறுக்கி ,பத்திரமாக   ஒன்றும்  சொல்லாமல்  அணைத்துகொள்ளத்தூண்டிய ஒரு  அனுபவம் ...

எல்லோரையும்  அருவி  அன்பால்  அறைந்து விட்டுச்செல்வாள்  தவறாமல் ....


3 comments: